Friday, August 17, 2012

சமூக பிரச்சினைகளும் இணைய அட்டைக் கத்திகளும்,...!

வாழ்க்கையின் தடம் எங்கே ஆரம்பித்தது..? எங்கே செல்கிறது...? என்ற பிரஞைகள் அற்றுப் போய் வயிற்றுப் பிழைப்புக்காய் தினமும் அலாரம் வைத்து எழுந்து, அலுத்துக்கொண்டு உடல்வலியோடு படுக்கையில் சரியும் கோடாணு கோடி மக்களில் மிகையானவர்களுக்கு அன்றாடம் கணிணியைத் தட்டி பார்க்கும் வாய்ப்போ, இணையத்தில் காலம் மறந்து அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு தத்தமது மேதாவித் தனத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்போ கிடையாது.

தன் முனைப்புக்களைத் தீட்டிக் கொள்ளும் களமாய்ப இன்று ஒரு கோர வடிவம் எடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் இணையப் பெருவெளியில் விர்ச்சுவல் மனிதர்கள் அரசியல் பேசுகிறார்கள், சமூக நலம் பேசுகிறார்கள், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் தயிர் கடையும் மத்தை வைத்துக் கடைந்து அங்கே ஜனநாயக வெண்ணையையும் கடைந்தெடுக்கிறார்கள். மதவாதிகள் மூச்சிறைக்க பிரச்சாரம் செய்கிறார்க்ள், சாதிகளின் பெயர் சொல்லி ஏதோ ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் படம் போட்டு, அவர் என் சாதி என்று வெட்கமில்லாமல் பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள், தட்டச்சுக்களிள் அரிவாள் தூக்கும் வீரர்களும், வார்த்தைகளை தடம் புரட்டி வாசிப்பவனின் மனோநிலையைப் புரட்டிப் போடும் துர்வார்த்தை விற்பன்னர்களும் அணிவகுத்து நிற்கின்றனர்....

ஆமாம்.. இங்கே நிரம்ப, நிரம்ப பதிவர்கள் இருக்கிறார்கள், கருத்துக்களை பதிந்து, பதிந்து கையொடிந்து போகாத குறையாய்  தட்டச்சு  தாராளமாய் தங்களின் நேரம் போக்குகையில் மறக்காமல் தங்கள் அறைகளின் ஏ.சி சரியாய் வேலை செய்கிறதா என்றும் சரி பார்த்துக் கொள்கிறார்கள்.

எங்களுக்கெல்லாம் சமூகப் பிரஞை இருக்கிறது.... நாங்கள் விழிப்புணர்வு செய்கிறோம் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம்  இப்போது எங்களிடம் சலித்துப் போன சாம்பாராய் துர்நாற்றம் வீசுகிறது. எதார்த்தம் சட்டை காலரை பிடித்து சுடுவெயிலில் முகம் காட்டி, பிளாட் பார்ம் ஓரத்தில் கசங்கிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், தெருவோரம் பூ விற்கும் அக்காவின் ஏழ்மையினையும், கோவிலடியில் பிச்சை எடுக்கும் அழுக்குச் சட்டைப் பிள்ளைகளையும், காலையிலிருந்து நள்ளிரவு வரை ஷேர் ஆட்டோ ஓட்டும் அண்ணன்களின் வியர்வைத் துளியில் படிந்திருக்கும் சோகங்களையும், கரடு முரடான ஒட்டுப் போட்ட பிச்சைக்காரனின் உடையாய் விரிந்து கிடக்கும் நகரத்து சாலைகளையும், அந்த சாலைகளில் இன்னமும் முழங்கால் அளவு தேங்கிக் கிடக்கும் மழை நீரையும், கணுக்கால் அளவு தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரையும், சுருங்கிப் போய் தெருக்குத் தெரு வைக்கோல் பொம்மைகளாய் அதிகாரத்தை பிரயோகம் செய்தால் எந்த கரை வேட்டி வந்து நொந்து போன வாழ்க்கையை இன்னமும் பிய்ந்து போக வைக்குமோ  என்று பயந்த படியே காவல் காக்கிறேன் பேர்வழி என்று வலம் வரும் காவலர்களையும்.....

ஜனநாயகத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர்களாக காட்டிக் கொண்டும், தங்களை எல்லாம் பேரரசர்களாகக் கருதிக் கொண்டும் தமிழகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவத்தை ஆயுதமாக்கி கையில் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டும் அரசியல்வாதிகளையும், கோவிலுக்குள் அதிகாரிகள் என்ற பெயரில் மக்களை அடக்குமுறை செய்து கையூட்டுப் பெற்று கடவுளை சொடுக்குப் போட்டு வரச்சொல்லி தரிசனம் கொடுக்கச் சொல்லும் மனிதர்களையும் பார்க்கும் போது....

இணையத்தில்  பொழுது போகாமல் உலகம் பேசும் வேடிக்கை மனிதர்களிடம் நாமும் நேர விரையம் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றத்தான் செய்கிறது. இரு பெரும் கட்சிகளை பற்றிப் பேசியும், ஈழத்தின் சோகத்தினை பேசியும் மேதாவிகள் உலகம் புள்ளி விபரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கையில்தான் தமிழகத்து தமிழனும், ஈழத்து தமிழனும் வயிற்றில் அமிலம் சுரக்க அடுத்த வேளை உணவைப் சுபிட்சமாய் பெறுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அரசியல் பகடிகளையும், அம்மாவின் ஆட்சியையும், டெசோ மாநாடுகளை பற்றியும்  சராசரி மனிதர்களுக்கு யாதொரு கவலையும் கிடையாது என்றும் சொல்லலாம் அது பற்றிய விபரங்கள் தேவையில்லை என்றே யாரும் பேசுவது கூட கிடையாது என்றும் சொல்லலாம். அரசியல் செய்ய ஒரு கூட்டம் அவர்கள் நம்மை ஆளவும் செய்வார்கள். பொழுது போக்குக்காய் சினிமா எடுக்க ஒரு கூட்டம் இவர்கள் அரசியல் செய்யவும் செய்வார்கள், என்று சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலைகளை அறுத்தெறியத் தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்து பணம் சம்பாரித்து நாமும் இன்ஸ்டால்மென்டில் ஒரு  கார் வாங்கி மெளண்ட் ரோட்டில் ஓட்டி சென்று விட வேண்டும் என்ற ஆவலில் தலை தெறிக்க  நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

சமூக அவலங்களைப் பற்றி இணையத்தில் பேசி பிரயோசனம் இல்லை. ஏனென்றால் இணைய வெளியில் இருப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் யாதொரு தொடர்பும் பெரும்பாலும் இல்லை. ஒரு வேளை அரசியல் செய்வதற்காய் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்றாலும் ஆத்மார்த்த தொடர்புகள் அறவே இல்லை என்பதை இந்தக் கட்டுரை அறுதியிட்டுக் கூறுகிறது. விதி விலக்காய் எல்லா இடத்திலும்  மனிதர்கள் இருக்கலாம் என்பது போல ஆத்மார்த்த மனிதர்கள் இங்கேயும் இருக்கலாம் என்ற கூற்றினையும் உறுதியாய் இந்தக் கட்டுரை நம்புகிறது.

இனி என்ன.....

நாம் பேசப் போகும் சமூக விழிப்புணர்வு என்பது.....முதலில் இணையத்தில் முறையற்று முழங்கிக் கொண்டிருக்கும் சமூக விரோத ஓநாய்களின் குரல்வளைகளை கவ்விப் பிடித்து இரத்தம் குடிப்பதை போன்றுதான் இருக்கும்....

இங்கே ஓராயிரம் விசயங்களை கேளிக்கையாக நாம் பேசலாம் ஆனால் ஒரு முரண்பட்ட நச்சு கொடும் விதை முளைத்து அது இணையத்தைக் கையாளும் அடுத்த தலை முறைக்கு தவறான பாதையைக் காட்டி விடக் கூடாது....

தொடர்ந்து சிறகடிப்போம்...!


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

9 comments:

கவி அழகன் said...

Unkal samuka akkaraikkum 100 vikitha arpanippukkum vaalthukkal

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//நாம் பேசப் போகும் சமூக விழிப்புணர்வு என்பது.....முதலில் இணையத்தில் முறையற்று முழங்கிக் கொண்டிருக்கும் சமூக விரோத ஓநாய்களின் குரல்வளைகளை கவ்விப் பிடித்து இரத்தம் குடிப்பதை போன்றுதான் இருக்கும்....

//

அப்படி என்றால் நியைய ஓநாய்களை வேட்டை ஆடவேண்டி இருக்குமே ...

Kiruththikan Yogaraja said...

நல்ல பதிவு எல்லாம் சதங்க் என்று ஆணி அறைந்தால்போல் உள்ளது//நாம் பேசப் போகும் சமூக விழிப்புணர்வு என்பது.// ஆனால் நீங்களும் அதே வலையில் சிக்கிக்கொண்டுவிட்டீர்களே...

நிலவைத் தொலைத்த வானம் said...

தங்கள் கருத்தும் அந்த இணையத்தின் மூலமே வெளிப்பட்டுள்ளது, எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் புரட்சிக்கு இணையமும் உதவி செய்துள்ளது

வீடு சுரேஸ்குமார் said...

சமூகம் என்பது கடல் அதன் ஒரு துளி! இணையம்! சமூகத்தின் சாக்கடைகளும், சாதி,மதம், என்கிற பெயரில் சிறு துளியில் கலந்து இருக்கும்.

அதை நாம் நம் பகுத்தறிவு மூலம் பிரித்து பகுப்பதே நல்லது.
ஆனால் வேலையை விட்டுவிட்டு யாரும் இணையத்தில் கும்மியடிப்பதில்லை,குழப்பங்கள் விளைவிப்பதும் இல்லை.
கடுமையான வேலைக்கு நடுவில் சிறு ரிலேக்ஸ் மட்டுமே என்னைப் பொறுத்தவரை, குதிரையின் கடிவாளம் நம் கையில் இருக்கும் வரை
ஆபத்து இல்லை!

முகப்புத்தகத்தில் தன் கட்சியைப் பற்றிய சிந்தனைகளை இடுகைகளாக வெளியிடுவற்கு கனிசமான தொகையும் சிலருக்கு வழங்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா...? அதற்கான விளம்பரத்தை ஒரு கட்சி அலுவலகத்தில் நான் கண்டிருக்கின்றேன்.

முகநூல் நண்பர்கள் ஒரு புராதன கோவிலை புரணமைத்திருக்கின்றார்கள்.

இரத்ததானம் செய்கின்றார்கள்.

இயற்கை காவலர்களுக்கு மரக்கன்றுகளை அளித்திருக்கின்றார்கள்.

ரோட்டில் திரியும் அநாதைகளை, மனநலம் குன்றியவர்களை. காத்து உரியவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்,

இது எல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை..? முதலில் உங்கள் நட்பு வட்டத்தை சோதிக்கவும்.இணையம் என்பதும் சமூகத்தின் பிம்பமே! இந்த கட்டுரையில் ஒரு முகமாக மட்டுமே அந்த பி்ம்பத்தை கண்டிருக்கின்றீர்கள்..! மொத்தத்தில் பூனை கண்ணை மூடிய கதைதான் இந்தக் கட்டுரை!

dheva said...

//ஒரு வேளை அரசியல் செய்வதற்காய் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்றாலும் ஆத்மார்த்த தொடர்புகள் அறவே இல்லை என்பதை இந்தக் கட்டுரை அறுதியிட்டுக் கூறுகிறது. விதி விலக்காய் எல்லா இடத்திலும் மனிதர்கள் இருக்கலாம் என்பது போல ஆத்மார்த்த மனிதர்கள் இங்கேயும் இருக்கலாம் என்ற கூற்றினையும் உறுதியாய் இந்தக் கட்டுரை நம்புகிறது.//

சுரேஷ் @ நீங்கள் கூறியிருப்பதைதான் நாங்களும் கூறியிருக்கிறோம். சரிகள் பாராட்டுதற்குரியவை என்று நாம் உணரும் அதே நேரத்தில் சரியில்லாதவைகளை பற்றி கருத்து பகிர்தலும் நமது சுதந்திரமே....!

கட்டுரை சரிகளின் மீது நின்று தவறுகளை பார்க்கிறது.

நன்றிகள்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//மொத்தத்தில் பூனை கண்ணை மூடிய கதைதான் இந்தக் கட்டுரை!//

ha ..ha ha... well said suresh

முனைவர் பரமசிவம் said...

//சுரேஷ் @ நீங்கள் கூறியிருப்பதைத்தான் நாங்களும் கூறியிருக்கிறோம்//

தேவா, நீங்கள் சொல்வது சரியென நானும் உணர்கிறேன்.

பேசுவதும் எழுதுவதுமெ பெரிய தொண்டு என்று பெருமிதப்பட்டுக் கொள்ளாமல், களத்தில் இறங்கிப் பணி செய்வது அவசியத் தேவை.

இது விழிப்புணர்வூட்டும் பதிவு.

நன்றி தேவா.

பிரவின் குமார் said...

கட்டுரை மிகவும் அருமை...!! சொல்வதை விட செய்வதே சிறந்தது என்பதை தெளிவாக விளக்கும் வகையில் உள்ளது. கழுகு மென்மெலும் உயர பறந்திட எமது வாழ்த்துகளை பதிவு செய்கிறேன். கழுகு பிலாக்கின் 100வது பாலோவர்ஸ் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..!!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes