Saturday, March 08, 2014

வெற்றிக் கொடி கட்டும் கழகம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!


பாரளுமன்றத் தேர்தலுல் கூட்டணி வியூகத்திற்கான பல்வேறு கட்சிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதலே தெளிவான போக்கோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.

40 தொகுதிகளுக்கும் எதேச்சதிகாரமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிராச்சாரத்துக்கு பிரதமர் கனவோடு புறப்பட்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றிய எந்த ஒரு கவலையுமின்றி தன் மீதிருக்கும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின் காரணமாய இயங்க ஆரம்பித்திருப்பது தமிழக மக்களிடையே ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு சர்வ நிச்சயமாய் பாரளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்து வெற்றிவாய்ப்புகளின் எண்ணிக்கையை குறைக்கத்தான் போகிறது. 

விஜயகாந்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணியோடு சேர்ந்திருந்தாரேயானால் கணிசமான இடத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. தற்போது திமுகவின் ஒவ்வொரு அசைவும் ஸ்டாலினின் கூர்மையான பார்வைக்கும், ஆராய்ச்சிக்கும் பிறகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் வியூகத்திலிருந்து இனி ஸ்டாலினின் ஆளுமை திமுகழகத்தை முழுமையாக வழிநடத்தப் போகிறது என்பதை அறியாத விஜயகாந்த், போன ஆட்சியில் கலைஞர் மீதிருந்த இருந்த மக்களின் அதிருப்தியையும், இன்ன பிற ஊழல் வழக்குகளையும் மனதில் வைத்துக் கொண்டு திமுக பக்கம் போகாமல் தவிர்த்திருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அதனாலேயே இப்போது காங்கிரஸ் எதிர் மனோபாவம் இருக்கும் தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து வெற்றி பெறலாம் என்று  மனப்பால் குடித்தபடியே பாஜக என்னும் மதவாதக் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தியும் கொண்டிருக்கிறார்.

காங்கிரசும், பாஜகவும், இருபெரும் திராவிடக் கட்சிகளின் உதவியின்றி தமிழகத்தில் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதே நிதர்சனம். இப்படியான சூழலில் விஜயகாந்த் + பாஜக கூட்டணி ஒன்று சேர்ந்து நிர்ணயிக்கப் போவது அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி வாய்ப்புகளைத்தானே அன்றி அவர்களின் வெற்றியை அல்ல.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் செயற்பாடுகள் மீதிருந்த நம்பிக்கையின்மை என்று  எல்லாவற்றையும் மெல்ல மெல்ல சரி செய்து, அழகிரியைக் கட்சியை விட்டு ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு மிகப்பெரிய  மாநாட்டினை திருச்சியில் நடத்தி தங்கள் தொண்டர்களின் பலத்தை உறுதி செய்துள்ள திமுகவின் அட்டகாசமான பலத்துக்குப் பின்னால் விசுவரூபமாய் நின்று கொண்டிருப்பது ஸ்டாலின் என்னும் ஒற்றை ஆளுமை மட்டுமே...!

அதிமுகவும் திமுகவிற்குமான நேரடிப் போட்டிதான் இந்த பாரளுமன்றத் தேர்தலிலும் இருக்கப் போகிறது என்றாலும் திமுகவிற்கு 10லிருந்து 15 எம்.பிக்கள் சீட்  கிடைத்தாலும் கூட அது தமிழக ஆளுங்கட்சியின் மீது விழப்போகும் மரண அடி என்பதோடு மட்டும் இல்லாமல், பிரதமர் கனவினால் ஜெயலலிதா அம்மையார் தமிழகத்தில் தன்னுடைய ஆளுமைப் பிடியை மெல்ல மெல்ல இழக்கவும் தொடங்குவார். 

ஸ்டாலின் நேரடியான தலையீட்டோடு இப்போது நகர ஆரம்பித்திருக்கும் திமுகழகம் சமீப காலமாக அந்தக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிக விமர்சனங்கள் இல்லாமல் தங்களை மிஸ்டர். க்ளீன் இமேஜில் வைத்திருக்கவும் செய்திருக்கிறது. போன தலைமுறைக்கான அரசியலைச் செய்து அந்த ஸ்டண்ட் யுத்திகளை கலைஞர் ஊடக பெருக்கம் நிறைந்த இந்த தலைமுறையினரிடம்  செயற்படுத்திய போது அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதோடு மட்டுமன்றி கேலிக்குரியதாகவும் இன்றைய இளையர்களால் பார்க்கப்பட்டது. இப்படியான எல்லா சறுக்கல்களையும் கூர்மையாய் கவனித்து ஒரு நீண்ட நெடும் பயணத்திற்காய் தன்னையும் தன் கட்சியினரையும் தயார்படுத்தி இருக்கும் ஸ்டாலினே தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் எனர்ஜி டானிக்.  தினந்தோறும் அவர் கொடுக்கும் கவுண்டர் அட்டாக் களை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக தலைமை தள்ளாடிப் போய்தான் இருக்கிறது. ஸ்டாலின் கொடுக்கும் புள்ளி விபரங்களும் அதிரடி கேள்விகளையும் எதிர் கொள்ளவோ பதிலளிக்கவோ முடியாமல்தான் இருக்கிறார் ஜெயலலிதா அம்மையார்.

தளபதி ஸ்டாலின் இன்றைய தலைமுறை இளையரின் விருப்பம் என்னவென்று அறிந்தவர். அவர் துல்லியமாய் அடுத்த தலைமுறையினரின் நாடி பிடித்துப் பார்த்துதான் திமுகழகத்தில் பலர் காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போதும் பிடிவாதமாக மறுக்கவும் செய்தார். இப்போது தனித்து களமிறங்கி இருக்கும் உதயசூரியனுக்கு இருக்கும் மாஸ் தளபதி ஸ்டாலினின் வழிகாட்டுதலால் நிகழ்ந்தது.


பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு மதவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடு என்று சொல்லி விட்டு காங்கிரசோடு மீண்டும் கூட்டணி வைத்து இப்போது தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நிம்மதிப் பெருமூச்சுக்கு கண்டிப்பாய் ஸ்டாலின் முற்றுப் புள்ளி வைக்க மாட்டார் என்றே நாம் நம்புகிறோம். காங்கிரசை எதிர்த்து தமிழகத்தில் திமுக நிற்பதோடு மதவாதக் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் நின்று தமிழர் நலனுக்காய் சீறிப்பாயுமெனில்...2016ல் மட்டுமல்ல...ஸ்டாலின் இருக்கும் அவரை அவர்தான் தமிழக முதலமைச்சராக இருப்பார் என்பது மட்டும் உறுதி.


கழுகு


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)






 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes