Monday, October 29, 2012

சின்மயி விவகாரமும் சமகால இணையச் சூழலும்.....ஒரு கழுகுப் பாய்ச்சல்...!

வலைப்பதிவுகளும், சமூக இணைவு தளங்களும் வருங்காலத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை இந்த சமூகத்தில் விதைக்கவிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய் நம்மைச் சுற்றிலும் நிறைய நிகழ்வுகள் நடைபெறத்தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வலைப்பக்கங்களும், அவற்றின் இணையதள ஆதரவுப் பக்கங்களும் என்று களை கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வலையுலகில்....

தனித்துப் பறக்கும் கழுகுகளின் பயணம் சற்றே சிரமம்தான் என்றாலும்....அந்த சிரமத்தை மிகப்பெரிய வரமாகவே நாம் கருதுகிறோம்.

சின்மயிக்களின் வசீகரக் குரல்கள் சினிமாப் பாடல்களில் நம்மை வசீகரித்தாலும் சமூகம் நோக்கிய அவர்களின் பார்வைகள் கர்ண கொடூரமானவைகள்தான். அதிகார சக்திகள் இணையத்தை ஆக்கிரமித்து சாமானியர்களின் கருத்துக் குரல்வளைகளைப் பிடித்து இரத்தம் குடிக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாலும், கருத்துக்களை பகிர்வதில், விவாதிப்பதில் அப்படியாய் விவாதிப்பவர் உச்ச பட்ச நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டில் யாதொரு மாற்றமும் இல்லை.

நமக்கு எதிரே நம்மோடு யார் வாதிடுகிறார் என்பதைப் பொறுத்து நமது கருத்துப் புலிகள் பாய வேண்டுமே அன்றி சின்மயிக்கள் போன்ற அரசியல், சமூக விசால பார்வைகள் இல்லாத பிள்ளைப் பூச்சிகளின் மீது பாய்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எமது நிலைப்பாட்டினையும் இங்கே வலுவாக பதிய விரும்புகிறோம். வார்த்தைகளின் விளையாட்டை நஞ்சாக்க தெரிந்த சகோதரி சின்மயி கட்டி விட்ட பெருங்கதைகளை எப்படி இணைய புலனாய்வுக் காவல்துறை ஏற்றுக் கொண்டது? சின்மயி போன்ற பிரபலமல்லாதவர்களின் குரல்களுக்கு இதே போன்ற அழுத்தங்களை  கொடுக்குமா என்பது போன்ற கேள்விகள் நம்மை புருவம் உயர்த்த வைக்கின்றன.

பெண்களின் மீது கரிசனம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஆதாரமற்ற பாலியல் புகார்களைக் கையிலெடுத்துக் கொண்டு  சாமானியர்களைச் சிறையிலடைத்து வாழ்வை அழிக்கும் போக்குகள் அதிகாரவர்க்கத்தால் கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்பதையும் நாம் இங்கே உணரவேண்டும்.

சாதியைப் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் என்ன மாதிரியான அறிவின் உயரத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் தெளிவாக உணரும் அதே நேரத்தில் ஒரு மீனவனின் உயிரை அவன் மீன் பிடித்தொழிலோடு தொடர்புபடுத்தி உணர்ச்சியும் வலிகளும் கொண்ட மனித உயிரை துச்சமென எண்ணி அவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்களை முக்காலமும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு வன்மையாகக் கண்டிக்கவும் தக்கது என்பதை இச்சமயத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.

அன்பான தமிழ் உறவுகளே....

இணைய உலகத்தை ஆதிக்க, அதிகார, மதவாத, சாதீய சக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. தவறான கருத்துக்கள் மிகையாக மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகின்றன. சரிகளையும், தவறுகளையும் ஏதோ ஒரு நிலைத்தகவலையோ அல்லது புறணி பேசும் கட்டுரையையோ வைத்து நீங்கள் முடிவு செய்து விடாதீர்கள். இணையம் கடந்து பல ஊடகத்தகவல்களையும் வாசித்து, கேட்டு உண்மைச் செய்தியை அறிய உங்கள் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு பிறகு முடிவுகளை எடுங்கள்.

இங்கே புள்ளி விபரங்கள் கொடுப்பவர் எல்லாம் புத்தர்கள் அல்ல... மாறாக புள்ளி விபரங்களை வைத்துக் கொண்டு அரைக்கிலோ அரிசி கூட நம்மால் வாங்கவும் முடியாது. செய்திகளை வாங்கிக் கொள்வதிலும், வெளியிடுவதிலும் மனசாட்சியோடு நில்லுங்கள். இந்த சமூகம் வெகு விரைவான சீர்கேட்டினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் ஒன்று கூடித்தான் மாற்றியாக வேண்டும். பொதுவெளியில் அநாகரீகமாய் பேசுபவர்களையும், பொறுமை இல்லாதவர்களையும், சட்டையை மடித்துக் விட்டு நாக்கை மடித்துக் கொண்டு கண் உருட்டி கோபம் காட்டும் பொறுமை இல்லாதவர்களையும்...

உல்லாச ஓய்வுகளுக்காய் மலைத் தோட்டங்களில் மாளிகைகளைக் கட்டிக் கொண்டு அங்கே பஞ்சு மெத்தையில், குளிர் காற்றை வாங்கிக் கொண்டு நம்மை, நமது பிள்ளைகளை இருளில், புழுக்கத்தில் தொழிலற்றுப் போகவேண்டும் என்று சபித்தவர்களையும், தத்தமது குடும்பத்திற்காய் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டவர்களையும், இனத்தின் பெயர் சொல்லி பரந்து விரிந்த மானுட சமூகம் நாமென்ற எண்ணத்தை குறுக்கி, நம்மை வெறி கொள்ளச்செய்து ஒன்று கூடச் சொல்பவர்களையும்.... நமக்கு அரசியல் தலைவர்களாக, வழிகாட்டுபவர்களாக கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கே இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

உயிர் பயத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது, தேசத்துரோகிகள் என்ற பட்டம் சுமத்தப்படுகிறது. தண்ணீர் கேட்டு பிச்சைக்காரர்களாய் நாம் கதறினாலும் கொடுக்காத கல் நெஞ்சக்காரர்களை நாம் எனது தேசத்தவன்  என்று கூறிக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருக்கிறது. இங்கே வேசம் போட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர்கள் தங்களின் சேமிப்பு போதவில்லை என்று ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சிகளையும் திருடிக் கொள்கிறார்கள்.

சாதாரண மக்களாகிய நாம் எப்போதும் மயக்கத்தில் இருக்கிறோம்.

விழித்தெழுங்கள் எம் பிள்ளைகளே....!!!!!! கட்டற்ற நமது இணையப் பெருவெளியில் அறிவாயுதம் ஏந்திச் சீறிப்பாயுங்கள்....!!!!! அறநெறிக்கு எதிராய் அகங்காரத்தோடு கருத்துக்களை பரிமாறும் எவராயிருந்தாலும் வார்த்தைகளால் அவர்களின் அகங்காரம் என்னும் குரல்வளையில் எழுத்து வாள்களைப் பாய்ச்சுங்கள்..

முறையற்ற அரசியல் பேசும் யாவராய் இருந்தாலும்..... இது எமது இடம்.. எமது மொழி....நெறியற்ற பண்பாடற்ற கருத்துக்களை இங்கே பேசாதீர்கள்... மேலும்.....பொய்ச்செய்திகளை உங்களின் அதிகாரத்தால், ஆணவத்தால் எம்மக்களிடம் பரப்புரை செய்யாதீர்கள் என்று விழி உருட்டி.....மீசை முறுக்கி.....அளப்பரிய கருத்துக்களால் அதட்டி வெளியேறச் சொல்லுங்கள்...!

தமிழ் வலைப்பதிவுலகமும், சமூக இணைவுத்தளங்களும் எம் பிள்ளைகளுக்கான களங்கள்....!!!!! இங்கே நச்சினை விதைப்பவர்கள் எவராய் இருப்பினும் எம் பிள்ளைகளின் அறிவுச் சுடரில் எரிந்தே போவீர்கள் என்ற எச்சரிக்கையை கற்றறிந்த மூத்தோரே நீவிர் கடை பரப்பிப் போடுங்கள்...! நல்ல அரசியலுக்கு பரப்புரைகள் தேவையில்லை உம்மின் செயல்களின் விளையும் நன்மைகள் பேசும் உம்மின் பெரும்புகழ் பற்றி என்று நயமாய் எடுத்துக் கூறுங்கள்.

சரியில்லாத கருத்துக்களை பதிவு செய்யும் ஆதிக்க சக்திகளை, அதிகார மனிதர்களை அறிவால் விரட்ட இக்கணமே சூளுரை கொள்வோம்....!தெளிவான கற்றறிந்த அறிவுச் சமூகத்தின் பிரதிநிதிகள் நாங்கள் என்று அறிவார்ந்த நமது ஆக்கங்களால் வெளிப்படுத்திக் கொள்வோம்.....என்ற சூளுரையோடு சமகாலச் சூழலுக்கான எச்சரிக்கையாய் இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பித்து தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



10 comments:

Avionics - Bangalore said...

unmaiyana alasal !!!!!!!

ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.

tech news in tamil said...

மிக சரியான அலசல்

விவேக் ரவிச்சந்திரன் said...

வலைபக்கங்களில் அதிகார ஆதிக்கத்திற்கு இந்த அலசல் மிகவும் பொருந்தும். குரல் இறைவன் கொடுத்த வரம், ஆதலால் நாம் இறைவன் ஆகிவிட முடியாது.

saidaiazeez.blogspot.in said...

//அறநெறிக்கு எதிராய் அகங்காரத்தோடு கருத்துக்களை பரிமாறும் எவராயிருந்தாலும் வார்த்தைகளால் அவர்களின் அகங்காரம் என்னும் குரல்வளையில் எழுத்து வாள்களைப் பாய்ச்சுங்கள்//
இப்படி இருவரும் வாள்களை வீசிக்கொண்டதால் தான் பிரச்சனை இவ்வளவு நீண்டது.
ஏனெனில் இங்கு அறநெறி என்பதின் இலக்கணமே மாறிவிட்டது.

நன்னயம் said...

அருமையான ஆழமான அலசல்

நன்னயம் said...

"இன்று பிராமண எதிர்ப்பு என்பது முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் ஜெர்மனியில் இருந்த யூத வெறுப்பை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.- சாரு நிவேதிதா

வாவ்..எனக்கு ஏதோ மெண்டல் அசைலத்துல மாட்டிகிட்ட மாதிரியே இருக்கு...."

இதைவிட ஒரு முட்டாள்தனமான பதிவு இருக்கமுடியாது! இந்த ஆளுக்கு யூத வரலாறு தெரியுமா? இங்க எவ்வளவு பிராமணர்களை கொன்று குவித்து அடுப்புல போட்டு எரித்தோம்? முதலில் வட்டத்தில உண்டியல் குலுக்கி "Auschwitz" போய் யூதர்கள் எப்படி எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதை பார்த்துவிட்டு பேசுங்கள்! உண்டியல் நிரம்பிலனா, எனக்கு ஈமெயில் அனுப்பு, நான் உமக்கு புத்தகமும், புகைப்படமும் அனுப்பி வைக்கிறேன்! "Auschwitz" போய்விட்டு எனக்கு இரண்டு நாள் தூக்கம் வரவில்லை. இத எவனாவது யூதன் கேட்ட உம்மை தூக்கி போட்டு மிதிப்பான்.

நன்றி- மனுஷ்யபுத்திரன்

ராஜ நடராஜன் said...

////"இன்று பிராமண எதிர்ப்பு என்பது முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் ஜெர்மனியில் இருந்த யூத வெறுப்பை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.- சாரு நிவேதிதா//

@EthicalistE! வரைமுறைகளற்ற சொற்பிரயோகங்களை தனது தளத்தில் பதிவு செய்யும்,நித்யானந்த புராண பிதற்றலும்,களம் மாறிப்போன பின் சோமர்சால்ட் வித்தகன் சாரு என்பது இன்னும் பதிவுலகில் விமர்சனங்களாகிக் கொண்டிருந்தாலும் சாரு சொன்னதாக அடைப்பானில் சொல்லப்படும் வார்த்தையின் பிராமண ஒப்பீட்டை தவிர்த்தால் மாற்று பொருள் வருவதாக உணர்கிறேன்.மனுஷ்ய புத்திரன் தவறாக பொருள் படுத்திக்கொண்டதாக உணர்கிறேன்.

// முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் ஜெர்மனியில் இருந்த யூத வெறுப்பை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.//

இந்த சொற்களோடு ரோமன் பொலன்ஸ்கியின் த பியானிஸ்ட் படம் பார்த்தால் சாருவின் பிராமண ஒப்பீடு முட்டாள்தனம் தவிர்த்த சரியான சொற்பதங்கள்.

ஆளும் வர்க்கம் சார்ந்த பதிவு குமுறல் என்பதால் இன்னொன்றையும் சொல்ல நினைக்கின்றேன்.பதிவுலகம் இதய குமுறல்களின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.யதார்த்தங்களாகப் பார்த்தால் ஊழல் குற்றங்களாக இருந்தால் காங்கிரஸில் உயர் பதவியும்,டெல்லி,வளைகுடா ரோடுகளில் ராஜபக்சேவுக்கு கம்பள விரிப்பு சாஸ்திரங்களுமே நிகழ்கின்றன.இணைய தகவல் பரிமாற்றங்கள் ஆளும் வர்க்கத்திற்கு சவாலான ஒன்று என்பதை அரேபிய வசந்தங்களும்,சீனாவின் கருத்துரிமை மறுப்பும்,வாழைப்பழ ஜனநாயகத்தில் மாங்காய் மக்களுக்கான புதிய இணைய சட்ட வரைவுகளும் இனியும் வரும்.முடிந்த வரை ஆற்று
வெள்ளத்தை அருந்திக்கொண்டவர்கள் தாக சாந்தி கொண்ட பாக்கியவான்கள்.

குறும்பன் said...

கருத்துப்படம் வரைந்தவரை மும்பை காவல் துறை கைது செய்ததை நினைக்கவும். (பல இடங்களில் இதை குறிப்பிட மறந்துவிட்டேன்) அவருக்கு வசதியும் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பின் ஆதரவும் இருந்ததால் ஊடகங்களால் அதிகம் பேசப்பட்டு அரசு கைதை விலக்கிக்கொண்டது. அவர் கைதை எதிர்த்து கெஞ்ரிவால் பேசினதும் ஊடகத்தின் பார்வை அவர் கைதை விடாமல் பேசியதில் இருந்தது. இராஜனுக்கு இது எதுவும் இல்லை. அது தான் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு. கேஜ்ரிவால் இவருக்கு ஆதரவு என்பதை விட இங்குள்ள சில தலித் அமைப்புகளோ, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளோ, அமைப்போ ஆதரவு தெரிவித்து இருக்கலாம்.

PUTHIYATHENRAL said...

இணைய உலகத்தை ஆதிக்க, அதிகார, மதவாத, சாதீய சக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. its true

திண்டுக்கல் தனபாலன் said...

/// புள்ளி விபரங்களை வைத்துக் கொண்டு அரைக்கிலோ அரிசி கூட நம்மால் வாங்கவும் முடியாது. ///

மிகச் சரியாகச் சொன்னீர்கள்...

நல்லதொரு அலசலுக்கு நன்றி...
tm12

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes