ஒரு நல்ல அரசு என்பது மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், இயன்றவரையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து, விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுக்கச் செய்து காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் காந்திய வழியில் தங்களின் வாழ்வுரிமைக்காக போராட வந்த கூடங்குளம் பகுதி மக்களின் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தி எதேச்சதிகாரமாய் நடந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை வன்மையாகக் கண்டிக்கிறது.
சுமார் 50,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டத்தில் நிறைய பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும், காண முடிந்தது. அணு உலை பற்றிய நுணுக்கமான விசயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை விட அவர்கள் ஒவ்வொருவரின் கண்ணிலும் தெரிந்த உயிர் பயம் நமக்கு கலவரத்தை உண்டு பண்ணியது. தாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் அணு உலை என்ற பெயரில் தங்கள் கண்ணெதிரில் தங்கள் சந்ததியினர் தழைக்க முடியாமல் போக ஒரு கல்லறையை கட்டிக்கொண்டிருக்கிறதே இதை எப்படி தடுக்கப் போகிறோம் என்ற கவலை தெரிந்தது.
அறிவு ஜீவிகளான அணு விஞ்ஞானிகளும், ஆளும் அரசுகளும் இந்த பயத்தையும், கலவரத்தையுமாவது குறைந்த பட்சம் நீக்கிவிட்டு மேற்கொண்டு பணிகளைச் செய்திருக்க வேண்டுமா இல்லையா? அடிப்படை பயத்தை நீக்கக் கூட முடியாத கையாலாகாத அரசுகள் சொல்வதை எப்படி நாம் நம்புவது? அல்லது அவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற பயம் ஒவ்வொரு பாமரனுக்குள்ளும் வருமா...? வராதா?
யுரேனியம் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அணுவிஞ்ஞானம் என்றால் என்ன என்று புரியாது. பாதுகாக்க நீங்கள் செய்து வைத்திருக்கும் முறைகள் ஒரு கணத்தில் பொய்த்துப் போகும் என்பதைக் கூட நாங்கள் விட்டு விடுகிறோம் ஆனால் உலக நாடுகள் எல்லாம் கைவிட்டு விட்ட ஒரு திட்டத்தை, அதுவும் ஜப்பான் போன்ற நாடுகளில் பேரழிவு ஏற்படுத்திய ஒரு விசயத்தை ரஷ்யாவோடு நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக செயல்படுத்த முயல்வது....
எங்களின் உயிரோடு விளையாடும் முயற்சி என்பதை ஏன் நீங்கள் இன்னும் உணரவில்லை....?
40 நிமிடத்தில் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் வந்து சுற்றிப் பார்த்து விட்டு பாதுகாப்பானது என்று கூறிச் செல்கிறார்களே...? அணு பாதுகாப்பானது என்று சொல்லும் விஞ்ஞானி ஒரு விஞ்ஞானிதானா? கணக்குப் பார்த்து கூட்டிக் கழித்து பழக்கப்பட்டுப் போன விஞ்ஞான மூளைகளுக்கு இரத்தமும் சதையுமான உணர்வுள்ள மனிதர்கள் கேட்கும் கேள்விகள் எப்படிப் போய்ச் சேரும்...?
அச்சத்தில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியலார் கொடுத்த பதிலுக்கு மறுபடி கேள்வி கேட்டால்... எங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்.. என்று கூறும் மனிதத் தன்மையற்றவர்கள்தான் எங்களை வழி நடத்தும் தலைவர்களா? பேரிடர் பயிற்சி கொடுக்கிறேன் பேர்வழி என்று அரசு நடத்திய கேலிக் கூத்தினை எங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டோம்..? என்ன எதுவென்று அறியும் முன்னே அவசர அவசரமாய் சென்று விட்ட பயிற்சியாளர்கள் நிரந்தரமாய் கூடங்குளத்தில் குடியேறத் தயாரா?
என்றெல்லாம்.. அப்பாவி கூடங்குளம் பகுதி மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு மேதாவிகள் உலகம் பதில் சொல்லப் போவதில்லை. மக்களின் போராட்டங்களை எல்லாம் அதிகாரவர்க்கம் எப்போதும் அடக்கி ஒடுக்கி மிரட்டி மறுத்து விடலாம் என்று காணும் கனவுகள் எல்லாம் மறு பேச்சில்லாமல் கிழித்து எறியப்படும் என்பதுதான் வரலாறு.
தேர்தலுக்காய் ஓட்டுக் கேட்கப் போகும் போது ஒரு பேச்சு....அரியணையில் ஏறிய பின் ஒரு பேச்சு என்று நேரத்துக்கு நேரம் மாறும் பச்சோந்திகளின் வர்ணங்கள்....அடுத்த தேர்தலில் அழித்து ஒழிக்கப்படும் என்பதை அதிகாரவர்க்கம் மறக்கக் கூடாது.
கூடங்குளத்தில் நடப்பது வெறும் போராட்டம் அல்ல.. அது உயிர்ப்பிரச்சினை...!
வெறுமனே தடியடி நடத்தி அச்சமூட்டி அம்மக்களை கலைத்துவிட்டு போராட்டக்காரகள் தலைமறைவு என்று அரசு சொல்வதை ஊடகங்களில் எழுதி பரப்புரை செய்வதன் மூலம் இந்த பிரச்சினை முடிவடைந்து விடாது. மத்திய மாநில அரசுகள் சரியாய் இந்தப் பிரச்சினையை அணுகி மக்களை அரவணைத்து இதற்கு ஒரு சுமூகமான முடிவு காணாவிட்டால்.....
இந்திய தலைப் பகுதி பற்றி எரிவது போல தென்கோடி இந்திய மூலையிலும் அணைக்கமுடியாத பெரு நெருப்பு பற்றி எரியும் அது இந்தியா என்னும் தேசத்திற்கு பெரும் சவாலாய் அமையும் என்பதும் உறுதி.
துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவ சகோதரரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு...., துப்பாக்கிச் சூட்டினை நடத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களையும் இக்கட்டுரையின் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
1 comments:
//40 நிமிடத்தில் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவர்கள் வந்து சுற்றிப் பார்த்து விட்டு பாதுகாப்பானது என்று கூறிச் செல்கிறார்களே...? அணு பாதுகாப்பானது என்று சொல்லும் விஞ்ஞானி ஒரு விஞ்ஞானிதானா? கணக்குப் பார்த்து கூட்டிக் கழித்து பழக்கப்பட்டுப் போன விஞ்ஞான மூளைகளுக்கு இரத்தமும் சதையுமான உணர்வுள்ள மனிதர்கள் கேட்கும் கேள்விகள் எப்படிப் போய்ச் சேரும்...?//
நல்லா தான் இருக்கு போஸ்ட் படிக்க ..ஆனா நமக்கு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயம் அப்படிதானே ..இதே முல்லை பெரியார் அணை உடையும் என்று கேரளா மக்கள் சொல்லுகிறார்கள் ..ஆனா நாம என்ன சொல்லுறோம் அறிவியலர்கள் ஆராய்ந்து சொல்லுறாங்க இன்னும் 100 வருஷம் ஆனாலும் உடையாதுன்னு கோர்ட் ல சொல்லுறாங்க உடையாதுன்னு சொல்லி தண்ணி வேணும்ன்னு சண்டை ..அதே படிச்சவங்க இது பாதுகாப்பானது சொன்னா அப்துல் கலாம் ஒரு கேன கிறுக்கன் அப்படி தானே ... நல்ல நியாயம் தான் சார் போங்க ...மத்திய அரசு சொன்னாலும் நம்ப மாட்டேங்க ..மாநில அரசு சொன்னாலும் நம்ப மாட்டீங்க கோர்ட் சொன்னாலும் நம்ப மாட்டீங்க ..அமேரிக்கா காரன் என்னைக்கு பணம் கொடுக்குறத நிப்பாட்டுரானோ அப்போ தான் நம்புவாங்க ...
Post a Comment