பதிவுலகம் எனப்படும் மாய உலகில் பல்வேறுபட்ட கருத்துக்களை கூகிள் கொடுத்த இலவச பக்கங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களும் சரி, இலவச பக்கங்களில் இருந்து ஏதோ ஒரு டொமைனுக்குள் தாவிக் குதித்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, ஒட்டு மொத்த இந்த மாயா உலகத்திற்கு என்று மையப்புள்ளி என்று எதுவுமே கிடையாது. கொள்கையின் அடிப்படையில் ஒரு சார்பு கொண்டு நிற்கவும் முடியாது என்பதும் வேதனையான உண்மை.
அ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன். கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கும் மாயங்கள் என்பதை எடுத்துச் சொல்ல முடியாத வகையில் அறிவு ஜீவிகளுக்கென்று ஒரு கொள்கையும் பார்வையும் இருந்து விடத்தான் செய்கின்றன.. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை அறிவுசார் எம் தமிழ் சமூகம் வெகுண்டெழுந்து ஓரணியாய் நின்று தீர்த்து விடமுடியாமல் பல மனோதத்துவ ரீதியான கட்டுப்பாடுகளை நம் முதுகில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே இருக்கிறோம்.
மனிதர்கள் உணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அறியாமை என்பதை அழித்துப் போட அனுபவமும், ஆத்மார்த்த பார்வைகளும், விசால அறிவும் தேவைப்படுகிறது. எழுத வரும் ஒருவன் சுயமாய் சிந்தித்து, பின் உண்மையை உணர்ந்து தனக்குச் சரி என்று படுவதை இங்கே பதிவுகள் என்ற பெயரில் பதிகிறான். அது சில நேரங்களில் சமூக நலத்திற்காயும், பெரும்பாலும் தன் தன்முனைப்பை கூர் தீட்டிக் கொள்ளவும் பயன்பட்டுப் போகிறது.
படைப்பாளி என்பவன் எப்போதும் தான் எப்போதும் படைக்கிறேன் என்ற மமதைகள் கொண்டவன். கட்டுக்களற்ற தன் சுதந்திரத்தை கற்பனைக் குதிரையை விரட்டி விட்டு இலக்குகளின்றி பயணப்பட்டு, விதிமுறைகளைத் தாண்டி வாழக் கற்றுக் கொண்டவன். இவனை அடக்கவும் முடியாது. யாருக்கு கீழேயும் நின்று அவர் கூறுவதை நீ கேட்டுக் கொள் என்று கட்டுப்படுத்தவும் முடியாது. தனக்கு மேலே இருப்பவர் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கிறார் என்றால், இவன் வேறு விதத்தில் சிறப்பானவனாய் இருக்கிறான்.
எழுத்தை மையப்படுத்தி ஒரு அமைப்பை உருவாக்குவதில் இருக்கும் மனோதத்துவ ரீதியிலான சங்கடம் இதுதான்.
எழுத்தை மையப்படுத்தாமல் சமூகத்தை மையப்படுத்தி சமூக அவலங்களை மையப்படுத்தி ஒன்று கூடுதல்தான் தற்போதைய பதிவுலகத்தின் தேவை என்று கழுகு கருதுகிறது. ஒவ்வொரு மனித மூளையும் ஒரு சிறையறை. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பாடத்தைச் சொல்லிச் சென்றிருக்கும். அந்த அனுபவ வீச்சில் கருத்துக்களில் மாறுபாடு வருவது இயல்பாய் இருகையில்.. எழுத்தை மையமாக, அதாவது எழுதுபவனின் சிந்தனையை மையமாக வைத்து, அகத்தை பேசு பொருளாய் வைத்து இணைவது என்பது சாத்தியமே இல்லதா ஒன்று என்றாலும்....நம்மைச் சுற்றி நிகழும் பிரச்சினைகளை அதன் மூலத்தை அறிந்து அது அடுத்த தலைமுறையினரைச் சென்றடையா வண்ணம்....
நேர்மையான சமூகப் பார்வைகள் கொண்டவர்களை அடையாளம் கண்டு இணைதல் என்பது மிக எளிது. என்ன ஒன்று தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி பரண்மேல் போட்டு விட்டு.... பொதுநலம் என்ற ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை நாம் எடுத்து அணியவேண்டும்.
வர்க்க, பேத விளையாட்டுக்களை களைந்தெறிய தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள் இந்திய திருநாட்டில் மண்ணை கவ்வி இருக்கின்றன. இந்தியாவின் பிரச்சினை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமானது மட்டுமல்ல. அதையும் கடந்து மதம், சாதி, இனம் என்று ஏதேதோ விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சாமானியர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச, எழுத அப்படி எழுதுபவர்களோடு கரம் கோர்க்கவே முடியாத பிரபலங்களைக் கொண்டதுதான் இந்த பதிவுலகம் என்னும் போது....
பிரபலம் என்ற வார்த்தை குப்புற விழுந்து மண்ணைக் கவ்வித் தோல்வியடைகிறது. எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது. புதிய பதிவர்களை ஊக்குவித்து ஒரு சிறு பின்னூட்டம் போட்டு ஆதரவளிக்க முடியாத புரையோடிப் போன மனிதர்கள் எல்லாம் நாளைய இந்தியா என்றும் இளையர் முன்னேற்றம் என்றும் பேசுவதைப் பார்த்து....தெருமுனைச் சாக்கடையில் கிடக்கும் பன்றிகளும் ஏசும்.
தெரிந்தவனுக்கும் தெரியாதவனுக்கும் இருக்கும் இடைவெளியை தெரியாதவன் எப்படி நிரப்புவான்? கடந்து போனவனே கை கொடுத்து கூட்டிச் செல்லவேண்டும். தோளோடு தோள் சேர்த்து அரவணைத்து அன்பு மொழியில் வழிகாட்டவேண்டும். என்னை புகழும் பட்சத்தில் எனக்கான உறவுகளாய் தெரியும் கோடி தலைகள், என்னை யாரென்றே கண்டு கொள்ளாத போது எனக்கு கோபம் வருகிறது. அந்த கோபத்தில் அவர்களை எள்ளி நகையாடவும் தோன்றுகிறது.
ஆமாம்....எழுத்தினை மையமாக வைத்து இங்கே யாரும் ஒன்று கூட முடியாது. ஒன்று கூடத் தேவையுமில்லை. தத்தமது செருப்புகளை வாசலில் விட்டுவிட்டுதானே வீடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் செல்வது போல
ஈகோ என்னும் தன்முனைப்பினை கழற்றி விட்டு விட்டு....சமூக மேம்பாடு என்னும் ஒரு நன்மைக்காக கண்டிப்பய் நாம் ஒன்று சேரலாம்.
ஏதேதோ இலக்குகளைக் கடந்து விட்டு சுயமாய் சிந்தித்து நான்கு வரிகள் எழுதலாம் என்று வந்துவிட்டோம்....இங்கே ஊர் கூடி சமூக விழிப்புணர்வுக்காய் தேர் இழுக்கலாம்.... சரியான புரிதலோடு...
ஆனால் என்ன ஒன்று ஊர் கூடவே கூடாது, உணர்வு பெற்று விடக்கூடாது என்று பலரின் தலை கனத்த கனவுகள் அதை எப்படியேனும் தடுக்கவே முயல்கின்றன...
பார்க்கலாம்...காலத்தின் பதில்களை நாமா எழுதுகிறோம்...? பல சூழல்களின் கூட்டுதானே அதனை தீர்மானிக்கிறது.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
15 comments:
எழுத்து நடையும் கருத்துக்களும் அருமை! கழுகு உயரப் பறக்க வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு. நச் சென்றிருக்கிறது
அருமை
//எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது//
உண்மை
ஆமோதிக்கின்றேன் ... !!!
நல்ல கருத்துக்கள்.பலரின் தலை கனத்த கனவுகளை கனவுகளாகவே இருக்கட்டும்...காலத்தின் பதிலுக்கு காத்திருக்கும் தருனத்தில் நமக்கு, இந்த சமூகத்திற்கு தேவையான சூழலை ஏற்படுத்தும் முயற்சியை கழுகு தொடரட்டும்.
நல்ல பல கருத்துக்கள்...
எழுத... எழுத... உயர... உயர... பணிவு, ஆர்வம், இன்னும் பிற தான் வர வேண்டும்...
எழுதும் பதிவுகள் தனக்கு முதலில் உதவ வேண்டும்... பிறகு மற்றவை எல்லாம்...
அண்ணே பதிவுலகத்துல சில பீத்த பதிவர்களை தவிற யாருமே இலக்கிய குஞ்சுகள் இல்லை...... அதானால் சாதாரண உரைநடையில் எழுதினான் படிக்க ஏதுவாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து
புதியவர்களை வரவேற்க வேண்டும்.பலர் வரவேற்கிறார்கள்.என்னைபோன்ற பதிவர்களையும் தயங்காது பாராட்டுகிறார்கள்.முகம் தெரியாத பதிவுலக நண்பர்கள் பலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.விதி விலக்குகளை விலக்குவோம்
வாழ்த்துகள் - அருமை. சிந்திக்கவும் வாய்விட்டுச்சிரிக்கவும் வைத்தது உங்களின் ஆதங்கம்
நல்ல கருத்துக்கள்..
// அ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன்.//
யாரு அப்பாவித்தமிழன்? காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரைக்கும் குவாட்டருக்கும் ஆபுக்கும் எவ்வளவு தேறும், எவனிடம் ஏமாற்றலாம், என்று குடிப்பதைப்பற்றியும், எப்போவோ வெளியாகபோகிற கிறுக்கன் ரஜினி படத்துக்கு இன்றைக்கே தயாராகும் "டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனா" அப்பாவி?
ஊர் கூடி தேர் இழுப்பது என்பது நல்லது தான் ஆனால் பதிவுலக மக்களின் எண்ணகளும் சிந்தனைகளும் விருப்பங்களும் வேறு வேறானவை .உங்களது உள்ள குமுறல்களை கொட்டி விட்டர்கள் ! நல்ல பதிவு .
//அண்ணே பதிவுலகத்துல சில பீத்த பதிவர்களை தவிற யாருமே இலக்கிய குஞ்சுகள் இல்லை...... அதானால் சாதாரண உரைநடையில் எழுதினான் படிக்க ஏதுவாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து//
இதை அப்படியே ஆமோதிக்கிறேன்...என்னை மாதிரி கொஞ்சம் கைநாட்டு புள்ளைக்கு இந்த பதிவை சரியா புரிஞ்சுக்கவே முடியல:-(( கொஞ்சம் எளிய நடையில் எழுதினால் புண்ணியமா போகும்..:-)
சுய தம்பட்டங்களும், உள்குத்துப் பதிவுகளும், ஈகோக்களும் நீங்க..
பதிவுலகம் வாழட்டும்.
Post a Comment