Wednesday, June 06, 2012

ஏன் இன்னமும் பற்றி எரிகிறது காஷ்மீர்....? ஒரு ஆய்வுப் பார்வை...!


ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப சமகாலத்துக்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம்.
ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்?
ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்…..
”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.
அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 குச் செல்ல வேண்டும்.” என்று நாம் கடந்த இதழில் கூறியிருந்தபடி இப்போது அதில் அடியெடுத்து வைப்போம்.
அந்த நாள்தான் அக்டோபர் 24. அன்றுதான் குறிப்பிட்ட மூவாயிரம் பழங்குடியினர் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் நுழைகிறார்கள்.
மன்னர் அரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பாமலோ அல்லது எந்த முடிவும் எடுக்க தீர்மானிக்க இயலாத நிலையிலோ இருந்த நேரத்தில்தான் இவர்கள் நுழைகிறார்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் இந்துக்களும், சீக்கியர்களும் நுழைய….. இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரு புறமும் கொலை, கொள்ளை, தீவைப்பு. இந்தத் தாக்கம் ஜம்மு பகுதியிலும் தொற்றிக் கொள்ள…. அப்போது நுழைந்தவர்கள்தான் அம்மூவாயிரம் பழங்குடியினர்.
இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஆசி இருந்தது. காப்பாற்ற வந்ததாகச் சொன்னவர்களே காஷ்மீரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இப்பழங்குடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் பாரமுல்லா எனும் நகரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் மூவாயிரம் பேர்.
இந்த வேளையில்தான் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மன்னர் அரிசிங் இந்திய உதவியை நாடுகிறார். இந்த உதவி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கிடைக்காது என்பது பள்ளிச் சிறுவனுக்குக்கூட தெரியும். அப்புறம் இது மாட்சிமை தாங்கிய மன்னருக்கு தெரியாமலா இருக்கும்.
தெரிகிறது.
புரிகிறது.
1947 அக்டோபர் 26 ஆம் தேதி மன்னருக்கும் இந்தியாவுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அதன்படி பாதுகாப்பு…. வெளியுறவு…. தகவல் தொடர்பு…. இம்மூன்றில் மட்டும்  இந்திய அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்கிறார் மன்னர்..
”ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இந்த இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வோம்” என்று மறுநாள் இந்தியாவும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறது.
பிறகு இந்தியப்படைகள் சிறீநகரில் நுழைந்ததும்…..
பள்ளத்தாக்கில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டு மன்னர் பரம்பரை நிர்வாகத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு ஜம்மு நோக்கி ஓட்டம் விட்டதும்……
சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியினர் இந்துக்களையும், இசுலாமியர்களையும் அணி திரட்டி பாலங்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பளித்ததும்……. ஏறக்குறைய அறிந்த செய்திகள்தான்.
இவற்றுக்கு மத்தியில்  நவம்பர் இரண்டாம் நாள் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் நேரு “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் அம்மாநில மக்களால் தீர்மானிக்கப்படும் என்கிற வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். அமைதி நிலைநாட்டப்பட்ட உடனேயே சர்வதேச பார்வையாளர்கள் தலைமையின் கீழ் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று மீண்டும் ஒரு முறை அடித்துச் சத்தியம் செய்கிறார்.
இந்திய ராணுவம் ஊடுருவல்காரர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் விரட்டியடிக்க…..பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் நுழைந்து சண்டையிட போர் உருவாகிறது.
போரின் முடிவோ காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதில் போய் முடிகிறது.
ஊடுருவ வந்து பாகிஸ்தான் கைப்பற்றிய ஒரு பகுதியை ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று இந்தியா அழைக்க……
உதவ வந்து இந்தியா மீட்ட மற்றொரு பகுதியை “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்க….
அக்பர் தொடங்கி அரிசிங் வரைக்கும் எண்ணற்ற ராஜபரிபாலனைகளைப் பார்த்த காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் இனம்புரியாத இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது.
அதுவரையில் மன்னர்களது குத்துகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ”ஜனநாயக” கும்மாங்குத்துக்களை அனுபவிக்கும் ”பாக்கியம்” அப்போதுதான் வாய்க்கிறது.
காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்ட நேரு தலைமையிலான இந்திய அரசு  ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உறுதிமொழியை ஐ.நா.சபையிடம் சமர்பிக்கிறது. அந்த நாள்தான் 1947 டிசம்பர் 31. அந்த உறுதிமொழி இதுதான்.:
“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின்வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலைநாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா.சபையின் மேற்பார்வை அவசியப்படும்.”
இதுதானய்யா அந்த வரலாற்றுச் சிரிப்பு மிக்க வாக்குறுதி.
ஆக இன்னமும் படையெடுப்பாளர்கள் விரட்டப்படவில்லை…. அன்று தொடங்கி இன்று வரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை…. அதனால் அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் நேரம் கனியவில்லை… அதனாலேயே நேரடி வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை….. இதுதான் பல ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்த ஒரே பல்லவி.
நேரடி வாக்கெடுப்பு நடந்தால் காஷ்மீர் மக்கள் நம் பக்கம்தான் சாய்வார்கள் என நாக்கைத் தொங்கப்போட்டபடி பாகிஸ்தானும் அதற்கு தலையாட்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 47 இல் நடந்த யுத்தம்….. 65 இல் நடந்த யுத்தம்…… 71 இல் நடந்த யுத்தம்…. இவற்றின் போதெல்லாம் பாகிஸ்தான் பக்கம் கனவிலும் தலைவைத்துப் படுக்காத காஷ்மீர் மக்களைப் பற்றி அது அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான்.
இந்தியாவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தன் பங்குக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை 1948 இல் நிறைவேற்றியது.“சண்டையிடுவதற்காக அம்மாநிலத்திற்குள் நுழைந்த பழங்குடிப் படையெடுப்பாளர்களும், அம்மாநிலத்தில் வசித்து வராத ஏனைய பாகிஸ்தான் தேசிய இனத்தவரும் அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இராணுவத்தை மட்டுமே இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்க வேண்டும். இணைப்பு பிரச்சனையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழு சுதந்திரத்தையும், சூழ்நிலையையும் இரு நாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.”
ஆனால் அவ்வளவு லேசுப்பட்ட நாடுகளா இந்தியாவும்…. பாகிஸ்தானும்….? வெளிப்பார்வைக்கு வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாலும் இரண்டுக்கும் உள்ளூர ஒரு பயம். இரண்டு நாட்டுக்குமே இந்த மக்கள் அல்வா கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான்.
அப்புறம் நேரடியாவது….. மறைமுகமாவது……? அப்படியே தொடர்கிறது கதை.
மன்னனிடம் இருந்து விடுபட்டு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்பதில் தொடங்கிய கதை பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையாக விரிவடைந்து…. அப்புறம் இருநாட்டுக்குமான பாதுகாப்புப் பிரச்சனையாக பரிமாணம் எடுத்ததில் போய் முடிந்தது.
முதலில் காஷ்மீரிகளின் கதி அக்பரின் கைகளில் இருந்தது…..
அப்புறம் சில முகலாய மன்னர்கள் அதை வைத்திருந்தார்கள்…..
பிற்பாடு சீக்கியர்கள் வைத்திருந்தார்கள்….
அடுத்து டோக்ரா இந்து மன்னன் வைத்திருந்தான்…..
அதற்கும் பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் வைத்திருந்தன……
அது சரின்னே…. அப்ப இந்த ரெண்டு நாடுகள வேற யாருன்னே வெச்சிருந்தா? என கரகாட்டக்காரனில் செந்தில் கேட்டதைப் போல யாரேனும் கேட்டால்…?
அதற்கும் இருக்கிறது பதில். அதுதான் அமெரிக்க-சோவியத் வல்லரசுகள்.
ஆம் 1953 க்குப் பிறகு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க வந்த அமெரிக்காவோடு பாகிஸ்தான் கொண்ட காதலும்….. சோவியத் யூனியனோடு இந்தியா கொண்ட மையலும்….. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையாக உருமாறிப் போயிருந்த காஷ்மீரப் பிரச்சனையை அமெரிக்கா- சோவியத் பிரச்னையாக தடம் மாற்றிப் போட்டன.……
இவ்வளவுக்கும் மத்தியில் “பணிவானவர்கள்….. கோழைகள்” என வர்ணிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஆயுதப் போராட்டத்துக்கு அறிமுகமானதே 1988 க்குப் பிற்பாடுதான்.
இதிலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற (JKLF) அமைப்பு ”எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்…. இந்தியாவும் வேண்டாம்…. எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம்” என்று போராடுகிற அமைப்பு. ஆனால் இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கும் பிடிக்காது. இந்தியாவுக்கும் பிடிக்காது. போதாதற்கு ”மதசார்பற்ற அரசுதான் காஷ்மீரில் அமைய வேண்டும்” என்பதுதான் அந்தப் போராளி அமைப்பின் லட்சியமாக சொல்லப்படுகிறது.
இந்த அமைப்பினரை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்க ஆள் அனுப்பும் ஒரே நாடு பாகிஸ்தான்தான். அதைப் போலவே மதசார்பற்ற ஒரு அமைப்பை எதிரியாகக் காண்பித்து போரை நடத்துவதை விடவும் பாகிஸ்தான் ஆதரவும், மதப்பிடிப்பும் கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழுக்களை முன்னிறுத்தி போரிடுவதாகக் காண்பிப்பதுதான் இந்தியாவுக்கு லாபம்.
ஆயுதப் போராட்டம் அறிமுகமானதற்கே முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூத்துக்கள்தான் என்பது அநேகரது கருத்து. சனநாயகம் சிரிப்பாய்ச் சிரித்த தேர்தல்கள் அவை. நம்மூர் இடைத் தேர்தல்கள் எல்லாம் இந்தியா நடத்தும் காஷ்மீர் தேர்தல்கள் முன் பிச்சை வாங்க வேண்டும். ஒன்று இந்தியாவுடன் இணைப்பை வலியுறுத்துகிற வேட்பாளர் போட்டியின்றியே ”தேர்ந்தெடுக்கப்படுவார்”. அல்லது எதிர்த்து நிற்கிற வேட்பாளரது மனு தள்ளுபடி பண்ணப்படும். அங்கு எல்லாமே ”சிதம்பரம் பாணி” தேர்தல்கள்தான்.
சட்டப்பிரிவு 370 இன் ஓட்டைகள்….. பாகிஸ்தான் ஆயுத உதவி பெற்ற குழுக்களது வன் செயல்கள்….. நான்கு சதவீதமே உள்ள பண்டிதர்களது அதிகாரப்பகிர்வு….. பெரும்பாலான காஷ்மீரிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாகிஸ்தானின் ஆதரவு குழுக்கள் பண்டிதர்கள் மீது நடத்திய  தாக்குதல்கள்…. இடையில் ஆளுநராக அரசாண்ட ஜக்மோகனின் லீலைகள்….. என எழுதிக் கொண்டே போக ஏராளம் இருக்கிறது.
இந்த மண்ணின் மக்களது தொடரும் துயரங்களை இந்தத் தொடருக்குள்ளேயே முடித்து விட முடியாதுதான். ஆனாலும் இந்த மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதுதான்   கட்டுரையின் நோக்கம்.
ஜம்மு – காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனை என்பது இந்து முஸ்லீம் மோதலுமல்ல…… இந்தியா – பாகிஸ்தான் இரண்டுக்குமான போட்டி சமாச்சாரமும் அல்ல. அது காஷ்மீரிகள் தங்களது தன்னுரிமைக்காக ஏங்கும் ஏக்கங்களில் கலந்து நிற்கிறது.
எது எவ்வாறாயினும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அது ஒன்றே ஒன்றுதான்.
சுருக்கமாகச் சொல்வதானால்……
காஷ்மீர் விடுதலைக்காக
ஆயுதம் ஏந்தியவர்களெல்லாம்
போராளிகளும் அல்ல.
தன்னுரிமையை
நேசிக்கும் காஷ்மீரிகள் எல்லாம்
தேசத்துரோகிகளும் அல்ல. 

 நன்றி: பாமரன்
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

5 comments:

suvanappiriyan said...

ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட இடுகை. அந்த மக்களின் விருப்பத்தின்படி ஆட்சி அமைவதுதான் நமது நாட்டுக்கும் நல்லது.

சிரிப்புசிங்காரம் said...

ஒன்னோட பதிவில நெறையா விஷ்யம் விட்டுப்பொயிருக்கே...??ஓஹோ நீ அந்தமாதிரி ஆளா...?????அதான் சுவனப் பிரியன் ஒன்னோட பதிவ ஆதரிக்கிறப்லயா...????

நாய் நக்ஸ் said...

வாங்க சிரிப்பு சிங்காரம் சார்.....
ப்ரோபில் இல்லாம வந்தா தெரியாதா சார்...?????

சிரிப்பு சிங்காரம்-னு பேருக்கு பதிலா
சென்னை சிங்காரம்-னு வைங்க சார்.....

அங்கதானே இருக்கீங்க....?????

நேர்மையான,,ஆணித்தரமான வாதத்தை வைங்க......
விவாதம் பண்ணுவோம்...

அதை விட்டுவிட்டு....இந்த மாதிரி சில்லியாக
கமெண்ட் போடாதீங்க......

இதை பார்க்க நீங்க மீண்டும் வருவீங்களா சார்.....??????

வாங்க சார்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.பாமரன்,

முடிந்தவரை நேர்மையாகவும் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சரியாகவும் சொல்லி இருக்கிறீர்கள்..!

ஹும், ஒரு பதிவில் அடங்கும் வரலாறா அது..? 65 வருடம் குடைந்து குத்தி ரணமாக்கி புரையோடிப்போன ஆறாத காயம் அல்லவா..!

பாவம் அந்த மக்கள்... இப்படி ஒரு நெஞ்சம் தமிழில் பதிவு போட்டு நேசிக்க உள்ளது என்று அறிந்தாலே கூட போதும்..! இன்னும் பல்லாண்டு போராட அது தெம்பு தரும்..! நன்றி சகோ...!

இப்பதிவுக்கு மக்களிடமும் திரட்டிகளிடமும் எதிர்ப்பு ஏதும் இல்லாததும் மிகவும் ஆச்சரியமான & ஆரோக்கியமான & மகிழ்ச்சியான விஷயம்..!

மகுடத்தில் அமர வேண்டிய பதிவு இது..!

சிரிப்புசிங்காரம் said...

இதை பார்க்க நீங்க மீண்டும் வருவீங்களா சார்.....??????
வந்துட்டேன்...வந்துட்டேன்...ஊர சொல்லக்கூடாது சார்...நீங்கள்ளாம் அஹிம்சா வாதிகள்.....தலைய எடுத்துடுவீங்க..அப்புறம் தலையில்லாம என்ன பண்ணுறது...????

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes