Thursday, January 13, 2011

எதிர்மறை பிடிவாத நோய் – ODD

மனோதத்துவ ரீதியான மாற்றங்களே சர்வ நிச்சயமாய் ஒரு சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். மேலோட்டமாக பார்க்கப்படும் அல்லது தீர்க்கப்படும் எல்லா பிரச்சினைகளும் மீண்டும் மீண்டும் கிளைத்துக் கொண்டுதானிருக்கும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை என்று நாம் அறியும் அதே நேரத்தில் நமது மக்கள் அதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது கிடையாது. கழுகு இது பற்றி ஆழமாய் சிந்தித்து.... தம்பி எஸ்.கேயை ஏக்கமாய் பார்த்தது.....

என்னவேண்டுமானலும் செய்ய தயாராய் இருக்கும் எஸ்.கே போன்ற எழுச்சி இளைஞர்களுக்கு இந்த விசயத்தில் இருக்கும் அதீத ஆர்வமும் கழுகின் ஆற்றாமையும் விளங்க அதை வார்த்தைகளுக்குள் அடைத்து எழுத்தாக்கித் தந்தார்.. எஸ்.கே...இதோ... உங்களின் பார்வைக்காக...!
 

பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே அடங்காமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டும் எதிர்த்து பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வளரும்போது தங்களுக்கான எல்லைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். அதற்கான சூழல்களை பெற்றோர்களும்

ஆசிரியர்களும் மற்றுமுள்ள பெரியவர்களும் ஏற்படுத்தலாம்.
இருந்தபோதிலும் சில குழந்தைகள் இந்த பிடிவாதம், எதிர்த்து பேசுதல், அடங்காமல் இருத்தல் போன்றவற்றை மிகவும் அதிகமாக பெற்றிருப்பதையும் அடிக்கடி வயது வித்தியாசம் பாராமல் எல்லோரிடமும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதனால் பெற்றோர்களிடமும் ஆசியர்களிடமும் வெறுப்பை சம்பாதிப்பதுடன், கல்வி, நட்பு, உறவுகள் போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படும்.

இந்த குணத்தை எதிர்மறை பிடிவாத நோய் (oppositional defiant disorder - ODD) என்கிறார்கள். இந்த பிரச்சினை சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரிடத்திலும் ஏற்படலாம். சிறுவயதில் ஆண்களில் பெரும்பாலும் காணப்படும். இளம் வயதில் ஆண் பெண் இருபாலரிடத்திலும் இது அதிகமாக காணப்படலாம். இந்தப் பிரச்சினை உள்ள குழந்தைக்கும் சாதாரண குழந்தைக்கும் வித்தியாசம் காண்பது சிறிது கடினம் தான். ஆனால் முறையாக கவனிக்கும்போது அதனை நாம் கண்டறிந்து சரி செய்ய முடியும்.

இந்நோய்க்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் கலாச்சார, மரபியல்,பாலின மாறுபாடுகள் இளம் வயதில் உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றங்களால் இது ஏற்படலாம் என்கிறார்கள். ஆனால் அது மட்டுமின்றி பெற்றொர்களுக்கு இடையேயான தொடர் சண்டைகள், குடும்ப பிரச்சினைகள், பிரிவினை, இடமாற்றங்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

சாதாரண குழந்தைகளையும் இந்த பிரச்சினை உள்ள குழந்தைகளையும் கண்டு பிடிப்பது எப்படி?
  • அடிக்கடி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவார்கள்
  • அடிக்கடி பெரியவர்களுடன் எதிர்வாதம் செய்வார்கள்
  • அவ்வப்போது கோபத்தோடும் சீற்றத்தோடும் மூர்க்கத்தனத்தோடும் இருப்பார்கள்
  • அடிக்கடி பிடிவாதம் பிடிப்பார்கள்/ அடாங்காமல் இருப்பார்கள்
  • அடிக்கடி வேண்டுமென்றே பெரியவர்களின் கோரிக்கைகளை மறுப்பார்கள்/விதிகளை மீறுவார்கள்
  • அடிக்கடி தங்கள் தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழி போடுவார்கள்
  • அடிக்கடி மற்றவர்களிடம் காரணமின்றி எரிச்சல் காட்டுவார்கள்.
  • அடிக்கடி வேண்டுமென்றே மற்றவர்களை தொந்தரவு செய்வார்கள்
  • அடிக்கடி மற்றவர்களை கெடுக்க வேண்டுமென்றும், பழிவாங்கும் குணத்தோடும் செயல்படுவார்கள்.

இந்த குணங்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு நீடித்தால் அது ODD-ஆக இருக்கலாம். சாதாரண குழந்தைகளிடமும் இந்த குணங்கள் இருந்தபோது இவர்களிடம் அது அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடியும் ஏற்படும். சாதாரண குழந்தைகளிடம் இக்குணம் அடிக்கடி காணப்படாது. மேலும் அவர்கள் ஓரளவு கட்டுப்படுவார்கள். இவர்கள் மிகவும் முரண்டு பிடிப்பார்கள்.

இந்த பிரச்சினையை மருந்துகள் மூலம் சரி செய்ய இயலாது. கவுன்சிலிங், நடத்தை சிகிச்சை போன்ற உளவியல் சிகிச்சை மூலமே சரிப்படுத்த முடியும். பல சமயங்களில் இது போன்ற குணமுடைய குழந்தை திருத்துகிறேன் என்று பெற்றோர்கள் அடித்தல், திட்டுதல் போன்ற தண்டனைகளை தருவார்கள். இது பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே அளிக்கும். மேலும் இதனால் குழந்தை பெற்றோர்களிடமிருந்து மனரீதியாக விலக ஆரம்பிக்கும். இந்த நோய் உடைய குழந்தைகள் இளம் வயது குற்றவாளிகளாக கூட மாறலாம். பெரும்பாலான இளம்வயது குற்றவாளிகள் இப்படிப்பட்ட குணமுடையவர்களாகவே இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பல தவறான வழிகளுக்கு செல்லவும் வாழ்க்கையில் தடம் மாறக் கூட இது காரணமாகலாம்!

இவர்களிடம் நாம் அணுகும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். தண்டனைகள் தருவதை விட அவர்கள் போக்கிலே சென்று அவர்களை மாற்றுவது நல்லது. மேலும் அவர்கள் முன் சண்டையிடுதல், கோபப்படுதல், போன்றவற்றை நிறுத்த வேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றவும். இது குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான மனநிலையை பெற உதவும்.


”குழந்தைகளின் உலகை நாம் கவனமாக பராமரிப்போம்! நாளைய உலகை சிறப்பாக உருவாக்குமோம்!” 



கழுகிற்காக


 

10 comments:

Arun Prasath said...

எதிர்காலத்தில் பயன் படும்...யூஸ் பண்ணிக்கிறேன்....

Ramesh said...

அருமையான தகவல் நண்பரே.. நன்றி.. கட்டாயம் இனி கவனமாக கவனித்துப் பார்க்கிறேன்.. குழந்தைகளிடம்..

இம்சைஅரசன் பாபு.. said...

கவனமாக தான் கையாள வேண்டும் இம் மாதிரி பிரச்சனைகளை

Kousalya Raj said...

//இது போன்ற குணமுடைய குழந்தை திருத்துகிறேன் என்று பெற்றோர்கள் அடித்தல், திட்டுதல் போன்ற தண்டனைகளை தருவார்கள்.//

இது மிக தவறான ஓன்று தான். அப்படி அடிக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகுமே தவிர சரியாக கூடிய வாய்ப்பிற்கு வழி இல்லை.

இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது மிக கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் கவனிக்க முடியவில்லை என்றால் பரிதாபம் தான்.

இந்த நோய் பற்றிய அறிகுறிகளை மனதில் குறித்து வைத்து கொள்வது நன்று.

நிறைய பெற்றோர்கள் என் பையன் ரொம்ப பிடிவாதங்க என்று சலிப்பாக சொல்வார்கள், ஆனால் இப்படி ஒரு நோயாக கூட இருக்கலாம் என்று பலரும் நினைப்பது இல்லை...இந்த விசயத்தில் விழிப்புணர்வு மிக அவசியம்...

இதை பற்றி தெளிவாக எடுத்துரைத்த எஸ்.கே அவர்களுக்கு நன்றியும், வெளியிட்ட கழுக்கிற்கு என் பாராட்டுதல்களும்.

Kanchana Radhakrishnan said...

அருமையான தகவல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உபயோகமான தகவல்!

எஸ்.கே said...

அனைவருக்கும் மிக்க நன்றி!

மங்குனி அமைச்சர் said...

தெளிவான கட்டுரை

செல்வா said...

/ஆனால் அது மட்டுமின்றி பெற்றொர்களுக்கு இடையேயான தொடர் சண்டைகள், குடும்ப பிரச்சினைகள், பிரிவினை, இடமாற்றங்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
//

இது போன்ற பிரச்சினைகள் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை. பெரும்பாலும் சில குழந்தைகள் இவ்வாறு பெற்றோர்களின் தொடர் சண்டைகளால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என்பது உண்மைதான் !!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான தகவல். எழுதிய எஸ்.கே சகோதரனுக்கு நன்றிகள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes