Saturday, November 23, 2013

வெடிக்கட்டும் ஒரு அரசியல் புரட்சி... !
இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!

சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?

மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?

அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....

ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....

அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...

காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!

மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.

ஏன் இந்தப் பிரமாண்டம்...? யாருக்காக இந்தக் கட்டமைப்பு....?

மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....

இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?

ஆனால்...

என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...

சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?

என்ன செய்யப் போகிறோம் நாம்...?????(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

4 comments:

நிகழ்காலத்தில் சிவா said...

ஆதங்கம் கேள்வியாக புறப்பட்டு இருக்கிறது... வரவேற்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் பதில் சொல்லும்...!

புலவர் இராமாநுசம் said...அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு! மக்களாட்சியின் மாண்பையும் விவரிப்பதோடு, இன்று நாடு இருக்கின்ற அவலத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டத் தக்கது!

vairamani said...

விழித்தேழுவோம். அரசியலில் பங்கு கொள்வோம் . மக்களுக்கு களத்தில் இறங்கி போராடாவிட்டால் நாம் மீண்டு எழ முடியாது என்பதை பிரிய வைப்போம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes