Tuesday, November 29, 2011

மக்களை பலிகடா ஆக்கிய ஜெயலலிதா அரசு....! ஒரு காரசாரமான பார்வை...!

 
 
 
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் தன்னை ஒரு அரசியல் சக்தியாக வெளிப்படுத்தி காட்டிக் கொண்ட காலத்திலிருந்து தனக்கென மிகப்பெரிய அடையாளமாக செல்வி ஜெயலலிதா அன்று முதல் இன்று வரை கொண்டிருப்பது பிடிவாத குணம். 1989ல் திமுக வென்று கிட்ட தட்ட 13 வருட கால இடைவெளிக்குப் பிறகு அரியாசனத்தில் ஏறிய போது 27 இடங்களை அதிமுக ஜெ அணி பிடித்த போதுதான் அதிமுக தொண்டர் பலம் ஜானகி எம்.ஜி.ஆரின் பக்கம் இல்லை. அது மீண்டும் ஒரு திரை வசீகரமான ஜெயலலிதாவையே சுற்றியுள்ளது என்று அப்போதைய அரசியல்வாதிகளுக்கே தெரியவந்தது.
 
எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்ட முக்கிய தலைவர்களை எல்லாம் எட்டி உதைக்கும் போக்குடனே செயல்பட்டு வந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசியல் அனுபவத்தையும், திராவிட பராம்பரியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. சாதுர்ய அரசியல் நடத்தத் தெரியாத, சமயோசித குள்ள நரித்தனங்கள் அறிந்திராத ஐயா திரு.நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் முதலில் திமுவிற்குள்ளேயே திரு கருணாநிதியின் கால்கள் தன்னை மிதித்துக் கடந்து திமுகவின் தலைமை பொறுப்பிற்கு செல்ல அனுமதித்தார். பிறகு எம்.ஜி.ஆரின் வசீகர அதிரடி அரசியலில் கெளரவமாய் அரசியல் நடத்தவும் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வேறு வழியின்றி சிக்கிக் கொண்ட நாவலர் உள்பட பல மூத்த திராவிட தலைவர்கள், உதிர்ந்த முடி, பிய்ந்த செருப்பு, மற்றும் தெரு நாய் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு பல முறை கட்சியிலிருந்து வெளிச் செல்வதும் பின் மீண்டும் உள்வருவதுமாயிருந்தனர்.
 
எம்.ஜி.ஆரை எதிர்த்து நமது கழகம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கி பின் மீண்டும் எம்.ஜி.ஆரிடமே அடைக்கலம் புகுந்த ஐயா திரு. எஸ்.டி.எஸ் அவர்களும் இதில் அடக்கம்.
 
காலம் போகிற போக்கில் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட 1991ல் செல்வி ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகி தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவும் செய்தார். அவருடைய பிடிவாத குணம் 80 சதவீதம் அவருடைய மைனஸ் என்றால் 20 சதவீதம் அதுவே அவருடைய பிளஸ் ஆகவும் இருந்தது. 1991 - 1996ல் தமிழகத்தில் என்ன நடந்தது, அம்மையாரின் அடாவடிகள், ஆடம்பரம், மற்றும் ஊழல், லஞ்ச லாவண்யம் என்னவென்று இந்தக் கட்டுரை மீண்டும் ஒரு முறை எழுதாமல் உங்களுக்கு ஞாபகப்படுத்துவதோடு மெல்ல அடுத்த விடயத்திற்கு நகர்கிறது.
 
வரலாறு காணாத ஊழலுக்கு வித்திட்டு கருணாநிதியின் கடந்த கால ஊழல்களை எல்லாம் மைக்ரோ லெவலுக்கு கொண்டு சென்ற பெரும் பெருமையை தனது 1991 - 1996 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டினார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாய் 1996 ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலிலும் அமைந்தது.
 
1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார். இந்தக்கட்டுரையை ஜெயலலிதாவை மையம் கொண்டு நகர்வதால் திமுகவையும் அதன் தலைமையையும் நாம் சைட் ரோலிலேயே வைத்துக் கொள்வோம். 1996 - 2001ல் எவ்வளவோ நல்ல விடயங்களைக் கருணாநிதி அரசு செய்ய முயன்றது அல்லது செய்தது என்பதை நடுநிலையாளர்கள் அறிவர்....அதே நேரத்தில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாய் மிக எச்சரிக்கையாய் காய்களை நகர்த்திய கருணாநிதி தனது அதிரடி பழிவாங்கும் படலங்களை தொடங்கிய காலமும் இதுதான்...! அதிமுக அமைச்சர்கள் எல்லாம் கைதானார்கள்.. ஜெயலலிதா உள்பட...
 
2001ல் ஆட்சிப் பொறுப்பிற்கு ஜெயலலிதா வந்ததற்கு முழு முதற்காரணமாய் வலுவான கூட்டணி அவருக்கு உதவி செய்ததுடன், வழக்கமான தமிழ்மக்களின் பரிதாபத்தில் ஒரு ஐயோ பாவம் ஏழைச் சகோதரி என்ற ஒரு இரக்க மனப்பான்மையும், திமுக ஆட்சியில் கைதாகி இன்னலுற்றார் என்ற ஒரு பச்சாதாபமும், திமுகவை தொடர விடாமல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா... மக்களுக்கு என்ன என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முன்னரே ஒரு நாளாவது கருணாநிதியை சிறையிலடைக்க வேண்டும் என்ற வஞ்சத்தை முதலில் தீர்த்துக் கொண்டார்.
 
மக்கள் இப்படி மாறி மாறி திமுகவையும் அதிமுகவையும் அரியணையில் ஏற்றிப் பார்த்தது தனிப்பட்ட அந்த அந்த தலைவர்களின் சிறப்பிற்காகவோ அல்லது அந்த அந்த கட்சியின் திறமையான ஆட்சிக்காகவோ அல்ல என்பதை சாமன்ய தமிழர்களே தெளிவாக அறிவர்.
 
திரு. கருணாநிதியின் கடந்த ஐந்தாண்டு கால தமிழ்த் துரோக ஆட்சியில் தமிழன் வெகுவாய் பாதிக்கப்பட்டுதான் போனான். தமிழ்த்துரோக ஆட்சி என்று கூறுவது ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உதவவில்லை என்பதற்காக மட்டும் கூறவில்லை...மாறாக நிர்வாக குளறுபடிகளால், வரலாறு காணாத மின்பற்றாகுறை, மற்றும் சாமானிய மக்களின் அடிப்படை தேவைகளை, வாழ்வாதாரங்களை கொடுக்காத திட்டங்களை தீட்டியது, இலவசம் என்ற கவர்ச்சி அரசியல் விஷத்தை தமிழகத்தில் பரவவிட்டது....என்று அடுக்கிக் கொண்டே போகலாம்...!
 
ரியல் எஸ்டேட் துறை என்று மட்டுமில்லாமல் தமிழகத்தின் எல்லா தொழில் துறையிலும் திமுக தலைமையின் குடும்பத்தினர் மற்றும் திமுகவினரின் கைகளே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில் சாமானிய மக்கள் விக்கித்துப் போய் நின்று கொண்டிருக்கையில்தான் ஸ்பெக்ட்ரம் என்னும் மிகப்பெரிய மோசடி விளையாட்டில் திமுக சிக்கி அதன் உச்சகட்ட தலைவர்கள் எல்லாம் கைதாகவும் செய்தார்கள்...! 
 
அன்றாடங்காய்ச்சிகள் தெருவில் பசியோடு திரிந்து கொண்டிருக்கையில்,.  ஆயிரக்கணக்கான கோடிகளில் திமுகவினரின் கை நேரடியாக இருந்ததை ஜீரணிக்கவே முடியாத தமிழர்களும், ஈழத்தில் போர் நடந்த போது காங்கிரசோடு கை கோர்த்துக் கொண்டு இழைத்த துரோகத்தை மறக்க முடியாத தமிழர்களும், ஏற்கெனவே தொழில் ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்சார பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள்...
 
வேறு வழியின்றி குத்திய சின்னம்தான் இரட்டை இலை.
 
ஜெயலலிதாவின் அரசியல் திறத்துக்கோ அல்லது கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாய் அவர் கொடநாட்டில் படுத்துக் கொண்டு போராடிய போராட்டங்களுக்கு நன்றியாகவோ, தமிழன் அவருக்கு வாக்களிக்க வில்லை. வேறு வழி இல்லை....வேறு ஆளும் இல்லை என்று தமிழன் நினைத்த போது அடித்த பம்பர் குலுக்கலில் தான் தமிழக முதல்வரானார் செல்வி.ஜெயலலிதா...!
 
அவருடைய கல்வியும், அதிரடியான முடிவுகளும் எவ்வளவு வசீகரமானவையோ அவ்வளவு கொடூரமானவை என்பதையும் தற்போது தமிழகத்துக்கு அவர் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழக் முதல்வராய் இருக்கும் செல்வி.ஜெயலலிதா கொஞ்சம் புத்திசாலித்தனமாக தனது ஹிட்லர் தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மட்டுமே ஒரே ஒரு பரிணாம வளர்ச்சியன்றி வேறு எள் அளவும் அவர் மாறவில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்களை நாம் அடுக்கி வைக்க முடியும்...
 
சமச்சீர் கல்வி விடயத்தில் அவர் நடந்து கொண்ட சிறுபிள்ளைத்தனம், சட்டசபை, நூலகம், மக்கள் நலப்பணியாளர்கள் விடயம் என்று விரிந்து கொண்டே செல்வதும், ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் அவரது தலையில் நறுக் நறுக் என்று கொட்டி திருத்துவதும், அவருக்கு அவமானமாக தெரிகிறதோ இல்லையோ....ஏழரை கோடி பேர்களை ஆளும் ஒரு தலைவர், அந்த ஏழரை கோடி பேர்களில் நாமும் ஒருவர் என்பதால் நமக்கு அவமானம் பிடுங்கித் திங்கத்தான் செய்கிறது.
 
நில மோசடிகளுக்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் பழிவாங்கும் தன்மை இருக்கிறதோ, இல்லையோ ஆனால் திமுக அமைச்சர்கள் இதில் மிதமிஞ்சி விளையாடி இருக்கிறார்கள் என்பதால் அதை நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இதிலும் அவர் மக்கள் நலனுக்காக செய்கிறார் என்பது குறைந்த சதவீதம்தான் என்பதையும் நாம் உணரவேண்டும்.
 
முழு மெஜாரிட்டியோடு அரியணை ஏறியது யாருக்காக என்று முதல்வர் இன்றுவரை அறிந்திடவில்லை என்பதற்கான சாட்சியங்கள்தான் அடுப்படி தேவைகளான பால் மற்றும், பேருந்து கட்டணங்களின் உயர்வு. நிர்வாகத் திறமையால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எங்கெங்கே நுட்பமாக வரி கூட்ட வேண்டுமோ அல்லது யாரிடம் இருந்து பெறவேண்டுமோ என்று மக்களின் வாழ்வியல் தரத்தை மையப்படுத்தி அவர் ஏதேனும் செய்திருந்தால் அது நிர்வாகத் திறமை..அதற்கு நாம் சபாஷ் போடலாம்...!
 
குப்பனையும், மாரிமுத்துவையும், ஜோசப்பையும், பாட்ஷாவையும் நீங்கள் மேலும் தர்ம சங்கட சூழலுக்கு தள்ளிவிட்டு வறுமை அரக்கனை அவர்கள் மீது ஏவி விட்டிருக்கிறீர்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வர் அவர்களே...?
 
கடந்த காலத்தில் உள்ளவர்கள் கஜானாவை காலியாக்கி சென்று விட்டனர் என்றால் அது எப்படி மக்கள் பிரச்சினை ஆகும்...? அது சட்டப்பிரச்சினை அல்லவா?  ஆதாரப்பூர்வமாய் புள்ளி விபரங்களை எடுத்து கடந்த ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து ஆதாரப்பூர்வமாய் நிரூபித்து நஷ்ட ஈடு வாங்குங்கள்.. இல்லையேல் அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இனியும் ஏறவிடாமல் செய்ய வழி வகை செய்யுங்கள்...
 
எங்களை பொறுத்த வரையில் நிர்வாகம் செய்யத் தெரியாத ஒரு தான்தோன்றித்தனமான, சாமன்ய மக்களின் குரல்வளையை நெறிக்கும் ஒரு கட்சியை நாங்கள் ஆட்சி பொறுப்பில் ஏற்றிவிட்டோம் என்ற சங்கடமும் எரிச்சலும்தான் வருகிறது.
 
திமுக சரியில்லை என்று அதிமுகவிடம் வந்தால் நீங்களும் சரியில்லாதவர் என்று பறை அறிவித்து தெரிவிப்பதோடு அல்லாமல் எங்கள் நெஞ்சுகளில் எட்டி மிதிக்கச் செய்து விட்டு நான் எங்கே செல்வேன் உங்களிடம்தானே வருவேன் என்று பிச்சைக்காரனை போல கையேந்துகிறீர்கள்? ஓட்டுக்கும் கையேந்தல்தான்....அரசு நடத்தவும் கையேந்தல்தான்....இப்படி கையை ஏந்திவிட்டு உங்களுக்கு மக்கள் மீது பயமில்லாமல் போயும் விடுகிறது.....விளைவு பரமக்குடி துப்பாக்கிச் சூடு....ஆறு ஏழு பேர் பழி..
 
எந்த ஒரு பிரச்சினையின் தீர்வும் எல்லோருக்கும் சுகமாய் முடிய வேண்டும்...அப்படி முடிவெடுப்பது ஒரு நல்ல தலைமைக்கு அழகு...! ஆனால் தமிழக முதல்வரின் முடிவுகள் எல்லாம் யாரோ ஒருவரை கொன்று கிழிக்கும்...துரதிருஷ்ட வசமாக அந்த யாரோ ஒருவர் எப்போதும் மக்களாகிப் போகின்றனர்.
 
ஈழப் பிரச்சினைக்கு முன் வாசலில் ஆதரவு தருகிறார்....கொல்லைப் புறத்தில் கழுத்தை நெரிக்கிறார். மூவர் தூக்கிற்கு வேண்டாம் என சட்ட சபையில் தீர்மானம் போடுகிறார். பின்னாளில் தலைமைச் செயலக அதிகாரி மூலம் நீதிமன்றத்தில் தூக்கில் போட யாதொரு தடையும் தமிழக அரசு சொல்லவில்லை என்று பல்டி அடிக்கிறார்...
 
விலைவாசியை ஏற்றி விட்டு.... தான் மட்டும் சுகவாசியாய் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்று விடுகிறார்...! அம்பேத்கார் போன்ற தலைவர்கள் எல்லாம் எம் மக்கள் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் விழித்திருக்கிறேன் என்று நள்ளிரவு வரை உறங்காமல் இருந்திருக்கிறார்கள்....
 
ஆனால்....
 
தமிழக மக்களை நடு ரோட்டில் திண்டாட விட்டு விட்டு தமிழக மக்களின் தலைவர் ஒய்வெடுக்கச் சென்று விட்டார்....! செல்வி ஜெயலலிதா மாறவில்லை என்பதை தமிழக மக்கள் தெளிவாக உணரும் அதே தருணத்தில் மீண்டும் இவரிடம் வாங்கிய அடி தாங்க முடியாமல் திமுக கொட்டாரத்துக்கு ஓடிச்சென்று காலில் விழுந்து விடாமல் இனி வரும் காலங்களில் சமயோசிதமாய் ஒவ்வொரு தமிழனும் நடந்து கொள்ளவேண்டும்....அப்படி நடந்து கொள்ள உயரிய புரிதலும், விழிப்புணர்வும் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தலோடுஅடுத்த தேர்தல் வரை நம்மால் பொறுத்திருக்கத்தான் முடியும் எனக்கூறிகட்டுரையை நிறைவு செய்கிறோம்.



கழுகிற்காக
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)




Monday, November 28, 2011

சுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...? ஒரு அலசல்..!

நம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?? பத்து சதவீதத்தினர் மட்டுமே நினைத்து பார்ப்போம். நாம் வசிக்கும் தெருவில் பத்து நாட்களாய் கழிவு நீர் வடிந்துகொண்டிருக்கிறது. எத்தனை பேர் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்திருப்போம்..?! யாராவது புகார் கொடுப்பார்கள் என்று அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விடுவோம்.  இதே நமது வீட்டில் இப்படி நடந்தால் விட்டு விடுவோமா..?? நேராக மாநகராட்சி அலுவலகம் சென்று கையோடு ஆட்களை அழைத்து வந்து சரி செய்வோம்.


 பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான். பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். என்னை கேட்டால், பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது வளர்த்து விட்டுப்போக வேண்டும் என்பேன். நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் ஆக்ஸிஜன் அதிகரித்து விடும். 


அமெரிக்காவில் விஷக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ஒன்றே கால் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது, வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப்பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால்தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் சந்ததியினர் குறைகளோடுதான் பிறப்பார்கள். 


நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய் பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசு படுத்தி வருகிறோம். நொய்யல், காவேரி, பாலாறு போன்ற நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது வருடங்களுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை. மணல் கொள்ளை மூலமாக மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும் தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக்கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.


காடுகளை அழித்து பணம், நிலத்தடி நீரை எடுத்து பணம் என்றிருந்தால் கடைசியில் வெறும் பணம் மட்டுமே மிஞ்சும். வருங்கால சந்ததியினர் இருக்க மாட்டார்கள். புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. வருடாவருடம் மழை நீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும். தமிழக அரசு மழை நீர் சேமிப்பு திட்டம் செயல் படுத்திய போது அனைவரும் செயல் படுத்தினர். ஆனால், இப்பொழுது அனைவரும் மறந்த நிலையில் தான் உள்ளோம்.  

எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப்படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார பிரச்சனை அதை நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு சதவீதத்தினர் தெரியாமல் தான் புவியை மாசு படுத்திகொண்டிருக்கிறோம். அதன் வீரியத்தையும்,விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. நாம் பயன்படுத்திய குப்பையில் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் 200 ஆண்டுகள் அப்படியே அழியாமல் இருக்கும். முடிந்த வரை பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்கலாம், தேவைஏற்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பயன் படுத்தவேண்டும், டீ குடிக்கவும் தண்ணீர் குடிக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தாமல் காகிதம் கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். அதி வேகமாய் பூமியை மாசு படுத்தி விட்டோம். அதை விரைவில் சரி செய்து விட முடியாது. சிறுக சிறுக தான் சரி செய்ய முடியும், இதில் அரசாங்கம் என்ன செய்யும என்று நினைக்காமல் நம்மால் முடிந்த விஷயங்களில் பூமியை பாதுகாப்போம்.




சுற்றுப்புறத்தை காக்க நம்மால் முடிந்தவை...

குப்பைகளை குப்பை தொட்டியில் போடவேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பையில் போடவேண்டும்.

கழிவுநீர் வடிந்து கொண்டிருந்தால் நாமே நேரடியாக சென்று புகார் தரலாம்.  

சென்னை மாநகராட்சியிடம் புகார் கொடுக்க : 1913 / எஸ்.எம்.எஸ்.978995111125381651/ 25384530 / 9445150999 

  
வாகனத்தில் அதிக புகை வந்தால் உடனே கவனிக்க வேண்டும்.


மணல் கொள்ளையை தடுப்போம். முடித்தால் வழக்கு தொடரலாம் மணல் எடுக்க கூடாதென்று.

தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்துவோம். எங்காவது தண்ணீர் வீணாக போய் கொண்டிருந்தால் அதை சரி செய்வோம்.

மழை நீரை சேகரிப்போம்.

நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்.

இன்றே உறுதி மொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதை பராமரிப்போம்... நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைத்து, அந்த குழந்தைக்கு மரம் வளர்ப்பதன் அவசியத்தை சொல்லி சொல்லியே குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 

இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மேலும் வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றிவிடலாம். 




கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)




Friday, November 25, 2011

இணையத்தில் கல்வி கற்கலாம் வாருங்கள்...


கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.

அரசு மாணாக்கருக்கு இலவச கணனியை வழங்கப் போவதால் இத்திட்டம் தமிழக மாணாக்கருக்குப் மிகுந்த அளவில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா வகுப்பு மாணவருக்கும் இத்திட்டம் பயனளிக்கக் கூடியதா என இதைப் பற்றி விரிவான தகவல்களை சொல்லும்படி கேட்டோம். இந்த கல்வி சேவை பற்றி அவரது வார்த்தைகள் இதோ:-

திரு. நாகராஜன் ரவி.( CEO ., GLOBAL INSIGHT GROUP):-
ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்சி ஆங்கில மற்றும் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றும் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ணத் தேவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜெக்டர்" மூலம் இணைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லாரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகப்படுத்தபடுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஷல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ்., வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படிப் படியாக செயல்படுத்துவேன்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.

தயவு செய்து என் நெடுநாள் கனவான இந்த இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டலை கொண்டு செல்ல உதவுங்கள்.

www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in

நன்றியுடன் - நாகாராஜன் ரவி - nag@insightgroupglobal.com


நன்றி : தேனம்மை லெக்ஷ்மணன்

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, November 24, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (24.11.2011)




 பஞ்ச் : 1

தேர்தல்ல நின்னு ஒட்டு கேக்குறப்பவே கஜானா காலியா இருக்குமா? இருக்காதா? இருந்தா என்ன பண்ணுவோம், இல்லங்காட்டி என்ன பண்ணுவோம்னு சொல்லி ஓட்டு கேட்க துப்பு இல்லாத அரசியல் கட்சிகளை கட்டிக்கிட்டு இந்த சனங்க படுற பாட்ட என்னனு சொல்ல?


சவுடாலா 'ஆட்ட கொடுப்பேன், மாட்டை கொடுப்பேன், கிரைண்டர் கொடுப்பேன், மிக்சி கொடுப்பேன் லேப் டாப்ப கொடுப்பேன்'னு எதிர்த்து நிக்கிறவங்கள விட ஒரு படி மேல ஏறி வாக்குறுதி கொடுத்த அம்மணி.......திடு திப்புனு சொல்லுது மத்திய அரசு நிதி கொடுக்கல கஜானா காலி...ஏற்கனவே இருந்தவங்க கடன வச்சுட்டு போய்ட்டாங்கன்னு...
ஒண்ணு கடன வச்சுட்டு முறையில்லாம ஆண்டுட்டு போய்ட்டாங்கன்னு சட்ட ரீதியா நடவடிக்கை எடுங்க...இல்ல...உங்க நிர்வாகத் திறமையால வேற எங்கனாச்சும் ஏதாச்சும் செஞ்சு சமாளீங்க....ஓட்டு கேக்கவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க...நீங்க கவர்மெண்ட் நடத்தவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க....

பொழைக்கிறது பிச்சைகார பொழப்பு இதுல உங்களை எல்லாம் பாத்து சனங்க பயப்படணும்...! ஆயிரம்தான் சொன்னாலும் இவ்வளவு தூரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தினதும்......பால் விலைய உயர்த்தினதும்....எம்புட்டு தூரம் சாதாரண மக்களை பாதிச்சு இருக்கும்னு நினைச்சுப் பார்க்க கூட துப்பில்லாத ஒரு கவர்மெண்ட்க்கு கீழதான் நாம இருக்கோம்னு நினைச்சுப் பாக்கையிலயேஇந்த பொழப்பே எதுக்குன்னு தோணுதுங்க .

பஞ்ச் 2 

உண்ணாவிரதம் இருக்குற தென்னாட்டு அன்னா ஹசாரே விஜயகாந்த்  நினைச்சா கண்ணுல தண்ணி வருதோ இல்லையோ....ஆனா ஊன்னா உண்ணாவிரதம் இருந்து காந்தி தேசத்துக்கு பெருமை சேக்குற இந்திய பெருங்குடி மக்களை நினைச்சா... ரொம்ப பொறாமையா இருக்கு போங்க...

கூட்டணி வச்சு ஓட்டு கேட்டு ஜெயிச்சு சட்டசபையில எதிர்கட்சியா உட்காரவரைக்கும் இவருக்கு அந்தம்மாவ பத்தி ஒண்ணியும் தெரியாது... அந்த அம்மாளுக்கும் இவர பத்தி ஒண்ணியும் தெரியாது. ஏற்கெனவே இருந்த களவாணிக கிட்ட இருந்து தப்பிச்சு கொள்ளைக்காரங்க கிட்டயா போயி தமிழ் நாட்டு சனம் மாட்டணும்...?

விலைவாசி அதிகமாயிருக்குனு சொல்லி கட்சியில இருக்க அம்புட்டு எம்.எல்.ஏக்களையும், தான் உள்பட ராஜினாம செஞ்சுட்டு..... அதிமுக வோட கூட்டணி போட்டு நின்னு ஜெயிச்ச இந்த பதவி வேணாம்னு சொல்லிட்டு தனியா நின்னு போராடுவாரா விஜயகாந்த்  சாரு...?


உண்ணாவிரத ட்ராமா எல்லாம் யாருக்கு வேணும்னு கேளுங்க மக்கள்ஸ்!

பஞ்ச் 3 

முல்லை பெரியாறு அணை விவகாரத்துல உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காம கேரள கவர்மெண்ட் அடிக்கிற லூட்டியவே சகிச்சுக்க முடியலை....இந்த லட்சணத்துல மண்ணின் மைந்தர் சோகன்ராய் சம்பாரிச்ச பணத்தை எல்லாம் வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாம டேம்999னு ஒரு படத்தை ஹாலிவுட் குழுவின் துணையோட எடுத்து இந்தியா முழுசும் வெளியிட இருக்கார்....

ஒரு அணை உடைஞ்சு போற மாதிரியும் அதுனால ஏகப்பட்ட சனங்க செத்து பெரிய இழப்பு ஏற்படுற மாதிரியும் கருவ மையமா வச்சு இவுரு செதுக்கியிருக்க படம் மூலமா முல்லை பெரியாறு அணை ரொம்ப டேமேஜா இருக்கு அதை கட்டி கொள்ள நாளு ஆயிடுச்சு.....அதனால எங்க கேரள கவர்மெண்ட் சொல்ற மாதிரி புது அணைய கட்டுனா நல்லது....இல்லங்காட்டி அணை ஒடைஞ்சு சனம் எல்லாம் செத்து சிவலோகம் போயிடுவாங்கன்னும் சொல்ல வர்றாரு நம்ம சோகன் ராய் அண்ணாச்சி...

அணை பழுதா இருக்கு உடையும் மகா ஆபத்தா இருக்குன்னு எந்த நிபுணர் குழுவும் சொல்லாத போது உச்ச நீதி மன்றம் சொன்ன மாதிரி 142 கன அடி தண்ணீர தேக்கி வச்சு தமிழ்நாட்டுக்கு கொடுக்குற தண்ணீர கொடுக்கறத கொடுக்காம இருக்குற கேரள கவர்மெண்டும் சரி...இப்படி படம் எடுத்து தவறான செய்திய பரப்புற கேவல டைரக்ட்டரும் சரி...வன்மையா  நம்மால் கண்டிக்கப்பட வேண்டியவர்களே...!

பஞ்ச்: 4

ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப் பணியாளர்கள் என்ன கால்பந்தான்னு ஆளும் அதிமுக அரசைப் பாத்து உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டு இருக்கு....! 
அதெல்லாம் தெரியாது சார் நாங்க ஒத்துக்கிட மாட்டோம்...மக்கள் நலப் பணியாளர்களை நாங்க உதைச்சுதான் விளையாடுவோம்....ஏன்னா மக்கள் எல்லாம் எங்களை உதைச்சு உதைச்சு விளையாடுறாங்களே அது ஏன்? போன அஞ்சு வருசம் திமுககிட்ட கொடுத்துட்டாங்க...அப்ப எங்க போச்சு இந்த நீதி மன்றங்கள்...எல்லாம்...? உச்ச நீதிமன்றம் சேத்துக்கிட சொல்லிடுச்சேன்னு எல்லாம் எங்கம்மா பொரட்சித் தலைவி சேத்திக்கிட மாட்டாங்க.....கிளியூர் சோசியர் சொல்லி இருக்காரு மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் சேத்துக்கோங்க அம்மா...நீங்க மகராணி மாதிரி இருப்பீங்கன்னு அது கோசாரம்தான் ...சேத்துக்கிடுறோம்....

அதிமுக அரசாகிய நாங்க கோர்ட்டு சொல்லிடுச்சுன்னோ...இல்ல மக்கள் மேல இரக்கப்பட்டு மறுக்கா மக்கள் நலப்பணியாளர்களை சேத்துகிட்டோம்னு கனவுலயும் நெனச்சுடாதீங்க...ஆமா..!

பஞ்ச் : 5

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் அவரோட போர் முரசுகள் எல்லாம் தமிழ் நாட்லதான் இருக்குறாங்களா? இல்லை வேற எங்கிட்டாச்சும் போய்ட்டாங்களா? கலைஞர் ஆட்சியில மட்டும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஆகணும் மண்ணா போக கூட்டாதுன்னு தொண்டை நரம்பு புடைக்க பேசி பேசி .......பேசி...கிட்டே இருந்தவரு...
அம்மா ஆட்சிக்கு வந்த உடனே கப்சிப்னு இருக்கறதா பாத்தா இப்டிதாண்டா தமிழனா இருக்கணும்னு சொல்லாம சொல்றாங்களோ? பரமக்குடியில சுட்டு கொன்னப்போ..., சட்ட சபைய ஆஸ்பத்ரியா மாத்தினப்போ, சமச்சீர் கல்வியே கூடாதுன்னு சொன்னப்போ...நூலகத்தை இழுத்து மூடிட்டு குழந்தைகள் ஆஸ்பத்திரியா மாத்தப் போறேன்னு சொன்னப்போ...இப்ப பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் உயர்ந்து மக்கள் சீரழிஞ்சு கிட்டு இருக்கப்போ

இவுங்களையெல்லாம் பாத்தா தமிழர்களா தெரியலையா சீமான் சார்? ம்ம்ம்ம் ஒரு வேளை ஏதாச்சும் எதித்துப் பேசுனா...அம்மா ஹேண்டில் பண்ற விதம் ஐயா மாதிரி ஸ்மூத்தா இருக்காதுன்ற பயமா சார்? இவுங்க வீரம் இவ்வளவுதானா !

கழுகிற்காக
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes