Friday, December 30, 2011

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் II




நீ உன் பெற்றோர்களை கொல்லாதவரை..நீ சுதந்திரமடைய முடியாது- புத்தர்

அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்கத்தானே செய்யும்.. ஆனால், புத்தர் ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று யோசித்தால் விஷயங்கள் புரிபடும். நீங்கள் இப்போது வருத்தப்பட்டுகொண்டிருக்கும் 99 சதவிகித விஷயங்கள் உங்களுக்கானதே அல்ல. அது எதோ ஒருவகையில், உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் சிறுவயதிலிருந்தே திணித்த எண்ணங்கள் தான். அதாவது, அவர்களின் எண்ணங்களை சரிவர நிறைவெற்ற முடியவில்லையே என்றுதான் நீங்கள் வருந்திகொண்டிருக்கிறீர்களே தவிர..அது உண்மையில் உங்களுடைய சொந்த எண்ணமாய் இருப்பதற்கு 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது.

இன்னும் ஆழமாய் போவோம்.. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு வெறும் வெள்ளைத்தாளாய் தூயமனத்தோடு பிறக்கிறது. அதனால்தான் குழந்தைகளிடம் அவ்வளவு கவர்ச்சி. அப்படி தூயமனத்தோடு பிறக்கும் குழந்தைகள் தன்னகத்தே ஏகப்பட்ட தனித்தன்மையையும், திறமைகளையும் கொண்டிருக்கும். அதை எல்லாம் வெளிகொண்டுவர முடியாதபடி, நம் பெற்றோர்களும், சமுதாயமும் அவர்களை அடக்கி, முடக்கிப்போட்டு, அவர்களை மிரட்டி, தங்கள் கருத்துக்களை திணித்து, அந்த கருத்துக்களை மீறும்போது, அவர்களை கண்டித்து தண்டித்து, அவர்களின் வெள்ளைத்தாளில் கிறுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.

அவர்களுக்கு வீடு வாங்க ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு படாடோபமாய் வாழ ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு பெரிய சம்பளங்களில், கௌரவங்களில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு அழகழகான ஆடைகளில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை மீது பயம்- உங்களிடம் திணித்தாயிற்று.

அவர்களின் இயலாமையால், அவர்களின் கருத்துக்களை உங்கள்மீது திணித்துவிடுகிறார்கள். இப்போது, அவர்களின் ஆசைகளை உங்கள் ஆசை என்று நம்பிக்கொண்டு, நீங்கள் வாழ்வோடு போராடுகிறீர்கள், உங்களாலும் முடியவில்லையா? எதற்கு இருக்கின்றன பிள்ளைகள்.. திணி..அதுவும் பைத்தியமாய், திணித்ததை தன்னுடையது என்று நம்பி திரியட்டும்.

இப்படி, திணிக்கப்பட்ட கருத்துகளுக்காக ஓடியதில் ஒரு சிலர், திடீரென்று நின்று நிதானித்து, தங்களின் நிஜமான முகத்தை கண்டுகொண்டனர். தான் ஒரு வெள்ளைத்தாள் என்பதையும், தன்மீது பெற்றோர் உட்பட அனைவரும் கிறுக்கிதள்ளி இருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டனர். அப்படிப்பட்டவர் சொன்னதுதான் அந்த முதல் வரி.

அதற்காக நிஜ தந்தைதாயை கொல்ல சொல்லவில்லை. அதில் ஒரு லாபமுமில்லை. அவர் உங்களுக்குள் இருக்கும் அவர்களின் திணிக்கப்பட்ட எண்ணங்களை கொல்லச் சொல்கிறார். அப்படி அந்த கிறுக்கல்களை அழித்தாலே ஒழிய..நீங்கள் நிம்மதியடைய முடியாது.


இப்படி, தன்னுடைய சுயநலத்திற்காக, உங்களை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டிருக்கும் அவர்களின் எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கான ஒரு வாழ்வை வாழுங்கள்..

உங்கள் கடைசி மூச்சுவரை, இயற்கை அன்னை உங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறாள். நீங்கள் உங்கள் சொந்த இயல்புக்கு திரும்பிவிடுவீர்கள். நீங்கள் உங்களுக்கான ஒரு வாழ்வை சிறப்பாக வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை..நம் உயிர்பிரியும் அந்த கடைசி கணம் வரை அவளுக்கு இருக்கிறது. அப்போதும் நீங்கள் இதை உணரவில்லை என்பதால்..சோகமாய் உங்களிடமிருந்து விடைபெறுகிறாள்.


 
ழுகிற்காக  
உங்கள் ரங்கா




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)

Tuesday, December 27, 2011

அலைபேசி சேவைகளின் பயன்பாடுகள்....! ஒரு உஷார் ரிப்போர்ட்...!


அலைபேசி என்பது இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டதட்ட 70 கோடிக்கும் அதிகமான அலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் எவ்வளவோ நன்மைகள் இருந்தும் இதனால் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமானது. தேவை இல்லாமல் பணம் எடுப்பது. எந்த ஒரு நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதை எப்படி தடுப்பது என்று நிறைய பேருக்கு தெரியவில்லை.

இதை தடுப்பது எப்படி என்பதை விட வந்த பின் காப்பது எப்படி என்பதே பெரும்பாலும் நிறைய பேருக்கு தேவையாய் இருக்கும். ஒவ்வொரு அலைபேசி நிறுவனத்துக்கும் முன்பு தனி தனி வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் இருந்தது. இப்போது ட்ராய் ஆனது அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ள 121-ம், ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால் 198-ம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எப்படி பிரித்துப் பார்ப்பது?

இங்கே புகார் என்பது உங்கள் பேலன்ஸ் தொகையில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக பணம் ஏதேனும் எடுத்து இருந்தால், அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை (நெட்வொர்க் பிரச்சினை, SMS/Call பிரச்சினை, இது போல) என்றால் நாம் 198 ஐ தொடர்பு கொள்ளலாம். அதே சமயம் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும் என்றால் நாம் 121 ஐ தொடர்பு கொள்ள வேண்டும். உதாரணம்: GPRS pack ரீசார்ஜ் செய்ய எவ்வளவு? எனக்கு இதற்கு valdity எவ்வளவு நாள் உள்ளது? என்பது போன்று. அனைத்து நிறுவனப் பயனர்களுக்கும் இது பொதுவானது.

காலர் ட்யூன்/ஹலோ ட்யூன் எனபதற்கு தான் அதிகமாக எடுக்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் இதை ஃபோன் கால் மூலமே ஆக்டிவேட் செய்கின்றன. இதற்கு அடுத்து ஏதேனும் ஒரு சர்வீஸ் Voice Call அல்லது SMS க்கு இதற்கும் Call தான். எனவே முதலில் எந்த எண்ணில் இருந்து இதற்கான அழைப்பு வருகிறது என்று கவனியுங்கள், பெரும்பாலும் ஒரே எண் அல்லது ஒரே எண்ணில் தொடங்கும் பத்து இலக்க நிறுவன எண் அல்லது வேறு ஏதேனும் 6 அல்லது 8 இலக்க எண். வந்தால் உங்கள் முதல் கடமை அதை Cut செய்வது. சில நிறுவனங்கள் Attend செய்த உடனேயே குறிப்பிட்ட சேவையை ஆக்டிவேட் செய்கின்றன. ஆனால் நாம் தொடர்பு கொண்டு கேட்டால் நீங்கள் ஏதேனும் ஒரு எண் Press செய்ததே இதன் காரணம் என்று சொல்வார்கள். எனவே இந்த விஷயத்தில் குறிப்பிட்ட எண்ணை கவனித்து Cut செய்வது நலம்.

இப்போது ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு உங்கள் கணக்கில் இருந்து பணம் தவறுதலாக எடுக்கப்பட்டு இருந்தால் அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களும் உங்கள் கணக்கில் இவ்வளவு பணம் எடுத்துள்ளோம் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி தான் தெரிவிப்பார்கள். நாமும் கூட எடுத்துள்ள தொகையினை அறிந்து கொள்வது இதன் வாயிலாகத் தான். சிலர் என்ன இது என்ற கோபத்தில் அந்த செய்தியை டெலீட் செய்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது கூடாது. நம் கணக்கில் பணம் எடுத்துள்ளது தவறாக தான் எனும் பட்சத்தில் இதன் மூலமே நாம் நம் பணத்தை திரும்பப் பெற முடியும். எனவே முதலில் அதை நீக்காமல் வைத்து இருக்கவும். இப்போது எடுத்து இருந்தால் அதை திரும்ப பெறுவது எப்படி அல்லது, அதை Deactivate செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஏர்டெல்லில் மட்டும் இதனை நாம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளாமல் குறிப்பிட்ட வசதியை நிறுத்த முடியும். இதற்கு “STOP” என்று 121 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனடியாக பதில் கிடைக்கும். என்ன வசதி நீங்கள் ஆக்டிவேட் செய்து உள்ளீர்கள் என்று. அதற்கு “STOP SERVICE NAME” என்று அனுப்புவதன் மூலம் நிறுத்த முடியும். (அல்லது உங்களுக்கு என்ன பதில் வருகிறது அதிலேயே அவர்கள் Stop செய்வதற்கான வழியும் சொல்லி இருப்பார்கள்). இதிலும் இல்லாமல் இருந்து பணம் எடுத்து இருந்தால் நீங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

அதற்கு முன் உங்கள் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளவும், பணம் எடுப்பதற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதை நினைவு படுத்தி பார்க்கவும். தெரியாவிட்டாலும் பிரச்சினை இல்லை. 198 க்கு அழைத்து இதை சொன்ன பிறகு, அவர்கள் இந்த விஷயத்தை மறுத்தால் உங்களிடம் உள்ள குறுஞ்செய்தி மூலம் அதை அவர்களிடத்து சொல்லலாம்.
சில சமயம் உடனடியாக உங்கள் பணம் உங்கள் கணக்கில் திரும்ப தரப்படும். உடனடி தீர்வு இல்லை என்றால் உங்களுக்கு ஒரு புகார் எண் தரப்படும் அதை வைத்து மீண்டும் அடுத்த முறை இந்த விசயத்துக்கு தொடர்பு கொள்ளும் போது இதை சொல்வதன் மூலம் அவர்கள் ரெகார்ட்களில் இருந்து உடனடியாக கவனிப்பார்கள். இல்லை என்றால் திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அலைபேசி மூலம் இணையம் பயன்படுத்தும் நண்பர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நீங்கள் எந்த செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்து இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று. ஒவ்வொரு நிறுவனமும் இரண்டு வகையான செட்டிங்ஸ் வைத்து இருக்கும். அதில் ஒன்று மட்டுமே இலவச வசதி உள்ளதாக இருக்கும். (இணையத்துக்கு என்று தனியாய் ரீசார்ஜ் செய்து இருந்தாலும் அவர்கள் தளத்தை வேறு தளம் செல்வதற்கு கட்டணம் எடுப்பார்கள்). உதாரணம்: ஏர்டெல்- ஏர்டெல் லைவ் மற்றும் மொபைல் ஆஃபிஸ். இதில் மொபைல் ஆஃபிஸ் தான் எல்லா இடத்திலும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருத்தல் அவசியம். இதில் சந்தேகம் இருப்பின் நண்பர்கள் அல்லது 121 அழைத்து கேட்கலாம்.

உங்கள் இணைய கணக்கில் உள்ள மீதத் தொகை, நாட்கள் அறிய:
Airtel - star 121 star 10#
Tata Docomo - star 111 star 1#
Aircel - star 111 star 10#

மற்றவை பற்றி தெரிந்தவர்கள் கீழே பகிரலாம்

அடுத்து சில நிறுவனங்களில் நாம் செய்யும் இ-ரீசார்ஜ் களுக்கும் Auto Activation என்ற முறையில் மாதா மாதம் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பார்கள். எனவே அவ்வாறு எடுத்து இருந்தால் உடனே சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு அதை Deactivate செய்வது உத்தமம். இது தேவை என்றாலும் நமக்கு நட்டமே. 50 ரூபாய் ரீசார்ஜ்க்கும், உங்கள் கணக்கில் எடுக்கப்படும் 50 ரூபாய்க்கும்(ரீசார்ஜ் 65 என்பது உத்தேச மதிப்பு) வித்தியாசம் உள்ளது. இந்த பாதிப்பு Reliance பயன்படுத்துபவர்களுக்கு அதிகம். #அனுபவம்.

சரி எல்லாமே சரியாக உள்ளது ஆனாலும் தொகை திரும்ப வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் நுகர்வோர் கோர்ட்டில் இதனை முறையிடலாம். உங்களுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி போதும் இதற்கு. மேலும் பலத்துக்கு நீங்கள் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசும் போது அதை ரெகார்ட் செய்து கொள்ளலாம். (அந்த வசதி இருந்தால்). இல்லை என்றாலும் பிரச்சினை இல்லை, நீங்கள் தொடர்பு கொண்டு பேசுவதை அவர்களும் ரெகார்ட் செய்வார்கள் எனவே அதை கொண்டும் நீதிமன்றத்தில் முறையிட முடியும். இதனால் நஷ்ட ஈடு, வழக்கு செலவு எல்லாமே குறிப்பிட்ட நிறுவனம் தரும். சமீபத்தில் ரிலையன்ஸ் ஒரு பெண் ஒருவருக்கு இது போன்ற புகாரின் அடிப்படையில் நஷ்ட ஈடு கொடுத்து உள்ளது.

இல்லை உங்களுக்கு அந்த நிறுவனம் பிடிக்கவில்லை வேறு ஒன்றுக்கு மாற வேண்டும் என்றால் MNP (Mobile Number Portability) பயன்படுத்தலாம். இதற்கு PORT”PORT Mobile Number” என்பதை 1900 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு ஒரு UniqueUnique Identity Number கிடைக்கும். இப்போது நீங்கள் மாற விரும்பும் அலைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை அலுவலகத்துக்கு சென்று உங்கள் புகைப்படம், முகவரி சான்று உடன் கொடுக்க வேண்டும்.

இதெல்லாம் முன்னமே தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு தான் இந்தப் பதிவு. நான் பார்த்தவரை இந்த ஒரே சேவை மைய எண்ணை பற்றியே தெரியாதவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதே போல MNPயும் கூட எனவே இதை தெரியாதவர்களிடம் கொண்டு சேருங்கள். MNP பற்றி அறிய இந்தச் சுட்டியை http://ethirneechal.blogspot.com/2011/01/mnp.html அழுத்தி தெரிந்து கொள்ளவும்.


கழுகிற்காக
பலே பிரபு

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

Friday, December 23, 2011

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! புதிய விழிப்புணர்வுத் தொடர்..



எமது சிறகடிப்பில் பல்வேறு கோணங்களையும் வாழ்க்கைப் பாடங்களாக்கி அந்த அனுபவச் செறிவுகளை எமது வாசகர்களுக்கு எப்போதும் தெளிவான பார்வைகளாக்கியே வைக்கிறோம். விழிப்புணர்வு என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அது எமக்கு இல்லை மற்றவர்களுக்கு என்று ஒவ்வொரு மனமும் பளீச் சென்று ஒரு நாடகமிட்டுக் கொள்கிறது.

அரசியல், ஆன்மீகம், சினிமா, கலை, பொருளாதாரம், கல்வி, வணிகம் என்று எல்லா துறைகளிலுமே விழிப்புணர்வு என்ற ஒன்று நம்மைக் மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை மறந்துவிட்டு சமூக அரசியல் சார்ந்த விடயங்கள் மட்டுமே விழிப்புணர்வு என்று ஒருசாரார் கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

ஆனால்.....

கழுகின் பார்வையில் வாழ்வியல் இயங்கு தன்மையின் எல்லா பாகங்களுமே விழிப்புணர்வு அடைய வேண்டியவையே. சமூக அரசியல் கடந்த வாழ்வியல்தான் சமூகத்திற்கும் அரசியலுக்கும், இன்ன பிற விடயங்களுக்கு எல்லாம் அடித்தளம் என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்தே இருக்கிறோம்.....!

வாழ்வியல் முரண்பாட்டு முடிச்சுக்களை இந்த ரங்கனின் ரிலாக்ஸ் பக்கங்கள் மென்மையாய் அவிழ்த்தெறியும் என்பது சர்வ நிச்சயம். இனி வார, வாரம் வெள்ளிக்கிழமை உங்கள் ரங்கா உங்களோடு இந்த பக்கத்தின் மூலம் தொடர்ந்து பேசுவார்...

சீரியஸ் சிகாமணிகள்

நான் தினமும் சாலைகளில் செல்லும் போதும், பொது இடங்களில் பலரை சந்திக்கும் போதும் ஒரு விஷயத்தை நன்றாக உணரமுடிகிறது. அதுதான் சீரியஸ்னெஸ். எல்லா வயதினருக்கும் இது இருப்பினும், குறிப்பாக 25 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் இது ஒற்று தொற்றுவியாதி போல...

எதோ இவர்தான் உலகையே கைக்குள் வைத்திருப்பவர் போலவும், பேசியோ சிரித்தோவிட்டால் உலகம் உடைந்து உருக்குலைந்து போய்விடும் என்பதுபோல் ஜனங்கள் முகத்தை மிகவும் இறுக்கமாக வைத்துகொண்டே சுற்றி வருகின்றனர்.

இவர்கள் இறுக்கமடைய அடைய, மருந்து கம்பெனிகளும், மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும், போலி சாமியார்களும், கடவுள் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் சிரித்து கும்மாளமிடுகிறார்கள். இவர்கள் எந்த அளவுக்கு இறுக்கமடைந்து நோய்வாய்ப்படுகிறார்களோ, அந்த அளவு அவர்களுக்கு லாபம். முதலில் ஏன் எப்போதும் இறுக்கமாகவே இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

பிரச்சினைகள் என்பவை தனக்கு மட்டும்தான் இருக்கிறது, மீதி இருக்கும் அத்தனை பேரும் மிகவும் சந்தோசமாக இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். பிரச்சினை என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு பொருளினை சேர்த்து விட்டாலெல்லாப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்பதற்காக பொருள் சேர்க்க ஓடிக் கொண்டே இருக்கிறார்கள், இது ஒரு பக்கம் என்றால் பொருளைச் சேர்த்து அதிகமாய் வைத்து இருப்பவர்களுக்கு இன்னமும் பயம் கூடிப் போய் அவர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்......?

வாழ்வின் எல்லா நிலையிலும் இன்பமும் துன்பமும் ஒரு பேக்கேஜ் மாதிரி என்பதை கடைசி வரை யாரும் உணராமல் என்னமோ இந்த பூமியை இவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நகர்வது போல எப்போதும் டென்சனாகவும், சீரியசாகவும் இருக்கிறார்கள்.

ஒரு எளிய விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். நாம், இந்த மனித இனம் மட்டுமே இந்த அகண்டப் பெருவெளிக்கு முக்கியமே இல்லை, இந்த சூரியக்குடும்பமொ, இல்லை இந்த சூரியனோ கூட இந்த பிரபஞ்சத்தில் முக்கியமானதில்லை. எல்லாம் வெறுமனே தூசுத்துகள்தான். இப்படி இவ்வளவு பெரிய சூரியனே முக்கியமில்லாத போது, நாமெல்லாம் எம்மாத்திரம்? ஏன் இந்த டென்ஷன்? ஏனிந்த கோபம்? ஏனிந்த கொலைவெறி? எதை நோக்கி இந்த வெறிகொண்ட ஓட்டம்?

நிதானியுங்கள்.. இந்த வாழ்க்கை வாழவே வழங்கப்பட்டது. வெற்றிகொள்ள இங்கே எதுவுமில்லை. வெறிகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. அறிவை திறந்து நிறைய செய்துவிட்டோம், இப்போது இதயத்திற்கு இறங்கி வருவோம்.

அறிவு மட்டுமே வாழ்க்கையானால், அடுத்த பத்தாண்டுகளில் அணுகுண்டுகள் நம்மை அழித்துவிடும். இன்னும் கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணையை, அன்பை, பாசத்தை, நட்பை, நகைச்சுவையை தூசி தட்டி எடுப்போம், அதை வளர்ப்போம், காப்போம்..!!

அன்பில் பூக்கும் புன்னகையோடு, எளியதுதான் வாழ்க்கை என்ற சிரிப்போடு, மகிழ்ச்சியோடு இக்கணம் நிம்மதியாய் வாழ்ந்துவிடுவோம்..நன்றி..!!

ழுகிற்காக
உங்கள் ரங்கா



(
கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)

Tuesday, December 20, 2011

விழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....!


வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன.

மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்?

இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய வேண்டியிருக்கிறது. திட்டமிடல் அவசியப்பட்டு போகிறது. கூர்மை தேவைப்பட புத்தியை உலுக்கி விட்டு எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகிறது. உழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால்..

" முடியாது " என்று ஒரு வார்த்தையை கூறிய பின்னால் அங்கே எந்த செயலும் நிகழ்வதில்லை. இப்போது கூட ஒரு விடயத்தை கயிற்றின் மீது நடப்பது போல விளங்க வேண்டுகிறேன். இயலாத காரியங்களை இயலாது என்று சொல்வதற்கு பார்வையின் தெளிவுகளை நம் சுயநலத்திற்கு அப்பாற்பட்டு செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

எந்த ஒரு செயலையும் செய்யும் போது நான், நான் நான் மட்டுமே இதனால் பயன் பெறவேண்டும் என்ற ஒரு எண்ணமிருப்பின் அந்த செயலைச் செய்வதை விட நம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே நம் கவனம் அதிகமாக இருக்கும். நாம் முன்னிலைப் படவில்லை எனில் ஒட்டு மொத்த செயலையுமே நாம் விட்டு வெறுத்து ஒதுங்கி, "முடியாது" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுவோம்.

வாழ்க்கை மிக அற்புதமானது அதை ஒரு அழகியல் தன்மையோடு நாம் தொடரவேண்டும். எப்போதும் இயங்கும் சராசரி நிகழ்வுகளை விடுத்து அவ்வப்போது குழந்தைகளாக நாம் மாறவேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகள் போல அல்ல....குழந்தைகளாகவே என்ற வார்த்தை படிமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவு இறுகிப் போனதற்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடுகள், நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சம்பிரதாய வலைகள், மனோவசியக் கட்டுக்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை எல்லாம் காலம் காலமாக நம்மாலும் நமக்கு வழிகாட்டுகிறேன் என்று கூறி வழி கெடுத்தவர்களாலும் பின்னப்பட்டது என்பதை அறிக. இவற்றை எல்லாம் அறுத்தெரிந்து வெளியே வரும் போது தான் உண்மையான சத்திய வாழ்க்கை கிடைக்கும். இதை ஆன்மீகம் விடுதலை,முக்தி என்று கூறுகிறது.

எனது ஆச்சர்யம் என்ன தெரியுமா? உங்களை ஒரு சக்கர வாழ்க்கைக்குள் அடைத்துக் கொண்டு, நான் இப்படிப்பட்டவன், இப்படி வாழ்பவன், இந்தக் கட்சியை சேர்ந்தவன், இந்த சித்தாந்தம் கொண்டவன் இந்த ஊர்க்காரன், என்று ஓராயிரம் மனோவசியக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் சுதந்திரமானவர் என்று எந்த தார்மீக நியாயத்தில் கூவி கூவி அறிவிக்கிறீர்கள்?

ஒரு வித மாயக்கட்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திர புருசர்கள் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. வெறுமையாய் இருக்கும் மனிதன் தன் சூழலுக்கு ஏற்ப நியாயங்களைத் தேடுகிறான். அது " அ " வாய் இருந்தாலும் சரி " ஆ "வாய் இருந்தாலும் சரி அல்லது " இ " ஆய் இருந்தாலும் சரி....அதில் இருக்கும் நியாத்தை தேடி எடுத்துக் கொண்டு பேசும் சக்தி நமக்கு இருக்கிறதா? இப்படி ஒரு சுதந்திரமான மனிதனாய் வாழும் போது நீங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டவர்கள் ஆவீர்கள் தானே?

சித்தாந்தங்களும் தத்துவங்களும் தோன்றியது மனித வாழ்க்கையை சீரமைக்கத்தான் அவைகளே இறுதி உண்மைகள் அல்ல. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பற்றி ஒரு மனிதன் முதலில் உணர்ந்து, அது பற்றி சிந்தித்து ஏன் இந்த சூழல் எனக்கும் எம் மக்களுக்கும் என்று முதலில் நினைத்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க அவனின் விழிப்புணர்வு சரியாக இருக்கும் பட்சத்தில்தான் நடந்திருக்க வேண்டும். சித்தாந்தங்களும் தத்துவங்களும் பிறக்க ஒரு மனிதன் தன்னின் இருப்பை, சூழலை, சக மனிதரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவனாயிருக்க வேண்டும்.

தெளிவான சிந்தனைகளின் பிறப்பிடம் முழுமையான விழிப்புணர்வு என்று அறிக;

கட்டுக்கள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழும் போது நீங்களும் நானும் நாமாகவே இருக்கிறோம். தயவு செய்து எவரின் கருத்துக்களும் அத்து மீறி உங்களின் விழிப்புணர்வு நிலையை உடைத்துப் போட்டு உங்களுக்குள் ஊடுருவி உங்களின் மூளைகளை கட்டுப்படுத்த விடவே விடாதீர்கள்.

இயற்கையில் வாழ்க்கையும் வாழ்வின் ஓட்டமும் மிகத்தெளிவாய் சிக்கல் இல்லாததாய் இருக்கிறது, அதை மட்டுப்பட்டு நின்று மடங்கிப் போய் விடாமல், அகண்டு பரந்து விரிந்த வானில் நமது வெற்றிச் சிறகுகளை விரிப்போம்....! எல்லைகள் கடந்த முழுமையின் ஏகாந்தத்தில் எப்போதும் சந்தோஷித்து இருப்போம்.

உண்மைகளை வாங்கும் நமது பாத்திரத்தில் சத்தியங்களை நிரப்ப நமக்கு கோட்பாடுகள் எதற்கு? கொள்கை என்ற குறுகிய வட்டமெதற்கு...! ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்வும் நமது கோட்பாடு....! ஒட்டு மொத்த மானுட நலமும் எமது கொள்கை என்ற உயரிய நோக்கோடு என்றென்றும் வெற்றி வானில் சிறகடித்துப் பறப்போம்...!

கழுகிற்காக
தேவா. S



(கழுகு இன்னும் உயரப்பறக்கும் )


Wednesday, December 14, 2011

மலையாளிகளை ஆட்டு மந்தைகளாக்கும் கேரள கேவல அரசியல்...! முல்லைப் பெரியாறு - ஒரு பார்வை!


முல்லைப் பெரியாறு பற்றி முணு முணுக்காத மனிதர்களே தற்போது இருக்க முடியாது. தமிழக, மற்றும் கேரள மக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் தத்தம் கவனத்தை ஒட்டு மொத்தமாய் இன்று குவித்துப் போட்டிருக்கும் ஒரு இடம் முல்லைப் பெரியாறு. சர்வதேச எல்லைகளில் வேற்று நாட்டோடு எழும் பிரச்சினைகளை எல்லாம் நாம் சர்வ சாதாரணமாக எண்ணி கடந்து சென்று விடலாம்..

ஆனால்...

முல்லைப் பெரியாறு ஒரு இனம் இரண்டு மாநிலங்களாய் ஒரு தேசத்துக்குள் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு விடயம். நாமெல்லாம் திராவிட இனம் என்று கூறும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இன்று நீ தமிழன், மலையாளி என்று இரண்டு மாநிலங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாறு, பென்னி குயிக் என்னும் ஒரு மனிதனின் தொலை நோக்குப் பார்வை, அணையின் தொழில் நுட்பவிடயங்கள் என்று போதும் போதுமெனும் அளவிற்கு பல கட்டுரைகளும், காணொளிகளும் வந்து விட்டன. கேரளாவிற்கு சென்ற தமிழர்களை அதுவும் குறிப்பாக பெண்களை கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளை பேசி மலையாளிகள் இந்தப் பிரச்சினையை வன்முறைப் பாதைக்கு திருப்பி விட்டதன் மூலம் பிரச்சினையின் தீவிரம் இன்னமும் கூடிப்போயிருக்கிறது.

116 வருடங்களுக்கு முன்னதாக ஒரு வெள்ளைக்காரனின் மூளையில் உதித்த பச்சாதாபமும், மனிதநேயமும் இன்று சொந்த நாட்டில் அதுவும் தன் இனத்தைச் சேர்ந்த தான் சார்ந்து வாழும் தமிழக மக்கள் மீது மலையாளிகளுக்கு இல்லாமல் போனதற்கு காரணமாய் இந்திய அரசியல் சாக்கடை என்னும் சூட்சுமம் அமைந்து போய் விட்டது.

நீர்ப்பிடிப்பும், அணையும் நமது மாநிலத்தில் இருக்க இதன் பயன்பாடுகளை மிகையாய் நாம் அனுபவிக்காமல் அதை தமிழகத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்றும், நமது தேவைக்குப் போக எஞ்சியிருப்பதை நாம் கொடுக்கலாம் என்றும், மலையாளிகளின் தலையில் முரண்பாட்டு சிந்தனைகள் கொம்புகளாய் முளைத்தன.

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பிலிருந்து மின்சார வளத்தைப் பெறுவதைத் தவிர வேறு எந்த வகையிலும் அந்த நீரால் கேரள மாநிலத்துக்கு பயன் கிடையாது என்பதை அந்த மாநில மக்கள் அறியாவண்ணம் புத்திகளை மறைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதையும் கொடுக்காததையும் நாமே தீர்மானிக்கவேண்டும், அதை எப்படி எப்போதோ இருந்தவர்கள் தீர்மானிக்கலாம் என்ற சுயநல எண்ணங்கள் தோன்றியதின் விளைவாய், காரணங்களின்றி பிறந்த பேராசையே.....அணையின் நம்பகத்தன்மை பற்றி அவர்களைப் பேசச் சொன்னது.

கேரள மக்களிடம் தீவிர பொய்ப்பரப்புரைகளை செய்து வரும் ஊடகங்களுக்கு அது ஒரு வியாபாரம், அரசியல் நரிகளுக்கு தத்தம் கட்சிகளை மலையாள மண்ணில் ஊன்றிக் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்....

ஆனால்...

தங்கள் கட்டப் போகும் புதிய அணையால் தொழில் நுட்ப ரீதியாக எந்த வகையிலும் தமிழக வானம் பார்த்த பூமிகளில் வாழும் மக்களுக்கு உதவ முடியாது என்பதைப் பற்றியோ, புதிய அணையால் தென் தமிழ்நாடு சுடுகாடாய் மாறி மீண்டும் 1800களின் இறுதியில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் தலை விரித்து ஆடும் என்பது பற்றியோ சிந்திப்பார்க்க நேரமில்லாத அளவிற்கு மனிதம் மங்கிப்போய் இருப்பதை மலையாளிகளில் பலர் அறிந்திருக்கவில்லை.

கழுகின் கட்டுரைக்காய் பல்வேறு தரப்பட்ட மலையாளிகளிடம் நாம் உரையாடிய போது அவர்கள் திரும்பத் திரும்ப கூறிய விடயம் தண்ணீர் நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம், தமிழகம் ஏன் எங்களை நம்ப மறுக்கிறது..? நாமெல்லாம் ஒரு தாய்ப் பிள்ளைகள்தானே என்பன போன்ற கேள்விகள்தான்....

புதிய அணை கட்டினால் என்ன நிகழும்? அதன் விளைவுகளால் தமிழகம் எப்படி எல்லாம் பாதிக்கப்படும்? மேலும் நாளை அணையின் நிர்வாகம் கேரள அரசிடம் போன பின்பு, கேரள மக்களே நினைத்தாலும் தண்ணீர் கொடுக்க முடியாது, தமிழகம் வறண்டு போனால் அது கேரளாவை எப்படி பொருளாதர ரீதியாக பாதிக்கும் என்றெல்லாம் சில மலையாளிகளிடம் நாம் விளக்கிய போது அடுத்ததாய் அவர்கள் நம்மிடம் கேட்ட கேள்வி....

அணை உடைந்தால் எத்தனை உயிர்கள் போகும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு சுண்ணாம்புக் கல்லில் கட்டிய அணையை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? கேரள அரசு ஐ.ஐ.டியை வைத்து ஆராய்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம், கடுமையான நீர்க்கசிவு இருக்கிறது என்கிறார்களே என்பது போன்ற கேள்விகளையும் நம்மிடம் வைத்தனர்...

ஐ.ஐ.டியின் மூலம் கேரள அரசு அணையை பரிசோதித்து உண்மை, அது தனது அறிக்கையை கொடுத்ததும் உண்மை ஆனால் எதன் அடிப்படையில் அணை பலவீனமானது என்று கூறுகிறீர்கள்? தொழில் நுட்ப மற்றும்ம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் உங்களால் விளக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு அவர்களிடமிருந்து எந்த ஒரு ஆதாரப்பூர்வமான பதிலும் இல்லை என்ற உண்மையை நாம் பகின்ற போது தெளிவாக சிந்திக்கக் கூடிய மலையாளிகள் சிலர் வாயடைத்துதான் போனார்கள்!!!!???

அணையின் பலம் மற்றும் நம்பகத்தன்மை பற்றிய விபரத்தெளிவுகள் இல்லாமல் மலையாள சகோதரர்களை கேரள அரசியல் கட்சிகளும், வெற்றுப் புரட்டு வியாபார ஊடகங்களும் மிகப்பெரிய ஒரு போலி அச்ச மனோநிலைக்குத் தள்ளி விட்டு இருக்கின்றன. முல்லைப் பெரியாறு உடைந்து உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று ஏராளாமான அந்தப் பகுதி மக்கள் இரவில் உறங்குவதே கூட இல்லையாம்...

தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் எங்கள் அரசு சரி என்று ஒத்துக் கொள்கிறதே...புதிய அணை கட்டினால் என்ன? ஏன் எங்கள் உயிரோடு தமிழக அரசியல் கட்சிகளும், மக்களும் விளையாட வேண்டும் என்று அப்பாவி கேரள மக்கள் தமிழகத்தைப் பார்த்து கேட்குமளவிற்கு மிகப்பெரிய புரட்டு அரசியல் அங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதின் விளைவே....தமிழக கூலித் தொழிலாளிகளை கேரள மூர்க்கர்கள் கடுமையாகத் தாக்கியது.

இந்திய அரசையும், அதன் அரசியலையும் தாண்டி இன்று முல்லைப் பெரியாறு விவாகாரம் மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாய் வெடித்து இருக்கிறது. அணை உடைந்தால் நாங்கள் இறப்போம் என்று கேரளாவும்...நீங்கள் புதிய அணையைக் கட்டினால் போதிய தண்ணீரைக் கொடுக்காமல் எங்களை வஞ்சிப்பதின் மூலம் பஞ்சத்தால் நாங்கள் இறந்து போய் விடுவோம் என்று தமிழ் மக்களும்.. இன்று உணர்ச்சிக் கொந்தளிப்பாய் கோபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.

22 எம்.பிக்களை தன்னிடம் கொண்டிருக்கும் கேரளாவின் இந்திய ஆளுமைக்கு முன்னால் 40 எம்பிக்களையும், பல மந்திரிகளையும் வைத்திருக்கும் தமிழகம் ஒரு பிச்சைக்காரனைப் போலத்தான் இன்று நின்று கொண்டிருக்கிறது. மத்திய அரசோடு கூட்டு வைத்திருக்கும் தமிழக கட்சிகளும், மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும்....வேற்று மாநிலத்தவர்கள் போட நடந்து கொள்ளும் ஒரு நயவஞ்சகப் போக்கினை நாம் இந்தருணத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அணையின் நம்பகத்தன்மையையும், அதன் வலுவினையும் ஏற்கெனவே கணித்து அணையில் நீரினை 142 அடிகள் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த அறிவிப்பினை கேரளா வேண்டுமென்றே புறக்கணித்து விட்டு வஞ்சகமாய் அணை பாதுக்காப்புக்கென்று கேரள சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றி அதன் மக்களை ஏமாற்றி, அணை வலுவில்லாதது என்று தொடர்ந்து பரப்புரை செய்யும் போக்கு வன்மையாகக் கண்டிப்படவேண்டிய ஒன்று...

தமிழக விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் நோக்கோடு நடக்காமல், மத்திய அரசு இந்த விடயத்தில் பாரபட்சமின்றி நடந்து நியாயத்தின் பக்கம் நின்று, அணையின் வலுவினைப் பற்றி செவுட்டில் அறைந்தாற் போல கேரள அரசிடம் அறிவித்து தேவைப்பட்டால் மேலும் அணையை வலுவாக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு அணையை உடைத்தலையும், புதிய அணையைக் கட்டுதலையும் தனது இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்....

டிசம்பர் 21, மற்றும் 22 ஆம் தேதிகளில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலமையில் அணையைப் பார்வையிட செல்லும் குழு நேர்மையான ஒரு அறிக்கையை வெளியிடும் என்று நாம் நம்பும் அதே வேளையில் அதை செயற்படுத்த கேரள அரசு மீண்டும் தயக்கங்கள் காட்டி தனது அரசியல் விளையாட்டுக்களை மத்திய ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தத் தொடங்கினால்.....

தமிழகம் என்ற ஒரு மாநிலம் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து ஒரு போராட்ட பூமியாய் மாறுவதை யாராலும் தடுக முடியாது என்பது நிதர்சனமான உண்மை.!!!!

கழுகிற்காக
தேவா. S


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, December 12, 2011

நவீன உலகின் பெற்றோர்களே....கவனியுங்கள்! ஒரு விழிப்புணர்வு பார்வை!


இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் அதிக வேலை வாய்ப்புக்கள் இருக்கும்ஒரு துறையாக கணிணி சார் பணிகளே இருக்கின்றன. வன், மற்றும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியங்களை கணக்கில் கொண்டு பார்த்தோமானால்அது மற்ற துறைகளில் இருப்பவர்களின் சம்பள விகிதகங்களோடு ஒப்பிட்டுபார்க்கவே முடியாத உயரத்தில்தான் இருக்கிறது.

இப்படியாக அதிக ஊதியம் பெறும் கணிணி சார்ந்து வேலை செய்பவர்களின்செலவிடும் வேகமும் வாங்கும் திறனும் தன்னிச்சையாக கூடித்தான்போகின்றன். இந்த வாங்கும் திறன் அதிகரிக்கும் போது அது எப்படி அவர்களின்குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற ஒரு பார்வையை இந்தக் கட்டுரையின் மூலம்பதிகிறோம்.

கட்டுரைக்குள் செல்வோமா ....!!!

இன்றைய கணிணி யுகம் இந்தியாவில் மிக அருமையாக வளர்ந்து கொண்டுஇருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்னும் பலமாக முன்னேறிவருகிறது. வன்-மென் பொறியாளர்களின் சம்பளம் வியக்க வைக்கும் அளவுக்கு
கிடைப்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். குறிப்பாக இவர்கள் சிறுவயதிலேயே மிக பெரிய அந்தஸ்த்தை இதன் மூலம் அடைந்து விடுகிறார்கள்

நடுத்தர குடும்ப பெற்றோர்கள், ஒரு வீடு பைக்,கார், இன்னபிற வீட்டு உபயோகபொருட்களை அடைய எவ்வளவு காலத்தினை எடுத்துக்கொண்டார்கள்.. ??? அவர்களின் வாழ்க்கை தரம், மற்றும் காலத்தின் கட்டாயம் அந்த மாதிரி
இருந்தது...

முன்பெல்லாம் நாம் பெற்றோரிடம் சிறிய அளவிளான விளையாட்டு சாமான்வாங்க எவ்வளவு போராடுவோம்...அதுவும் கிடைத்தால் தான்போச்சு....இல்லையென்றால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய் விடும். மற்ற பிள்ளைகளின் விளையாட்டு சாமான்களை ஏக்கத்தோடு பார்ப்போம். இந்தமாதிரி அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்ப்பட்டிருக்கும் ...

போகட்டும் ....

இன்றைய கணிணி பொறியாளர்கள் மிக சிறிய வயதிலேயே எல்லாவசதிகளையும் பெற்று விடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே வீடு,,கார்,,வங்கி சேமிப்பு ,,என்று எல்லாம்வாழ்க்கையில் ஒரு பொருளாதார மேம்பாட்டினை அடைந்து விடுகிறார்கள்.

பிறகு திருமணம், குழந்தைகள் ....

இங்க தாங்க நாம விஷயத்துக்கு வருகிறோம் ....

பெரும்பாலும் கணிணி பொறியாளர்களின் மனைவியரும் இதே துறையில்வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்.
(அல்லது இல்லத்தரசிகளாகவும்,வேறு ஏதோ துறையைச் சேர்ந்தவர்களாக கூடஇருக்கலாம்)இவர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை சற்றே கவலை அளிக்ககூடியதாக உள்ளது ....

தற்பொழுது இத்துறையில் பணி புரியும் நண்பர்கள் பணிச் சுமை காரணமாக - வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழும் நேரம் குறைந்து விட்டது என்பதை நாம்அனைவரும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அதனால் குழந்தைகளிடம் செலவழிக்கும் நேரமும் குறைந்து விட்டது. அதனால் குழந்தைகளின் விருப்புவெறுப்புகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரமும் குறைந்து விட்டது...

குழந்தைகளின் தேவைகள் பற்றிச் சிந்திக்க நேரமில்லாமல் அவர்கள் கேட்டதை, கேட்ட உடனேயும், கேட்பதற்கு மேலேயும் உடனேயே வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். குழந்தைகளின் மீது இருக்கும் பாசமும், தன்னிடம் இருக்கும்வாங்கும் திறனும் அதிக விலைகளைப் பற்றியெல்லாம் கவலைகள் கொள்ளவைப்பதில்லை.

இவர்களுக்கு இருக்கும் வேலை பளு மற்றும் மற்ற குறிக்கோள்கள் நோக்கியபயணத்தால், தங்களின் பாசத்தையும் அன்பினையும் தங்களின் குழந்தைகளுக்குகாட்ட அதிகமான செலவுகள் செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களைவாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள்.

இப்படி வளரும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்????

எல்லாமே எளிதாக கிடைக்கும் போது இந்த குழந்தைகள் என்ன நினைக்கும்???

இந்த குழந்தைகளிடம் போராட்ட குணம் இருக்குமா ???

மனோதத்துவரீதியாக யோசித்து பாருங்கள்....

மற்ற பிள்ளைகளோடு எந்த அளவுக்கு இவர்கள் போட்டி போட்டு வளர்வார்கள்???

போராட்ட மனப்பான்மை இல்லாமலே ஒரு தலைமுறை வளர்ந்து வருவதுகவலைக்குரிய ஒரு விசயம்தானே...?

இப்படியாக வளரும் பிள்ளைகளிடம் வாழ்க்கை பற்றிய ஒருவித அலட்சியமனப்பான்மை வந்துவிடுவதோடு, தன்னைச் சுற்றி இருக்கும் எதுவும் எளிதாய்கிடைத்து விடுமென்ற ஒரு மனோநிலை அவர்கல் அறியாமலேயே அவர்களின்ஆழ்மனதில் பதிந்தும் விடுகிறது. எதுவாக இருந்தாலும் நம் பெற்றோர்கள்பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒரு எண்ணம் மேலோங்கியே இருப்பதால், தங்களின் எல்லா தேவைகளுக்குமே பெற்றோரைச் சார்ந்தே அதுவும் சிறிய சிறியவிடயங்களுக்காக கூட எதிர்பார்த்து நிற்கும் ஒரு நிலையும் ஏற்படுகிறது.

எதிர்காலத்தில் இவர்களால் ஒரு சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ளமுடியாமல் மனதளவில் சுருண்டு விடுகிறார்கள்..இவர்கள் பெரியவர்கள் ஆனாபிறகு எந்த அளவிற்கு இந்த உலகத்துடன் போட்டி போடுவார்கள்??? கடுமையானபோட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் போரட்டாக் குணம் இல்லாமல் எப்படிவெல்வது? சின்ன சின்ன தோல்விகளை எப்படி தாங்குவது. வெற்றிகள் எல்லாம்சுகமானவைதான் ஆனால் தோல்விகள்தானே மனிதனைப்பக்குவப்படுத்துகின்றன...?

அன்பர்களே, குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் இரு வேறு கருத்துக்கள் நமக்கு இல்லை, ஆனால் அதை ஒரு அளவோடுசெய்வதோடு கஷ்டப்படாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதையும் புரியவையுங்கள்....

கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது. வரும் காலம் கடும் போட்டிநிறைத்த காலம் நண்பர்களே...!!! நம் குழந்தைகளை போட்டி நிறைந்தஉலகத்துக்கு தயார் படுத்துங்கள் ....!


கழுகிற்காக
J.நக்கீரன்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)

பின் குறிப்பு: ஏன் கணிணிதுறையில் உள்ளவர்களின் குழந்தைகளை மட்டும்குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று நீங்கள கேட்பது புரிகிறது. மற்ற துறைகளில் பணிபுரிந்துஅதிக ஊதியம் வாங்குபவர்களின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் உண்டுதான்....

ஆனால் மிகையாக வேலை வாய்ப்புக்களும் அதிக ஊதியமும் கிடைப்பது கணிணித் துறையில்தான் என்பதால் கணிணித் துறையை மையமாக வைத்துகட்டுரை செய்துள்ளோம். மற்ற படி பிள்ளைகளுக்கு கேட்ட விலையைப் பற்றி கவலை கொள்ளாமல் உடனே உடனே அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் எல்லா பெற்றோர்களுக்கும், இந்தக்கட்டுரை பொருந்தும்.


Friday, December 09, 2011

அங்கன்வாடிக் கூடங்களின் இன்றைய நிலைமை....! ஒரு விழிப்புணர்வுப் பார்வை...!







காலச்சக்கரத்தின் சுழற்சியில் எல்லாமே மாறி விட்டது. ஒரு காலத்தில் தனியார் ஆங்கில வழிக் கல்வி கற்கும் பள்ளிகளே இல்லாமலிருந்தது. எல்லா பிள்ளைகளும் அரசு பள்ளிகளைச் சார்ந்தே படிக்க வேண்டுமென்ற ஒரு சூழல் இருந்தது. தனியார் பள்ளிகள் மிகப்பெரிய நகரங்களில் அதுவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிலும் ஒரு இடமாக இருந்தது.

இப்போது எல்லாமே மாறிப் போய் விட்டது. தடுக்கி விழுந்தால் ஆயிரம் ஆங்கிலப் பள்ளிகள். நடை, உடை, பாவனை எல்லாமே மாறிப் போன பல பிள்ளைகளைப் பார்த்து நமது பிள்ளைகளும் ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்று இன்னும் நாகரீகமாய் இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் தவறென்றும் கூற முடியாது. தனியார் பள்ளிகள் வளர்வதற்கு அரசுப் பள்ளிகளின் தரமும், சுற்றுப் புற சுகாதரமும், ஆசிரியர்கள் பிள்ளைகளை எதிர் கொள்ளும் விதமும் மிக முக்கிய காரணமாய் ஆகி இருந்தன.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறி எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்று படித்து பின் ஒன்றாம் வகுப்பிற்கு வரவேண்டும் என்ற ஒரு கட்டமைப்பினைப் பார்த்து அந்த வசீகரத்திலும் பிள்ளைகள் ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்றதும், மம்மி டாடி என்று பெற்றோர்களை அழைத்ததும், சாரி, தேங்க்ஸ் போன்ற வார்த்தைகள் சராசரியாய் சமுதாயத்திற்குள் நுழைந்து கொண்டதும் ஒரு மாதிரியான கலாச்சாரத்தின் நகர்வாய்த்தான் போனது.

இப்படியான ஒரு விரைவு ஓட்டத்தில் நாம் அனைவரும் மறந்து போன ஒரு இடம்தான் அங்கன் வாடிகள் எனப்படும் பாலர் பள்ளிகள். குழந்தைகள் சத்துணவு மையம் என்று வெளியில் ஒரு ஊதாக் நிறத்துப் பதாகையோடு ஒவ்வொரு ஊரிலும் ஒரு அரசு கட்டிடம் நம்மை வரவேற்காமல் இருந்ததில்லை. தற்காலத்தில் ப்ளே ஸ்கூல் மற்றும் பிரிகேஜி என்றெல்லாம கூறி எல்.கேஜிக்கு முன்னதாகவே பிள்ளைகளைக் கொன்டு சேர்க்கிறார்களே....அதுதான் பாலர் பள்ளி...!



பயில ஆரம்பிக்கும் முன்னரே குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகி வந்து தனித்திருந்து பயிலவும், சக குழந்தைகளோடு அமர்ந்து விளையாடி, ஆடிப் பாடி, அடித்து, அடி வாங்கி விட்டுக் கொடுத்து, கூடவே பாடங்களையும், மழலையர் பாடல்களையும் படித்து, சத்துணவு எனப்படும் உணவினை உண்டு பகிர்ந்து கொடுத்து ஒரு மாதிரியான சமூக வாழ்க்கைக்குத் தயார் செய்யும் இடங்களே இந்த அங்கன் வாடி என்னும் பாலர் பள்ளிகள்.

நவீனத்தின் நகர்வில் பண வசதி இருப்பவர்கள் இந்த அங்கன்வாடிகளை விட்டு நகர்ந்து தனியார் பிரிகேஜியிலும் க்ரீச் எனப்படும் தனிப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களிடமும் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். காலச் சூழலில் ஆயிரம் பிரச்சினைகள் நம்மைச் சுற்றி முளைத்துக் கிடக்க நம்மில் பெரும்பாலான பேர்கள் இந்த அங்கன்வாடிகளைப் பற்றி மறந்தே போனோம்.

எவ்வளதான் சம்பள விகிதம் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கையின் தரம் இன்னும் சராசரிக்கு கீழாக இருக்கும் மனிதர்களுக்கு இன்னமும் இந்த அங்கன்வாடிகள் என்னும் பாலர் பள்ளிகள் ஒரு வரப்பிரசதம்தான். உழைத்து பெறும் பணத்தை வைத்து அடிப்படையான தேவைகளைக் கைக் கொன்டு சராசரி வாழ்க்கையை வாழ்வதே கடினம் என்ற நிலையில் இவர்கள் எப்படி தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல முடியும்...

அங்கன்வாடிகள் இன்று ஏழைக் குழந்தைகளின் இடமாக மாறியிருக்கிறது. இப்படி இருப்பதாலோ என்னவோ....இந்த மழலையர் பள்ளிக் கூடங்கள் கவனிப்பாராற்று சீரழிந்து கொன்டும் இருக்கிறது. எனது தேவைகளும், என்னைச் சுற்றி இருப்பவர்களின் பிரச்சினைகளுமே பிரச்சினை என்று நகர்ந்து கொண்டிருக்கும் சமகால மானூட சமூக இயங்கு நிலையில் வறுமைக்கோட்டிலும் அதற்கு கீழே இருப்பவர்களையும் யாரும் கண்டு கொள்வதில்லை. வறுமையில் இருப்பவனுக்கோ தன் வாழ்க்கைப் போரட்டத்தை கவனிகவே நேரமுமில்லை....

இதனாலேயே அங்கன்வாடிகள் இன்று ஒரு சுகாதரமற்ற ஒரு இடமாய், கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இங்கே பிள்ளைகளுக்கு உணவளிக்கும் முறைகளும் அவர்கள் தங்கிப் பயிலும் கட்டிடங்களும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏதேனும் சில அங்கன்வாடிகள் சிறப்பாக செயல்படலாம் என்றாலும் மிகைகளின் நிலைமை மிகவும் கேவலமாய் இருப்பது புரையோடிப் போன ஒரு சமுதாயத்தின் விழுமியங்களாய் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன.

சரியான பணியாளர்களை நியமித்து, இந்த அங்கன்வாடிகளை சுகாதாரமான முறையில் பராமரித்து, குழந்தைகளை சரியான முறையில் வழி நடத்திச்செல்ல வேண்டியது அரசின் கடமை. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை. பிள்ளைகள் பிஞ்சுகளாய் தங்களின் வாழ்க்கையில் முதற்கண் வெளி வந்து பயிலத்தொடங்கும் இடம் பூ பூக்கும் ஒரு நந்தவனமாய் இருக்க வேண்டும்....அங்கே நம்பிக்கையும், அறிவும் துளிர் விட வேண்டும் ஆனால் நடைமுறைகள் அப்படியானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

கழுகின் சார்பாக நாம் விசிட் செய்த ஒரு அங்கன் வாடியின் (சில கரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படவில்லை...) சில புகைப்படங்களையும், காணொளியையும் இங்கே இணைத்திருக்கிறோம்...! இதன் சுற்றுப் புறம் நம்மை திடுக்கிடச் செய்வதோடு....இதற்கான தீர்வுகளை அரசு செய்யுமா என்ற ஒரு கேள்வியையும் பலமாக எழுப்பாமல் இல்லை...!

கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள், தங்களின் அருகாமையிலிருக்கும் அங்கன் வாடிகளின் நிலைமையினை கண்டு புகைப்படங்களோடு அதன் தேவைகளை கழுகின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். தமிழகம் முழுதும் இப்ப பழுதான நிலையிருக்கும் அங்கன்வாடிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு அது சர்வ நிச்சயமாய் உதவியாயிருக்கும்...!

கழுகிற்காக
கருத்தாக்கம்: மகேஷ்வரி


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)

Tuesday, December 06, 2011

' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி....


நேற்றைய பேட்டியின் தொடர்ச்சி....


உங்களின் எதிர்கால திட்டம் என்ன?

தமிழ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சமுக சேவையில் ஆர்வத்தை தோற்றுவிப்பது , ஈடுபட செய்வது , மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்ப்பது, கிராமங்களில் கணினி புரட்சி ஏற்படுத்துவது.

நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?

பிரச்சனைகள் என்பதை விட விமர்சனங்கள் , குறை சொல்வது என்பதே அதிகம். அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லையே , விமர்சனங்கள் , குறை சொல்வது பற்றி அஞ்சுவதில்லை , கவலைபடுவதில்லை , நாங்கள் செய்யும் நல்ல செயல்களில் மட்டும் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம்

பயனாளிகளைப் பற்றி எப்படி அறிகிறீர்கள்?

முகநூல் நண்பர்கள், நண்பர்கள், மூலம் கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்புக்கு பரிந்துரை செய்வார்கள்,அவர்கள் கோரிகையை கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்பு பரிசீலனை செய்யும் .

எந்த அடிப்படையில்உங்களின் உதவிகளைச் செய்கிறீர்கள்? எதிர்காலத்தில் அவர்கள் தங்களிடம் உதவி கேட்க கூடாது என்ற அல்லது ஒருவருக்கு காலம் முழுவதும் உதவும் எண்ணமா?

நன்றாக படிக்கும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு மட்டும் உதவுவோம். அவர்கள் கல்வி தரம் தொடர்ந்து கவனிப்போம். அவர்கள் கல்விக்கு மட்டும் உதவாமல், அவர்களுக்கு பகுதி நேரத்தில் எப்படி சம்பாதிப்பது, சுய தொழில் பயிற்சி தருவோம் , பகுதி நேர வேலை பெற்று தருவோம். அதன் மூலம் அவர்கள் அடுத்த வருட கல்வி கட்டணத்தை கட்ட முடியும்.

ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகள் மற்றும் (வேலைக்கு செல்ல முடியாமல் நிலையில் உள்ள ) மக்களுக்கு மட்டும் காலம் முழுவதும் உதவுவோம்.

வங்கி கடன் தெரியாத கிராமத்து பள்ளி - கல்லூரி மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பற்றி வகுப்பு எடுப்போம், வங்கி கல்வி கடன் விண்ணப்பதை நிராகரிக்கும் வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் பேசி ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு வங்கி கல்விகடன் பெற்று தருவோம்

சம கால இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்த வேண்டும், இணையத்தில் எத்தனையோ நல்ல வாய்ப்புகள் உள்ளன , இணையத்தில் வெட்டி அரட்டை, செய்வதை விட்டுவிட்டு பயனுள்ளதாக சிந்தித்தால் நிறைய சாதிக்கலாம் . நம் நாட்டிலும் ஆயிரம் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகலாம்

இந்த விசயத்தில் யார் உங்கள் ரோல் மாடல்?

அன்னை தெரேசா,

நம் சமூகம் எத்தகைய ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஊழலற்ற , லஞ்சமற்ற சமுகமாக , மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்

ஆதரவற்றவர்களைக் கண்டு பேசும் போது அவர்களின் மனோநிலை எப்படியிருக்கும்?

ஆதரவற்றகளுடன் பேசும்போது , நான் அவர்களிடம் சொல்லும் முதல் கோரிக்கை, என்னை உங்கள் நண்பனாக, சகோதரனாக பாருங்கள் என்று, அவர்களிடம் மனம் விட்டு பேசுவேன், பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்பேன். குழந்தைகளிடம் பேசும் போது குழந்தையாக மாறி அவர்களிடம் பேசுவோம். குழந்தைகள் எங்களை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறார்கள்.

இது போன்ற சமூக சேவைகளுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய தொகை தேவை படும் , உங்களால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடிகிறதா ?

கண்டிப்பாக தேவை படும், பலநேரங்களில் ஏழை மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே கவலை அளிக்கும் விசயம் , அதே நேரத்தில் நாங்கள் அனாவசியமாக நிதி வாங்குவதில்லை(கல்வி கோரிக்கை இல்லாத நேரத்தில் / உதவி தேவை படாத நேரத்தில் ) , தேவைக்கு மேல் ஒரு ரூபாய் அதிகம் கூட நிதி வாங்குவதில்லை, ஏழை மாணவர்களின் கல்வி கோரிக்கை பரிசிலிக்கபட்டு முகநூலில் சுவற்றில் போடப்படும், நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பபடும் , அதை பார்த்து விருப்பம் இருப்பவர்கள் உதவுவார்கள் ,

நான் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், ஐ , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்விக்கு வழி காட்டுவது, முதலியன.

கனவுக்கு செயல் கொடுப்போம் குழு

சபரியோடான பேட்டி முடிந்து விட்டது, ஆனால் ஆழமான அதிர்வுகளை சபரி நமக்குள் உருவாக்கி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இணயத்தளத்தில் தனது முழு பங்களிப்பினை எமது கழுகு விழிப்புணர்வு வலைத்தளத்திற்கு அவர் அளிப்பதாக உறுதியளித்த போது அவரது வார்த்தைகளுக்குப் பின் இருந்த ஆழமான சமூக நல் நோக்கு எத்தகையது என்பதை உணர முடிந்தது.

சமூக சேவை என்பது பொருள் உதவி மட்டுமல்ல நமது அறிவையும், கல்வியையும், அனுபவத்தையும் பகிர்வது என்பதை செம்மையா உணர்ந்து அதை செயல்படுத்தி வரும் சபரி சங்கருக்கு கழுகின் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு...

சபரியும் அவரது கனவுக்கு செயல் கொடுப்போம் குழுவும் வெறுமனே அறியப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல சர்வ நிச்சயமாய் பின்பற்றப்பட வேண்டியவர்களே என்பதை உங்களோடு பகிர்ந்து, எம் தேசத்து ஒவ்வொரு இளையரும் இப்படியான உணர்வினைக் கொண்டிருந்தால் இந்த தேசம் திருவாளர் அப்துல்கலாம் சொன்னது போல 2020ல் அல்ல அதற்கு முன்னரே ஒரு வலுவான வல்லரசாக மிளிரத்தான் செய்யும்...!


கேள்வி வடிவமைப்பு: கழுகு விவாதக் குழு


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


Sunday, December 04, 2011

'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பேட்டி....!


விழிப்புணர்வுக்காய் ஒரு வலைத்தளத்தை உருவாக்கிய போது என்ன ஒரு உக்கிரம் கொண்டிருந்தோமோ அந்த சீற்றத்தில் கிஞ்சித்தேனும் குறைவின்றி கழுகு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தடைகளையும், இகழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நேர்மறைப் பார்வைகளோடு அடுத்த தலைமுறையினரின் செழிப்பான வாழ்க்கைக்கு தேவையான அனல் பறக்கும் கருத்துக்களை இடையறாது விதைத்துக் கொண்டே அது செல்கிறது.

இளையர்கள் நாளைய நமது தேசத்தை கட்டி அமைக்கப் போகும் சிற்பிகள் என்ற கருத்தில் யாருக்கும் முரண்கள் இருக்க இயலாது. எமது நீண்ட நெடிய பயணத்தின் போது எதிர்பட்ட சகோதரர் சபரி சங்கர் ஒரு வித்தியாசமான இளைஞர் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற ஒரு சமூக நல் இயக்கத்தை நிர்வகித்து, அக்னியாய் உருவான கனவினை தன் நண்பர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சபரி கணிணித்துறையில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஒரு மாணவர்....

ஆச்சர்யமான அதே நேரத்தில் சம காலத்து அதுவும் இணையத்தில் வலம் வரும் அத்தனை இளையரும் அறிய வேண்டிய ஒருவர் சபரி....! அவரோடன கழுகின் பேட்டி இதோ உங்களுக்காக....!




உங்களை பற்றி கொஞ்சம் கூறுங்களேன் சபரி?

என் பெயர் சபரி ஷங்கர், நான் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இறுதி ஆண்டு MCA படித்து வருகிறேன் . நான் மதுரை அவனியாபுரத்தில் வசித்து வருகிறேன்.

கனவுக்கு செயல் கொடுப்போம்...இந்த திட்டம் எப்படி,எப்போது உருவானது?

என் (மற்ற கல்லூரி) நண்பன் கார்த்திக் உடன் ஒரு முறை அருப்புகோட்டையில் உள்ள அனாதை இல்லம் சென்றிருந்தேன் , அந்த அனாதை இல்லம் வந்ததும் குழந்தைகள் அன்புடன் கார்த்திக் அண்ணா, கார்த்திக் அண்ணா என்று ஓடி வந்தார்கள், 100 குழந்தைகள் மேல் இருப்பார்கள். அன்று புரிந்து கொண்டேன் குழந்தைகள் அன்பை . அந்த அனாதை இல்லம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த பெண்கள் அனாதை இல்லம் நடு காட்டில் உள்ளது போல் தனியே இருந்தது, சுற்றி வீடுகள் அதிகம் இல்லை, கதவுக்கு கூட தாழ்பாழ் இல்லை, க்ரிண்டேரை தள்ளி அடைக்கும் அவலம், ஒரே ஒரு வார்டன், இல்லத்தை சுற்றி பன்றிகள் கூட்டம் வேறு , வார்டனின் கணவன் குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

இந்த நிலை கண்டு அன்று வேதனை அடைந்தேன். கண் கலங்கினேன், பேருந்தில் வரும்போது கூட நண்பனிடம் இதை பற்றியே பேசிகொண்டே வந்தேன், அன்று இரவு வீட்டில் இதை பற்றி சிந்தித்தேன், அவர்களுக்கு உதவ நினைத்தேன், அந்த வாரத்திலயே ஞாயிறு கிழமை அவர்களுக்கு டியூஷன் எடுக்க சென்றேன். என் வீட்டில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் என்றாலும் அவர்களுக்கு உதவ சிரமங்களை பார்க்காமல் சென்று வகுப்பு எடுத்தேன், அவர்களின் கல்வி தேவையை நண்பர்களின் உதவியுடன் நிறைவேற்றினேன்.

கனவுக்கு செயல் கொடுப்போம் என்பது 2010 புத்தாண்டு சபதமாக பிறந்தது. ஒவ்வொரு வருடம் வருகிறது , செல்கிறது , இந்த வருடம் புதுமையாக வித்தியாசமாக செய்வோம் என்ற குறிகோளுடன் என் நண்பர்களுடன் விவாதித்து கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற அமைப்பை தொடங்கினேன்,

ஒவ்வொரு ஏழை மாணவர் - மாணவிகளின் கல்வி கனவு மெய்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் பேரை தேர்வு செய்தேன்.


ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது ?

இணையத்தில் ஒருமுறை அன்னை தெரேசா வாழ்க்கை வரலாற்றை படித்தேன், அதை படித்ததில் இருந்து எனக்குள் மாற்றம், தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.

உதவி செய்வதற்கு நன்கொடை மற்ற உதவிகள் எங்கிருந்து வருகின்றன?

நாங்கள் எந்தவித அரசின் நிதியும் , வெளிநாட்டு நிதியும் பெறாமல் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்கள் மற்றும் பணி செய்யும் நண்பர்களின் தரும் சிறு நிதியை கொண்டு இந்த சமுக பணிகளை செய்துவருகிறோம் .
முகநூல் நண்பர்கள் மூலம் நிதி கேட்டு ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு உதவுகிறோம்.

கனவுக்குச் செயல் கொடுப்போம் குழுமத்தினை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் - எவ்வகையில் ஆதரிக்கிறார்கள் - பணமாகவா - பண்டங்களாகவா - உடலுழைப்பினாலா ?

பல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் , பணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் என் பலரும் ஆதரவு தருகிறார்கள்.

மதுரையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் வரும் ஒரு முறை அனாதை இல்லம் வந்து அனாதை குழந்தைகளுக்கு டியூஷன் , கணினி வகுப்பு எடுக்கிறார்கள்.

பணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை தருகிறார்கள், ஹச்..வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மக்களுக்கு மருந்து பொருட்களுக்கு உதவி செய்கிறார்கள்

வீட்டில் உங்களின் இந்த சேவை மனப்பான்மையை ஏற்றுக் கொண்டார்களா ?

தொடங்கிய போது ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் இருந்தது, எனது சேவை பற்றி கண்டுகொள்ளவதில்லை , அதன் பிறகு ஹிந்து நாளிதழில் பேட்டி வந்த போது என் பெற்றோருக்கு என் சேவை மீது நம்பிக்கை வந்து ,ஏற்று கொண்டர்கள் . ஆரம்பத்தில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கூட , எங்கள் சேவை பற்றி பத்திரிகைகளில் வந்ததும், வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நபரிடம் , என் உறவினர் பையன் தான் என்று பெருமை பட்டு கொள்வார்கள். ஆரம்பத்தில் என் தங்கை இதில் நாட்டம் இல்லாது இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல தங்கையும் அனாதை இல்லங்களுக்கு வரும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டாள். தன் தோழிகளையும் அதில் ஈடுபட வைத்தாள். என் தந்தையும் தாயும் எனக்கு நம்பிகையாக உள்ளார்கள்.

வேறு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் சேவை தொடர்கின்றதா ?

ஆம், எங்களால் கல்விக்கு உதவ முடியாவிட்டால் மற்ற அமைப்புகளுக்கு பரிந்துரை செய்கிறோம். சென்னையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் அமைப்பு, இளம்பிறை , சேவை கரங்கள் , மதுரையாய் சேர்ந்த வி கேர் தொண்டு நிறுவனம், ஷிவா டிரஸ்ட், கேர் என பல அமைப்புகளோடு சேர்ந்து உதவிகள் செய்கிறோம். தற்போது இணையத்தை பொறுத்தவகையில் கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளத்தோடு கை கோர்த்து உள்ளோம்.

செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்களா?

எப்போதும் கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டயபடுத்துவதில்லை , கல்வி கோரிக்கையை பார்த்து அவர்கள் விருப்பம் இருந்தால் செய்வார்கள் ,

நாங்கள் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்விக்கு வழி காட்டுவது, முதலியன கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது தன்னார்வமாக வந்து செய்யும் சேவைகள் தான்.

எப்படி உங்களுக்கான நேரத்தை நிர்வகிக்கிறீர்கள் ?

நான் சமுக சேவைக்கு தரும் நேரம் சனி , ஞாயிறு , விடுமுறை நாட்கள் தான். சமுக பணிகளுக்காக நான் கல்லூரிக்கு விடுமுறை எடுப்பதில்லை. வார நாட்கள் எனக்கு கல்லூரி படிப்புக்கே சரியாக இருக்கும். சமுக சேவையில் உள்ள ஆர்வத்தால் என் பொழுதுபோக்கை தியாகம் செய்தேன், திரை அரங்குக்கு செல்வதில்லை, நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில்லை, டிவி பார்ப்பதில்லை , வெட்டி அரட்டை அடிப்பதில்லை, இதனால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அதை சமுக சேவைக்கு செலவிடுகிறேன்.

.....இந்தப் பேட்டியின் தொடர்ச்சி நாளையும் தொடரும்....



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes