Friday, July 27, 2012

குழந்தைகள் பலிக்கு பள்ளி நிர்வாகம் மட்டும் பொறுப்பா...???




அடுத்தடுத்து பள்ளியில் விபத்து, உயிரிழப்பு, என மாணவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லாமலிருக்கிறது. என்  வீட்டருகிலிருக்கும் பள்ளியில் சக மாணவர்  தாக்கியதில் மாணவன் ஒருவன் அதே இடத்திலே உயிரிழந்தான்.  ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம், இப்பொழுது மாணவி ஒருவர் பஸ்லிருந்து தவறி விழுந்துள்ளார். இப்படி அடிக்கடி மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணம் பள்ளி நிர்வாகமா அல்லது மாணவர்களின் செயலா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது. 

பள்ளியில் நிகழும் மரணங்களுக்கு பள்ளியே பொறுப்பு எனது வீட்டருகிலிருக்கும் பள்ளி மிகவும் பிரபலமானது. K.Cசங்கரலிங்கம் (KCS) என்றால் அனைவரும் அறிந்திருப்பார்கள், மைதானத்தில் சக மாணவன் தாக்கியதில் அந்த இடத்திலேயே மாணவன் உயிர் இழந்தார். ஆனால் மாணவன் மயக்க நிலையில் இருக்கிறானென்று   ஒரு ஓரமாக படுக்க வைத்திருக்கிறார்கள். ஒரு மாணவன் எந்த நிலையிலிருக்கிறான் என்பது    கூட தெரியாமல் இருந்திருக்கிறார்கள்..

பள்ளி நிர்வாகத்திடமிருந்து வந்த பதில். இந்த விசயத்தை பெரிது படுத்த வேண்டாம். பேசித்தீர்த்து கொள்வோமென்று... பணம் பதில் பேசுகிறது.. அந்த மாணவனை எந்த மாணவன் தாக்கினான் என்பதை கூட மறைக்கிறது பள்ளி நிர்வாகம்.  இப்படி ஆங்காங்கே பள்ளியில் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  பள்ளி நிர்வாகமோ தவறை திருத்தி கொள்ளாமல் பணத்தால் பதில் பேசுகிறது....  

பள்ளி பேருந்தில் மரணம், பள்ளியை கேட்டால் அது தனியார் வாகனம் எங்களுக்கு தொடர்பில்லையென்பது  எவ்வளவு பொறுப்பற்ற பதில். பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் வாகனம் தரமானதாக இருக்கின்றதா என்று பார்ப்பது பள்ளியின் வேலை தானே..?? அதுவும் தரச்சான்றிதழ் வாங்கி (FC) இருபத்தி மூன்று நாட்களில் இப்படியொரு விபத்து நிகழ்ந்திருக்கிறதென்றால் தவறு எங்க நடந்திருக்கிறதென்று நம் அனைவருக்கும் தெரியவருகிறது. எங்கேயும் அலட்சியம். எதிலும் அலட்சியம். ஒருவன் லஞ்சம் வாங்கியதால் தவறு எப்படியெல்லாம் நிகழ்கிறது..

இப்படியொரு தவறு நிகழும் பொழுது நமது கோபம் அந்த நொடி மட்டுமே இருக்கிறது. அடுத்த நொடி எங்கே செல்கிறதென தெரியவில்லை... விபத்து நடந்ததும் பேருந்தை கொளுத்தி கோபத்தை வெளிபடுத்தி கொண்டால் போதுமா..?? அந்த பேருந்திற்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எத்தனை பேர் போராடி கொண்டிருகிறார்கள்...?  அந்த பேருந்தின் உரிமையாளரை தண்டிக்க வேண்டும். அவர் இனி  பேருந்துகள் வைத்திருக்க தடை விதிக்கவேண்டுமேன்று எத்தனை பேர் போராடி கொண்டிருக்கிறோம்... நமது கோபமெல்லாம் அந்த நிமிடம் மட்டுமே... அடுத்து நமது வேலையை பார்க்க சென்று விடுகிறோம். அடுத்து இது போல் குழந்தைகள் பலியாகாமல் இருக்க வேண்டுமல்லவா..?? விபத்துகள் நடந்து முடிந்த பிறகு வரும் கோபம் எதற்கு..??


 பள்ளியின் மீது மட்டும் தவறென்று சொல்ல கூடாது.  நமது குழந்தை எப்படியாவது பள்ளிக்கு செல்லவேண்டுமென்று நினைக்கிறோமே தவிர எப்படி செல்கிறதென்று நினைப்பதில்லை. நான்கு பேர் செல்ல வேண்டிய வாகனத்தில்  பத்து நபர்களுக்கு மேல் அனுப்பி வைப்பது. பிறகு விபத்து நிகழ்ந்து விட்டால் வாகன ஓட்டியை தாக்குவது. இப்படிதான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் மாணவர்களை தொலைவில் உள்ள பள்ளியில்தான்  படிக்க வைக்க வேண்டுமா  நமது வீட்டருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தால் என்ன..? நமது வீட்டருகில் இருந்தால் நாமே பள்ளிக்கு அழைத்து செல்லலாம் இல்லையா..??  நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்கிறீர்களா...?! படிக்கும் குழந்தைகள்  எங்கிருந்தாலும் படிக்கும்... நாமே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும். நாமே அழைத்து வரவேண்டும் என்ற எண்ணமெல்லாம் நம்மிடமில்லை. நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை தவறாகவே உள்ளது. குழந்தைகளை ஒரு முதலீடு போல்தான் வளர்த்து வருகிறோம்..


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் அத்துடன் நமது வேலை முடிந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறோம்... நம்மில் எத்தனை பேர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் எப்படி செல்கிறார்களென்று திடீர் விஜயம் செய்து பார்த்ததுண்டு..?? அல்லது பள்ளியில் ஏதாவது சரியில்லையென்றால் கேள்வி கேட்டதுண்டா..?? எல்லாம் நடந்து முடிந்ததற்கு பிறகு கேட்டு என்ன பயன்..? நமக்கு கேள்வி கேட்பதற்கு பயம்.  எங்கே பள்ளியிலிருந்து மாணவர்களை நீக்கி விடுவார்களோ என்று...   

அப்படியே கேள்வி கேட்டேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீர்களா..?! அப்படியெனில் பள்ளியை மாற்றுங்கள். மாற்றி விட்டு அந்த பள்ளியின் மீது புகார் கொடுங்கள். கல்வித்துறைக்கு எழுதிப்போடுங்கள். எதுவும் செய்யாமல் அரசாங்கத்தின் மீது நமது கோபம் வந்து  என்ன பயன் என்பதை யோசித்தீர்களா..?? 


பள்ளியை நாம் அடிக்கடி சோதனை செய்வதில் தவறில்லை. நமது குழந்தைகள் அங்கும் இங்கும்  ஓடி ஆடும் பொழுது நமது குழந்தைகளுக்கு ஏதும் ஆகாமல் இருக்குமா, அல்லது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் நமது குழந்தைகளால் தப்பிக்க முடியுமாயென  நாம் யோசித்திருக்கிறோமா..?? பள்ளியில் தீ அணைப்பு கருவி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறோமா..?? இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. நமது வேலையில்லை என்கிறீர்களா..?? அட.. அது என்ன அரசாங்கத்தின் குழந்தையா..?! நமது குழந்தை. நமக்கு தான் அக்கறை வேண்டும். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து படிக்க வைக்கிறோம். நமக்கு கேள்வி கேட்க உரிமையில்லை என்கிறீர்களா... முதலில் கேள்வியை கேளுங்கள். அதற்கு தீர்வு கிடைக்கும் கோபத்தில் மட்டும் ஒருங்கிணைந்தால் போதாது. கேள்வி கேட்பதிலும் இருக்க வேண்டும். 


அரசாங்கத்தின் மீதும் தவறிருக்கிறது. அரசு ஒரு சுற்றறிக்கை மட்டும் அனுப்பினால் போதாது. திடீரென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தவறிழைக்கும் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைதான் அடுத்த விபத்தை குறைக்கும். இப்போது நடந்த விபத்திற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதென்று பார்ப்போம். கைதுகள் மட்டும் தீர்வாகாதென்பது மட்டும் நிச்சயம்.

அரசாங்கம் இப்பொழுது அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறதென்றல் நம் கோபமும் எழுச்சியும் தான் காரணம். இதே கோபம் எழுச்சியும் எந்த விபத்து நிகழும் முன்பே நடந்தால் உயிரிழப்புக்கள் நிகழாமலிருக்கும் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியை இனி நாமாவது கண்காணிப்போம் நமது குழந்தைகளை நாமே காப்போம் 


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Friday, July 20, 2012

மீண்டும் உயிர்த்தெழுகிறோம்.....! கழுகின் சமூக விழிப்புணர்வு பார்வை....!

இடைவெளிகளும் ஓய்வுகளும் எப்போதும் நம்மை சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள உதவும் காரணியாகின்றன. வழமையான தொடர் நிகழ்வுகளையும், பொதுப்பிரச்சினைகளை பற்றிய பார்வைகளையும், நிறைய நிறைய கருத்துக்களையும், நிறுத்தி விட்டு சட்டென்று புறத் தொடர்புகள் அறுத்துக் கொண்டு சப்தமின்றி இருக்கும் நொடிகளில் மூளையின் எல்லா பாகங்களும் புத்துணர்ச்சி அடைகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவு வீரியமும், வீரமும் ஒருங்கே உடலுக்குள் பாய மீண்டும் நாம் சீறிப்பாய முடியும்.

கழுகின் நீண்ட நெடிய பயணத்திலும் ஒரு தற்காலிக ஓய்வு தேவைப்பட்டது. அப்படியான ஓய்வு கழுகின் பார்வையை இன்னும் கூர்மையாக்கி அதன் இலக்கினை நோக்கிய பாதையில் மீண்டும் சிறகடிக்க புத்துணர்ச்சியைக் கொடுத்தும் இருக்கிறது. செய்திகளை எல்லாம் செய்திகளாய் வாசிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறம், செய்திகளை தமது ஆதரவு மற்றும் எதிர் கட்சிகளுக்கு ஏற்றார் போல உள்வாங்கிக் கொண்டு அது பற்றிய கருத்து தெரிவிக்கும் கூட்டம் ஒரு புறம், தனக்குப் பிடித்த சினிமா நடிகனையும், நடிகையையும் எப்போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மாயக் கனவுகளில் லயிக்கும் இளையர்கள் கூட்டம் ஒரு புறம், மதம், சாதி என்ற கொட்டடிக்குள் அடைந்து கொண்டு தத்தம் மதத்தினையும் சாதியையும் நிறுவ போரடிக் கொண்டிருக்கும் கூட்டம் ஒரு புறம்....

இனத்தின் மானம் காக்கிறேன் என்று ஒரு கூட்டம், மொழியின் மாண்பினைக் காக்கிறேன் என்று ஒரு கூட்டம்...., மண்ணின் மைந்தனென்று இன்னுமொரு கூட்டமாய்.....

சிதறிக்கிடக்கும் மானுடர்கள் அத்தனை பேரும் மனதினால் தத்தமக்குள் சிறைச்சாலைகளை ஏற்படுத்திக் கொண்டு ஏதோ ஒன்றை நிறுவ போரடிக் கொண்டிருக்கின்றனர். சமூக நலம் என்ற பெயரில் இந்த சிதறுண்ட்ட கூட்டங்கள் கையிலெடுத்திருக்கும் வாட்கள் மானுட நலம் பேணுகிறேன் பேர்வழி என்று மனித நேயத்தையும், மக்கள் நலத்தையும்  இன்று வெட்டிச் சாய்த்துக் கொண்டிருப்பதற்குப் பின்னால் சர்வ நிச்சயமாய் இவர்களின் சுயநலம் ஒரு கோர அரக்கானாய் நின்று கொண்டிருக்கிறது.

கட்டுப்பாட்டுக்குள் நின்றுகொண்டு யாரையோ ஆதரிக்கிறேன் பேர்வழி என்று அவர்களின் தீமைகளையும், சமூக பொறுப்பில்லாததனங்களையும் கண்களை மூடிக் கொண்டு கண்டும் காணாமல் செல்லும் ஒரு சப்பைக்கட்டு கூட்டம் இந்த தேசத்திற்கு இனியும் தேவையா? இயல்பாய் சிந்திக்கும், சுதந்திரமாய் கருத்துப் பகிரும், சரிகளை சரிகளென்று கூறி பாராட்டவும், தவறுகளை தவறுகள் என்று கூறி சட்டையை பிடிக்கவும் குறைந்த பட்சம் தன்மானமும், ரோசமும் இருந்தால் போதுமல்லவா தோழர்களே...?

உணவுகளுக்கு எல்லாம் ஒவ்வொரு குணம் உண்டு. இயல்பிலேயே உப்பும் உறைப்பும் அதிகமாய் உண்டு வாழும் தமிழர்களாகிய நமக்கு  உணர்ச்சிகளும் கூடுதல் அந்த உணர்ச்சியினால் ஏற்படும் உணர்வும் கூடுதல். தொட்ட உடனேயே தூக்கி எறியுமே மின்சாரம் அது போல தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சமூகத்தில் நயவஞ்சகர்கள் விதைக்கும் போதெல்லாம் பிடறி சிலிர்த்து நாம் எழவேண்டும். முறையற்ற எந்த ஒரு மனிதனையும் நமது தலைவனாகவோ தலைவியாகவோ ஏற்கக்கூடது என்ற கற்பு நெறி கொண்ட காளையர்கள்  நம் மண்ணில் மொத்தமாய் இன்னும் ஒழிந்து விடவில்லைதானே...?

எழுத்துக்களை இணையத்தில் கடை பரப்பி நீங்களெல்லாம் என்ன புரட்சி செய்து விட முடியும் என்று ஏளனச் சிரிப்போடு நம்மை எல்லாம் பார்த்து எள்ளி நகையாட பழம் தின்று கொட்டைப் போட்ட நம் சமூகத்தின் காவலர்கள் எல்லாம் இணையம் வரை ஏறிவந்து நம்மை கேள்வி கேட்கத் தொடங்கியாயிற்று....

ஏதோ ஒரு கட்சியின் அடையாளம் இருக்கும் மனிதன் மட்டுமே தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஜீவிக்க முடியும் என்னும் பொதுப்புத்திகள் இப்போது மலிவு விலையில் நம்மைச் சுற்றிலும் ஏராளமாக கிடைப்பதோடு அப்படியான ஒரு சமூகச் சூழலும் சராமாரியாக நமக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. 

இந்தியா மக்களின் தேசம். ஜனநாயகத்தின் பூமி. பொதுமக்கள் கூடி தன்னை, தனது நிலத்தை நிர்வகிக்க பணியாளர்களை தேர்ந்தெடுக்க வழிமுறைகளை உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் வகுத்து சென்ற ஒரு தேசம்.இங்கே மக்களுக்கு மதிப்பில்லை. சாதரண மக்கள், சாதரண மக்கள் என்று சொல்லி சொல்லியே சாதரணமானவனாய் நாம் சித்தரிக்கப்பட்டு விட்டோம்.  

அதோ நீங்கள் தேர்ந்தெடுத்துப் பணி செய்ய அனுப்பிய மனிதர்கள் தத்தமது தலைமைகளுக்கு கூழைக்கும்பிடுகள் போட்டுக் கொண்டும், கால்களில் விழுந்து கொண்டும் இருக்கிறார்களே? இதைபற்றி ஏதேனும் ஒரு சிறு அபிப்ராயமாவது நீங்கள் சொல்ல நினைத்ததுண்டா?

தங்கள் தலைவர்களின் நாக்குகள் கிழக்கை காட்டி மேற்கு என்று சொன்னால் அதை மேற்கு என்று நிறுவவும், மேற்கினைக் காட்டி கிழக்கு என்று சொன்னால் அதையும் நிறுவவும் பொதுவெளிகளில் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதை எதிர்த்து கருத்துக் கூற திராணிகள் இல்லாமல் அதை விசுவாசம் என்று கூறிக் கொள்வதை எல்லாம் எப்படி தோழர்களே நீங்கள் சகித்துக்கொள்கிறீர்கள்...?

சினிமா நடிகனை தலைவன் கூறிக் கொண்டு அவனின் ஊதியத்தையும், அவன் திரைப்படம் பெறும் வெற்றிகளை தனது வெற்றியாகக் கொள்ளும் மாய உணர்வில் தத்தமது வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளையர்கள் எல்லாம் யார்? நமது சகோதரன், அல்லது உறவினன், அல்லது எதிர்வீட்டுக்காரன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரன் தானே...?

பார்த்து தலையிலடித்துக் கொண்டே நாம் நகர்ந்து போனால் யார் இவர்களுக்கு எடுத்துக் கூறுவது..?


இந்த சமூகம் மாறவேண்டும். இங்கே சமூகம் என்பது நான், நீங்கள்...என்று மனிதர்கள் நிறைந்த ஒரு பெருங்கூட்டம். தனி மனிதர்கள் மாறுவதோடு சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் தொடர்ந்து விழிப்புணர்வுச் செய்திகளை பகிரவும்வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அனுபவமாகியிருக்கிறது. கழுகின் புரிதல் இன்னும் தெளிவாய் மெருகேறியிருக்கிறது. மனிதர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் நமக்கு இப்போது அத்துப்படியாகி விட்டன. அரசியல் நகர்வுகள் இணையத்தில் மிகுதியாயிருக்கும்  இக்காலத்தில்.....

இதோ...கழுகு மீண்டும் சிறகடிக்கிறது உற்சாகமாய்...! 

இனி... அநீதிகளின் முகமூடிகளை தயவு தாட்சண்யமின்றி கிழித்தெறிவதோடு, அதற்கு இடையூறாய் இருக்கும் எல்லா செயல்களையும் அறுத்தெறியும் வல்லமையோடு மீண்டும் எமது சிறகினை விரிக்கிறோம்....

இந்த நூற்றாண்டின் இறுதியில் இணையமே உலகை ஆளப்போகிறது!!!! அன்று கன கம்பீரமாய் ஓராயிரம் கழுகுகள் இந்த பூமியை திமிராய் வலம் வரும்....!
  
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

Monday, July 02, 2012

எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...! ஒரு உஷார் பார்வை...!



ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் பற்றி எப்போதேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துதான் போட்டு விடுகிறது.

இணைய உலகில் தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது.

அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி இல்லாத களமாய் சம கால எழுத்துலகம் ஆகிப் போனது வரலாற்றில் பெரும் பிழையை ஏற்படுத்தியே தீரும்.

எதை எழுதலாம், எதை எழுதினால் வியாபாரம் ஆகும் என்று யோசிப்பது தவறில்லை அதற்காக பத்திரிக்கை துறையினரும், தனியார் தொலைக்காட்சித் துறையினரும் செய்யும் அதே யுத்தியை தனி மனிதர்கள் எழுதும் வலைப்பூக்களில் அரங்கேற்றிக் கொள்வது அவமானத்தின் உச்சம்.

பெரும் புரட்சியாளராய் என்னைக் காட்டிக் கொண்டு, என்னை பின் தொடருங்கள் மக்களே என்று போர்க்கொடியை எழுத்துக்களால் நான் ஏற்றும் போதே என் அருகதையையும் உற்று நோக்க வேண்டும் என்ற ஒரு நியாயத்தை ஏன் என்னால் கடை பிடிக்க முடியவில்லை..? இப்படியாய் நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம் இதில் இருக்கும் சத்தியத்தை உணருங்கள் வாசிப்பாளர்களே.. என்று தொடை தட்டி நேர்மையான பகிர்தலைச் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எழுத்துக்கள் பயணிப்பது.....ஆரோக்கியமான விடயமா?

மனிதனின் புறத்தை மாற்ற முயல்வது ஒரு தோற்றுப் போன வழிமுறை.... அது எப்போதும் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்பவனைத் தலைவனாக்கி விட்டு மிச்சமுள்ளோரை தெருமுனையில் பிச்சைக்காரனாய், புத்தி கெட்டவனாய் எப்போதும் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் ஒரு கையாலாகாதவனாய் நிறுத்தி வைத்து விடுகிறது.

மனிதர்களின் அகமாற்றம் இதற்கு நேர்மாறானது. 

குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.

உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை. 

இதன் விளைவுதான் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்.

முழு விழிப்போடு ஒவ்வொரு குடிமகனும் இருந்த பொழுதில் இந்த தேசம் மிளிர்ந்தது. மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேரரசர்களும் அதிகாரத்தால் தங்கள் நிர்வாகத்தை நடத்தினாலும் தமது தேசத்தின் குடிமக்களை முழு விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். அந்த விழிப்பு நிலையால்தான் பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய வணிகப் பெருக்கம் இருந்தது, போர்களில் தமிழன் வெற்றி வாகைகள் சூடினான், பிரமாண்ட கற்கோயில்களை கற்பனைக்கும் எட்டமுடியாத வண்ணம் ஆக்கிக் கொடுத்தான்...

தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லாமல், இயந்திரங்களின் பயன்பாடுகள் அறவே இல்லாமல், மனித வளத்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக இருக்க முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாய் நான் வழிகாட்ட என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல் அங்கே இருந்திருக்கவில்லை. மனிதவளம் மேம்படாத ஒரு சமூகம் தொழில் நுட்பத்தையும் அறிவியலையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்...? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்...?

இதற்கான பதிலாய்த்தான் சமகாலத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனத்தில் நமது பயன்பாடுகள் இருக்கின்றன. வலைப்பூக்கள் தனி மனிதர்களால் எழுதப்படும் ஒரு களம். இங்கே வியாபரம் செய்வது தவறில்லை, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் குற்றமில்லை.. வணிகமும், பொருளாதாரமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எப்படி வணிகம் செய்கிறோம்...? எதை வணிகம் செய்கிறோம் ? நம்மை முன்னிலைப் படுத்திக் கொள்ள எந்த மதிரியான முன்னெடுப்புக்களைச் செய்கிறோம்....?என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாகிறது..!

மனதில் தோன்றுபவைகளை எல்லாம் எழுதிப் பார்க்கும் ஒரு சாரார், சமூக அக்கறைகளை எழுத்தில் கொண்டு வந்து ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்குச் சொல்லிச் சொல்ல விரும்பும் சிலர், இதை இதை எழுதினால் வசீகரப்படும், இதற்கு கூட்டம் நிறைய வரும் என்று எழுத்தில் விசத்தை கலக்கும் ஒரு கூட்டம், 

எது எப்படி இருந்தாலும் நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவினர், அற்புதமாய் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தங்களின் உணர்விலிருந்து பிரதிபலித்து உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு பக்கம், மனிதன் விரும்புவது கேளிக்கைகளையும், அடுத்தவர் வாழ்க்கை பற்றிய அந்தரங்க செய்திகளையும், எப்போதும் மறைக்கப்பட்ட காமத்தையும்தான் என்று அதை அரங்கேற்றிக் கொள்ளும் வேறு சிலர்...

என்று தனி மனிதனின் ஆக்கங்கள் ஒரு மிகப்பெரிய காட்டாறாய் இயங்கிக் கொண்டிருக்கையில் வாசிக்கும் வாசிப்பாளன் தனது வயது, அனுபவம், மற்றும் புரிதலுக்கு ஏற்ப தனக்கு தேவைபடும் விடயத்தை இங்கே தேர்ந்தெடுக்கிறான்..

அன்பின் உறவுகளே...

இணையத்தை இன்று மிகுதியாக பயன்படுத்துபவர்கள் இளையர்கள், 18ல் ஆரம்பித்து 30வயதுக்குள் இணையத்தை பயன்படுத்துபவர்களின் விகிதாச்சாரம் அதிகம். சரியான வழிகாட்டுதல் தேவையான இந்த பருவத்தில் தனக்கு அறிமுகமாகும் இணையத்தில், தற்போது தமிழில் மிகுதியானவர்கள் பார்க்கும் ஒரு ஊடகமாய் இந்த வலைப்பூக்கள் இருக்கின்றன...

வழிகாட்டுதல் தேவையான இந்த இளையர்களுக்கு எதை நாம் பகிரப் போகிறோம்...? நமது தலைக்கனத்தையா...? நாம் மிகைப்பட்டபேர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்முனைப்பையா? பரபரப்பு அரசியலையா? நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தையா?  காமக்கதைகளையா? இல்லை சமூகத்தால் எப்போதும் விலக்கப்பட்ட தவறான விடயங்களை நான் செய்தேன் என்ற திமிரையா? 

நாம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். நான் செய்கிறேன் நீ யாரடா கேள்வி கேட்க என்று அத்து மீறுபவர்களின் குரல்வளைகளை முடக்கிப் போடவேண்டிய சமூகக் கடமை இன்றைய இணைய பயன்பாட்டாளர்களிடம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. இது பொதுவெளி..இங்கே உச்சபட்ச நாகரீகம் தேவைப்படுகிறது.

அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான நமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!

எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!

மனிதர்களின் அகவிழிப்பும், புரிதலும் கூர்மையாக இருப்பின்....மோடி மஸ்தான்களின் மாயஜாலங்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும் என்பது  நிதர்சனம்....!

 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes