வயதில் மூத்தவன் என்றாலும் வலைப்பதிவுகள் எழுதுவதில் நான் இளையவன் தானே என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்ட தமிழ்ப் புலவர் ஐயா. இராமாநுசம் அவர்களிடம் இளைய தலைமுறையினர் மட்டும் இன்றி பெரியவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. காலத்தின் போக்கில் கவிஞர்கள் கட்டுகளின்றி உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை புதுக்கவிதைகள் என்ற பெயரிலும், பின் நவீனத்துவ கவிதைகள் என்ற பெயரிலும் நிறையவே எழுதத் தொடங்கிவிட்டாலும் தமிழ் இலக்கண மரபினை உள்ளடக்கி எழுதப்படும் மரபுக் கவிதைகள் எப்போதுமே வாசிக்க சுகமாய்த்தான் இருக்கும்.
மொழியின் வளமையினை எடுத்தியம்பும் மரபுக் கவிதைகளைப் தமிழ் வலையுலகில் படைக்கும் ஐயா இராமநுசம் அவர்கள் பல காரணங்களுக்காகப் போற்றப்படவேண்டியவர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைபபதிவர் திருவிழாவை வெற்றிக்கரமாய் நிகழ்த்திக் காட்டிய மிக முக்கியமானவர்களில் இந்த 81 வயது இளைஞரும் அடக்கம். தமிழ்ப் பதிவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என்ற ஐயாவின் எண்ணத்தை கழுகு மிகப்பெரிய கருத்துப் புரட்சிக்கான விதையாய்ப் பார்க்கிறது. வயதும் அனுபவமும் எப்போதும் இளையரை வழி நடத்தும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த ஐயா இராமானுசம் அவர்களின் பேட்டி இதோ உங்களுக்காக...
1) வலைப்பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது ஐயா?
வலைப்பதிவு என்று, ஒன்று இருப்பதோ,அதுவும் நமக்கென சொந்தமாக வலையொன்று தொடங்கலாம் என்பதோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை நான் அறியாத ஒன்றே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என் உயிரினும் மேலான என் துணைவி, என்னை விட்டு மறைந்த பின் என் வாழ்வேமுற்றிலும் முடங்கிப் போய்விட்டது. என் நிலை கண்டு வருந்திய என் இளைய மகள் என்னை ஆற்றுப் படுத்த,என துயரின் வடிகாலாக, இவ் வலையைத் தொடங்கிக் கொடுத்ததோடு,உரிய பயிற்சியும் தந்தாள்
2) தமிழ் புலவர் படிப்பினை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்..?
1- தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்று
2-இயற்கையாகவே கவிதை எழுதும் ஆற்றல்.
3- அக்காலக் கட்டத்தில் வீறு கொண்டு விளங்கிய திராவிட இயக்கங்களின் தாக்கம்.
4 என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில சூழ்நிலை மாற்றங்கள்.
3) தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்காமலிருக்க காரணம் என்ன?
இதற்குப் பதில் சொல்வது என்றால் நீண்ட கட்டுரையே எழுத வேண்டும் ஒன்றா, இரண்டா பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ் வாழ்க! இந்தி ஒழிக எனப் போராடி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தாய் மொழியாகிய தமிழுக்கு உரிய முக்கியத்தைத் தராமல்,மறைமுகமாக ஆங்கிலமொழி மோகத்திற்கே துணை நின்றதே முக்கிய காரணம். அதன் விளைவாக பட்டித் தொட்டி முதல் மாநகரங்கள் வரை மழலையர் பள்ளி தொடங்கி மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கில மொழியில் போதனா முறைப் பள்ளிகள் புற்றிசல் போல்
வளரத் தொடங்கின.
மேலும் அப்பா, அம்மா என்று குழந்தைகள் அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கருதும் பெற்றோர்களும்
ஊடகங்களான செய்தித் தாள்களும் தொலைக்காட்சி பெட்டிகளும் கூட முக்கிய காரணங்கள் என்று சொன்னால் மிகையல்ல! இன்னும் பல இதுபோல உள!
4) மரபுகளை உடைத்து எழுதப்படும் கவிதைகளை பற்றி தங்கள் கருத்து..?
இது, காலத்தால் ஏற்பட்ட மாற்றம்! இன்று மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்துவிட, புதுக்கவிதை எழுதுவோர் மிகுந்து விட்டனர் நல்ல மரபுக் கவிதைகளை எழுதும் சிலர்கூட புதுக்கவிதை எழுதுவதைக் காண்கிறோம். இது காலத்தின் கட்டாயம் போலும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்பதுதானே இலக்கணம்! எனவே இதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
5) அறிவியலை அறிய தமிழ் மொழி அவ்வளவு வளமானது அல்ல என்று கூறுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?
இக் கூற்று சரியானதல்ல! தமிழ் மொழிபோல் சொல்வளம் மிக்க மொழி வேறு எதுவுமில்லை! நம்முடைய முயற்சியற்ற தன்மை, ஆங்கிலம் தான் ஏற்றது என்ற பெரும்பான்மை மக்களின் குருட்டுத் தனமான எண்ணம் தனித்தமிழ் ஆர்வலர்களின் விட்டுக் கொடுக்காத முரட்டுப் பிடிவாதம்!
இப்படி எத்தனையோ காரணிகளால் ஏற்பட்டுள்ள, நம்முடைய இயலாமைக்குத் தமிழை இவ்வாறு கூறுவதை ஆணித்தரமாக மறுப்பதோடு வன்மையாக கண்டனம் செய்கிறேன்.
6) பதிவுலகம்....உங்கள் பார்வை என்ன?
இன்று பதிவுலகம் மக்களால் கவனிக்கப் படும்ஒன்றாக ஆகிவிட்டது கருத்து சுதந்திரம் தமக்கு இருக்கின்ற காரணத்தினால் பதிவர் தடம் மாறி கண்டபடி எழுதுவதோ, நாகரிக மற்ற வார்த்தைகளை எழுதுவதோ தவிர்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
7) பதிவர் சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதின் காரணம் என்ன?
இதற்கு நான் பதில் சொல்வதை விட ஓராண்டுக்கு முன் நான் எழுதிய பதிவை உரிய பதிலாக இங்கே வெளியிடுகிறேன்.
பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில் அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும் முற்படலாம். அதனால் சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும். இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்
தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் என்று சொல்வார்கள். நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும் தலைவனாகவும் நான் பணியாற்றி உள்ளதால் இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
"உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்" என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப) பெயரிலோ செயல்படலாம்
8) பல அணியாய் இருக்கும் பதிவர் சங்களை விட.. ஒரே சங்கம் தமிழகம் முழுதும் என்று கொண்டு வந்துவிட்டால் அதனால் என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப, நாம் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ள இயலும். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சிக் காரர்களால் நாம் முறியடிக்கப் படுவோம்
9) தங்கள் அனுபவத்திலிருந்து இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், சேவை மனப் பான்மையும் கட்டாயம் தேவை மேலும் நாடு முன்னேற, நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று எண்ண வேண்டுமே தவிர, நாடு நமக்கு என்ன செய்தது என்று, கேட்கக் கூடாது என்பதே!
10) பதிவர் சங்கத்தை வேண்டாம் என்று எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
கட்டுண்டோம்! பொறுத்திருப்போம் காலம் மாறும்.
11) பதிவர் சங்கம் மூலம் என்ன சாதிக்க முடியும்..?? பதிவர் சந்திப்பில் வெறும் கூடி கலைவது மட்டும் போதுமா..?
இதற்குரிய பதிலை மீண்டும் சொல்வது, கூறியது கூறலாகும்.
அடுத்தது நாங்கள் நடத்திய முதல் பதிவர் சந்திப்பே கூடிக்கலையும் ஒன்றாக இல்லையே! கவிதை நூல் வெளியீடு கவியரங்கம் என்றுதானே நடத்தினோம்.
12) தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?
சிலரைப் போல நீங்களும் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்றே கருத வேண்டியுள்ளது.
தற்போது நடந்த பதிவர் சந்திப்பும் அதன் மாபெரும் வெற்றியும் முன்னின்று நடத்திய நாங்களே எதிர் பாராத ஒன்று, ஏதோ மூன்றுபேர் என் இல்லத்தில் கூடி நான்,மதுமது,மின்னல்)திட்டமிட் டுப் போட்ட விதை முளைத்து ஆலமரமாகத் தழைக்கும் என்று கனவிலும் கருத வில்லை. சென்னைப் பித்தனையா அவர்களையும் கலந்து, திட்டமிட்டே நாளைக்குறிப்பிட்டு பதிவர் சந்திப்புக்கு வருக என, எங்கள் வலைகள் வழியாக அழைப்பும் கொடுத்து வருபவர் தங்கள் பெயர்களைப் பதிய வேண்டினோம். காரணம் வருபவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி செய்வதற்காக.
பொதுவாக, பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டினோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.அப்படி ஓர் எண்ணம் எங்களுக்குத் தோன்ற வில்லை என்பதே உண்மை.
மற்றபடி, யாரையும் புறக்கணிக்கவோ, உதாசீனப்படுத்தவோ எள்ளவும் எண்ணவில்லை. மேலும் தங்களின் ஆதங்கம் நியமானது என்றாலும் தங்கள் கழுகு குழுமத்தைச் சார்ந்த, இங்குள்ள, யாரேனும் ஒருவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு இது பற்றி விளக்கியிருந்தால் மிக, சிறப்பாக இருந்திருக்குமே! நாங்களும் வரவேற்று வாழ்த்தியிருப்போமே!
இது, தங்கள் கேள்விக்குரிய பதில் மட்டுமல்ல என், தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்ளும்படி , தங்களையும், தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலரையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
13) பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..? அல்லது ஒன்று சேர்க்க முடியுமா.?
பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..? இவ்வாறு ஆய்வு செய்வதே உள்ள ஒற்றுமைக்கு ஊறு செய்வதாகும் என்பதே என் கருத்தாகும்! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே சனநாயகம். பயிரிட நினைக்கும் விவசாயி களை முளைக்குமே என்று கவலைப்பட இயலுமா?
நம்பிக்கை தானே வாழ்கை! முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கலாமா?! முயல்வோம் வெற்றி பெறுவோம்!
14) வலைப்பூக்களில் எழுத வந்த பின் ஏன் எழுத வந்தோம் என்று எண்ணி இருக்கிறீர்களா?
ஆம்! சில நேரங்களில் நினைத்ததுண்டு .காரணம், உள்ளமல்ல! உடல்! முதுமையின் காரணமாக முகுவலி வரும்போது மட்டுமே இவ்வாறு தோன்றுவதுண்டு
15) பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? குறைகிறதா..?
என்னைப் பொறுத்தவரையில், பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் முற்றிலும் இல்லை என்றே சொல்லவேண்டும்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே பதிவுலகம்தான்!
நான் உண்ணும் உணவோ, உட் கொள்ளும் மருந்தோ காரணமல்ல, என் உயிரினும் இனிய வலையுலக அன்பு உறவுகள் என்பால், (மறுமொழி வாயிலாக) காட்டும் பரிவும், பற்றும், பாசமும்,நேசமும் தான் என்பதை இங்கே உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன்
முடிவாக, என்னைப் பல கேள்விகள் கேட்டு, முடிந்தவரைபதில் சொல்ல வைத்த தங்களை, நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான
வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!
காரணம் எதுவாகினும், உங்களுக்கு உளங்கனிந்த நன்றி! நன்றி!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
23 comments:
தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்று //
இதை படிக்கும்போதே இன்பத் தமிழ் தேனாய் பாயுது அய்யா...!
என்னைப் பொறுத்தவரையில், பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் முற்றிலும் இல்லை என்றே சொல்லவேண்டும்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே பதிவுலகம்தான்!//
ஆஹா அருமையான பதில், அசத்தல், சத்தியமான உண்மைதான் அய்யா...!
வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!//
உங்கள் வழிகாட்டல் எங்களுக்கு வேண்டும் அய்யா அதுதான் என் பதில்...!
கழுகுக்கு மிக்க நன்றி, அய்யாவை பேட்டி கண்டமைக்கு...!
தமிழ் மொழிபோல் சொல்வளம் மிக்க மொழி வேறு எதுவுமில்லை! நம்முடைய முயற்சியற்ற தன்மை, ஆங்கிலம் தான் ஏற்றது என்ற பெரும்பான்மை மக்களின் குருட்டுத் தனமான எண்ணம் தனித்தமிழ் ஆர்வலர்களின் விட்டுக் கொடுக்காத முரட்டுப் பிடிவாதம்!
இப்படி எத்தனையோ காரணிகளால் ஏற்பட்டுள்ள, நம்முடைய இயலாமைக்குத் தமிழை இவ்வாறு கூறுவதை ஆணித்தரமாக மறுப்பதோடு வன்மையாக கண்டனம் செய்கிறேன்.
அருமையான நேர்காணல்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
நன்றி கழுகு. ஐயாவுக்கு வணக்கங்கள்
//
தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?
//
அடுத்த சந்திப்பை பதிவர்கள் சந்திப்பு என்பதை மாற்றி...பதிவுலகில் ஆங்காங்கே இருக்கும் குழுக்களின் சந்திப்பாக மாற்றிவிட்டால் ... கழுகின் இந்தக் குறையைத் தீர்த்துவிடலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து....
குழுவிற்கு ஒருவரை மேடையேற்றி அவரவர்கள் குழுவிற்காக இரண்டு நிடங்கள் விளம்பரம் செய்துகொள்ள வாய்ப்பளிக்கலாம்.
:-)))
புலவர் ஐயாவைப் பேட்டி கண்ட கழுகு குழுமத்திற்கு நன்றி..
புலவர் ஐயாவின் மன ஓட்டமும் கருத்துக்களும நான் அறிந்தவைதான். இங்கே இன்னும விரிவாக அவற்றை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவரைப் பேட்டி கண்டு அழகுற வெளியிட்ட கழுகு குழுமத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
ஜெய் @ சமூக விழிப்புணர்வு தளங்களையும், சமூக உதவிகள் செய்யும் குழுமங்களையும் சக வலைப்பதிவர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்பது வலைப்பதிவர்களின் கடமையாகக் கொள்ளவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு செய்து கருத்திடுபவர்கள் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற தளங்களை நிறைய பேர்களிடம் கொண்டு சேர்ப்பது சமூக பொறுப்புணர்ச்சி என்பதை அறிக;
மற்றபடி விழிப்புணர்வு கருத்துக்களை கூறவேண்டும் என்று நினைக்கும் தனி மனிதனும் சரி அல்லது குழுமங்களாய் இருந்தாலும் சரி அவர்கள் விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய யாதொரு நிர்ப்பந்தமும் கிடையாது என்பதை இங்கே வலுவாய் பதிவு செய்து கொள்கிறேன்.
குழுமங்களில் இருப்பவர்களும் பதிவர்களே...!!!!!
// ஜெய் @ சமூக விழிப்புணர்வு தளங்களையும், சமூக உதவிகள் செய்யும் குழுமங்களையும் சக வலைப்பதிவர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்பது வலைப்பதிவர்களின் கடமையாகக் கொள்ளவேண்டும் //
சமூகக் கடைமை என்னான்றது ஒவ்வொரு பதிவருக்கும் மாறும், எல்லாருக்கும் இதுதான் உங்க கடமைனு பிக்ஸ் பண்ணும் போதுதான் பிரச்சினையே வருது.
//
குழுமங்களாய் இருந்தாலும் சரி அவர்கள் விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய யாதொரு நிர்ப்பந்தமும் கிடையாது என்பதை இங்கே வலுவாய் பதிவு செய்து கொள்கிறேன்.
//
உங்களின் இந்த பதில், புலவரிடம் கேட்டக் கேள்விக்கு முறனாக உள்ளது தேவா.
மனிதம் செழிக்கவேண்டும். எல்லோரும் நலமாய் வாழ வேண்டும். இப்படியான நோக்கத்தை அடைய பலவழிகள் இருக்கலாம். அடிப்படை இதுதானே...? பிறகு எப்படி சமூக நல்நோக்கு மனிதனுக்கு மனிதன் மாறும்?
அடுத்து
விளம்பரம் செய்து கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் தன்னிச்சையாய் இது நிகழ்ந்திருக்கலாமே என்ற ரீதியில் கேட்கப்பட்டதுதான் கேள்வியே அன்றி....
விளம்பரப்படுத்தும் நோக்கமல்ல. பதிவுலகில் விளம்பரம் செய்து கொள்ள வழிகளா இல்லை ஜெய்...?
எங்கே கூட்டம் கூடுகிறது? எதை வாசகன் விரும்புகிறான் என்று உங்களுக்குத் தெரியாதா என் அன்பான பங்ஸ்....!!!!!
@ தேவா :-)))
( ஸ்மைலி போடுறதுக்குள்ள பவர் கட்டாயிடுச்சி ... அதான் லேடு )
//தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?//
நம்ம சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் சூப்பர்ஹிட் படமான சுறாவில் இருந்து ஒரு பாடல் என்று சன் மியூசிக்கில் சொல்லுறமாதிரியே இருக்கு பாஸ் :-)
//முடிவாக, என்னைப் பல கேள்விகள் கேட்டு, முடிந்தவரைபதில் சொல்ல வைத்த தங்களை, நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான
வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!//
ஒரு வேளை சென்னை பதிவர் சந்திப்பிற்க்கு பின்னர் உங்கள் பெயர் பல இடங்களில் பேசபட்டதால் கழுகு உங்களை பேட்டி எடுத்து இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை இந்த பண்பிற்க்காகவே (இதுவே உங்கள் சுயமுகமாக இருக்குமெனில்) உங்களை பேட்டி எடுத்தது தவறில்லை
வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!
ஐயா அவர்களின் பண்பட்ட பேச்சும் மிக எளிய நடைமுறையும். எளிமையும்
காக்கை பிடித்திருப்பது போல கழுகுக்கும் பிடித்திருக்கிறது அது தான்
ஐயா நீங்கள் நீடூடி வாழவேண்டுமையா..!!
நம்ம சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் சூப்பர்ஹிட் படமான சுறாவில் இருந்து ஒரு பாடல் என்று சன் மியூசிக்கில் சொல்லுறமாதிரியே இருக்கு பாஸ் :-)//
பதிவுலகில் இதெல்லாம் சாதாரணம்தானே யுவா.,
தன்னைத்தானே பிரபலம்னு சொல்லிக்கிர்றது நம்மோட கெத்தாச்சே. அத விடமுடியுமா :))
ஐயாவைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆசி வழங்கி வழிநடத்துங்கள் ஐயா!
சென்னை பதிவர்கள் விழாவில், ஐயாவை சந்தித்து இருபது நிமிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்ததற்கே மிகவும் மகிழ்ந்தேன்...
பேட்டி - அவரின் பெருந்தன்மையும், தன்னடக்கத்தையும் சொல்கிறது...
பேட்டி கண்ட கழுகு குழுமத்திற்கு நன்றிகள் பல...
புலவரின் நேர்காணல் சிறப்பாக இருந்த்து.
திராவிட இயக்கங்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று ஒரு புலவர் புலம்புவது வருந்த தக்கது.ஆங்கிலம் உயர்வுக்கு தலையாய காரணங்களில் ஒன்று இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டதுதான்.உலக அளவில் ஆங்கிலம் மதிக்கப்படவேண்டுமென்பது அண்ணாவின் கருத்து.
வில்லவன் கோதை
Iyyavin patilkal panpatta oru maamanitharai ninaivootukirathu.neenkal vazhuthu engalai vaazha vaikkavum.by DK
Post a Comment