Sunday, March 03, 2013

பூரண மதுவிலக்கு வருமா? ஒரு காந்தியவாதியின் உண்ணாவிரதப் போராட்டம்...!


சசி பெருமாள் ஒரு சாதாரண காந்தியவாதி. அவர் கவர்ச்சி அரசியலை கையிலெடுக்கவில்லை. விளம்பரப் பதாகைகளை தமிழகமெங்கும் நட்டு வைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தமது கைத்தடிகள் மூலம் காட்டுத்தீயாய் பிரச்சாரம் செய்து தனது உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக ஊடகங்களின், இணைய எழுத்தாளர்களின் கவனத்தை அவர் ஈர்க்கவில்லை. அவரின் தேவை அரசியல் விளம்பரம் அல்ல. தன்னை இன்னொரு காந்தியாய் காட்டிக் கொள்ள அவர் விரும்பி இருக்கவில்லை.

அவருக்குத் வேண்டியது எல்லாம் பூரண மதுவிலக்கு தமிழகம் முழுதும் வேண்டும் அவ்வளவுதான். அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து இரத்தம் கொதித்த என் தமிழ்ச்சொந்தங்கள் யாரும் ஒரு தமிழனின் தமிழர் நலம் வேண்டிய பெரும் கோரிக்கைக்கு இரத்தம் கொதிக்கவில்லை. கொதிக்கவும்  மாட்டார்கள். ஏனென்றால் கூட்டு மனோபாவம் எங்கே ஓடுகிறதோ அந்த திசையை நோக்கி ஆட்டுமந்தையைப் போல ஓடவே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

தன் கட்சியின் தலமைகள்  தலையணை, மெத்தை சகிதம் உண்ணாவிரதம் இருந்தால் அதை மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாய் பதிவு செய்யும் கட்சி விசுவாசிகளுக்கு சசி பெருமாள் என்னும் மனிதர் ஒரு பொருட்டாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சசி பெருமாள் ஒரு காந்தியவாதி, ஆமாம் அவர் ஒரு பொதுநலம் விரும்பிய சேலத்தை சேர்ந்த ஒரு சாமானியர். பெரிய பெரிய மனிதர்களின் இரண்டு மணி நேர, மூன்று மணி நேர உண்ணாவிரதங்களைத் தாங்க முடியாமல் தீக்குளிக்க காத்திருக்கும் என் தமிழ்ச் சமூகம். இந்த சாதரண மனிதரின் 32 நாள் உண்ணவிரதத்தை ஒரு செய்தியாய் கடந்து சென்று கொண்டிருப்பது வரமா? சாபமா?

தமிழ் ஊடகங்கள் தமது இனத்திற்கு பெரும் துரோகத்தை தொடர்ச்சியக இழைத்துக் கொண்டே இருக்கின்றன. தங்களின் சுய லாபத்திற்காய் ஏதோ ஒரு சப்பையான விசயத்திற்கு சப்தமேற்றி மீண்டும் மீண்டும் மக்களிடம் அதைப் பரப்புவது, தேவையில்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருந்து  ஒரு முக்கிய செய்தியை இருட்டடிப்பு செய்வது என்று மிகப்பெரிய ஒரு பிழையை அவர்கள் சமகாலத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுகள் அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் காலங்கள் கடந்தாவது குரல்வளைகளைப் பிடிக்கும் என்பதை அவர்கள் அறியாதவர்களாய் இருகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாட்கள் எல்லாம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு அவர் அவர்களின் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் என்ன மாதிரியான சமூக விழிப்புணர்வு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  தொடர்ந்து 32 நாள் உண்ணாவிரதம் இருக்கும் இந்த மாமனிதரின் போரட்டத்தை கொச்சைப்படுத்த இந்தப் போராட்டத்திற்கும் அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் புரையோடிப்போன அரசியல் சித்து விளையாட்டுக்களை எப்படி வகைப்படுத்துவீர்கள் தோழர்களே..?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது காந்தியின் கனவு. தமிழகத்திற்கு வேறு வழியில் வருவாய் ஈட்ட திட்டமிடல்களும் நிர்வாக வழிமுறைகளும்  கொண்டிராத அரசுகள் தொடர்ச்சியாய் நம்மை படுகுழியில் தள்ளி இப்படி, இன்று வீதிக்கு வீதி டாஸ்மாக்காய் அது விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. குடிப்பழக்கம் என்று இல்லை எந்த ஒரு செயலுமே நமது விழிப்புணர்வில் நிகழவேண்டும். எந்த ஒரு விசயத்திற்கும் அடிமை என்று ஆகி விட்டால் அது வாழ்க்கையை சீரழித்து விடும் என்று நாம் ஏற்கெனவே கழுகில் ஒரு முறை எழுதி இருக்கிறோம்.

மதுவை அறியாமல் பயன்படுத்துபவர்களை அது அடிமையாக்கி விடுகிறது. மதுவை மக்களுக்குப் பொதுப்படுத்துவதற்கு முன்னால் மது பற்றிய விழிப்புணர்வை நம்மை ஆளும் அரசுகள் மக்களுக்கு கொண்டு வரமுடிமா? சரியான அளவில் மதுவின் பயன்பாடு இருக்கும் போது அது வாழ்க்கையை சீரழிக்காமல் இருக்கும் என்று முதலில் போதித்து செயற்படுத்தி விட்டு பிறகு மது விற்பனையை செய்ய திரணி இருக்கிறதா நம்மை ஆளும் அரசுகளுக்கு....?

மக்களை எப்போதும் அறியாதவர்களாகவே வைத்திருந்து அவர்களை வறுமையிலும், பசியிலும் நிறுத்தி வைத்து மன உளைச்சல் கொண்ட மனிதர்களாய் வாழ்வதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் உருவாக்கி விட்டு அவர்களின் மன நிம்மதிக்காய் தெருவெங்கும் மலிவாய் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதை வரலாற்றின் பொன்னேடுகளின் சாதனையாகத்தான் நாம் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்!!!!?  நாட்டில் பெருகி வரும் பல குற்றங்கள் மதுவின் கோரப்பிடியிலிருந்து வாழ்க்கையின் முரண்பாடுகளை எட்டிப்பார்த்து அடையும் விரக்தியில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு காலச்சூழலில் பூரண மதுவிலக்கை அரசு அமுல் படுத்துகிறதோ இல்லையோ மதுவினை விற்பதற்கும், வாங்குவதற்கும் சில கட்டுப்பாடுகளையாவது விதிக்குமா? என்பதுதான் நம்மைப் போன்ற சாதாரணர்களின் எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறது.

சமூக நீதியையும், சாதனைகளையும் பற்றி பேசும் இந்த அரசு மக்களை நிஜமாகவே நேசிக்கிறது என்றால் நாடெங்கும் மலிவுவிலையில் உணவகங்களைத் திறந்தால் மட்டும் போதாது...கைது செய்வதின் மூலம்  போராட்டங்களைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்பன போன்ற நிலைப்பாட்டினை அரசு விடுத்து இது போன்ற மக்கள் பிரதிநிதிகளின் போரட்டங்களை செவி மடுத்து கேட்கவும், சரியான கருத்துக்களை பரிசீலித்து அதை பயன்பாட்டில் கொண்டுவரவும் ஆவண செய்யவேண்டும்.

மக்களுக்காக, மக்களின் பிரதிநிதியாய் தனி மனிதராய் போராடும் காந்தியவாதி ஐயா சசி பெருமாள் போன்றவர்களை ஆதரிப்பது மக்களாகிய நமது கடமையாகிறது. தனி மனிதராய் தொடர்ந்து  32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ஐயா சசி பெருமாளுக்கு கழுகு தனது சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இத்தகைய கண்ணியம் மிகு சமூக நலம் விரும்பிகள் வாழும் ஒரு சமூகத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமிதத்தோடு தனது ஆதரவை வலுவாய் இங்கே பதிவும் செய்து கொள்கிறது.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)





 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes