Thursday, January 12, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)



பஞ்ச் :1

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாய் அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான வன்முறையை தூத்துக்குடி நகரம் சந்தித்து இருக்கிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் எந்த நியாயத்திற்கு வந்தாலும் அது தவறுதான்.

தனது தலைவர் கொல்லப்பட்டதற்கு தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பிடித்து அடிப்பதும், கடைகளை கொளுத்துவதும், அலுவலகங்களை அடித்து நொறுக்குவதும் எப்படி தீர்வாகும்? மிக மிக நுண்ணிய உணர்வுகளை தூண்டி விடக்கூடிய பிரச்சினைதான் சாதிப் பிரச்சினை...

என் நியாயம் உன் நியாயம் என்று பேசுவதை விட்டு விட்டு....மனிதநேயத்தோடு மக்கள் வாழ தகுந்த சூழலை அரசு மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் உருவாக்க வேண்டும்..! கொலைவெறியாட்டம் ஆடும் ரவுடிகளை தடுக்க முயலுகையில் துப்பாக்கி சூடு நடத்தும் போலிசாரையும் நாம் தான் திட்டுகிறோம்....சாதாரண முறையில் தடுக்க முயன்றால் போலீசுகாரன் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறான்டா என்றும் கூறுகிறோம்....!

வன்முறையில்லாத சமுதாயத்தை ஒரு அரசால் மட்டும் படைக்க முடியாது...மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
 
பஞ்ச் :2

நக்கீரன் கோவாலுவோட வரலாற எடுத்து பாத்தீங்கன்னா மூணு இல்லை நாலு லைன்ல அது முடிஞ்சு போயிடும். அம்மாவை எதுத்து காரசாரமா எப்பவும் எழுதி அடிவாங்குற மாதிரி கைது பண்ணி உள்ள போற மாதிரி போயி பத்திரிக்கையோட சர்க்குலேசன ஏத்துற வேலைய அம்மா ஆட்சியில தவறாம செய்வாப்ல...,

அப்புறம் வீரப்பன வைச்சு நல்லா காசு பாத்தாப்ல, பாரிஸ்ல பஸ்ல ஏறி தி.நகர்ல எறங்கி ரெங்கநாதன் தெருவல சரவணா ஸ்டோர்ல போயி துணி எடுக்குறது கணக்கா பொசுக்கு பொசுக்குனு இவுரு போயி காட்டுல பேட்டி எடுத்துட்டு வந்தப்ப இந்தியாவோட இறையாண்மையும் போலிஸியும் தெருவுல பலிங்கி வெளையாடிகிட்டு இருந்துச்சு..., அம்மா ஆட்சியில வீரப்பன கொன்னு போட்டதோட நக்கீரனோட பிசினசையும் சேத்தே கொண்டு புடிச்சி...

ஈழத்தமிழர் ஆதரவு போர்வையை போத்திகிட்டு போட்டோ வீடியோன்னு காசு பாத்திகிட்டு  இருந்த கோவாலுக்கு அதுலயும் ஒரு லெவலுக்கு மேல போக முடியலை... ஏன்னா கலைஞர் ஐயாவோட ஆட்சியில வாலு ஆடாம இருந்துச்சுனா ஐயா கடுப்பாயிட்டாருன்னா.. நக்கீரரு ரெண்டு கட்சியையும் பகைச்சுகிட்டு வெளையாட முடியாது...!

சாமியாரு நித்தி வெவகாரத்துல டவுசரு கிழியறதுக்கு முன்னாடி முந்திகிட்டு.. மாட்டுகறி மாமின்னு கவர் ஸ்டோரி போட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தாரு....ஆனா ஆபிச ஒடைச்சு சாணிய கரைச்சு ஊத்தினதோட அம்மா கட்சி ஆளுகளுக்கு சைலண்ட்டா இருக்க ஆர்டர் போட்டுடுச்சு போல....நக்கீரன் கோவாலு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டு இஞ்சி தின்ன கொரங்காட்டமா இப்போ முழிச்சுகிட்டு இருக்காரு...!

அம்புட்டுதேன் நக்கீரரு கதையிங்க..!

பஞ்ச் :3
 
எதிர்கட்சி தலைவரு பயங்கர கோவமா இருக்காராமுங்க...! ஆமாம் சினிமாவுல கிளிசரின் போட்டிகிட்டு கண்ண செவக்க வச்சிகிட்டு..(அவுருக்கு கண்ணு செவக்க வேற காரணம் இருக்கு..ஹி ஹி ஹி) கையித்த கட்டி தூக்குவானுவோ.. இவரு பறந்து பறந்து காலாலேயே அடிப்பாரு..., வசனகர்த்தா எழுதி கொடுக்கிற டயலாக்க தொண்டைய அனத்திக்கிட்டு பேசி கைதட்டல வாங்கி தேசப்பற்று இருக்குற ஹீரோவா ஆகிப்புட்டாரு...

அரசியல் என்ன அம்புட்டு ஈசியாங்க....... மக்க சினிமாவ பாத்துபுட்டு ஓட்டு போட்டுருச்சுக.. ஆக்சுவலி சார்க்கு இப்போ என்ன செய்யிறதுன்னு ஒண்ணியும் புரியாம...என்ன பேசினாலும் இந்த சனம் நம்மள மதிக்க மாட்டேங்குது.. சினிமாவுல ஹீரோவா இருந்த நம்மள நெசவாழ்க்கையில் ஜீரோவா பாக்குதகளேன்னு ரெண்டு மூணு ரவுண்டு ஆனதுக்கப்புறம் கண்ணு செவக்க டெய்லி கோவப்படுறாராம்...

பொங்கல் கொண்டாட கரும்பு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுக்கப்போறதா வேற சொல்லிக்கிறாய்ங்க.. ஆனா விசயகாந்த் எந்த அரிசி கொடுத்தாலும் சரி அவரு பருப்பு தமிழ்நாட்ல வேகாதுன்றது பாவம் அவருக்கு எப்புடி தெரியும்...?

பஞ்ச் :4

இராமேஷ்வரத்துக்கு சாமி கும்பிட வந்த ராஜபக்சேயோட மைத்துனர தேடிப் போயி, நம்ம தமிழர் கட்சிக்காரவுகளும், மதிமுக..காரவுகளும்....அடிடா.....அவனை ....உதைடா அவனைன்னு ஒரே ரகளையாமுங்க...

ஏய்யா..சோனியா வந்துட்டுப் போனிச்சி, ராகுல் வந்துட்டுப் போனாரு, பிரதமர் ஐயா வந்துட்டு போனாரு...அப்போ எல்லாம் ஏதாச்சும் போராட்டம் பண்ணினா பிரயோசனம் இருக்கு...! ராசபக்சே வீட்டு வேலைக்காரன அடிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது சாமி..? மறுக்கா அவெங்களும் அப்பாவிகள அங்க அடிக்க ஆரம்பிச்சா என்னாகும்..?

ஆளும் காங்கிரஸ் கட்சியோட மந்திரிமாருகளை குறிப்பா சிதம்பரம் ஐயா மாதிரி ஆளுகள தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்க.. பிரோயோசனமா போகும்..

துரோகிய ஊருக்குள்ள வைச்சிகிட்டு.. எதிரி வீட்டு ஓணான பிடிச்சு அடிக்கிறதுதான் இனத்தோட வீரமா என்ன?
 
பஞ்ச் :5 

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா இன்று தொடங்கி வச்சது எல்லாம் சரிதான்....

கஜானால காசு இல்லாம அல்ரெடி விலைவாசிய ஏத்தி எங்க குரல்வளைய நெறி நெறின்னு நெறிச்சுக்கிட்டு இருக்கையில இப்படி  விரிவான திட்டம், அபாரமான திட்டம்னு எதுக்கு காச கண்ட மேனிக்கு செலவு பண்றாங்க? உங்க தேர்தல் அறிக்கைய நிறைவேத்த எங்க தலையில கைய வச்சு எங்களுக்கே கொடுங்கன்னு அவுங்கள யாரு கேட்டா...?

ச்ச்சும்மா கையில காசு இல்லாத நேரத்துல இது எல்லாம் தேவை தானுங்களா அம்மா?

#நாடு நமது வீடு..#


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, January 11, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (11.1.2012)




கனகும் ரெங்குவும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டு டீ கடை நோக்கி சென்றனர்..

கனகு : என்ன ரெங்கு.. பொங்கலுக்கு ரெடியா..?? என்ன பண்ண போறே..?

ரெங்கு : என்னப்பா ரெடியா....? எப்பயும் போல டிவி முன்னாடி தான் உட்கார போறேன் ... இப்போ எந்திரன் வேற போட போறாங்க.. சொல்லவா வேணும்.. ஆமா நீ என்ன பண்ண போற..?

கனகு : நாங்க எல்லாம் சிங்கம்.. எங்கடா காளை இருக்கும் அத அடக்கலாம் பார்த்திட்டு இருப்பேன்..

ரெங்கு : நமக்கு அதெல்லாம் சரி பட்டு வராதுப்பா...!!

கனகு : ஆமா ஆமா உன்னால பொண்டாட்டியே அடக்க முடியல எங்க காளைய அடக்கப் போற..!

ரெங்கு : யோவ் போய்யா நான் போறேன்...

கனகு : சரி சரி கோவப் படாம நியூஸ் சொல்லு...

ரெங்கு : அப்பா சத்தியம் வாங்குவோம்னு சொல்றார்... பையன் சத்தியம் பண்றார்..

கனகு : யாரு அன்புமணியா..?? என்ன சத்தியம் பண்றார்... நாளை முதல்....

ரெங்கு : வாயில அடி வாயில அடி அன்பு மணி இல்ல சின்ன அய்யா...அப்படின்னு சொல்லுய்யா.

கனகு : யார் வாயில அடிக்க சொல்ற என்னய்யா சின்ன அய்யாவையா..விளக்கமா சொல்லு ரெங்கு..  ஆமா எதுக்கு அவர் சத்தியம் பண்ணார் ஏதாவது ரகசியமா..??


ரெங்கு :  அட பாவி கனகு உன் வாயில தான்... இனி எந்த காரணத்திற்காகவும் எந்த கட்சியுடன் கூட்டணி வைச்சுக்க மாட்டாங்களாம்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் அடிச்சு சொல்லி இருக்காரு.. நம்ம சின்ன அய்யா..

கனகு : எத அடிச்சிட்டு சொன்னாரு.. தெளிவா தான் சொன்னாரா ரெங்கு.. எதுக்கும் ஒரு தடவ அவர்ட்ட கேட்டு பாரு... விடிஞ்சா என்ன சொல்வாரோ போய்யா.. என்ன அரசியல் நடத்துறாங்க இவங்க... 2016லயாவது ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு காலத்தை ஓட்ட வேண்டியது தான்...

ரெங்கு : சரியா சொல்ற கனகு.. இந்த செய்தி தெரியுமா உனக்கு...  இப்போ ஒரு பத்திரிக்கைய கொளுத்தி போட்டாங்களே அந்த பத்திரிக்கைய ஒபாமா பாராட்டினாராம்...

கனகு : என்னய்யா சொல்ற.. ஒரு வேளை "பீப்" சொன்னதாலே பாராட்டினாரோ..??

ரெங்கு : கனகு நீ வெளிய நடமாட வேணாமா.. இந்த வார்த்தைய சொல்லாதே... அவ்வளவு தான் நீ..  கிறிஸ்துமஸ் பற்றி ஒரு கட்டுரை அந்த பத்திரிகையில் வந்ததாம்.. அதை படிச்சு தான் பாராட்டினாராம் கனகு..

கனகு : யோவ் நீ சர்ச்சை இல்லாத நியூஸ் சொல்லுய்யா என் வாய் சும்மா இருக்காது.. நான் வரல அவர் பாராட்டினா என்ன பாரட்டலன்னா என்ன போ.. எனக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்ல..

ரெங்கு : அட டா உனக்கு பாதுகாப்பா..??? பாதுகாப்பு அமைச்சகத்துக்கே பாதுகாப்பு இல்ல இதுல உனக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்ற..

கனகு : என்னய்யா சொல்ற எனக்கு புரியல..

ரெங்கு : மத்திய உள்துறை அமைச்சகத்தில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், மானிட்டர் எல்லாம் திருட்டு போகுதாம்.. அதுவும் இது இரண்டாவது முறையாம்... வெளிநாட்டுக்காரனுங்க நம்மைப்பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க...இந்தியா வல்லரசுன்னு நாம சொன்னத நினைச்சு...

ம்ம்ம்.....உள்துறை அமைச்சர் அலுவலகம் அங்கேயே பாதுகாப்பு இல்ல... உன்ன மாதரி சாதாரண மக்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கும்..

கனகு : இதான்யா வல்லரசு ஆக போற இந்தியா...எப்படி வளர்றோம் நாங்க..  சரி சரி சிதம்பரம் காணாம போகமா இருந்தா சரிதான்.... !!!

ரெங்கு : திமுக பொது குழு கூட போகுதாம்.. தலைவர் ஏதாவது புதுசா சொல்வாரா இல்ல.. இன்னும் கூட்டணியில் தொடர்கிறோம் சொல்வாரா.. ?? கனகு..

கனகு :  உனக்கும் வேற வேலை இல்ல.. உங்க தலைவருக்கும் வேற வேலை இல்ல..  டீ குடிக்கணும் நினைச்சா நம்ம கூட வர சொல்லு அதுக்காக பொது குழுவை எல்லாம் கூட்டி நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்கார்..

ரெங்கு : இல்ல கனகு சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதே.. ஏதாவது புதுசா சொல்வார்..!

கனகு : அவர் ஒண்ணும் புதுசா சொல்ல போறது இல்ல.. கூட்டணி இல்லைன்னு சொன்னா ஏன் மத்திய அமைச்சர் பதவி கேள்வி வரும்....  அப்பறம்.அப்பா என்ன உள்ள தள்ள பாக்குறியான்னு...  அஞ்சா நெஞ்சன் பஞ்சா பறந்து பயந்து வருவார்...

ரெங்கு : அப்போ அவர் டீ குடிக்க தான் பொது குழுவ கூட்டுறார்... அப்படி தானே..??

கனகு : இல்லையா பின்ன... அடுத்த பொது குழு கூடும் போது கொஞ்சம் சக்கரை அதிகமா போட சொல்லுப்பா சொல்வார் பார்..  நீ என்ன நியூஸ் சொல்ற ரெங்கு நான் சொல்றேன் பார் நியூஸ் இப்போ

ரெங்கு : அட பார்றா என்ன நியூஸ் சொல்லு பார்ப்போம்..

கனகு : கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை.. தலைவர ரத்தத்தோடு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டாங்க நம்ம மக்கள்..

ரெங்கு : அட பாவிங்களா இது எந்த ஊர்ல நடந்த கதையா...ரொம்ப டெர்ரர்ரா தான்ய்யா இருக்காங்க

கனகு : கிருஷ்ணகிரி மாவட்டத்துல தான் இப்படி நடந்து இருக்கு.. ஏற்கனவே ரோடு போடுறேன் சொல்லி பஞ்சாயத்து தலைவராகி இருக்காரு.. அப்போ ரோடு போடாம டிமிக்கி கொடுத்துட்டார்.. இப்போ மறுபடி அவர் மனைவிய பஞ்சாயாத்து தலைவராக்கி இருக்கார்.. ரோடு போடுறேன் சொல்லி... நீ இன்னுமா ரோடு போடுறேன்னு மூக்குலே குத்தி இருக்காங்க நம்ம மக்கள்..

ரெங்கு : செம இன்ரஸ்டிங்கா இருக்குப்பா மேல சொல்லு

கனகு : நான் என்ன கதையா சொல்றேன்..  ராஸ்கல்.. இப்படி ஒவ்வொரு ஊரிலும் மூக்குல குத்தி குருதி வெளிய வந்தா தான் வாக்குறுதி நியாபகம் வரும் ..

ரெங்கு : வன்முறைய தூண்டிவிடாதய்யா உள்ள தூக்கி போட்டுட போறாங்க.. வா டீ குடிச்சிட்டு கிளம்புவோம்...

னகு : யார எங்களயா...?? நாங்க அப்போவே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்..   அண்ணாச்சி டீ..ய போடுங்க...!!


   கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Saturday, January 07, 2012

நக்கீரனின் அத்துமீறலும்...அதிமுகவினரின் அராஜகமும்..! ஒரு ரிப்போர்ட்!



பத்திரிக்கை தர்மம் என்பதை இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் மீறி வெகுகாலம் ஆகிவிட்டன என்றாலும், அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் அவை மாறிப் போன கேவலமும் சமகாலத்தில் ஒருங்கே அரங்கேறிக் கொண்டிருப்பது இன்னமும் வேதனையான விசயம். தன்னை ஒரு புலனாய்வு வாரப்பத்திரிக்கையாய் வரிந்து காட்டிக் கொண்டிருக்கும் நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் பிரச்சினைகளை விட தனது வியாபார பெருக்கமே முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

அதிரடி செய்திகளைத் தருகிறேன் என்ற பெயரில் இவர்கள் செய்து வரும் அட்டூழியம் ஒரு பக்கமென்றால், தங்கள் தலைவியைப் பற்றி மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காக கொலை வெறியாட்டம் நடத்தி இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஒரு பக்கமும் நின்று ஜனநாயகத்தினை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கின்றன. பத்திரிக்கைகளை தங்கள் வசதிக்கு ஏற்றார் போல கட்டிபோட்டு வைக்கிறன. வசதியான விசயங்களை வெளியிடச் சொல்லியும், தங்களுக்கு வசதியற்ற விசயங்களை அடக்கி வாசிக்கச் சொல்லியும் அதிகாரிகளைக் கொண்டு மிரட்டி பத்திரிக்கை துறையினை முடக்கி போட்டு வைத்திருப்பதின் விளைவு விபரம் தெரியாத மக்களை, உண்மையை தெளிந்து கொள்ளாத பிரஜைகளை தேசமெங்கும் பித்தர்களாக அலைய வைத்திருக்கிறது.

நக்கீரனும் அப்படித்தான் தனது வசதிக்கேற்றார் போல தனது ரசிப்புக்கும், தனக்கு கிடைக்கும் ஆதரவுக்கும் ஏற்றார் போல செய்திகளை திரித்தும், தேர்தல்களின் போது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் விளையாடியும் மக்களை மடையர்களாக வைப்பதில் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கு தாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று பலமுறை நிரூபித்து இருக்கிறது.

ஒரு பக்கம் தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை, மேலும் இன்வெஸ்டிகேஜன் ஜெர்னலிசம் என்ற பெயரில் நடிகைகள், மற்றும் துணை நடிகைகளின் அந்தரங்கங்கள், அரசியல்வாதிகளின் சொந்த வாழ்க்கையின் பக்கங்கள் என்றெல்லாம் மூக்கு நுழைத்து காசு பார்க்கும் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையே என்றாலும்...

தனது தானைத் தலைவியை பற்றி எழுதி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மிரட்டும் முரட்டு அரசியலை கையிலேந்திக் கொண்டு ரவுடிகளாக அதிமுகவினர் நடந்து கொள்வதும் எந்த ஒரு சாமானிய மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விசயம்.

அரசு, சட்டம், என்பதில் நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியின் தொண்டர்களை வைத்துக் கொண்டுதான் அதிமுக அரசாட்சி செய்கிறது என்பது எவ்வளவு கேவலமான விசயம். ஒரு கட்சி, அதுவும் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் மக்கள் பிரதிநிதியான வேளச்சேரி  எம்.எல்.ஏவே முன்னின்று இந்த தாக்குதலை நடத்தி நக்கீரன் அலுவலத்திற்கு பூட்டும் போட்டு பூட்டி இருப்பது....

எந்த அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் அதிமுகவினர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு. முதலமைச்சர் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க எமது அரசு போரிடும், காவல்துறையினருக்கு உச்ச அதிகாரம் கொடுக்கப்படும் என்றெல்லாம் முழங்கி வருகிறார்....

அதோடு மட்டுமல்ல, பரமக்குடியில் விளையாடிய அரசியலில் வன்முறை வெடித்து விடும் என்று பயந்து துப்பாக்கிச் சூட்டினை நடத்தி அப்பாவி தலித்களை கொன்ற இந்த அரசு.....இன்று நக்கீரன் அலுவலகத்தை தாக்கி, சோடாபாடில், தடிகள், சைக்கிள் செயினோடு ஜானிஜன்கான் சாலையை கலங்கடித்த அ.தி.முகவினர் மீது ஒரு தடியடி நடத்தக் கூட வக்கிலாத காவல்துறையினரைக் கொண்டிருப்பது... கேவலத்திலும் கேவலம்.

தனகென்றால் ஒரு மாதிரியும், பிறருக்கென்றால் ஒரு மாதிரியும் காய்களை நகர்த்தும் சுயநல அரசியல் போக்குகளின் முடிவே தமிழர்களின் விடிவு...! அதிமுக தலைமையைப்  பற்றி தவறாக நக்கீரன் எழுதியிருக்குமெனில் சட்டரீதியாக அவர்களை தண்டிக்க முடியாதா என்ன? அவர்களின் பத்திரிக்கையை முடக்க முடியாதா என்ன?

தவறுகளைத் தட்டிக்கேட்கத்தான் அரசும், அரசு இயந்திரங்களும் இருக்கின்றன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இத்தகைய கொடும் செயலில் ஈடுபட்டிருப்பதன் மூலம் சட்டமும் ஒழுங்கும் தனது வசதிக்கேற்றார் போலத்தான் பாயும் என்ற மறைமுக செய்தியை மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.

பொறுப்பில்லாத பத்திரிக்கைத் துறையினருக்கும், அடாவடிகள் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழிக்கும் எம் மக்களின் விடியல் என்பது கனவாகவே போய்த்தான் விடுமோ....?

      

      கழுகு 

 
 (கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)

 

Friday, January 06, 2012

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் III






எத்தனையோ முறை, திருவிழாக்களில், பண்டிகைகளில், வருட முடிவுகளில், வருட பிறப்புகளில் இப்படி எத்தனையோ முறை நான் விழாக்களை கொண்டாடி இருக்கிறேன். ஆனாலும் எதோ ஒன்று உதைக்கிறது.
என்னவென்றால்...ஏன் பண்டிகைகளில் மட்டுமே கொண்டாட்டம் இருக்கிறது? ஏன் மற்ற நாட்களில் நாம் அதே கொண்டாட்டத்தின் பரவசத்தோடும், ஆனந்தத்தோடும் இருப்பதில்லை? இல்லை.. ஒருவேளை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட முடியுமா..இன்னும் அந்த கொண்டாட்ட மனப்பான்மை இருக்கிறதா என்று சோதித்துகொள்ளத்தான் நாம் விழாக்களில் கலந்துகொள்கிறோமோ? அல்லது எப்பவும் போல் நானும் கொண்டாடுகிறேன் பார் என்று பகட்டுக்காகத்தான் எல்லாரும் கொண்டாடுகிறோமா? 

எனக்கென்னவோ மேற்சொன்ன இரண்டிலுமே கொஞ்சம் உண்மை இருப்பதாகவே படுகிறது. காரணம், நாம் கொண்டாட்டத்தில் முதலீடு செய்வதில்லை..செய்பவர்களில்லை.. நாம் துன்பத்திலும், துயரத்திலும், சோகத்திலும் முதலீடு செய்பவர்கள்.. அப்படி இருக்க.. கொஞ்சம் நட்டமானாலும் பரவாயில்லை என்றுதான் நாம் கொண்டாடுகிறோம் என்று எனக்கு படுகிறது. உண்மைதானே..!!

சரி.. விஷயத்திற்கு வருகிறேன்...எனக்கு தேதிகளை சார்ந்த கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒன்று அந்த தேதியில் மட்டுமே முகம் மலர்ந்த மனிதத்தை பார்க்க முடிகிறதென்றால்.. ஒன்று, அந்த தேதி போலியாய் இருக்கவேண்டும்..அல்லது அந்த முகமலர்ச்சி போலியாய் இருக்கவேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம், மனிதனுக்கு மட்டுமே கொண்டாட்டம் சாத்தியம். சிரிப்பும், அழுகையும் மனிதனுக்கு எப்படி தனிச்சிறப்போ, அதே போல் ஒரே இனமாய்..மனித இனமாய் நின்று, ஆடி, பாடி, நகைத்து, குதூகலித்து கொண்டாட தெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே. 

இந்த பூமியில் வாழ தனக்களித்த வாய்ப்புக்கு, இயற்கைக்கு நன்றி சொல்லி, அதன் நன்றியில் பூக்கும் மகிழ்ச்சியை பிறரோடு பங்கிட்டு, அதை கொண்டாட்டமாய் மாற்றதெரிந்த ஒரே இனம், மனித இனம் மட்டுமே.

எனவே, துன்பப்படுவதற்கும், அவதிக்குள்ளாவதற்கும் வாய்ப்பை தேடி அலைவதை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, கொண்டாட்டத்திற்கான வாய்ப்பை தேடுங்கள், நகைச்சுவைக்கான வாய்ப்பை தேடுங்கள், சின்ன சின்ன சூழல்கள், வெகு சிறிய கணங்களில் கூட கொண்டாட்டத்தை ஏற்படுத்துங்கள்.

எத்தனையோ முறை சாலைகளில் செல்கிறோம், ஒரு பட்டாம்பூச்சி குறுக்கே லாவகமாய் பறந்துபோகிறதே..கொண்டாடுங்கள்..ஆஹா எவ்வளவு அழகாய் பறக்கிறது..எத்தனை லாவகம், அதன் சிறகுகளில் எத்தனை சுதந்திரம், அதன் அழகில் மயங்கி எத்தனை எத்தனை கவிதைகள்.. மெய்சிலிர்த்து போகலாமே..நாம்.. ஏன் சிலிர்ப்பதில்லை...இனி சிலிர்க்கட்டும்.

இன்று இட்லிக்கு சட்னி இல்லையா? அருமை.. ஆஹா.. சட்னி இல்லாத இட்லி.. இதன் சுவை எப்படி என்று ஒரு கை பார்ப்போம், என்று நீங்கள் ரணப்பட்டுப்போகும் சந்தர்பங்களில் கூட சுகப்பட்டுகொள்ளுங்கள்..!!
..பேருந்தை தவற விட்டுவிட்டீர்களா? ம்ம்..நல்லது இன்று காலார நடக்கலாம்..!! 

இப்படி சின்ன சின்ன கணங்களில் ஒளிந்திருக்கும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, ஒரே நாளில், ஒரே தேதியில் மட்டுமே எனக்கு கிடைத்துவிட வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். 

அதற்காக, புத்தாண்டுக்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் நான் எதிரியில்லை. அந்த கொண்டாட்ட மனப்பான்மை அந்த ஒரு நாளோடு இறந்துவிடாது பார்த்துகொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். 

வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தில் மட்டுமே வாழ்க்கை நம்மை பார்க்கும். இனி வாழ்க்கையை ஒரு கால ஓட்டமாக, ஒரு சில ஆண்டு உயிரோடிருத்தலாக மட்டும்  பார்க்காமல், வாழ்க்கையை ஒரு காதலியாய், காதலனாய், தாயாய், தந்தையாய் பாருங்கள். அதனோடு கொஞ்சுங்கள், அதன் அழகில் மயங்குங்கள், அதன் கிறுக்குத்தனத்தில் வாய்விட்டு சிரியுங்கள், அதனோடு காதல் கொள்ளுங்கள்.. அந்த காதலை கொண்டாடுங்கள்.!!

இந்த கணம், ஒரு வரம், இந்த வரத்தை அடைய நீங்கள் தகுதியுடையவர் என்பதாலேயே அந்த வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதை கொண்டாட வேண்டாமா?

எல்லோரும் கொண்டாடுவோம்..எப்போதும் கொண்டாடுவோம்..!!


 
ழுகிற்காக  
உங்கள் ரங்கா

                                         *********************


வியத்தகு சிறுமி விசாலினி

                                                             

உலக சாதனை படைத்திருக்கும் நெல்லையைச் சேர்ந்த சிறுமி விசாலினியைப் பற்றி அறிந்த போது எமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி மட்டில்லாதது. எத்தனையோ எதிர்மறை கருத்துக்களையும், தேவையற்ற செய்திகளையும் பரப்பி வரும் தமிழ் ஊடகங்கள், எம் தமிழ் தேசத்தின் பிஞ்சின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்டாமல் இருப்பதின் பின்ணயில் வழமையில் ஊறிப்போன வணிக புத்திகள் இருப்பதை நாம் உணராமலும் இல்லை.

சிறுமி விசாலினியின் ஐ.க்யூ எனப்படும் நுண்ணறிவின் அளவு 225 என்பது நாம் வியந்து பார்க்கும் அளவில் இருக்கிறது என்றால் இந்த சிறுவயதிலேயே அவள் செய்திருக்கும் சாதனைகள் இன்னும் அளப்பரியது. இத்தகைய நுண்ணறிவுகள் கொண்ட சிறுமி விசாலினி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நமது தேசத்தின் சொத்து. மத்திய மாநில அரசுகள் சரியான உதவிகளைச் செய்து மேலும் அவள் பலப்பல சாதனைகளை புரிய உதவ வேண்டும் என்ற வேண்டுகோளினை இந்தக் கட்டுரையின் மூலம் வைப்பதோடு உங்களின் அன்பையும் பாரட்டுதல்களையும் சிறுமி விசாலினிக்கு என்ற visalini2000@gmail.com மின்னஞ்சலாய் அனுப்பு வையுங்கள்.


மேலதிகமாக இவரைப் பற்றி அறிய: இங்கே அழுத்தவும்




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)


Thursday, January 05, 2012

தனிமனித மாற்றமே சமுதாயத்தின் விடியல்..!



நிலவின் அழகை ரசிப்பதில் இருக்கும் சுகம் ஆராய்வதில் கிடைக்குமா? மூலக்கூறுகளும், சமன்பாடுகளும், விதிமுறைகளும் கற்றிருந்தாலும் அதை மறத்தல்தான் சுகம்.

சைவ சித்தாந்தத்தை கைக் கொண்டு சிவநெறியில் வாழ்ந்து சூன்யமே சத்தியத்தின் மூலம் என்று தெளிந்த சிவவாக்கிய சித்தர் பின்னாளில் வைணவத்தை தழுவி இறைவனுக்கு உருவ வழிபாடு செய்து திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் தன்னின் சுயத்தை காண விரும்பும் ஒருவனுக்கு எதிரே ஒரு ஆப்ஜக்ட் தேவைப்படுகிறது. மனோபலம் உள்ளவர்கள் தன்னை உள்நோக்கும் சக்தி வந்தவுடன், தன் உடலை எது இயக்குகிறதோ அதுவே இந்த பிரபஞ்சத்தையும் இயக்குகிறது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் உருவங்களை கலைந்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை.

கடவுள் இல்லை என்று அடித்து மறுப்பவர்களில் எல்லோருமே மன திடமுடன் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இல்லை...இல்லை என்று சொல்லும் போது இருக்குமோ என்ற எண்ணமும் கூடவே தொடர்வது மறுக்க முடியாதது. இப்படி சொல்வதாலேயே மனதிடன் இல்லாதவர்கள் இல்லையென்றே சொல்லவும் முடியாது...

மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தது, சக மனிதரில் தவறு செய்தவர் இருந்தாலும் மன்னித்து அரவணைத்து செல்வது, மன்னிப்பு கேட்க தெரிவது, வன்முறைகள் தேவைப்படும் இடத்தில் வன்முறைகளை தப்பாமலும், மெளனங்களில் பூரண மெளனமாயும் இருப்பது, கோபங்களை தவறுகளில் காட்டி மனிதர்களை நேசிப்பது

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மன திடன் = அகங்காரம் இல்லாத தன்னம்பிக்கை + அரவணைக்கும் பக்குவம் = மூல உண்மை.

ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், பிடித்தமான விசயங்களை மனிதர்கள் செய்யும் போது அவர்களின் பிடித்தமான விசயங்களை உற்றுப் பார்த்து ஆராயாதீர்; அப்படி செய்வது ஒவ்வொருவரின் மன திருப்திக்காக மேலும் மன வலுவுக்காக.....!

அரசியலையும் இலக்கியத்தையும் பேசுவது உங்களது ஈகோவுக்குக் தீனி போடுகிறது, சுவாரஸ்யமாயிருக்கிறது என்றால் ஒரு நடிகனை நேசிப்பதும் அவனுக்காக கதறுவதும் இன்னொருவனுக்கு சுவாராஸ்யமாய் படுகிறது.

கடவுளை மறுப்பது ஒருவரின் சுவாரஸ்யம் என்றால் ஏற்பது இன்னொருவரின் சுவாரஸ்யம். உங்களுக்கு எப்படி அவர் அபத்தமாய் தெரிகிறாரோ அப்படித்தான் அவருக்கும் நீங்கள் தெரிகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்சம் விசயம் தெரிந்துவிட்டால் போதும் உலகில் இருக்கும் எல்லாவற்றையும் சரி தவறு என்று நிறுவி பேசி விடலாம். இப்படி கொஞ்சம் விசயம் தெரிந்த மிகைப்பட்ட பேர்கள் உலாவும் இடமாக இணைய உலகம் இருப்பதால் எல்லோரும் தனக்கு நிறையவே தெரியும் என்று எண்ணிக் கொள்கிறார்கள்...

நான் சொல்வதே இறுதி உண்மை என்று தத்தமது அகங்காரங்களை எடுத்து உரசிக் கொள்கிறார்கள், ஆனால் உலகில் எத்தனை கோடி மனிதன் இருக்கிறானோ அத்தனை கோடி கொள்கைகளை மனம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இங்கே ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப அதனை எடுத்து கையாளுகிறார்கள்.

கொடி பிடித்து ரோட்டில் இறங்கி ஒரு கட்சிக்காக வாழ்க, ஒழிக என்று கோசம் போடுபவனை கோவிலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிடுபவன் முட்டாள், பைத்தியக்காரன் என்று சொல்கிறான், கற்பூரம் ஏற்றி சாம்பி கும்பிடுபவனை எனக்கு உலக அரசியல் எல்லாம் தெரியும் இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே என்று கொடி பிடிப்பவன் நினைக்கிறான்.

இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் கடந்து வர வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் புலன் மயக்கத்தால் தோன்றும் மமதைகளை விட்டொழிக்க வேண்டியிருக்கிறது. கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விசயங்களை ஒரு இயந்திரத்தைப் போல ஒப்பிக்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்று கொக்கரிக்கிறார்கள்...இவன் செய்தது சரியில்லை என்று ஒரு கூட்டம் குதிக்கிறது அவன் சொல்வது சரியில்லை என்று ஒரு கூட்டம் குதிக்கிறது.

மொத்தத்தில் எல்லாமே அபத்தங்களின் கூட்டாய் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் கோமாளிக் கூத்தாய் வெளிப்படுகிறது. அதிகம் புத்தகம் வாசித்தவன் அதிகம் விசயங்கள் தெரிந்தவன் அடங்கியிருக்க வேண்டாமா? இவன் புத்தியை அறியாதவர்களிடம் காட்டி கொக்கரிக்கவா பயன்படுத்துவது? பண்படு என்பதிலிருந்து வந்ததுதானே பண்பாடு என்ற சொல். கல்வி பண்பை கொடுக்க வேண்டாமா? மாறாக அகங்காரத்தை கொடுத்தால் கற்றது கல்வியா?


உவப்ப தலை கூடி உள்ளப் பிரிய வேண்டாமா? உவப்பத் தலை கூடத் தெரியவில்லை எனில் நீ என்ன புலவர்? உம்மிடம் உள்ளது என்ன புலமை? நீ என்ன கல்விமான்?

மனிதராய் பிறந்து விட்டால் ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுத்து ஒரு சித்தாந்த கொட்டிலுக்குள் அடைபட்டு வாழ வேண்டுமென்ற பொது புத்தியில், எனக்கு எந்த நிலைப்பாடுமில்லை, உமது கூச்சல்கள் எல்லாம் எமக்குத் தேவையுமில்லை என்று ஒதுங்கி கூட இருக்க விடுவதில்லை ஆணவத்தை மனமாகக் கொண்ட மனிதர்கள்....

நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில்லையா அப்படிப்பட்டவன், மெளனமாய் இருக்கிறாயா நீ ஒரு கோழை என்று விமர்சனங்களை நம்மை நோக்கிப் பாய்ச்சும் மடைமைகளின் பின்னால் ஒரு விலங்கின் புத்திதானே இருக்க முடியும்?

காலம் காலமாக அறிவினை உணர்ச்சியைத் தூண்டுவதற்கே பயன்படுத்தி பயன்படுத்தி மழுங்கிப் போய் கிடக்கிறது நமது சமுதாயம் மாறாக அறிவினை கொண்டு நமது உள்ளுணர்வை எழுப்பும் ஒரு பயிற்சி பற்றி யாருக்கும் தெரியாது. உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெரியும், எதிராளியின் தவறுகள் புரியும், தவறுகள் புரிந்த பின் அவரிடம் எப்படி சண்டையிட மனம் வரும்?

புரிதல்களின்றி வழியைத் தவறவிட்ட ஒரு மனிதனை வழிகள் தெரிந்த மனிதன் தண்டித்தலும், எள்ளி நகையாடுதலும், எப்படி சரியான வழிமுறையாகும்? வழியற்றவனின் வாதங்களை எல்லாம் கொண்டு கோபம் கொண்டால் வழியை அறிந்திருந்தும் நாம் மூடர் தானே? முரண்களற்றது அல்ல வாழ்க்கை அதே நேரம் எல்லோரும் எல்லாமும் அறிந்திருப்பர் என்று எதிர்பார்த்தலும் சரியன்று.....

புரியாத மனிதர்களின் கோபங்களில் அவரை சரிசெய்ய முனையாதீர். காத்திருங்கள் சரியான தருணத்திற்காக, சரியான தருணத்தில் உமது தெளிவினை ஒரு கூர்வாளை நெஞ்சில் இறக்குவது போல இறக்கியே விடுங்கள். தெரிந்தவன் தெரியாதவன் என்று எல்லோரும் ஒரே இயல்பினன் தான்....சூழல்கள் விதைத்த பாடங்களில் மூளைகள் இடமாறி அவர்களை சிந்திக்க வைத்திருக்கலாம்....

நான் சரியானவன் என்று ஏகபோக உரிமை கொண்டு உரக்க உரக்க சப்தமிட்டு கூட்டத்தை கூட்டி தன் புஜ பலம் காட்டுபவன் முட்டாள்....

அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூளைகளுக்கு ஏற்றி தமது செயலால் சுற்றியிருப்பவர்களை கவர்பவன் ஞானி....!

ஞானிகள் முக்காலமும் போற்றப் படுவார்கள்!!!!

   
   கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Wednesday, January 04, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (4.1.2012)

டீ கடையில் தனியாக நின்று கொண்டிருந்த கனகு, நெடு நாட்களுக்குப் பிறகு ரெங்கு வருவதைப் பார்த்தார்..

கனகு : என்னய்யா ரெங்கு ஆளையே காணோம் எங்க போய் இருந்த... புது வருசத்துக்கு ஏதாவது காசி ராமேஸ்வரம் போயிட்டியா..??

ரெங்கு : அட நீ வேறப்பா! நானே மாமியார் வீட்டுக்கு போய்ட்டு.... இருந்த பணமெல்லாம் இப்படி செலவாகிடுச்சேன்னு நொந்து போய் வந்திருக்கேன். 

கனகு : அட செலவா..? அதுவும் நீ பண்ணுனியா..!! சரி சரி மாமியார் வீட்டுல என்ன பரிசு கொடுத்தாங்க 

ரெங்கு : ஆமா ” பரிசு" இப்போ அதுதான் ஒரு குறைச்சல்.. நானே புயல்ல  மாட்டி பீதியாகி வந்து இருக்கேன்.. இதுல பரிசு வேறயா..?? 

கனகு : சரி சரி நீ எவ்வளவு செலவு பண்ணியோ அதை அம்மா கிட்ட கேட்டு வாங்கிக்கோ.. அவங்க தான் 800 கோடி ஒதுக்கி இருக்காங்களே...

ரெங்கு : ஆமா அம்மா ஒதுக்கிட்டாங்க ஆனா நம்ம மக்கள் கையில போக்கும் போது அது 500ரூபாய் தான் போய் சேரும்.. என்ன பண்றது..?? 

கனகு :  ஆமா ஆமா சாமி வரம் கொடுத்தாலும் நம்ம பூசரிங்க வரம் தரமாட்டாங்க..!! சரி சரி இனி உங்க மாமியார் வீட்டுக்கு போக மாட்டேன் சத்தியம் பண்ணு...

ரெங்கு : அடப்பாவிங்களா இந்த வருஷம் என்ன? எல்லாம் சத்தியம் பண்ணு... சத்தியம் பண்ணுன்னு திரியுறீங்க.

கனகு : யாருப்பா அது கனக விட அறிவாளி இந்த உலகத்துல..

ரெங்கு : அட உனக்கு தெரியவே தெரியாதா.. எல்லாம் நம்ம ராமதாஸ் அண்ணாச்சி தான் சத்தியம் வாங்குறார்.. தன் கட்சில சேரும் புதிய உறுப்பினர்களிடம் பாமகவுக்கு தான் ஓட்டு போடணும்னு  குல தெய்வம் மேல சத்தியம் வாங்குறாராம்..

கனகு : இதுக்கு மேல இவங்க கட்சிகாரங்கள யாராலும் அசிங்கப்படுத்த முடியாது...இனி யாரயும் இவர் கட்சில சேர விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டார் போல...  எதிர்க்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்... 

ரெங்கு : இவரே சத்தியம் வாங்குறேன்னு சொல்லிக்கிட்டு எல்லோரையும் கட்சியவிட்டு துரத்திடுவார் போல 

கனகு : ஆமா ஆமா துரத்துறார்.. எல்லோரும் போய் வேல் முருகன் கட்சில சேருங்கப்பா..

ரெங்கு : அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா! புது வருஷம் அதுவுமா போனஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க 

கனகு : ஆமா ஆமா கொடுத்துட்டாங்க கஜானா காலியா இருக்கு... தமிழ்நாடு அரசுத்துறை திவால் ஆகிடும்னு சொல்லிட்டு.. மக்கள் மண்டையில கொட்டி, அந்த ரத்தத்தை எடுத்து போனஸ் கொடுக்குறாங்க.. 

ரெங்கு : அதெல்லாம் விடுய்யா மக்கள் நலப் பணியாளர்களுக்கு எல்லாம் போனஸ் கொடுத்து இருக்காங்க ரொம்ப பெரிய மனசு தானே..??

கனகு : ஆமா ஆமா! ரொம்பப் பெரிய மனசு தான்... ஒரு நாள் வந்து, அவங்க வேலையே செய்யலயே ஏன் வேலைக்கு வைச்சு இருக்கணும்னு கேட்பாங்க.. ஹ்ம்ம்ம்...அவராவது வேலை செய்யாதவங்களுக்கு சம்பளம் மட்டும் தான் கொடுத்தார், இவங்க போனஸும் சேர்த்து கொடுத்திட்டாங்க.. இன்னைக்கு போனஸ் நாளைக்கு..?? உசாரய்யா உசாரு  

ரெங்கு : புத்தாண்டு அன்னைக்கு டாஸ்மார்க் கடைய திறந்து போட்டுட்டு, சரக்கு வித்த பணத்தை எல்லாம் விட்டுட்டு சரக்கு அடிச்சிட்டு போய்ட்டாங்க டாஸ்மார்க் ஊழியர்கள்.. அரசு துறை எப்படி எல்லாம் வேலை செய்யுதுனு, பாருய்யா கனகு 

கனகு : என்ன கடைய திறந்து போட்டுட்டு போயிட்டாங்களா... சரக்கு சும்மா கிடைச்சா குளிச்சுட்டே போவானுங்க.. நம்ம ஏரியாவில் இருக்கும் கடையும் இருக்கே என்னைக்காவது இப்படி திறந்து போட்டுட்டு போறாங்களா நமக்கு வசதியா இருக்கும்.. 

ரெங்கு : என்ன ஒரு ஆசையா உனக்கு... ஏற்கனவே அரசுத்துறை எல்லாம் ஆடிட்டு இருக்குன்னு அம்மா சொல்றாங்க.. இதுல இப்படியா..?? 

கனகு : ஓஹோ... அரசுத்துறை ஆடுதுன்னு சொன்னது இது தானா? இப்படி தான் எல்லா அரசுத்துறையும் ஆடுதா.. ஐயோ ஐயோ.. எல்லா கடையும் திறந்து வையுங்கப்பா மக்களுக்கு 142 கோடி கிடைக்கும்.

ரெங்கு : ஜெயலளித்தாக்கு பரதம் சொல்லி கொடுத்தவங்க இறந்து போய்ட்டாங்களாம் கனகு உனக்கு தெரியுமா..??

கனகு : ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான செய்தி பாரு.. போய்யா உன்ன மாதிரி எடிட்டர் எல்லாம் இருக்குறதால தான் இப்படி நியூஸ் வருது... விசைத்தறி தொழிலாளர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்றாங்க அத பத்தி ஏதாவது சொன்னியா யா?

ரெங்கு : ஆமா கனகு சம்பள உயர்வு, மின்வெட்டு மாதிரியான காரணத்துகாக அவங்க வேலை நிறுத்தம் செய்றாங்களாம்.. 

கனகு : இப்படி பட்ட செய்திய மக்களுக்கு சொல்லுய்யா ரெங்கு.. உன்ன எடிட்டர்ன்னு ஒத்துக்குறேன். அதைவிட்டுட்டு அந்த அம்மா பாதுகாப்பு அதிகாரிய மாத்துறது, அமைச்சரை மாத்துறதுன்னு நியூஸ் சொல்ற.. உன் நியூஸ் வரும் போது அந்த ஆளையும் மாத்தி இருப்பாங்க அந்த அம்மா... போய்யா போ ஒழுங்கான நியூஸ் போடு 

ரெங்கு : சரி சரி டென்சன் ஆகாத கனகு ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்து இருக்கேன் டீ சொல்றேன் குடிக்கிறியா .?? 

கனகு : அதையாவது உருப்படியா சொல்லுய்யா.. 
     

  கழுகு 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, January 02, 2012

கருத்துக் கந்தசாமிகளே..உஷார்..! ஒரு விழிப்புணர்வு பார்வை!

அத்து மீறி அடுத்தவர் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்பிலும் மூக்கு நுழைத்து கருத்துக்களை திணிப்பது நமது கலாச்சாரமாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்...! பக்கத்து வீட்டுக்காரன் என்ன சம்பாதிக்கிறான்...அவன் பையன் +2 வில் எத்தனை மார்க்? அவரது மகள் யாரையும் காதலிக்கிறாளா..  என்று எத்தனை எத்தனை அத்துமீறல்கள் நடக்கின்றன நமது சமுதாயத்தில்...!

தன்னைப்பற்றி சிந்திக்க திராணியில்லாமல் தான் தோன்றித்தனமாக அடுத்தவரை பற்றி சிந்திக்கவும் விமர்சனம் செய்யவும் ரொம்ப வசதியாய் பழகிக் கொண்ட ஒரு வக்கிரபுத்திதான் அடுத்தவன் கதை பேசுவது..... அது அலுவலகம் ஆகட்டும் டீக்கடை ஆகட்டும்... வீட்டு வாசலில் அமர்ந்து பேசும் பெண்களாகட்டும், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் அந்த நேரத்தில் பத்து வீட்டு சமாச்சாரத்தை பலகாரம் செய்யாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராமல் போனது வியாதியா? இல்லை சமுதாயத்தை பிடித்துள்ள பிணியா?

நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி விடுமுறை தினத்தில் ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆடையை...ஒரு ஸ்கர்ட்டும் டி-சர்ட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய கணவனுடன் ரோட்டில் செல்கிறாள்.. கையிலும் இடுப்பிலுமாக இரண்டு குழந்தைகள் ...பக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்கிறார்....ஒரு கேவலமான வார்த்தையை கூறி இவள் கண்டிப்பாய் அப்படி பட்டவள் என்று அடித்து சொல்வேன் என்று...... !

ஏன் அவள் உடுத்தி செல்லும் ஆடை அவளது கணவனுக்கு ஒத்துக் கொள்கிறது....அவளும் அது பற்றி ஒரு அக்கறை இல்லாமல் சாதரணமாய் அந்த பெண்ணும் சென்று விட்டாள் ஆனால் சமுதாயம் அது பற்றி ஒரு பார்வை வைத்திருக்கிறது....இப்படி உடுத்தினால் இப்படி பட்டவள் ...அப்படி உடுத்தினால் அப்படிபட்டவள் என்று அடுத்தவரின் பிரைவசி என்று சொல்லக்கூடிய தனி உரிமையில் அத்து மீறி நுழைந்து ஆர்ப்பாட்டமாய் சோபா போட்டு உட்கார்ந்து கொள்வது என்று அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பல நேரங்களில் திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் தனது மூக்கை நுழைத்து மீடியாவும் காசு பார்த்து இருக்கிறது. அரசியல்வாதிகள் கூட கருத்துப்போரை மறந்து அடுத்தவரின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கும் போக்கில்தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அடுத்தவன் வாழ்க்கை பற்றி .. ஏன் இவ்வளவு அக்கறை நமது மக்களுக்கு? ஒருவனின் சொந்த விசயங்கள் அடுத்தவனையோ அல்லது சமுதாயத்தையோ பாதிக்காத போது திரையை விலக்கிப்பார்த்து உள்ளே இருக்கும் விசயங்களை விமர்சிப்பது....அநாகரீகம் என்று எப்போது இந்த சமுதாயம் உணரும்?

கணவன் மனைவியாய் இருந்தாலும்...அல்லது பெற்றோர் குழந்தைகளாய் இருந்தாலும் சரி... நட்பு வட்டாரமாய் இருந்தாலும் சரி... அவர் அவருக்கு இருக்கும் அந்த வெற்றிடத்தை அவர்களின் சந்தோசத்தை கலைக்க முயலாமல்....அந்த வெற்றிடத்தால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏதும் இல்லை எனும் பட்சத்தில் அதை ரசித்து அல்லது பிடிக்கவில்லையெனில் விலகி வாழ்ந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்!

அத்துமீறலும் அனுமதியின்றி நமக்கு எது தேவையென அடுத்தவர் கூறுவது...... நமக்கு பிடித்ததை விமர்சிப்பது..மற்றவருக்கு பிடித்ததை நம் மீது திணிப்பதும் வலியுறுத்துவது....உடனடியாக யாரும் நிறுத்தப் போவதில்லை...இருந்தாலும்...இந்தக் கட்டுரை அதற்கான முயற்சியை செய்திருக்கிறது என்ற மட்டில் கட்டுரையை நிறைவு செய்கிறோம்.


கழுகிற்காக
தேவா  S


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes