Monday, January 30, 2012

அடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பார்வை!

அன்பர்களே ....

கழுகில் இன்றைய தலைப்புஅடிப்படை கல்வி--இன்றைய நிலை... இது பற்றி ஒரு சின்ன அலசல்...

நம் இந்திய திரு நாட்டின் பண்டைய கல்வி முறை  குருகுலத்தை சார்ந்து இருந்தது... மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி படித்துவந்தார்கள்...

பின்னர் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது இருக்கும் மெக்காலே  முறைக்கு---முற்றிலுமாக நம்மை மாற்றி அதற்கு நம்மையும் அடிமை ஆக்கிவிட்டார்கள்.....

இப்போது எல்லாம் மதிப்பெண்,,மதிப்பெண்,...மதிப்பெண்.....

செயல் வழி கற்றல் என்று ஆரம்பித்தார்கள்....அது எந்த அளவுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது ..????

அன்பர்களே..பொதுவா நம் எல்லாருடைய எண்ணமும்... நமது குழந்தைகள்...மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும்.. வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்...இது மட்டும் தான்.

நம்மில் எத்தனைபேர்...விடைத்தாளில்...வாந்தி எடுப்பதை.. ஒத்துக்கொள்கிறீர்கள்???
இது எல்லாம் சுத்த வேஸ்ட் ... பாட பகுதியை மனனம் செய்து அதை அப்படியே விடைத்தாளில்  கக்குவதற்கு எதற்கு...பள்ளி...??? பள்ளி கட்டணம்..??? படிப்பவை கடைசி வரை நினைவில் நிற்குமா ??? இதை நாம் வீட்டிலேயே செய்ய சொல்லலாம்...

இன்றைய..பாடத்திட்டம் அந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த நிலை மாறினாலும் நாம் மதிப்பெண் எங்கே...என்றுதான் கேட்போமே தவிர நம் குழந்தைகளின் தனிப்பட்ட திறமையை எங்காவது ஊக்குவித்துலள்ளோமா??? உலகிலேயே எல்லா கல்வியாளர்களாளும் பெரிதும் பாராட்டப்படும்  NCRT-கல்வி முறைக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறோம் ???   

அடிப்படை கல்வி முழுமை அடைந்தால் அந்த மாணவன் எதிர்காலத்தில் மிக அருமையாக மிளிர்வான்... அதை எந்த கல்வி நிறுவனம் முழுமையாக...சுயநலம் இல்லமால் செய்கிறது??எல்லாம் பணம்..பணம்..பணம்... இன்றைய கால கட்டத்தில் இத்தனை "கல்வி தந்தைகள்"  உருவாக நாம் எல்லாருமே காரணம்...

நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிதரும்போது கூட--இந்த கேள்வியை படி.. இதற்க்கு பதில் சொல்லு...இப்படிதான் படிக்க வைக்கிறோம். நம்மில் எத்துனை பேர்.நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வியை போதிக்கிறோம் ...???

அனுபவரீதியான பாடங்கள் மற்றும் சுய படைப்பாற்றல் ( SELF CREATIVITY ) எத்தனை குழந்தைகளுக்கு கிடைக்கிறது??? நன்மை கேட்டால்--வகுப்பு பாடம் என்பது நம் குழந்தைகளை அறிவு மழுங்க செய்துவிடும் என்பது திண்ணம்.. வகுப்புடன் கூடிய,,அனுபவரீதியான பாடம் ,,குரூப் டிஸ்கஷன்,, சுய படைப்பாற்றல்,,விளையாட்டு,,விளையாட்டின் முலம் பாடம்,, இப்படி முயற்சி செய்தால் எதிர் கால சந்ததியினர்..எல்லா துறையிலும்.. மற்றும் உலகத்தினறோடு போட்டி போட முடியும்...

எனவே நண்பர்களே..நாம் தான்--நம் குழந்தையின் எதிர்காலம் பற்றி  கவலை படுபவர்கள்...அவர்களின் நாள் வாழ்வுக்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்...

அவர்களின் பாடதிட்டத்தில்...நம்மை ஈடுபடுத்திக்கொண்டு ...அவர்களுக்கு அனுபவம் சார்ந்த,,ஊக்குவிப்பு சார்ந்த,,,மனனம் இல்லாத.. படித்தலை ஒரு சுவையான அனுபவமாக கொண்டு செல்லுங்கள்...

இந்த முறையில் உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளை பயிற்றுவித்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகள்...எதிர்காலத்தில் பேர் சொல்லும் அளவுக்கு வளருவார்கள்...

அடுத்து
போட்டி தேர்வுக்கான டிப்ஸ் :-

அன்பர்களே பொதுவாக நாம் போட்டி தேர்வுக்கு,,மற்றும் பள்ளி தேர்வுக்கு  படிக்கும்போது கேள்வி--அதற்கு நான்கு பதில்கள்...அதில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பது ...இது தான் நடை முறை...இதை ஒரு உதாரணம் முலம்  பார்ப்போம்...

காகசஸ் மலை---

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு பகுதி.
3. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது.

இந்த கேவிக்கு விடை என்று பார்த்தால் 3.

அவ்வளவு தானா???
இந்த ஒரு கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது...
நாம் அடுத்த கேவிக்கு செல்வோம் என்று போய்விடுவீர்கள்....

இந்த கட்டுரையின் நீளம் கருதி சுருங்க பார்ப்போம்....

பொதுவா...கேவிக்கு என்ன பதில் என்று பார்ப்பதைவிட 
பதிலுக்கு கேள்வி தேடுங்கள்...
மேலே உள்ள கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்...

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.

இதற்கு கேள்வி தேடுங்கள்...
திபெத்துக்கு வடக்கில் என்ன உள்ளது...??
மற்ற முன்று திசையிலும் என்ன உள்ளது ???
அது தொடர்பான தகவல்கள் என்ன என்ன ???

இப்ப பாருங்க..ஒரு பதில்...அதற்க்கு உண்டான 
கேள்விகள் பல...
இவற்றை தேடும்போது மறக்குமா???

அதே போல் மற்ற பதில்களுக்கும் கேள்வி தேடுங்கள்...
எவ்வளவு விஷயங்கள் நீங்கள் கற்று கொள்வீர்கள்....

இதை மேலும் இந்த படம் முலம் விளக்குகிறோம்..
இங்கு பொதுவாக நாம் படித்து கொண்டு போவது கீழிருந்து மேலாக... அப்படி போகும்போது
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிப்பதும் நினைவில் நிற்காது...அதற்கு மேல் படிக்கவும்
ஆர்வம இருக்காது... 

அதாவது...மரம்,,முக்கிய கிளைகள்--கேள்வி என்று வைத்துக்கொண்டால்,, இலைகள் பதில்கள்... இந்த முறையில் நாம் போட்டி தேர்வுக்கு தயார் ஆகும்போது நாம் பாதிக்கு மேற்பட்ட பாடங்களை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது...முழுமையாக படித்து முடித்து...நினைவில் வைத்துக்கொள்வது மிகுந்த சிரமம்...

அதே இந்த முறையில் முயற்சி செய்யுங்கள்...
அதாவது...
இலைகள் முலமாக (விடைகள்)--கேள்விக்கு வாருங்கள்...
நீங்கள் அனைத்து பாடத்தையும் COVER செய்து விடுவீர்கள்....
படம் பார்க்கவும்...

என்ன அன்பர்களே...இந்த டிப்ஸ் பிடித்துள்ளதா...ஆம் எனில் இந்த முறையை நீங்களும் பின்பற்றுங்கள்...அனைவருக்கும்...சொல்லி தாருங்கள்... 


( படம் உதவி--வீடு--சுரேஷ் குமார் )

கழுகிற்காக
 
J.நக்கீரன்









(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Thursday, January 26, 2012

இந்தியக் குடியரசும்...வல்லரசுக் கனவும்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...!



இந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 63 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..!

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய வரலாறு எழுதப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்திய அரசியல்கட்சிகளின் ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. இந்திய சுதந்திரத்துக்கு மக்கள் போராடியதும் கஷ்டங்களை அனுபவித்ததும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ஆங்கிலேயனால் நிர்வாகம் செய்ய முடியாமல் சுதந்திரம் என்ற ஒரு மாயா விடுதலையை அவர்கள் விட்டுகொடுத்து சென்றதும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை.. காலத்தின் கட்டாயமாகிப் போனதை மகாத்மா அறிந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி மதவாத அரசியலைக் கண்டு சகிக்க முடியாத ஒரு தேச நலவிரும்பியாய் இருந்த தேசப்பிதாவால், சுதந்திர இந்தியாவின் எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க முடியவில்லை. தன்முனைப்பினைக் கொண்டிருந்த நேருவால் முதல் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியவில்லையாதலால் தீர்க்கமாக தேசப்பிதா எடுத்த முடிவுதான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது.

காலத்தின் வீச்சில் இந்தியாவின் சக்கரங்கள் உருண்டோடி, உருண்டோடி, அதன் மிகுதியான பக்கங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்ட ஒரு பெரும் கட்சியாக விசுவரூபமெடுத்து நிற்பது காங்கிரஸ் மட்டுமே...! சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் என்னும் கட்சி முன்னெடுத்த ஜனநாயகமும் பொருளாதாரக் கொள்கைகளும், பிராந்திய மக்களை நடத்திய விதமும், பிராந்திய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முன்னெடுத்த திட்டங்களும் சேர்ந்துதான் இன்றைய இந்தியாவின் எல்லாவிதமான சமூக சூழல்களுக்கும் காரணியாய் ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.

அகில இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் என்னும் பெரும் கட்சிக்கு மாற்றாய் அறியப்படும் பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகள் இந்தியா என்னும் பன்முகப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கு சர்வ நிச்சயமாய் ஊறு விளைவிக்க கூடியதுதான். ஆர்.எஸ்.எஸை தனது ஆணிவேராக கொண்டிருக்கும் இந்தக் கட்சியின் அகண்டபாரதக் கொள்கையும், இந்து நாடு கொள்கையும் ஒரு வேளை இந்தக் கட்சி தேசம் முழுதும் வலுவாய் காலூன்றினால் ஒரு சர்வாகாதிகாரமாகவே தேசம் முழுமைக்கும் அறிமுகம் செய்யப்படும் அபாயமுமிருக்கிறது.

பல சாதி அடிப்படைகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இறக்குமதி செய்த கம்யூனிசம் வேரூன்ற முடியாததற்கு காரணம் வர்க்க போராட்டங்களையும் அதன் கொடுமைகளையும் தாண்டிய நுணுக்கமான மனிதவள சங்கடங்களை அவர்களால் அணுகமுடியாததுதான். அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் பொருளாதர ரீதியான பலவீனங்களையும், அடக்கு முறைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்ல முனைந்த கம்னியூஸ்ட்டுகளுக்கு இன ரீதியான அடக்கு முறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலேயே போனது...

இந்திய தேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தேசம் முழுதும் வியாபித்து நிற்க முடியாத வகையில் போனதற்கு காங்கிரசின் மேம்போக்கான கவர்ச்சிகர கொள்கைகளும், தேச விடுதலைப் போராட்ட அக்மார்க் முத்திரைகளும் காரணமாக இருந்ததால்,  இன்று வரை ஒரு பாமர இந்தியனால் சுதந்திரத்துக்குப் போரடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போனது....

இதுதான் காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச சாணக்கியத்தனம். சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்திய காங்கிரஸ் கொடியில் இராட்டையை எடுத்து விட்டு.... அதில் அசோக சக்கரம் பொருத்தி இந்தியாவின் சுதந்திரக் கொடியாய் அறிவித்த காங்கிரஸ் பெரும் தலைகள் அதே வர்ணத்தில் தனது கட்சியின் கொடியையும் வைத்துக் கொண்டு நடுவில் கைச் சின்னத்தை பொறித்து சாமார்த்தியமாய் தன்னை தேசத்தின் மிகப்பெரிய சக்தியாய் முடிச்சிட்டுக் கொண்டது.

கடந்த 62 வருட இந்திய குடியரசு எதையும் சாதித்து விடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்வீர்களாக; எந்த மாநிலத்துக்கு இடையேயும் சுமூக உறவுகள் கிடையாது. இந்திய தேசியத்தின் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும், பகிர்தலிலும்,  ஒரு நேர்மை கிடையாது என்பதை தொடர்ச்சியாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அயல் மாநிலங்களால் நடக்கும் வஞ்சிப்புக்களின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாடு தன்னில் தன்னிறைவு பெற்று, தன் குடிகளை சுபிட்சமாக்கி, தன் ஆளுமையை தன் தேசம் கடந்து, வெவ்வேறு பிராந்தியங்களில் பணமாகவும், படையாகவும் செலுத்த இயலுமெனில் அதுதான் வல்லரசு நாடு....

சென்னை போன்ற தமிழகத்தின் தலை நகரங்களில் கூட தொடர்ச்சியான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுமையும் மின்சாரப் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தேசத்தில், ஒரு வருடத்தில் மிகையான மாதங்களில் கொளுத்தும் வெயிலைக் கொண்ட ஒரு தேசத்தில் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் இல்லை என்பதை எப்படி எடுத்து கொள்வது என் தேசத்தீரே...?

அதிகப் பொருட்செலவு ஆகும் என்று திட்டங்களை உதறித் தள்ளும் இந்திய ஆளுமை, வேண்டாம் வேண்டாம் என்று அண்டை நாடுகள் சொல்லும் போதும் தங்கள் உதவிகளை அங்கே குவிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்தின் பின்னணி என்ன?

சர்வ நிச்சயமாய் இந்தியா அதிக பணக்கார முதலாளிகளைத் தொழிலதிபர்களாயும், அரசியல் தலைவர்களாயும் கொண்ட, எப்போதும் லஞ்ச லாவண்யங்களையும் நேர்மையற்ற அரசியலையும் கொண்ட தன்னை எப்போதும் மிகைப்படுத்திப் பார்த்துக் கொள்கிற ஒரு வறுமையின் தேசம்தான்...!

சாலை வசதிகள் இல்லாமலும், சுகாதர வசதிகள் இல்லாமலும், சுற்று வட்டாரத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் குறைந்த பட்சம் ஐந்து மைல்கள் தாண்டி செல்ல வேண்டிய அவசியமும், மின்சார வசதிகள் இன்றியும், குடிநீர் வசதிகளின்றியும், ஒருவேளை நெல் சோற்றை சாப்பிடவே வக்கற்ற குடும்பங்களை புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுதான்...

வல்லரசு கோஷத்தோடு இந்திய குடியரசை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம் தோழர்களே....!

கல்வியறிவில் மிகுந்த மாநிலம் என்று இந்தியாவால் அறிவிக்கப்படும் ஒரு மாநிலத்தில் தான் முட்டாள்தனமாக அணை இடிந்து விடும் என்று கூறி போராட்டங்கள் நடத்தி தண்ணீர் தர மறுத்து வெந்நீரை ஊற்றி மனிதர்களைக் கொல்லும் மனிதர்கள் வசிக்கிறார்கள்....

கல்வியறிவு என்று தேசம் கூறும் மனிதர்களின் அறிவின் உயரம் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்,  இது வல்லரசு இந்தியாவா? அல்லது குள்ளரசு இந்தியாவா? என்பதை நீங்கள் விளங்கக்கூடும்....!

அறிவால் முன்னேற முடியாமல் மக்களைக் கிடுக்குப் பிடிபோட்டு இன்னமும் சாதிப் பிரச்சினைகளையும், மதப்பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசம் எப்படி வல்லரசு ஆகும்...?

ஏதோ ஒரு சாதியில் பிறக்கிறான், வளர்கிறான் அதைத் தனது அடையாளமாகக் கொண்டு கூட்டம் கூட்டி ஒரு அமைப்பாகும் போது அதை முற்போக்கு புத்திகள் கொண்டவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காக அண்டிப் பிழைக்கும் போக்கு உள்ள தேசம் எப்படி ஒரு வல்லரசு என்று கூறுவீர்கள்...?

சிறு சிறு நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற பின்னரும் நாம் அணு குண்டு வெடித்ததையும், ஏவுகணைகள் செய்ததையும் வைத்துக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருப்பதின் பின்னணியில் இருக்கும் அறியாமைச் சாயம் எப்போது என் தேசத்தில் வெளுக்கும்....?

அன்புத் தோழர்களே...இந்தியா சுதந்திரம் அடைந்தது.....இந்தியா குடியரசு ஆனது....கூடவே இங்கே மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டு ஆடம்பரமாய் வாழக்கூடிய ஒரு சமூக அரசியலும் புகுத்தபட்டது.....

சாமானியன், சாமானியனாகவே இன்னமும் சாணம் மொழுகிய வீட்டில் மழைக்கு ஒழுகுமே என்று கூரை மேய்ந்து கொண்டிருக்கிறான் வல்லரசு நாட்டின் ஒரு குடிமகன் என்ற கனவோடு..!

இதுதான் இந்திய தேசியம்...! இதுதான் இந்தியா....!

இந்தியாவை ஆளும் காங்கிரசும், மாற்றாக கருதப்படும் பாரதிய ஜனதாவையும் கடந்து மூன்றாவதாய் ஒரு ஆளுமை நிறைந்த சக்தி புத்துணர்ச்சியோடு வரவேண்டியது தான் தற்போது இந்த தேசத்தின் தேவை.....

இது நிகழவில்லையெனில்...

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துயரப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து அதிகார அரசியலுக்கும், முதாலாலித்துவ மூளைகளுக்கும் சமாதி கட்ட வெகுண்டெழுந்து தன்னிச்சையாக போராடத் துவங்குவார்கள் என்பது சர்வ நிச்சயம்.....!

அப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...!



            கழுகு வாசகர்களுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, January 25, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (25.1.2012)




கனகுவும் ரெங்குவும் பேசிக்கொண்டு வந்தனர்.... என்னய்யா ரெங்கு இப்படி பயந்து பதுங்குற..?! என்ன உன் வீட்டு அம்மா வராங்களா..?? 

ரெங்கு : அட நீ வேறய்யா.. அங்க பாரு ஒரு வெறிநாய் போகுது... அதான். 

கனகு : அதுக்கு நீ ஏன்யா பயப்படுற..?! அதுங்க தானே பயப்படனும்..??

ரெங்கு : என்ன ஜோக்கா..?? போன வருஷம் வெறி நாய் கடிச்சு இருபதாயிரம் பேர் இறந்து போய் இருக்காங்களாம்..!! அப்போ பயப்படாம இருக்க முடியுமா..?? 

கனகு : அட கொடுமையே.. இது வேறயா... நாயை கொன்னா அனிமல் பிளானட்ல இருந்து வருவாங்க... நாம என்னதாய்யா பண்றது ... சரி.. சரி.. நீ என்ன கடிக்காம வா..

ரெங்கு : ஹெல்மட் போடலேன்னா போலீஸ் பிடிக்குது... போட்டா நாய் பிடிக்குது. என்ன கொடுமை கனகு..?! இதுல வேற அபராத தொகைய வேற உயர்த்திட்டாங்களாம். 

கனகு : அட பாவிங்களா..போலீஸ்க்கு கிம்பளம் உயர்வு வேறயா... இதுக்குதான் நான் பைக் யூஸ் பண்றதே இல்ல.. 
என்னாதான் அபராத தொகைய ஏற்றினாலும் அரசு கஜானா ரொம்ப போறது இல்ல.. போலீஸ் பாக்கெட் தான் ரொம்ப போகுது... ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வு. இன்னொரு பக்கம் இது. இதுக்குதான் பைக்கை தூக்கி போட்டுட்டேன்.

ரெங்கு : நீ பொழைக்க தெரிஞ்ச ஆளுய்யா... பொழைக்க வழி தெரிஞ்சா பக்கத்து நாட்டுகாரன்கிட்ட எல்லாம் அடிவாங்குவோமா...?

கனகு : என்னய்யா சொல்ற..?! யாரு உன்ன அடிச்சா..?? 

ரெங்கு : என்ன யாரும் அடிக்கலப்பா... ராமேஸ்வரம் மீனவர்களை தான் தினம் அடிக்குறாங்களே.. இலங்கை ராணுவம் ஒரு பக்கம் அடிக்குது. இன்னொரு பக்கம் இலங்கை மீனவர்கள் அடிக்குறாங்க... இது தான்யா வீட்டையும் கொடுத்துட்டு அடியும் வாங்குறது..

கனகு : நம்ம நாட்டுக்கு வர அமெரிக்காகாரனை அடிச்சா அமெரிக்கா சும்மா இருக்குமா..?! அவன் விடுற சவுண்ட்ல இவிங்க போய் காலுல விழுவாங்க... அதான்யா வல்லரசு நாடு. இவங்களால ஒரு சின்ன நாடு அதையே கட்டுப்படுத்த முடியல... அப்பறம் எங்க இருந்துய்யா உலகத்தையே கட்டுப்படுத்த போறாங்க...?!  இந்தியன்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்குய்யா..

ரெங்கு : என்னய்யா கனகு இப்படி டென்சன் ஆகுற..?! டீய குடிய்யா.. அண்ணாச்சி.. சூடா இருக்கற கனகுக்கு சூடா ஒரு டீ போடுங்க..

கனகு : பின்ன என்னய்யா மீன் பிடிக்குற வேலையே செத்து செத்து பொழைக்கற வேலை. இதுல இவனுங்க வேற சுட்டு கொன்னு போடுறானுங்க... நம்ம ஆளுங்க அதுக்கு சன்மானமா நம்ம வரி பணத்தையே எடுத்து அவனுங்க கிட்ட கொடுக்குறானுங்க.. என்னைக்கு மக்கள் சூடாக போறாங்களோ அப்போ இருக்குய்யா இவங்களுக்கு... 

ரெங்கு : நீ வேறயா.. மக்கள் புரட்சி எங்க நடக்குது..?! செருப்பு புரட்சி தான் நடந்திட்டு இருக்கு நாட்டுல..

கனகு : இப்போ யாரு அடி வாங்கினது..  செருப்பு விக்குற விலைக்கு இப்படியா பண்ணுவாங்க...?!

ரெங்கு : யாரு... நம்ம ராகுல் தான் அடிவாங்கினார்..இதுல செருப்பால அடிச்சா எல்லாம் பயந்துட மாட்டாராம்.சொல்றார்..

கனகு : ஆமா.. ஆமா.. அவர் எப்படி பயப்படுவார்..?! அவங்க தான் பரம்பர பரம்பரையா அடிவாங்குறாங்களே... பயம் இருக்குமா என்ன..!! இனி இவரு சொல்லிட்டு திரிவாரு நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்னு...

ரெங்கு : அட இதுல அவங்களுக்கு பரம்பரை எக்ஸ்பிரியன்ஸ் இருக்கா...?! இதுல குரளி வித்தை காட்டுற மாதிரி அய்யா வாங்க அம்மா வாங்கன்னு வேற கூப்புடுறாங்கய்யா இந்த கட்சிகாரங்க..  

கனகு :  அட என்ன குரளி வித்தை காட்றாங்களா..நான் இப்பயே போய் பாக்குறேன்... யாரை யாருய்யா கூப்பிட்டாங்க.. 

ரெங்கு : ஞானதேசிகன் நம்ம பாரதிராஜாவை காங்கிரஸ்க்கு கூப்பிடுறார்ய்யா...

கனகு : யாருய்யா அது ஞானதேசிகன் அவரு என்ன ராகுல்காந்தியா..?? ஆமா அவருக்கு காங்கிரஸ் கட்சி மேல அவ்வளவு என்ன கோவம்..??

ரெங்கு : யோவ் அவர் தானய்யா தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்.. அவருக்கு என்னய்யா கோவம் இருக்க போகுது அவர்தானய்யா மாநிலதலைவர்.

கனகு : பின்ன இவர் தான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட கூடாதுன்னு பிரச்சாரம் பண்ணார். இவரை கூப்பிடுறாரே அதான் கேக்குறேன்... அதுக்கு பாரதிராஜா என்னய்யா சொல்றார்..?!

ரெங்கு : காமராஜரையே தோற்கடிச்சி இருக்காங்க...அதனால இவருக்கு அரசியல்ன்னா பயமாம்...

கனகு : ஆமா இவர் அப்படியே காமராஜர் போயா போ... ஆமா கள்ளுல அதிகம் கிக் இருக்கா பிராந்தில அதிகம் கிக் இருக்கான்னு பார்க்கலாமா ரெங்கு..?? 

ரெங்கு : இதுல எல்லாம் கிக் இருக்கான்னு எனக்கு தெரியாது ஆனா நான் எட்டி ஒன்னு உதைச்சா அதுல இருக்கும் பார் ஒரு கிக்... அதுவேணுமா..??

கனகு : யோவ் நான் கேட்கலையா கள் இறக்கும் இயக்கம் கேக்குறாங்க.. அதான் ஒரு டெஸ்ட் டிரைவ் போலாம் பார்த்தேன்.. 

ரெங்கு : ஏம்ப்பா நான் தெரியாம தான் கேக்குறேன்.. தென்னைல எல்லாமே வியாபாரம் செய்றாங்க போதிய அளவு வருமானம் வருது. இருந்தாலும் ஏன் இவங்க இந்த கள்ள பிடிச்சு தொங்குறாங்க.. கள்ளு இறக்க அனுமதி கொடுத்தா கள்ளச்சாராயம் சேர்ந்து ஓடும். அப்பறம் விஷசாராயம் குடித்து பலின்னு வரும் தேவையா..

கனகு : யோவ் நிறுத்து நிறுத்து.. அரசுக்கு பெரிய வருமானம் இழப்பு வரும் போல... ஏற்கனவே கஜானா காலியா இருக்கு இதுல அந்த வருமானமும் போய்டும் போலயே.... 

ரெங்கு : கள்ளு குடிச்சா நீ கல்லு தன் உடைக்கணும் ராசா..

கனகு : நான் வரலையா இந்த ஆட்டத்திற்கு... அண்ணாச்சி சீக்கிரம் கள்ளு போடுங்க "சாரி சாரி டீ டீ" 


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Thursday, January 19, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)




பஞ்ச் : 1

தமிழகத்துல ஆட்சி மாற்றம் நடந்ததுக்கு காரணம் நடராசன் ஐயாதானுங்களாமே...?  அவரு மனசு வச்சிதான் கலைஞர் கூட போன வருசம் இருந்து இருப்பாருன்னு நினைக்கிறேன். யாருக்கும் கட்டுப்படாத ஒரு தலிவராம் நடராசரு... ஆனா ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் பயப்புடுவாராம்...ஒண்ணு நம்ம பழ. நெடுமாறன் ஐயா..... ரெண்டாவது அவுரு கல்யாணம் கட்டுன அம்மிணி...

தஞ்சாவூர்ல கொதி கொதின்னு கொதிச்சு இருக்காரு நடராசரு, ரெண்டு உலக்கு அரிசிய போட்ருந்தா கொதிச்ச கொதிப்புல பொங்கி சாப்டு இருக்கலாம் போலருக்கே...! அம்மாவுக்கு பூசாரிங்க எல்லாம் ஒண்ணு கூடி மந்திரிச்ச மந்திரிப்புல லவக்குனு ஒடன் பொறவா சகோதரிய வெளிய அனுப்பிடுச்சு.. இப்போ நடராசன் & கோ தைய தக்க தைய தக்கானு வெறி கொண்ட மாறி குதிக்க ஆரம்பிச்சுடுச்சு...

தானை தலைவர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழகத்தின் தலையெழுத்துதான்.. மாறவே மாட்டேங்குது...? எந்த சாமி குத்தமோ...??!!!!! 
பஞ்ச் : 2
துக்ளக் ஆண்டுவிழாவுல சோ சார் பண்ணியிருக்கிற காமெடிய நினைச்சா சிப்பு சிப்பாதான் வருது...

கையெல்லாம் இரத்தக்கறையோட ஒரு மனுசன் அதை டெட்டாயில் போட்டு கழுவிட்டு, சோப்பு போட்டு கழுவிட்டு அதுல சோத்த அள்ளி எல்லோருக்கும் போட்டு போட்டு, வாரி வழங்கி தன்ன கர்ண பிரபுன்னு காட்டிக்க நினைச்சானாம்....ஆனா அவன் எம்புட்டுதான் உதவி செஞ்சாலும் புத்திசாலியா இருந்தாலும் கொலைகாரப் பயடா இவன் அப்டீங்கறது எப்படி மறந்து போகும்?  இருக்கற கட்சியோட கொள்கை இந்துத்துவான்ற ஒரு கேவலமான மதவாதம்.அப்படி இருக்கையில மோடி நல்லவரா இருக்கட்டும் வல்லவரா இருக்கட்டும், எப்புடி வேணா இருக்கட்டும்...இருக்குற எடம் சாக்கடையாச்சே....அவர பிரதமர் வேட்பாளர் ஆக்கணும்னு சோ அண்ணாச்சி அத்துவானிக்கி ரெக்கமண்டேசன்....

ஒருவேளை மதவாத கட்சின்னு நினைச்சு யாரும் ஆதரவு தெரிவிக்கலேன்னா (அது என்ன ஒருவேளை...அது மதவாத கட்சிதானே சோ....சார்...???!!!!) அப்போ டாக்டர். புரட்சித்தலைவி, அம்மா. செ. செயலலிதாவ இந்திய பிரதமராக்க உதவி செய்யணும்ன்னு அவர் சொல்லியிருக்காரு...

தமிழ்நாட்ல ஏற்கெனவே 3 மணி நேரமா இருந்த மின்வெட்ட இப்போ 5 மணி நேரமா அம்மா மாத்தி சாதனை செஞ்ச மாதிரி, தலைமைச் செயலகத்த ஆஸ்பத்திரியா மாத்துன மாதிரி, லைப்ரேரிய குழந்தைகள் மருத்துவமனையா மாத்த சட்டம் போட்ட மாதிரி....பலப்பல அஜால் குஜால் திட்டங்கள செஞ்சி இந்தியா முழுக்க மாத்தணும்னு சோ சார் ஆசைப்படுறாரு போல....

நடக்க அலுப்பு பட்டுகிட்டு சித்தப்பன் வீட்ல பொண்ணு கேட்டானாம்ன்ற கதையாவுல்ல இருக்கு...???!!!!

பஞ்ச் : 3

எஸ்.எம். கிருஷ்ணாவ அனுப்பி தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய மகா தேசம் ரொம்பவே ஒதவுறதா காட்டிகிட முடிவு பண்ணி ஐயாவ இத்தாலிய தேசிய (இந்திய தேசியம் எல்லாம் போச்சு சாமி..)காங்கிரஸ்  அப்போ அப்போ ஒரு குத்தாட்டம் போடும்...! கிருஷ்ணா இந்தியாவுல இருந்து இலங்கைக்கு போற வரைக்கும் நீயூஸ் புளீச் புளீச்னு ப்ளாஷ் ஆகும்.. 

துரை அங்க போயி எறங்குன உடனே.. ஒண்ணியும் தெரியாது....! ராசபக்சேய சந்திச்சு கைய குலுக்கிகிட்டு பப்பரப்பான்னு சிரிச்சுக்கிட்டு ஒரு போட்டாவ போடுவாய்ங்க பேப்பர்ல...அம்புட்டுதான்...

என்னா தமிழர்களுக்கு வாழ்க்கை கொடுத்தாய்ங்க? எத்தனை வீடு கொடுத்தாய்ங்க? மக்கள் எப்படி இருக்காங்க? ஊரு எப்படி இருக்கு? அங்க இருக்க புள்ளக் குட்டிய எல்லாம் படிக்கிறதுக்கு என்ன ஏற்பாடுன்னு எல்லாம் ஒண்ணியும் சொல்ல மாட்டாய்ங்க.. தமிழர்கள் இருக்குற எடத்துக்கு சர்வதேச பத்திரிக்கையாளர்களயும் உள்ள விடுறது கிடையாது...

இவிங்க நடத்துற கூத்த நாம பாத்துட்டு நல்ல நாடகம்டான்னு உச்சு கொட்டணும்...எல்லாம் காலக் கொடுமை...!

தைரியம் இருந்தா சானல் 4 தொலைகாட்சிய தமிழர்கள் இருக்கும் ஏரியாக்குள்ள விடுவானா இந்த ராஜபக்சே..? அதை ஆதரிக்குமா இந்திய தேசிய (ஹி ஹி ஹி) ஆளும் காங்கிரஸ்...?
பஞ்ச் : 4

இயற்கைய தவிர வேறு யாராலும் கலைஞர் ஐயாவ அசைக்க முடியாது, அந்த ஆண்டவன தவிர வேறு யாராலயும் செயலலிதா அம்மாவ அசைக்க முடியாது, உலகமே எதுத்து நின்னாலும் சோனியா காங்கிரச அசைக்க முடியாது, உயிரே போனாலும் பா.ஜ.க-வ அசைக்க முடியாது, விளையாட்டுக்கு கூட விஜயகாந்த அசைக்க முடியாது....ஏன் இன்னும் சொல்லப் போனா தலை கீழ நின்னாலும் ராமதாஸ் ஐயாவ அசைக்க முடியாது...

இது எல்லாம் ஏன் தெரியுமா..?

எவன் அசைச்சாலும் அசைஞ்சு அசைஞ்சு கொடுத்துட்டு, எல்லா கட்சியிலயும் இருக்குற அயோக்கியத்தனங்கள தங்களோட வசதிக்காகவும் வாழ்க்கை சூழ்நிலைக்காகவும் வசதியா மறந்துட்டு வாழ்க.....ஒழிக கோசம் போடுறானே தொண்டன் அவன் இருக்கறதாலதான்....

ஐயாவும், அம்மாவும் அடிச்ச கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு ரெண்டு கட்சியில இருக்க ஆளுகளுக்கும் தெரியும். தெரிஞ்சே கொடி புடிக்க,கோஷம் போட நீங்க இருக்கும் போது......

எந்த அரசியல்வாதியையும் யாராலையும் அசைக்கவே முடியாதுதான் சாமி...!


பஞ்ச் : 5
  
ஊரை அடிச்சு கொளுத்திப்புட்டு, புண்ணுக்கு மருந்து நாங்க கொடுக்குறோம்னு ஒருத்தன் சொல்றான்னு வச்சுக்கோங்க நாம அதுக்கு நன்றி சொல்வோமா இல்லை ஏண்டா எங்களை நீ அடிச்சன்னு கேப்போமா?

ஈழத்துல இருக்குற தமிழர்கள எல்லாம் கொத்து கொத்தா கொன்னு அழிச்சப்ப கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தா கூட சரி போடா போய்த்தொலைன்னு விட்டுடலாம்...ஆனா அப்படி கொல்றதுக்கு உடந்தையாவும் இருந்துட்டு இப்போ இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு ஒதவும்னு சொல்றவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லங்கறது நமக்குத் தெரியும்....

ஆனா.. தமிழர்களையும் அவனோட புத்தியையும் எவ்ளோ கேவலமா கணிச்சு, முட்டாப்பயலுகளா நினைக்கிறான் பாருங்க..அதுதான் கொடுமையிலும் கொடுமை...!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Sunday, January 15, 2012

பொங்கலோ பொங்கல்...! தமிழர் திருநாள் பற்றிய ஒரு பார்வை.....!




எத்தனையோ பண்டிகைகளை இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாய் கொண்டாடி வந்தாலும் தமிழ்த் தேசத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்னும் தமிழர் திரு நாள் விழா மற்றர் எல்லா விழாக்களையும் விட வித்தியாசமானதுதான்...

மதத்தின் வெளிப்பாடாய், சாதியின் வெளிப்பாடாய், பல்வேறு கடவுளர்களையும், பலதரப்பட்ட மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமாகத்தான் மனிதர்களின் பண்டிகைகள் வடிவமைக்கப்ப்பட்டது, ஆனால் பொங்கல் பண்டிகை என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் கலாச்சார விழாவாக, தொன்மையை விளக்கும் ஒரு ஆத்மார்த்த நிகழ்வாக பாகுபாடுகளை எல்லாம் களைந்தெறிந்து ஒரு இனத்தின் விழாவாய் எப்போதும் மிளிர்கிறது.

விவசாயத்தை சார்ந்த ஒரு இயற்கை வாழ்வினை வாழ்ந்து அதை சிறப்பித்து நன்றி கூறும் ஒரு ஒப்பற்ற நிகழ்வாய் தமிழர்களுக்கு பொங்கல் அமைந்ததோடு மட்டுமில்லாமல் அவனது கலை, வீரம், பண்பாடு எல்லாவற்றையும் ஒன்று சேர உலகத்திற்கே எடுத்தியம்பும் ஒரு அற்புதமான மனித அளாவல் இது. மனிதர்கள் மனிதர்களை நேசிப்பதும், தெய்வங்கள் என்று தத்தம் மதங்கள் போதித்தவற்றை போற்றி புகழ்ந்து கொண்டாடுவதும்தான் உலகத்தின் வழமையான கொண்டாடல்.

சூரியனிலிருந்து தெறித்து விழுந்த இந்த பூமி இறுகி குளிர்ந்து மண்ணாய் மாற்றமடைந்து அந்த மாற்றத்தில் அதாவது மண்ணில் இருந்து இன்று செழித்து வளர்ந்து நிற்கும் பல்வேறு பரிணாம மாற்றங்களின் வெளிப்பாடுதான் மனிதன். மண்ணிலிருந்து வந்த உயிர்கள் எல்லாம் மண்ணைச் சார்ந்து வாழ்ந்து, வெளிச்சம் தரும் சூரிய ஒளியினை சக்தியாகப் பெற்றும் விண்ணிலிருந்து பொழியும் மழை நீரையும், மண்ணிலிருந்து கிடைக்கும் நீரினையும் உட்கொண்டு செழித்து வளர்ந்துதான் இந்த பூமி பல்கிப் பெருகியது.

மண்ணோடு மண்ணாக மனிதன் உறவாடி உழவு செய்து மானுடர்க்கு எல்லாம் உணவு கொடுக்கும் உலகின் ஆதி தொழிலான விவசாயத்தை செய்வதற்கு அவன் சார்ந்திருந்த எல்லா அசையும் அசையா பொருட்களுமேதான் உதவி செய்தன என்ற மிகப்பெரிய நன்நோக்கில் அதை ஒரு நன்று நவிழலாக, உழைத்து, உழைத்து அந்த உழைப்பில் தான் விளைவித்த தானியங்களை எல்லாம் அறுவடை செய்து, அந்த மகிழ்ச்சியை தன் சமூகத்தாரோடு கலந்து கொண்டாட தீர்மானித்த போது....

மனிதர்களைக் கடந்து எப்போதும் ஒளி தந்து தாம் விளைவித்த பயிர் பச்சைகளுக்கு உயிர் கொடுத்து காத்தருளிய அந்த ஆதவனை உயிராய் பாவித்து நன்றி செய்யவும், தனக்கு விவசாயத்தின் போது உதவிய மாடு, ஆடுகளை நெஞ்சார நேசித்து காலமெல்லாம் அவை செய்த விசுவாசத்துக்கு நன்றி சொல்லவும்.....

தன் இனத்தின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஏறு தழுவுதல் என்னும் விழாவின் மூலம் காளைகளை துன்புறுத்தாமல் அவற்றை சீற்றமுடன் வளர்த்து அவற்றினை அருகில் சென்று எந்த வித ஊறும் செய்யாமல் அவற்றின் திமிழினைப் பிடித்து விளையாடும் வீர மாடு பிடித்தலை ஒரு மகிழ்ச்சி விளையாட்டாயும்....அவன் விளையாடிக் களித்து மகிழ்ந்து தான் வாழ்ந்து வளர்ந்த மண் சார்ந்த எல்லா நிகழ்வுகளையும் பெரு விழாவக்கி பார்த்தான்...

தமிழர்களின் கலாச்சார விழாவான பொங்கல் திருவிழா வெறும் (உறவுகள் கூடிக் களிக்கும் ஒரு விழா மட்டுமல்ல அது உணர்வுகளின் சங்கமம். மண்ணை எடுத்து அந்த மண்ணில் பாண்டம் செய்து அந்த பாண்டத்தில் பொங்கல் செய்து அவன் மகிழ்ந்த போது இயற்கையின் முழுச்சுற்றையும் தன் விழாவிற்காக அவன் பயன் படுத்தி முடித்திருந்தான். பஞ்ச பூதங்களும், இயற்கையும், மனிதரும் கால்நடைகளும், சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாய் அகில உலகத்திலேயே தமிழர்களின் பொங்கல் விழா மட்டுமே இருக்க முடியும்.

சிறப்புகளை கைக் கொண்டு விழாவை விழாவாய் நகர்த்தி இதன் மூலம் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலகோர் அறியத்தான் நாம் செய்யவேண்டும். தமிழ்ப் புத்தாண்டாய் இருக்கட்டும் அல்லது தமிழர் திருநாளாய் இருக்கட்டும் அல்லது உழவர் திருநாளாய் இருக்கட்டும்....

எல்லா பெயர் அரசியல்களையும் புறம்தள்ளி விட்டு பொங்கல் என்னும் தமிழர்களின் உணர்வுத் திருநாளை நாம் அனைவரும் ஒற்றுமையாய் சிறப்பாய் கொண்டாடுவோம்....! விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல அது நமது ஆதி பண்பாடு என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்...!
வரப்போகும் காலங்களில் விவசாயம் இன்னமும் செழித்தோங்கி வளர அரசு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்....மிகுதியான இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு......நம் தமிழ் தேசம் செழிக்க வேண்டும்...!

கழுகின் வாசகர்களுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)


Friday, January 13, 2012

ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்வுத் தொடர் iv

 
 
 

வார்த்தைகளினூடே கவனியுங்கள்!!!
 
நம்மில் பலர் பேச்சாலேயே ஏமாந்து போகிறோமே ஏன்? யாரோ ஒருவன் நம் மனம் மகிழ பேசிவிட்டு, நம்மை சுலபமாய் ஏமாற்றி செல்கிறானே ஏன்?

நமக்கு இந்த ஒரு சின்ன இடத்தில் கவனமில்லை, அதாவது, வார்த்தைகளினூடே கவனிக்கும் கவனமில்லை.
எல்லாருக்கும் வார்த்தைகளை கவனிக்க தெரியும்..எத்தனை பேருக்கு வார்த்தைகளுக்கு நடுவில் அந்த மில்லிசெகண்ட் மவுனங்களை, அந்த மவுனங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் புரிந்துகொள்ள தெரியும்?

எனக்கு தெரியும் என்பதற்காக இதை சொல்லவில்லை. எல்லாராலும் முடியக்கூடிய ஒரு சங்கதி என்பதால் இதை உங்களுக்கு மறுஅறிமுகம் செய்துவைக்கிறேன் அவ்வளவுதான்.

எத்தனையோ முறை, நாம் ஒரு நண்பரிடமோ, அல்லது நம் உறவுகளிடமோ, நம் உடன் வேலைசெய்பவர்களிடமோ பேசி இருப்போம்.. ஆனால் இவ்வளவு கூர்மையான கவனம் நம்மிடத்தில் இருக்காது. காரணம், அவர்கள் பேச்சை நாம் கவனிப்பதே குறைவுதான்.அவர்கள் பேசி முடித்ததும், நம் பேச்சை வீசிவிடவே நம் மனம் தயாராய் இருக்கிறதே தவிர, நம் முழுகவனத்தோடு நாம் ஒரு பேச்சை கவனிக்கும் நேரம்  மிக மிக குறைவுதான்.

அப்படி நீங்கள், நின்று நிதானித்து, அவர் பேச்சை உன்னிப்பாக கேட்பவராக இருக்கும்பட்சத்திலேயே உங்களிடம் பேசுபவர் கொஞ்சம் கலக்கமடைவார். இது முதல் கட்டம்.

அடுத்த கட்டம், அவரின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, அவரை முழுதாய் கவனிக்கிறீர்கள் என்று அவருக்கே சுட்டிக்காட்டும்போது, அவருக்குள் தானே நேர்மை பொங்கும்.. இப்போது ஒன்று அவர் உண்மையானவர் என்கிற பட்சத்தில் அவர் உங்களோடு நெருங்கி பழக விரும்புவார், பொய்யானவர் தப்பித்து ஓடவே முயல்வார்.

இப்படி, நீங்கள் வெறுமனே கவனமாய் இருக்கும்பட்சத்திலேயே, உங்களின் நண்பர் யார், உங்களுக்கு ஆகாதவர் யார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

இவைகளை எல்லாம் தாண்டி, மூன்றாவது கட்டம், வார்த்தைகளினூடே கவனித்தல்- இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமில்லை. முதல் இரண்டு கட்டங்கள் உங்களுக்கு நன்கு பழகி இருந்தால், இந்த மூன்றாவது கட்டம் தானே நிகழும். நீங்கள் உங்களோடு பேசுபவரின் Intentions -ஜ சரியாக நீங்கள் புரிந்துகொள்ளலாம். சிலருக்கு தனிமையை போக்க, உங்களோடு பேசுவது உதவியாய் இருக்கும், சிலர் விஷயங்களை கறக்க உங்களோடு பேசிகொண்டிருப்பார்கள், சிலர் உங்களை அவர்களின் பேச்சால் ஈர்த்துவிட உங்களிடம் பேசுவர், வெகு சிலர், அவர்களின் மனகஷ்டங்களை சொல்ல உங்களிடம் பேசுவர், லட்சத்தில் ஒருவர், உங்களுடைய வளர்ச்சிக்காக பேசிக்கொண்டிருப்பார்...

இப்படி, நீங்கள் வார்த்தைகளினூடே கவனிக்கும்போது, அடுத்த நபரின் Intentions(சீனா அய்யா தமிழர்த்தம் வேணும்) நமக்கு எளிதில் புரிபடும். அப்போது, நாம் சொல்லவேண்டியவற்றை மட்டும், சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லி, வாழ்வை செம்மையாக நடத்தி செல்ல முடியும் என்பது என் கருத்து.

அப்புறம், உடனே கண்ணை சார்ப்பாகிகிட்டு, சீரியஸா முகத்தை வெச்சிகிட்டு, வெறிச்சு பார்த்துகிட்டு இருக்காதீங்க.. வெளியில் முகம் சாந்தமாய் தெளிவாக இருக்கட்டும், உள்ளே கவனம் கூர்மையாய் இருந்தால் போதும்..Hahhaha!...இது வெறுமனே எனது சிந்தனைகள் தான்..உங்களுக்கு உதவுமென்றால் எடுத்துகொள்ளுங்கள்..இல்லையேல் வேண்டாம்..


 
ழுகிற்காக  
உங்கள் ரங்கா



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)
 
 

Thursday, January 12, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)



பஞ்ச் :1

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாய் அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான வன்முறையை தூத்துக்குடி நகரம் சந்தித்து இருக்கிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் எந்த நியாயத்திற்கு வந்தாலும் அது தவறுதான்.

தனது தலைவர் கொல்லப்பட்டதற்கு தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பிடித்து அடிப்பதும், கடைகளை கொளுத்துவதும், அலுவலகங்களை அடித்து நொறுக்குவதும் எப்படி தீர்வாகும்? மிக மிக நுண்ணிய உணர்வுகளை தூண்டி விடக்கூடிய பிரச்சினைதான் சாதிப் பிரச்சினை...

என் நியாயம் உன் நியாயம் என்று பேசுவதை விட்டு விட்டு....மனிதநேயத்தோடு மக்கள் வாழ தகுந்த சூழலை அரசு மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் உருவாக்க வேண்டும்..! கொலைவெறியாட்டம் ஆடும் ரவுடிகளை தடுக்க முயலுகையில் துப்பாக்கி சூடு நடத்தும் போலிசாரையும் நாம் தான் திட்டுகிறோம்....சாதாரண முறையில் தடுக்க முயன்றால் போலீசுகாரன் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறான்டா என்றும் கூறுகிறோம்....!

வன்முறையில்லாத சமுதாயத்தை ஒரு அரசால் மட்டும் படைக்க முடியாது...மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
 
பஞ்ச் :2

நக்கீரன் கோவாலுவோட வரலாற எடுத்து பாத்தீங்கன்னா மூணு இல்லை நாலு லைன்ல அது முடிஞ்சு போயிடும். அம்மாவை எதுத்து காரசாரமா எப்பவும் எழுதி அடிவாங்குற மாதிரி கைது பண்ணி உள்ள போற மாதிரி போயி பத்திரிக்கையோட சர்க்குலேசன ஏத்துற வேலைய அம்மா ஆட்சியில தவறாம செய்வாப்ல...,

அப்புறம் வீரப்பன வைச்சு நல்லா காசு பாத்தாப்ல, பாரிஸ்ல பஸ்ல ஏறி தி.நகர்ல எறங்கி ரெங்கநாதன் தெருவல சரவணா ஸ்டோர்ல போயி துணி எடுக்குறது கணக்கா பொசுக்கு பொசுக்குனு இவுரு போயி காட்டுல பேட்டி எடுத்துட்டு வந்தப்ப இந்தியாவோட இறையாண்மையும் போலிஸியும் தெருவுல பலிங்கி வெளையாடிகிட்டு இருந்துச்சு..., அம்மா ஆட்சியில வீரப்பன கொன்னு போட்டதோட நக்கீரனோட பிசினசையும் சேத்தே கொண்டு புடிச்சி...

ஈழத்தமிழர் ஆதரவு போர்வையை போத்திகிட்டு போட்டோ வீடியோன்னு காசு பாத்திகிட்டு  இருந்த கோவாலுக்கு அதுலயும் ஒரு லெவலுக்கு மேல போக முடியலை... ஏன்னா கலைஞர் ஐயாவோட ஆட்சியில வாலு ஆடாம இருந்துச்சுனா ஐயா கடுப்பாயிட்டாருன்னா.. நக்கீரரு ரெண்டு கட்சியையும் பகைச்சுகிட்டு வெளையாட முடியாது...!

சாமியாரு நித்தி வெவகாரத்துல டவுசரு கிழியறதுக்கு முன்னாடி முந்திகிட்டு.. மாட்டுகறி மாமின்னு கவர் ஸ்டோரி போட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தாரு....ஆனா ஆபிச ஒடைச்சு சாணிய கரைச்சு ஊத்தினதோட அம்மா கட்சி ஆளுகளுக்கு சைலண்ட்டா இருக்க ஆர்டர் போட்டுடுச்சு போல....நக்கீரன் கோவாலு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டு இஞ்சி தின்ன கொரங்காட்டமா இப்போ முழிச்சுகிட்டு இருக்காரு...!

அம்புட்டுதேன் நக்கீரரு கதையிங்க..!

பஞ்ச் :3
 
எதிர்கட்சி தலைவரு பயங்கர கோவமா இருக்காராமுங்க...! ஆமாம் சினிமாவுல கிளிசரின் போட்டிகிட்டு கண்ண செவக்க வச்சிகிட்டு..(அவுருக்கு கண்ணு செவக்க வேற காரணம் இருக்கு..ஹி ஹி ஹி) கையித்த கட்டி தூக்குவானுவோ.. இவரு பறந்து பறந்து காலாலேயே அடிப்பாரு..., வசனகர்த்தா எழுதி கொடுக்கிற டயலாக்க தொண்டைய அனத்திக்கிட்டு பேசி கைதட்டல வாங்கி தேசப்பற்று இருக்குற ஹீரோவா ஆகிப்புட்டாரு...

அரசியல் என்ன அம்புட்டு ஈசியாங்க....... மக்க சினிமாவ பாத்துபுட்டு ஓட்டு போட்டுருச்சுக.. ஆக்சுவலி சார்க்கு இப்போ என்ன செய்யிறதுன்னு ஒண்ணியும் புரியாம...என்ன பேசினாலும் இந்த சனம் நம்மள மதிக்க மாட்டேங்குது.. சினிமாவுல ஹீரோவா இருந்த நம்மள நெசவாழ்க்கையில் ஜீரோவா பாக்குதகளேன்னு ரெண்டு மூணு ரவுண்டு ஆனதுக்கப்புறம் கண்ணு செவக்க டெய்லி கோவப்படுறாராம்...

பொங்கல் கொண்டாட கரும்பு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுக்கப்போறதா வேற சொல்லிக்கிறாய்ங்க.. ஆனா விசயகாந்த் எந்த அரிசி கொடுத்தாலும் சரி அவரு பருப்பு தமிழ்நாட்ல வேகாதுன்றது பாவம் அவருக்கு எப்புடி தெரியும்...?

பஞ்ச் :4

இராமேஷ்வரத்துக்கு சாமி கும்பிட வந்த ராஜபக்சேயோட மைத்துனர தேடிப் போயி, நம்ம தமிழர் கட்சிக்காரவுகளும், மதிமுக..காரவுகளும்....அடிடா.....அவனை ....உதைடா அவனைன்னு ஒரே ரகளையாமுங்க...

ஏய்யா..சோனியா வந்துட்டுப் போனிச்சி, ராகுல் வந்துட்டுப் போனாரு, பிரதமர் ஐயா வந்துட்டு போனாரு...அப்போ எல்லாம் ஏதாச்சும் போராட்டம் பண்ணினா பிரயோசனம் இருக்கு...! ராசபக்சே வீட்டு வேலைக்காரன அடிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது சாமி..? மறுக்கா அவெங்களும் அப்பாவிகள அங்க அடிக்க ஆரம்பிச்சா என்னாகும்..?

ஆளும் காங்கிரஸ் கட்சியோட மந்திரிமாருகளை குறிப்பா சிதம்பரம் ஐயா மாதிரி ஆளுகள தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்க.. பிரோயோசனமா போகும்..

துரோகிய ஊருக்குள்ள வைச்சிகிட்டு.. எதிரி வீட்டு ஓணான பிடிச்சு அடிக்கிறதுதான் இனத்தோட வீரமா என்ன?
 
பஞ்ச் :5 

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா இன்று தொடங்கி வச்சது எல்லாம் சரிதான்....

கஜானால காசு இல்லாம அல்ரெடி விலைவாசிய ஏத்தி எங்க குரல்வளைய நெறி நெறின்னு நெறிச்சுக்கிட்டு இருக்கையில இப்படி  விரிவான திட்டம், அபாரமான திட்டம்னு எதுக்கு காச கண்ட மேனிக்கு செலவு பண்றாங்க? உங்க தேர்தல் அறிக்கைய நிறைவேத்த எங்க தலையில கைய வச்சு எங்களுக்கே கொடுங்கன்னு அவுங்கள யாரு கேட்டா...?

ச்ச்சும்மா கையில காசு இல்லாத நேரத்துல இது எல்லாம் தேவை தானுங்களா அம்மா?

#நாடு நமது வீடு..#


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes