Thursday, September 29, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (29.9.2011)


பஞ்ச்: 1

வரலாறு காணாத அளவுல ஒரு பன்முகப் போட்டி இருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வகையில் பாத்தா சில முக்கியமான தடயங்களை தேர்தல் முடிவுகளோட விட்டுத் தரும்னுதான் சொல்லணும்...!

கடந்த 25 வருட அரசியல்ல அதிமுக மற்றும் திமுக இந்த ரெண்டு கட்சியும் தமிழர்கள் வாழ்க்கையில நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, முதல் தடவையா இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியா களம் காணுவதின் விளைவு இவற்றின் சொந்த பலம் என்ன அப்டீன்னு இந்த முறை தெளிவா காட்டிடும். 

இது ஒரு அவசியமான நிகழ்வுன்னு கூட சொல்லலாம்...! பார்க்கலாம் வெல்லப்போவது அதிமுகவா? திமுகவா...?இல்லை தேமுதிக கூட்டணியா அப்படின்னு?


பஞ்ச்: 2

இந்த ப. சிதம்பரம் இருக்காரே அவரு நல்லவரா? இல்லை கெட்டவரான்னு பிரதமர் மன்மோகன் சிங் கிட்ட கேட்டா.. தெரியலையேப்பான்னு டர்பன கழட்டி வச்சுட்டு தலைய சொறியிறாராம். உள்ள ஒக்காந்து கிட்டு ராசா ஒண்ணு ஒண்ணா எடுத்து விட இங்க சிதம்பரம் ஐயா டவுசர் கொஞ்சம் கொஞ்சமா கிழிய ஆரம்பிச்சு இருக்கு.

நம்ம பிரதமர் ஐயா நியூயார்க்ல இருந்துகிட்டு பேட்டி கொடுக்குறாங்க. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அட... பிரதமர் ஐயா எங்களுக்கும் அவரைப் பத்தி நல்லா தெரியும். உள்ள இருக்காரே ராசா அவருக்கும் நல்லா தெரியும், ஆனா எதுக்கு இவர் டெண்டருக்கு அப்ரூவல் கொடுத்தாருன்னுதான் கேக்குறோம்..?

என்னமோ போங்க... பூசணிக்காய சோத்துல மறைக்க ட்ரை பண்ணினா கூட பரவாயில்லை. வெறும் பூசணிக்காய வச்சுகிட்டு இது சோறுன்னு சொல்லி 125 கோடி பேர முட்டாளாக்க பாக்குறீங்களே...நல்லா இருக்குங்கய்யா உங்க ஜனநாயகம்!

பஞ்ச்: 3

ஜீ தொலைகாட்சியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில ஒவ்வொரு குடும்பத்துல இருக்குற பிரச்சினைகளையும் அந்தந்த குடும்ப உறுப்பினர்களை வச்சே தீர்த்து வைக்கிறாங்க. திருமதி.நிர்மலா பெரியசாமி (சன் டிவில நியூஸ் சொல்லுவாங்களே....அவுங்களேதான்) மிக சாமர்த்தியமா பேசி அருமையா ஒத்துப் போக வைக்குறாங்க.

திரும்ப திரும்ப வரும் பிரச்சினை என்னனு பாத்தீங்கன்னா, காதல் கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம், பெத்தவங்க சப்போர்ட்டும் இல்லாம, புருசனும் சண்டை போட்டு வெறுத்து, இந்த பொண்ணு வேண்டாம்னு விட்டுட்டு வேற ஒருத்தி கூட தொடர்பு வச்சிக்கிட்டு போற மாதிரியேதான் இருக்கு.

ஒட்டு மொத்தமா பார்த்தீங்கன்னா காதல் சரின்னு நாம ஒத்துக்கிட்டாலும் தனிப்பட்ட முறையில ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனித்தனியா ஒருத்தர் இல்லேன்னா கூட ஒருத்தர் நிக்க முடியும் அப்டீன்ற ஒரு ரேஞ்ச்ல இருந்தா காதல் பண்ணுங்க. பெத்தவங்கள விடுங்க. கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா... குடும்ப உறவுகள எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டு தன்னோட துணை துரோகம் செய்றப்ப ரொம்ப கஷ்ட படுற சூழல் உருவாகிடுது. இதுல பெரும்பாலும் பெண்கள் நிறைய பாதிக்கப்படுறாங்க..!

இந்த விசயத்துல எல்லோருக்கும் விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் போது நாம என்ன செய்றோம்? ஏன் செய்றோம்? செய்றது சரியா? இப்டி பல தடவை தன்னை உற்றுப் பார்த்துக் கொள்வதோடு அனுபவஸ்தர்களின் அறிவுரையையும் கேட்டு நடந்தால்.. தெளிவான ஒரு சமுதாயத்தின் அங்கமா நாம இருப்போம். காதலுக்கு கண் இல்லைன்றது சரியாதான் இருக்கு...

பஞ்ச்: 4


மன்மோகன் சிங் ஐயாவுக்கு திரு. கருணாநிதி அவர்கள் திசைகாட்டும் விளக்காக இருக்காராம். சிங் ஐயா பொறந்த நாளைக்கு நம்ம ஐயா வாழ்த்து சொன்ன உடனே சிங் ஐயா ரொம்ப குஜாலா சொல்லியிருக்காரு..! பாராளுமன்றத் தேர்தல் வருது. திமுக உள்ளாட்சித்தேர்தல்ல கழட்டி விட்டுடுச்சு. ஏதாச்சும் சொல்லி கில்லி தேத்தி வைப்போம். பின்னால 40 சீட்டுக்கு உதவும்னு இப்பவே தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க..ஒருவேள இப்படியும் இருக்குமோ? எப்படியும் எந்தக் கட்சியும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி வரப்போறதில்ல. திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு குறைவா இருந்தா பழையபடியே உறவ புதுப்பிச்சிக்கிலாம்னு இவரும் வாழ்த்து சொல்லி இருக்கலாம். யாரு கண்டது..?



பின்குறிப்பு: சோனியா அம்மா ஒரு வேளை செயலலிதா அம்மாதான் வழிகாட்டும் வெளக்குன்னு சொன்னாலும் சொல்லுமோ? சொல்லும் சொல்லும் யாரு கண்டா...?! 

பஞ்ச்: 5

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தில சந்தனக்கட்டை வச்சு இருக்காங்கன்னு சந்தேகப்பட்டு ஒரு ஊரையே அடிச்சு துவம்சம் பண்ணி 18 பெண்களை கற்பழிச்சுட்டாங்கன்னு சொல்லி 269 காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மேல குற்றம் சாட்டப்பட்ட வழக்கோட தீர்ப்பு இன்னிக்கு சொல்லப் போறாங்க...


கிட்டத்தட்ட 19 வருசம் இந்த கேச விசாரிச்சு விசாரிச்சு, குற்றம் சாட்டப்பட்ட 269 பேர்ல 54 பேர் செத்து வேற போய்ட்டாங்க... ஏன்யா இந்தியாவுல மட்டும் நீதி கிடைக்க இவ்ளோ லேட்டாகுது..? ஒரு கேசுல குற்றம் சுமத்திட்டு மறுபடி பொறந்து வந்துதான் நியாயம் கேக்கணும் போல இருக்கே..?!


இது போன்ற சம்பவங்கள் நீதி வழங்கல் விசயத்துல தொடர்ந்து நடக்குறது ஏன்? சரி தப்புன்னு தெரிய கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்குறது சரி... அதுக்குன்னு.......இப்டியா? இந்தியனா பொறந்து மூளையில ஏறி ஒக்காந்து ஒத்துக்கிட முடியாத வேதனையான விசயம் இதுதான்!


  
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, September 28, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (28.9.2011)




என்ன சொல்லப் போகிறாய்..  என்ன சொல்லப் போகிறாய் என பாடிக்கொண்டே டீக்கடைக்கு சென்றார் ரெங்கு...




கனகு : என்ன ரெங்கு... போற வர பொம்பளை பிள்ளைய பார்த்து பாட்டு பாடிட்டு வரியா..?? 


ரெங்கு : எதுக்குய்யா... நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?? நம்ம மன்மோகன்சிங் அய்யா வர்றாரு... அதான் அவர் என்ன சொல்ல போறார்ன்னு காத்துட்டு இருக்கேன்..


கனகு : என்ன விஷயம் பத்தி நீ சொல்ற ரெங்கு..?!  அவர் மேல இருக்குற 2ஜி குற்றசாட்டுக்கு பதில் சொல்லப்போறாரா..?!  


ரெங்கு : அட.. அதுக்கு பதில் அடுத்து சொல்வார் கனகு. இப்போ நம்ம ப. சி மேல இருக்கற குற்றசாட்டுக்கு பதில் சொல்வார்ன்னு எதிர்பார்க்கறேன்.


கனகு : அவர் என்ன பதில் சொன்னாலும் நீ நம்பிட போறியா ரெங்கு. அவர் வந்து சிதம்பரம் மீது தப்பே இல்லைன்னு சொல்ல போறார்.. அவர் மேல தப்பு இருக்குன்னு சொன்னா... ராசா ப.சி மேல பழி போட்ட மாதிரி ப.சி பிரதமர் மேல பழி போட்டுடுவார்ல... 


 ரெங்கு : இது வரை மௌனமா இருந்தவர் இப்போ என்ன சொல்றார்ன்னுதான் பார்ப்போம்.. 


கனகு : ஆமா.. ஆமா.. மௌன குரு வருக!! வருக..!! ன்னு பேனர் கட்டி வை... 


ரெங்கு : கூட்டணிக்கட்சிக்கு தாராளமா இடம் கொடுத்து இருக்காங்க...  


கனகு : கூட்டணியா????  இந்த தேர்தல்ல கூட்டணின்னு ஒன்னு இருக்கா..??  


ரெங்கு : நம்ம கேப்டன் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரெண்டு மேயர் சீட் கொடுத்து இருக்காரு... இது தாராளம் இல்லையா?.. 


கனகு : போய்யா... கடுப்ப கிளப்பிட்டு இருக்காதே. ஏற்கனவே நம்ம கேப்டன் கடுப்புல இருக்கார்.. இடைத் தேர்தல்ல நிக்க முடியலையேன்னு...

ரெங்கு : நீ சொல்றதும் கொஞ்சம் உண்மை தான் கனகு... எப்படியாவது பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் அம்மா கூடவே கூட்டணி வைச்சுக்கலாம்ன்னு  நினைச்சாராம்.. அது முடியுமான்னு கொஞ்சம் கடுப்புல தான் இருக்காராம். எதிர்க்கட்சி வேலையும் ஒழுங்கா செய்யல... இப்போ எப்படி ஓட்டுகேப்பார்ன்னும் தெரியல... நம்ம கேப்டன்.  


கனகு : என்னது... ஓட்டு கேப்பாரா?  ஒரு வேளை அவர் வேட்பாளர் ஒருத்தருக்கு ஓட்டே இல்லை .......அவருக்கு ஓட்டு கேப்பாரோ...?? 

ரெங்கு : நம்ம கனிமொழி சீக்கிரமே வெளிய வர போறாங்களாம்.. அய்யா சொல்றார்.. 

கனகு : என்னய்யா சொல்ற...!! பேரனுடைய பாசப் போராட்டம் ஜெயிக்கப்போகுதா..??  

ரெங்கு : அது வேற ஒரு கதை கனகு... விசாரணை முடிந்து விட்டது. ஜாமீனில் வெளிய விடுவதில் ஆட்சேபணை இல்லைன்னு சிபிஐ சொல்லி இருக்காம்.. 

கனகு : அப்போ சீக்கிரமே கனிமொழி வெளியவர போறாங்க.. அப்போ திமுக காரங்களுக்கு சந்தோசமான செய்தி கிடைக்க போகுது...  

ரெங்கு : ஆமா.. ஆமா... அந்த சந்தோசமான செய்தி கிடைக்கும். இருந்தாலும் இப்போ திமுகவிற்கு சின்ன சின்ன சந்தோசம் கிடைச்சுட்டு தான் இருக்கு.. இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியவந்திடுச்சுல.

கனகு : அட பாருய்யா! நேத்து கூட அம்மா வீட்டு வாசலிலே காத்துகிடந்தார்.. ஏன் வெளிய வந்தார் கேப்டன் அதிக சீட் தரேன்னு சொல்லிட்டாரா...??!
  
ரெங்கு : இன்னும் கேப்டன் கிட்ட பேச்சு வார்த்தைக்கு போகல... தனியா நிக்க போறாங்களாம்... அங்க மரியாதை தரலையாம். கேட்ட இடம் தரலைன்னு காரணம் சொல்றாங்க கனகு... 

கனகு : என்னது மரியாதையா..?? கூட்டணிக்கு மரியாதை அப்டினு இன்னும் படம் வரலை. அப்படி வந்தா தருவாங்க... அந்த அம்மா தான் யாரையும் மதிக்க மாட்டாங்களே.. அப்பறம் ஏன் இவிங்க எதிர் பாக்குறாங்க.

ரெங்கு : இவங்களும் தனியா நிக்குறாங்க இந்த தேர்தல்ல. இனி மக்கள் தான் தனியா நிக்கல. எல்லாரும் இப்டி தனித்தனியா நின்னா  யாருக்கு ஓட்டு போடுறது..?! ஒரே குழப்பமா இருக்கு கனகு.. 

கனகு : என்னது! இவங்க தனியா நிக்க போறாங்களா? நாளைக்கே கேப்டன் ஒரு மேயர் சீட் கொடுத்தா கூட்டணிக்கு போய்டுவாங்க பார்.... இந்த தேர்தலுக்கு ஓட்டுப்போட போயிடாதே. அதிமுக காரங்க வெறியோட இருக்காங்க ஓட்டு மிஷினை தூக்க..!!  

ரெங்கு : அந்த பயமும் இருக்கு கனகு.. ஆமா என்ன உன் ஏரியாவுல எக்ஸ் மினிஸ்டர அரஸ்ட் பண்ணிட்டாங்களாமே... என்னய்யா ஆச்சு...?!  

கனகு : அதை ஏன் கேக்குற கனகு... அவர கைது பண்ணிடுவாங்கன்ற பயத்துலே அவங்க மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்ட்டாங்க... சாமிய கைது பண்ண போறதா ஒரு மாசமா சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ தேர்தல் நேரத்தில் சரியா பிடிச்சு போட்டுட்டாங்க.. 

ரெங்கு : அடப் பாவமே.. அவர் மேல என்னய்யா கேசு..??

கனகு : கொலை கேஸ் & ஆள்கடத்தல். 2006 ல  ரெண்டு பேர் காணாம போய்ட்டாங்க. அவங்களை இவர் தான் கொலை பண்ணி இருப்பார்னு சொல்லி கேஸ் போட்டுட்டாங்க.. இவங்க தம்பிங்க மேலயும் கேஸ் போட்டுட்டாங்க. இப்போ அவங்களும் உள்ளதான் இருக்காங்க..

ரெங்கு : ஓ... இது 2006ல நடந்த விஷயமா..??  இப்போ ஏன் இத தோண்டி எடுக்குறாங்க..?? 

கனகு : அது வேற ஒன்னும் இல்லை ரெங்கு. எல்லாம் தேர்தல் வேலை செய்ய கூடாதுன்னுதான். இங்க KPP.சாமி தம்பி எலெக்சன்ல நிக்குறார். அதுவும் இல்லாம இந்த தொகுதில தேர்தல் வேலையெல்லாம் நடக்க விட கூடாதுன்னு தான் அவரை இப்போ கைது பண்ணிட்டாங்க... 

ரெங்கு : ஓ.. இதான் பிரச்னையா! அப்போ அவர் தப்பு பண்ணவே இல்லைன்னு சொல்றியா..?? அம்மா கூட அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதோ பரிசு கொடுத்தாங்களாமே..??  

கனகு : ஹா.. ஹா.. ஆமா.. ஆமா... பரிசு கொடுத்தாங்க. ஸ்டேஷன்ல இருக்கற எல்லாரையும் கூண்டோட மாத்திட்டாங்க. அவர் தப்பு பண்ணினாரான்றதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா... நான் எங்க ஏரியாவுல இருக்க வேணாமா..?? எனக்கு ஒரே பதட்டமா இருக்கு டீ சொல்லு....




கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Tuesday, September 27, 2011

விழித்து எழுக எம் தோழர்களே...! சமூக பிரஞை பற்றிய ஒரு பார்வை!


 
 
 
 
எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி.....

கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....?

கொள்கையும் லட்சியமும்தானே?

வாள்களின் வீச்சு..
கேட்டு… கேட்டு மரத்துப் போயின
எமது செவிகள்!
சோர்ந்து போன எதிரிகளின்
யுத்திகள் எல்லாம்...
எம்மை அழிக்கு உ பாயம் அறியாது...
கலங்கச் செய்கின்றன..புத்திகளை!
பட்ட இடமெல்லாம்...
பரவும் நெருப்பினை தோட்டாக்களும்
அம்புகளும் வாள்களும்...
என்னதான் செய்ய முடியும்?
ஒன்று நீர் நெருப்பாய் மாற வேண்டும்
அல்லயேல்... நீர் நீராய்...மாறி...
எம்மை குளிர்விக்க வேண்டும்...
குளிர்விக்கும் உபாயம்..அறிந்திலீர்;
வாரும் நெருப்பாய் மாறூம்...
எம் உக்கிரத்தினை ...
கற்று.. திக்கெட்டும் பரவி...
கொடுமைகளை..எரித்துப் போடும்!

ஒரு டாக்டர் தொழில் நடத்தி வாழத்தெரியாதவரா சேகுவாரா....? மூன்று வேளை உண்டு,பொருள் தேடிச் சேர்த்து, பிள்ளை குட்டிகளுடன் சுகவாசியாய் வாழ்ந்து மரிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

பிறகு எதில் செளகரியம் அவருக்கு வீட்டை விட்டும்,பிள்ளைகளை விட்டும் பிரிந்து செல்ல அவரை உந்தியது எது? அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவிற்காக அவர் போராடவேண்டிய அவசியம் என்ன? ஒரு நாட்டின் தொழில்துறை அமைச்சராய் இருந்து சுக போகங்களை அனுபவிக்கத்தெரியாதவரா சே....?

கியூபாவிற்கு பிறகு, காங்கோ, பொலிவியா என்று அந்த மனிதன் நகர்ந்து கொண்டே இருந்த நோக்கம்தான் என்ன? உள்ளே எரிந்த “ தீ ” தானே? அத்தனை பெரிய தீ எரியாவிட்டாலும் கூட பரவாயில்லை தோழர்களே..வாழ்வின் போக்கு போகிற போக்கில் இயன்றதை செய்வோம் என்ற நெருப்பு ஏன் நம்மிடம் இல்லை?

இன்னும் ஒற்றை ஓட்டுக்கு கையில் பணம் திணிக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாங்கும் நிலையில் வைத்திருப்பதால்தான் கொடுக்கமுடியுமென்ற மிகப்பெரிய சதிதானே ஓட்டரசியல்? சகித்து சகித்து எப்படி தோழா வாழ்வது...? பேசிப் பேசி தீர்த்துவிட முடியுமா எல்லா பிரச்சினைகளையும்! 

" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "

முடியுமா? சாத்தியமா? நடக்குமா என்று கோடிகுரல்கள் கேட்கின்றனவே...ஐயகோ! கேட்கின்ற குரல்கள் எல்லாம் உரக்க சப்தம் செய்தல் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் பொடிப்பொடியாய் ஆகதா? மேலும் மேலும் எம்மக்களை ஆட்டு மந்தைகளாக்கி சுய நல சேற்றில் தள்ளிவிட்டு சுகம் காணும் அதிகார வர்க்கங்கள் தூள் தூள் ஆக வேண்டாமா?


சாலையோரத்தில் சிறு நீர் கழித்துக்கொள்ளுங்கள், தெருவெங்கும் காறி உமிழுங்கள், குப்பை கூளங்கள் போடுங்கள்.ஒத்த பிள்ளைக்கு உடையில்லாவிட்டாலும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், சண்டையிடுங்கள், சாதியாய் பிரிந்து நில்லுங்கள், மதமாய் மாய்த்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...! நாம் எல்லோரும் வெற்று வயிறோடு பசி.....பசி என்று கத்திக் கொண்டே.....வாக்குகள் அழித்து விட்டு துரைமார்களைப் பார்த்து தலைவா…… என்று கும்பிட்டுக் கொண்டே இருப்போம்....அவர்களும் வெள்ளை வேட்டி சட்டையோடு அம்பாஸிடர் கார்களில் பவனி வரட்டும்!

தேர்தலில் இதைச் செய்கிறேன் அதைச்செய்கிறேன் என்று சொல்வது பார்த்தும், செய்து விட்டேன் எமது இதுதான் சாதனைப் பட்டியல் என்று பல்லிளித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் எப்போது நமக்கு ஆத்திரம் வருமோ அந்த ஒரு நாள் தான் இந்தியாவின் ஒரு உண்மையான சுதந்திர நாள்.. ஏகாதிபத்தியம் மனதளவில் ஒழியும் நாள்....

" நீவீர் ஆட்சிக்கு வந்தால் எம்மக்களுக்கு செய்துதான் ஆகவேண்டும்...அது உமது பணி ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து எமது பிரதி நிதியாகத்தானே நீங்கள் செல்கிறீகள்...? ஒட்டு மொத்த மக்களாகிய நாங்கள் வரமுடியாது...என்று எமது பிரச்சினைகளை பிரதிபலிக்கும் எமது கோரிக்கைகளை கோட்டையில் சொல்லும் பிரதி நிதிகள் நீங்கள், அதற்காகத்தான் வாக்களித்து உம்மை தேர்ந்தெடுத்தோம்...!

மக்களை அதிகாரம் செய்ய அல்ல அரசு, அது மக்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நிர்வாகம் செய்ய.....! இங்கே எப்படி வந்தது முதாலாளித்துவமும், கூளைக் கும்பிடுகளும்? கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு கேட்டு ......வெறுமனே மண்ணில் அடிமைகளாய் அழுகிபோவாதா எமது மூளைகள்....?இப்போது சொல்லுங்கள் போர் எங்கே நடக்க வேண்டும் என்று...?

ஒரு தெருவிளக்கு விடியல் தாண்டியும் எரிகிறதென்றால்....அங்கே நமது வரிப்பணம் விரயமாகிறதென்ற எண்ணம் ஏன் நமக்கு உதிப்பதில்லை? இலவசாமாய் நாம் பெறும் பொருளெல்லாம் கொடுப்பவர்களின் சொத்திலிருந்தா கொடுக்கப்படுகிறது.....வள்ளல் பட்டம் எதற்கு...? விருத்திக்கு வரும் தொழிற்சாலைகளையும் வேலை வாய்ப்புகளையும் கேட்க மறந்து இலவசங்களின் மீது ஆசைப்பட்டதில் என்ன தோழா நியாயம் இருக்கிறது....?


மாறாக வேளாண்மை செய்யும் உரத்தின் விளையை குறைத்திருக்கலாம்....எல்லா பிள்ளைகளின் கல்லூரி வரையான கல்வியை இலவசமாக்கியிருக்கலாம்.ம்ம்ம்ம்ம்ம் அறிவு விருத்தி வேண்டாமென்று தானே எம்மக்களை அழிவு விருத்திக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்...?

சமூக பிரஞ்ஞை எல்லாம் யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கும், ஒரு நடிகனுக்கும், அல்லது பத்திரிக்கையாளனுக்கும், தொலைக்காட்சி வைத்திருப்பவருக்கும் மட்டும் வரட்டும்....மீதியுள்ள ஜனங்கள் எல்லாம் வாய் பிளந்து காத்திருக்கட்டும்....

கடவுள் என்று ஒருவர் வருவார்... பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பாரென்று…!

கடவுள் இதுவரை வந்ததில்லை இனியும் வரப்போவது இல்லை செயல்படவேண்டியது எல்லாம் மனிதர்களாகிய நாம்தான்…

இதை யார் உணர்வார்? (இந்தக் கேள்வியைக் கூட மாற்றிதான் கேட்க வேண்டும்)

யார் உணர்த்துவார்?(யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......)

மேலே உள்ள புகைப்படம் சினிமா சூட்டிங் அல்ல இந்திய வீதிகளில் எடுக்கப்பட்டதுதான்...!
 
 
 
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

Saturday, September 24, 2011

யாருக்கு வெற்றி....? உள்ளாட்சித் தேர்தல் பற்றிய ஒரு அதிரடி பார்வை.


எட்டு முனைப் போட்டியாக பரிணமத்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் தற்போதைய தமிழகத்துக்குப்  புதியதுதான். சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு இது போன்ற அரசியல் களத்தினை தமிழக வாக்காளர்கள் சந்திப்பது சிறப்பான ஒரு விடயம் என்று நாம் கணித்தாலும் ஒரு குழப்பமான மனோநிலையை இது மக்கள் மனதில் விதைத்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.


ஒவ்வொரு கட்சிகளும் தத்தம் ஈகோவினை விட்டுக் கொடுக்க முடியாமல் தனித்தனியாக களம் காண மற்றொரு கட்சியைக் குறைக் கூறிக் கொண்டாலும், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மக்கள் எளிதில் புறம் தள்ள நிறைய காரணங்கள் இருக்கின்றன. தமது சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளைக் கைக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கிறது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இதிலும் மிக சொற்ப பதவிகளே கிடைக்கும். 


இதற்கு காரணமாய் பட்டியலிட்டு பல விடயங்களை நாம் கூறினாலும், தான் தோன்றித் தனமான ஒரு கட்டுக் கோப்பில்லாத தமிழ்நாட்டுத்  தலைமையும், தமிழர் விரோதப் போக்கினை தொடர்ந்து கடைபிடித்து வரும் காங்கிரஸின் தேசிய தலைமையும் இரு மிக முக்கிய காரணங்கள். 


மேலும் ஈழப்போரில் காங்கிரஸின் கொடூர கை இருந்ததைத் தமிழர்கள் மறக்க இன்னும் வெகு காலம் பிடிக்கும் என்பதால் காங்கிரஸ் மொத்தமாக வாஸ் அவுட் ஆகும் சூழலே தற்போது மிகுந்திருக்கிறது. 


ம.தி.மு.கவைப் பொறுத்த வரையில், தனது பேச்சாற்றலையும், அரசியல் அனுபவத்தையும் வைத்து மிகப்பெரிய தொண்டர் பலத்தோடு திமுகவை உடைத்து வெளியேறிய திரு. வைகோ அவர்கள், தன்னை தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியலைச் செய்யும் ஒரு ராஜ தந்திர யுத்தியாக அதிமுகவோடு தன்னை பிணைத்து வைத்திருந்ததே அவருக்கு மிகப்பெரிய சறுக்கலாய் கடந்த ஐந்து வருடத்தில் நடந்து முடிந்தது. 


ம.தி.மு.கவின் மிக முக்கிய புள்ளிகள் எல்லாம் அதிமுகவின் கீழ் வைகோ அடங்கி நடப்பதை கண்டு சகிக்க முடியாமலும், அரசியல் பொருளாதர காரணங்களுக்காக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவிடம் ஒவ்வொருவராக தஞ்சம் அடைய உதவியாக திரு. கருணாநிதியின் காய் நகர்த்தல்களும் உதவி செய்தன. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரு. வைகோ அவர்கள் மெளனித்து ஸ்தம்பித்து நிற்குமளவிற்கு அதிமுகவின் ஆளுமை அவரை கட்டுப்படுத்தி வைத்திருந்ததும் உண்மையே..!


ஈழப்போரின் போது தமிழ் உணர்வினை வெளிப்படுத்தி நிஜமாகவே வைகோ முன்னெடுத்த அரசியல் திரு. சீமான் அவர்களின் அதிரடி அரசியல் பிரவேசத்தினால் மக்களால் கவனிக்கப்படாமல் போனது வைகோவிற்கும் மதிமுக என்னும் கட்சிக்கும் ஒரு அடையாளத்தை கொடுக்காமல் போனது வைகோவின் துரதிருஷ்டம்.


ஈழப்போரில் காங்கிரஸின் கைகள் விளையாடிய போதெல்லாம் அப்போதைய திமுக அரசு மெளனித்து இருந்ததும், ஸ்பெக்ட்ரம் போன்ற மிகப்பெரிய ஊழல்களில் திமுக அரசின் அமைச்சர்களும், திரு கருணாநிதி குடும்பத்தினரும் நேரடியாக ஈட்டுபட்டிருந்ததும், தனது கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் ஒரு பாஸிட்டிவான திருப்பத்தை கொடுக்கும் என்று நம்பி இருந்த வைகோ, தான் சகோதரி என்று வர்ணித்த அதிமுக தலைமை கண்டிப்பாய் தனக்கும் தன் கட்சிக்கும் நிறைய இடங்களை கொடுக்கும் என்று உண்மையிலேயே சட்ட சபைத் தேர்தலில் தமது கடும் உழைப்பைக் கொடுக்க காத்திருந்தார்...


ஆனால்.... செல்வி. ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளின் முடிவில் அதிமுக என்னும் கட்சியின் நலம் இருக்கிறதோ இல்லையோ, தான் என்ற ஒரு அகங்கார அரசியல் கண்டிப்பாய் இருக்கும் என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்த செல்வி ஜெயலலிதா வைகோவிற்கு நிறைய இடங்கள் கொடுத்து, மதிமுக அதிக வெற்றிகள் பெற்றால் எதிர் காலத்தில் அது தனக்கே பெரும் தலைவலியாகும் என்ற் நினைத்து, வைகோவை ஓரம் கட்டி விட்டு, தேமுதிக என்னும் கட்சியை தனது வெற்றிக்கு பலி ஆடாய் ஆக்க நினைத்தார். 


தமிழகத்தின் சினிமா வசீகரம் ஒன்றும் இன்னமும் குறைந்திடவில்லை என்பதை எடுத்தியம்ப விஜகாந்த்க்கு கிடைத்த கடந்த தேர்தல் ஓட்டுக்களே கட்டியம் கூற பூரண கும்ப மரியாதையோடு சீட்டுக்களை தேமுதிகவிற்கு அதிமுக கொடுத்ததை கண்டு ஒரு சுத்த அரசியல்வாதியான வைகோ திடுக்கிட்டுதான் போனார் அந்த அதிர்ச்சியில்தான் சட்ட சபை தேர்தலை விட்டு ஒதுங்கியும் இருந்தார். 


இந்த சூழலை தனது கட்சிக்காக பயன் படுத்த நினைத்த விஜயகாந்தும் தனது கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள கூட்டணியை ஏற்றும் கொண்டாலும் அவருக்கு ஜெயலலிதா என்றாலே பிடிக்காது என்பதுதான் உண்மை.


ஜெயலலிதாவை நம்பி வீழ்ந்தது போதும் என்று தனித்த அரசியலை மீண்டும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னெடுத்துள்ள மதிமுகவிற்கு பஞ்சாயத்துக்கள், ஊராட்சிகள் மேலும் நகராட்சியில் கூட ஓரளவிற்கு கணிசமான வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம். வைகோ மீண்டும் நிமிர்ந்து உட்கார இந்த உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாய் அவருக்கு உதவும். இப்படி நிமிர்ந்து உட்கார விஜகாந்தும், காங்கிரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுக்களைப் பிரித்து கண்டிப்பாய் உதவத்தான் போகிறார்கள்.


தேமுதிகவும் தன்னுடைய தனித்தன்மையை விட்டு விடாமல் ஜெயலலிதாவிடம் பேச்சு வார்த்தை என்ற ஒன்றே முன் வைக்காமல் தனித்து  நிற்பதன் மூலம்  சில பல நகராட்சிகளை வெல்லப் போவதும் உறுதி என்றாலும் மதிமுக அளவிற்கு இவர்கள் வெற்றி இருக்காது என்பதை அறுதியிட்டே கூறலாம்.


சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற அதிமுக என்னும் கட்சி அந்த வெற்றி தங்களது செல்வாக்கினால் கிடைத்தது என்று இப்போது கணக்கு போட்டிருப்பதன் விளைவுதான் கூட்டணிக் கட்சிகளை மதியாமல் எட்டி உதைத்து தானே தனியாய் நிற்போம் என்ற உத்வேகம் என்பதைக் கருத்தில் கொண்டால், அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி....!!!!!(தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில்..)


மிகைப்பட்ட இடங்களில் வைகோ மற்றும் விஜயகாந்த் ஆதரவாளர்களின் ஓட்டுக்கள் பிரியப்போவதாலும்..., தன்னுடைய வலிமையினைப் பற்றி குறுகிய காலத்தில் ஒரு தவறான கணிப்புக்கு அதிமுக தலைமை வந்து விட்டதாலும் கூட்டணி இல்லாத அதிமுக உள்ளாட்சி தேர்தலில் குப்புறக் கவிழத்தான் போகிறது. சமீபத்தில் பரமக்குடியில் நிகழ்த்தப் பெற்ற துப்பாக்கிச் சூடு மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தையும் அதிமுகவுக்கு எதிரான ஒரு அதிர்வையும் மெலிதாய் ஏற்படுத்தியிருப்படுத்தியிருப்பதும் மறுக்க முடியாத உண்மையாய்தான் கொள்ள வேண்டும். இதன் விளைவுகளையும் அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் உடனடி பலனாக பெற்றுக் கொள்ளும்.


இனி....

சட்ட சபைத் தேர்தலில் அடிபட்டு, காங்கிரஸ் என்னும் அரக்கனால் இரத்தம் உறிஞ்சப்பட்டு, பல வித ஊழல்களுக்குள் அகப்பட்டு, குடும்ப அரசியலால் விழி பிதுங்கி நின்ற திமுக அரசு....தற்போது மெல்ல விழித்தெழ ஆரம்பித்திருக்கிறது.


ஈழப் படுகொலைகளையும் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான காங்கிரஸின் குரூர நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை திமுக தலைமை சரியாக உணராத போதும், முழு விழிப்புணர்வோடு அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்  ஸ்டாலின் போன்றவர்களின் வார்த்தைகளை அதன் தலைமை தற்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் விளைவே காங்கிரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கப்பட்ட கல்தா.


உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் தான் என்ற ரீதியில் திமுக தலைமை இந்தக் கூட்டணியை உடைத்திருந்தாலும், இதே நிலைமை பாரளுமன்றத்தேர்தலிலும் தொடரத்தான் போகிறது. தமிழ் மக்களின் முன்பு தமிழர்கள் நலம் காணும் ஒரு கட்சியாய் தங்களை முன்னிலைப் படுத்தப்போகும் மாநில அரசியல்தான் தற்போதைய திமுகவின் கவனமாய்  மாறியிருக்கிறது. பேரறிவாளன், முருகன் சாந்தன் தூக்கு தண்டனை விடயத்தில் தமிழக  மக்களிடம் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய எழுச்சியையும், அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடுத்த சில சட்டப்பேரவை தீர்மானங்களையும் அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினையும் ஆழமாக கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்....


மீண்டும் அண்ணா உச்சரித்த காங்கிரசைத் துரத்துவோம் என்ற ஒரு நிலைப்பாட்டினை விரைவிலேயே கோஷமாக்கத்தான் போகிறது. வரப்போகும் காலங்களில் தமிழர் சார்ந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் இன ரீதியாக முன்னெடுக்கப்போவதோடு ஈழப்பிரச்சினைக்கும் தன்னால் ஆன ஒரு உதவியை செயற்படுத்தி தன்னை தமிழக மக்களின் முன் நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் இருக்கிறது.


அழகிரி, கனிமொழி இன்ன பிற அத்தனை குடும்ப உறுப்பினர்களையும் ஆஃப் செய்து விட்டு, ஸ்டாலினின் ஆலோசனையோடு கழகம் நகரப்போகிறது என்பதுதான் திமுகவினருக்கு இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய உற்சாக டானிக்.


தற்போது நிகழும் எட்டு முனைப் போட்டியும், அதிமுகவின் கூட்டணி துரோகமும், காங்கிரசுக்கு கொடுத்த கல்தாவுமாய் சேர்ந்து வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தரத்தான் போகிறது. சட்டசபைத் தேர்தலில் தோற்றதாலேயே பலமெல்லாம் இழந்து விட்டதாக செல்வி ஜெயலலிதா கணித்திருப்பது அவரின் பலவீனமான அரசியல் அனுபவத்தின் வெளிப்பபாடு என்றுதான் சொல்ல வேண்டும்.


திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தற்போது பச்சாதாபமாய் மாறியிருப்பதும், காங்கிரஸ், தே.மு.தி.க, பாமக, மற்றும் மதிமுக கட்சிகளின் ஓட்டுக்கள் பிரிந்து திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு யார் உதவி இருக்கிறார்களோ இல்லையோ அதிமுக தலைமை இந்த உதவியைச் செய்து விட்டது என்றுதான் கூற வேண்டும்...!


நாளும் மாறும் அரசியல் களத்தில்....மக்களுக்கு அதனால் நன்மை விளைந்தால் சரிதான்....என்ற ஏக்கத்தோடு எமது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அரசியல் பார்வையை நிறைவு செய்கிறோம்.


கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes