Monday, November 12, 2012

அலட்சியமான அதிமுக ஆட்சியும்.. இருண்டு போன தீபாவளியும்... ஒரு பார்வை...!


பேராசை பெரு நஷ்டமென்பது யாருக்கு சரியோ இல்லையோ இப்போது தமிழக மக்களுக்குச் சரியாய் அது பொருந்தும். திமுக கழக ஆட்சியை தோற்கடிப்பதற்கு எதுவெல்லாம் காரணமாய் இவர்களுக்குப் பட்டதோ அதுவெல்லாம் அதிமுக ஆட்சியில் எட்டு மடங்கு பூதாகரமாய்  இடியாய் தலையில் இறங்க, திருவாளர் பொது ஜனம் இப்போது தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

மொத்த தமிழகமும் இருளில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவலைகள் எல்லாம், கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகளோடு குப்பை லாரியில் ஏற்றப்பட்டு விடுகின்றன. இருக்கின்ற மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமலும் முழுமையாகப் பயன்படுத்தாமலும் வருங்காலத்தை எண்ணிக் கனா காணச் சொல்கிறார். இந்த வலி சென்னை தவிர்த்த தமிழக குடிமக்களிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மோசமான நிர்வாகத்தைப் பொறுத்தவரை கலைஞர் ஆட்சியில் இருந்ததை விட, என்று ஒரு ஒப்பீடு வைத்துப் பார்த்தால் , கலைஞர் ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்த அம்மையார் ஜெயலலிதாவை நாம் பாராட்டுகிறோமோ இல்லையோ திமுகவின் தலைமை கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும்.

தலை சிறந்த நிர்வாகி என்று பத்திரிக்கைகள் எல்லாம் எப்படித்தான் இன்னமும் வெட்கங்கெட்டுப் போய் எழுதிக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு கேள்வி உங்களுக்கும் எனக்கும் எழத்தான் செய்கிறது, ஆனாலும் எழுதுபவனின் கரங்கள் முறிக்கப்பட்டு ஏதேனும் ஒரு அவதூறு வழக்குப் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீன் வாங்கிக் கொண்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்கவேண்டும்...என்ற அவர்களின் நியாயமான பயத்தையும் நாம் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தில் பத்திரிக்கைகளின் சுதந்திரம் என்பது எவ்வளவு வேகமாய் ஆளும் கட்சிகளுக்கு ஜால்ரா தட்டுவது என்பதை, அறியாமல் நானும் நீங்களும் இதுவரையில் இருந்ததுதான் நமது மடமை எனக்கொள்க; குஜராத்திலிருந்து குதித்து வரும் மின்சாரத்தையும், பல திட்டங்களின் மூலம் பகுமானமாய் வரும் மின்சாரத்தையும் எதிர்பார்த்து, எதிர்ப்பார்த்து  வாக்கிட்ட கையை தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக் கொண்ட கையாய் நினைத்து இருளில் மூழ்கிப் போனான் என் அப்பாவித் தமிழன்.

வரலாறு ஒரு முறை தன்னை மாற்றி எழுதிக் கொண்டு களப்பிரர்கள் காலத்தை தமிழகத்தின் பொற்காலமாகவும்,  தற்காலத்தை தமிழகத்தின் இருண்டகாலமாகவும் அறிவித்துக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விலைவாசிகளும் விண்ணைத் தொட்டு விட்டிருக்க, நமது சகோதரியின் அரசு நமக்கெல்லாம் ஆப்படித்த வெட்கங்கெட்ட கதையை தோளில் சுமந்து கொண்டு....

இதோ நாமெல்லாம் தயாராகி விட்டோம் சுபிட்ச தீபாவளி கொண்டாடுவதற்கு....

அரியணையிலேறி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டாலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத, தீர்க்கத் தெரியாத ஒரு அரசாய், மக்கள் தொடர்புகள் அற்ற ஒரு அரசாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நமது தமிழக அரசு, ஆனால் ஓராண்டுக்குள் தமிழத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கி இருப்பதாக ஆங்காங்கே இருக்கும் அவரின் கட்சி விசுவாசிகள் போஸ்டர் வேறு அடித்து ஒட்டி சதாரண மக்களை இன்னமும் வெறுப்பேற்றுகிறார்கள்.

அப்படியாய் அவர்கள் போஸ்டர் அடிக்க மின்சாரம் இல்லாமல் எத்தனை நாள் காத்திருந்து அச்சடித்திருப்பார்கள் என்பது அவரவர் மனசாட்சிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

தமிழகத்தின் முதன்மைப் பத்திரிக்கைகள் எல்லாம் அம்மாவின் ஆட்சியை முடிந்த மட்டும் தூக்கி நிறுத்தி எல்லாம் சரியாகும் என்ற ரீதியில் தொடர்ச்சியாய் பரப்புரைகள் செய்து கொண்டிருப்பதையே வழமையாகக் கொண்டிருக்க, அவரின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் நிமிர்ந்து கூட நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடத்திற்குள்ளாக பந்தாடப்பட்ட தலைகளை கணக்கில் வைத்துக் கொண்டு பவ்யமாய் பவனி வரும் மாண்புமிகுக்களை தனிப்பட்ட முறையில் யாரேனும் வாழ்த்தி போஸ்டர் அடித்து விடக்கூடாதே என்ற பெருங்கவலை அவர்களுக்கு...

இங்கே மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட அவர்களுக்கு எங்கே நேரமிருக்கப்போகிறது...? அரசு என்பது மக்களை நிர்வகிப்பதற்கு, ஆள்வதற்கு என்பதன் தாத்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டு தனிநபர்கள் மக்களை ஆளும் மன்னராட்சி முறைதான் இன்னமும் ஜனநாயகம் என்ற பெயரில் நமது நாட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

உதயகுமார்கள் தலைமறைவாய் இருக்கிறார்கள், விலைவாசிகள் அனலாய் கொதிக்கின்றன, மின்சாரம் இல்லை, சரியான நேரத்தில் வரவேண்டிய  காவேரித் தண்ணீர் வராமல், மொத்தமாய் மழையோடு சேர்த்து  கொடுக்கப்பட்ட ஆற்று நீரில் விவசாயிகளின் வாழ்க்கை மூழ்கிப் போய்விட்டது, மக்களை அடக்க துப்பாக்கிச் சூடு என்பதும், உளவுத்துறை என்பது சொந்தக்கட்சிக்காரர்களை கண்காணிக்க மட்டுமே என்பதும், போராடுபவர்களின் மீது துரோக வழக்குகள் என்பதும் வழமையாகிப் போய் விட்டது....டாஸ்மாக்குகளின் வாசலிலேயே தமிழனின் வாழ்க்கை பெரும்பாலும் குடி கொண்டிருக்க....

இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களை எல்லாம் எந்த எழுத்து எப்போது வாரி விடுமோ, எப்படியான கதைகள் எதிர்காலத்தில் புனையப்படுமோ என்ற பயமென்னும் அரக்கன் கருத்து சுதந்திரத்தின் குரல்வளைகளை பூட்ஸ் கால்களால் அழுத்தி வேறு கொண்டிருக்கிறான்.

ஈழப்போர் நடந்த போதும் சரி, கலைஞர் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட பின் அவரை விமர்சித்த போதும் சரி பரிபூரண சுதந்திரத்தை இணையத்தில் எழுதுபவர்கள் கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். போன அரசினை விமர்சிக்கையில் தாவிக் குதித்து ஓடி வந்த வார்த்தைகளை ஏதோ ஒரு அச்சம் சூழ்ந்திருக்கும் அசாதாரண சூழலைத்தான் எதிர்காலத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது பாயக் காத்திருக்கும் அரக்கனாய் நாம் பார்க்கிறோம்...

எது எப்படியோ, என்று.....மனதைத் தேற்றிக்கொண்டு...

தீபாவளி வாழ்த்துக்களை கூறியும், புதுத்துணி எடுத்து, பட்சணங்கள் செய்து கொண்டாடுகிறீர்களோ இல்லையோ  கொஞ்சம் பட்டாசு வாங்கி கொண்டாடுங்கள்...

அது நம்மை  எதிர்பார்த்து முதலீடு செய்திருக்கும்... சிறுதொழில் முதலீட்டார்களுக்குப் பயனை அளித்து....அதன் மூலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு எழுச்சியான எதிர்காலத்தை உருவாக்கட்டும்....!

தீபாவளி வாழ்த்துக்கள் என்று நாங்களும் சொல்லித்தான் ஆகவேண்டும்.....வலக்கையால் கை அசைத்து.. இடக்கையால் கண்ணீரைத் துடைத்தபடியே...!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes