எத்தனையோ பதிவர் குழுமங்கள் இந்த பதிவுலகில் பரவிக் கிடக்கின்றன, சமூக சேவை செய்யும் அமைப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன, தனித்தனி கட்சிகளைச் சார்ந்த அரசியல் விற்பன்னர்கள் தங்கள் கட்சிகளை வரிந்து கட்டி முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், வலைத்தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தொடர்பு தளங்களிலும் நல்லவர்கள் கூடி நாட்டுக்கு நன்மை செய்ய மல்லுகட்டிக் கொண்டிருக்கின்றனர்....,
இதோ எம் மக்களே.... உங்களின் சமூக சேவை வேட்கைக்கும், பொது நலத்திற்கும் ஒரு அரியவாய்ப்பு....! எழுத்துகளில் மட்டுமே வானத்தை நாம் எட்டிப்பிடிக்க முயலுகிறோம் என்று குற்றம் சாட்டுபவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிய கழுகு உங்களுக்கு ஒரு சமகால பிரச்சினையை அடையாளம் காட்டி உங்களோடு சேர்ந்தே சிறகடிக்க இருக்கின்றது.
நமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பாகங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.
தங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப்பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
அரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.
தமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே! அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.
புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.
இதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு, இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.
ஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முதல் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.
தனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர் தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....
இருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
அ) ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....
ஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து போய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா?
இ ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.
ஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.
உ) புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.
இப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...
ஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள், புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.
தமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது.
அந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..
நமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.
எந்த மொழியில் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.
இணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......
குறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....
எம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....!
ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;
ஞானாலயாவிற்கு பொருளதவி செய்ய;
வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: 000112
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
மேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்கவும் உத்தேசித்துள்ளோம்.
" எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு "
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
பின்குறிப்பு: இந்த பதிவு அனேகம் பேரை சென்றடைய இதை பிரதியிட்டுக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் முழு சுதந்திரம் உள்ளது.
10 comments:
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
முனநூலில் இத்தகவலினைப் பகிர்ந்துள்ளேன்.
நன்றிகள் பல.
பலருக்கு இது பயன்படட்டும்.
GOOD EFFORT!!!
kazhuku always supports good things....
GREAT!!!
Keep it up!!!
மிகப்பயனுள்ள நல்லதொரு பதிவு இது... தமிழ் உலகம் கொடுத்திட்ட பல நல்ல நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணி இங்குள்ள அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து அதற்காக தன்னை அர்பணித்து கொண்ட திரு.கிருஷ்ண மூர்த்தி ஜயாவின் இந்த எண்ணத்தை வணங்கி முடிந்தவரை இப்பதிவை பலருக்கு பகிர்வதின் மூலம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வந்து சேர்ந்திடட்டும் என்று உவகையோடு இந்த செய்தியைப் பகிர்வதில் பெருமையடைகின்றேன்...............
நல்ல தொருசெய்தி தந்த தங்களுக்கு மி்க்க நன்றி!
திரு.கிருஷ்ண மூர்த்தி ஜயாவின்
பணிசிறக்க அனைவரும் உதவ, இதை
முதற்கண் அனைவரும் அறியுமாறு
செய்வோம்!
புலவர் சா இராமாநுசம்
அன்பர்களே !
நல்லதொரு செயல் - நலமே விளைக ! இக்கட்ட்ரையினை முக நூலில் பகிர்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
*நீங்களும் ரீ ஷேர் செய்து இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்! திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி- திரு பா. கிருஷ்ணமூர்த்தி, ஒரு தம்பதியாக ஞாழ்னலையா என்ற அற்புதமான புத்தக சேகரத்தை சாதித்துக் கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றி வருகிறார்கள்! நாமும் ஒரு கை கொடுத்தால், வருகிற தலைமுறையினருக்கும் பயன்படுகிற விதத்தில் இந்தப் பொக்கிஷத்தை காப்பாற்ற முடியுமே!*
மிகவும் பயனுள்ள தகவல் .. நிச்சயம் என்னால் ஆன உதவிகளை தாராளமாக செய்வேன் ... ! இன்னபிறரிடமும் எடுத்துரைப்பேன்
நல்ல முயற்சி., வாழ்த்துக்கள்.!
நல்லதொரு முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நன்றி.
Sirs good effort .We will also share with that line of duties with some of our friends.VAZHUKKAL.by DK
Post a Comment