Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, May 23, 2012

தேர்ச்சி என்னும் எமன்........! +2 தேர்வு முடிவுகள் மற்றும் பொதுப்புத்திகளுக்கு ஒரு சவுக்கடி..!


ஒட்டு மொத்த சமூகத்தின் ஓட்டமும் ஏதோ ஒன்றை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எப்போதும் ஒரே திசையை நோக்கி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்வியலில் எதை முதன்மைப்படுத்துகிறோம்? ஏன் முதன்மைப்படுத்துகிறோம் என்று தெரியாமலும், தெரிந்து கொள்ள முயலாமலும் பொது புத்திலிருந்து தீர்மானங்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு கடும் கண்டனங்களைக் கூறிக் கொண்டு இக்கட்டுரையை தொடர்கிறோம்.

நேற்று வெளியான +2 தேர்வு முடிவுகள் என்றில்லை, காலம் காலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதும் மாநில, மாவட்ட, வட்ட, ஊராட்சி, கிராமப்பஞ்சாயத்து என்று தொடங்கி பள்ளிகள் தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுப்பவர்களை சீராட்டியும் பாரட்டியும் புளகாங்கிதம் அடையும் நமது சமூகமும் ஊடகங்களும், மிகைப்பட்ட குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மற்றும் தேர்வு பெற்றிராத மாணக்கர்களை மனோதத்துவ ரீதியான ஒரு தாக்குதலுக்கு உட்படுத்தி சமூகத்தை விட்டு நிரகாரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

999.99% பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்பப்பாடங்களை எடுத்து பயிலச் சொல்வது கிடையாது. எதுவுமே விருப்பமில்லாத பிள்ளைகளை எது அவர்கள் விருப்பம் என்று கண்டறிய நாம் மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் அறிய முற்படுவதுமில்லை. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் மிகைப்பட்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மருத்துவராகவும், பொறியாளாராகவுமே பெரும்பாலும் பார்க்க விரும்புகின்றனர். 

இது சமூகத்தை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி.

தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி அவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு எடுத்து பாருங்கள் வாழ்க்கைத் தரம் என்பது எப்போதும் பள்ளியிலும் கல்லூரியிலும் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்ற உண்மை நமக்கு உரைக்கும்.

+2வில் 650 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற ஒரு மாணவனையோ மாணவியையோ இந்த சமூகம் பார்க்கும் பார்வை இருக்கிறதே அது ஓராயிரம் முறை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டியது. ஒரு மாணவன் நன்றாகப்படிக்கிறான் என்பதற்கு நாம் வைத்திருக்கும் அளவீடு மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் சர்வ சாதரணமானது....

மனப்பாட சக்தி அதிகமாயிருக்கும் மாணக்கர்ளையே நமது கல்விமுறை எப்போதும் முதல் மாணவன் என்று கூறி சிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மனப்பாட சக்தி அதிமாயிருந்தாலும் 95% பாடங்களை தெளிவாக நெட்டுரு போட்டிருக்கும் ஒரு மாணவனுக்கு கிடைத்திருக்கும் கேள்வித்தாளில்  மிச்சமுள்ள 5% பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின் தர்க்க ரீதியாக அவன் தோல்வியைத் தழுவுகிறான். இப்படியான சிக்கலான கல்வி முறையும், சிக்குப் பிடித்த மனிதர்களின் மனோநிலையையும் வைத்துக் கொண்டு குறைந்த  மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், தேர்வு பெறாத மாணவர்களையும் அங்கீகரிக்காமல் போவது மிகப்பெரிய சமூகக் குற்றம்.

கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எல்லாம் தற்போது ஏதோ இயந்திரங்களை தயாரித்து வெளியிட்டு அதன் வெற்றியை பறைசாற்றி மேலும் தங்களைக் கெளவரப்படுத்திக் கொள்ளவோ அல்லது மாணவர்கள் சேர்க்கையின் மூலம் வருமானத்தை பார்க்கவோ தான் முயன்று கொண்டிருக்கின்றன. கல்வி என்பது கற்பிக்கப்படும் போதே ஒரு குறிப்பிட்ட பாடம் ஏன் கற்பிக்கப்படுகிறது? என்றும் அப்படி கற்பதால் வாழ்வியலில் அது எங்கு பயன்படும்? என்றும் எத்தனை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்...?

ட்ரிக்னாமேட்ரியையும், அல்ஜிப்ராவையும் விவாசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறைலிருந்து வரும் பிள்ளை பயிலும் போது அதை ஏன் பயில வேண்டும் என்ற கேள்வி அடிமனதில் ஒளிந்துதான் கிடக்கிறது. நம்மில் மிகைப்பட்டவர்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் எடுத்து படித்த பாடங்கள் நமது விருப்பத்தின் பேரிலா நிகழ்ந்தது நண்பர்களே...?

இல்லையே...!

நமது கல்வி என்பது பெரும்பாலும் நமது சமூகப் பொதுப்புத்தி நமக்குள் கட்டாயமாய் ஏற்றி விட்டது. இங்கே புத்திசாலிகள் என்று கூறிக் கொண்டு முதல் மாணக்கர்களைப் புகழ்ந்து அவர்களைப் பற்றிய செய்தியைப் பேசிப் பேசி மிச்சமுள்ள பிள்ளைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை நாம் விதைக்கிறோமா இல்லையா?

நமது தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவமும், பொறியியலும் பயில முடியாமல் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்குள் செல்லும் மாணவர்களில் 90% சதவீதம் பேர் குற்ற உணர்ச்சிகளோடும் தாழ்வு மனப்பான்மைகளோடுமே செல்கிறார்கள். இதை நமது சமூகம் அறிந்தோ அறியாமலோ குறைவரச் செய்து விடுகிறது.

மனப்பாடத் திறன் அதிகமாயிருப்பது சிறப்பு என்றும் மனப்பாடத் திறன் அறவே இல்லாதது சிறப்பு இல்லை என்றும் எவன் சொன்னது...? ஒவ்வொரு வருடமும் ஆகச்சிறந்த அறிவாளிகளாக அறியப்படும் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் அடுத்த, அடுத்த வருடங்களின் என்னவாகிறார்கள்..? அவர்களின் மனப்பாடத் திறன் வாழ்க்கைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதை பற்றியெல்லாம் நம் சமூகம் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை.

ஒரு மாணவன் தான் அதிக மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக குற்ற உணர்ச்சியைக் கொள்கிறான் அல்லது தற்கொலை முயற்சியைச் செய்கிறான் என்று சொன்னால் அதற்கு சரியான புரிதல் இல்லாத சிதிலமடைந்த மனம் கொண்ட நமது சமூகம்தான் காரணம்.

மிகைப்பட்ட கிராமப்புறங்களைக் கொண்ட தமிழகத்தின் மாணவர்கள் வயலுக்குச் சென்று தன் தாய், தகப்பனுக்கு உதவி செய்து விட்டும், பால் பண்ணையில் பாலை ஊற்றி விட்டும், வெறும் காலோடு சைக்கிள் மிதித்து அரசுப்பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தேர்ச்சி என்பது எதைச் சார்ந்து இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாக இருக்கிறது என்ற கருத்தினை இங்கே ஆழமாகப் பதிகிறோம்.

வாழ்வியலின் அடிப்படைச் சூழல்கள் எப்படியான தாக்கத்தைக் கொடுக்கிறதோ அல்லது எதை முக்கியத்துவப்படுத்துகிறதோ அதைப் பொறுத்தே மனித மனதின் விருப்பங்கள் அமைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் மனோதத்துவ ரீதியாக அறிந்து அவர்களின் ஈடுபாட்டினைக் கேட்டு அதற்கேற்றார் போல கல்வி கற்கும் முறைகள் நமது தேசத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நன்றாகப் பாடத் தெரிந்த ஒரு மாணவனுக்கு உற்சாகமாய் பேசவராது, உற்சாகமாய் பேச வரும் மாணவனுக்கு அருமையாய் ஓவியம் வரையத் தெரியது, நன்கு ஓவியம் வரையத் தெரிந்த மாணவனுக்கு விளையாட்டில் விருப்பம் இராது, விளையாட்டில் வெற்றி வாகைகள் சூடும் மாணவனுக்கு சுத்தமாய் படிக்க வராது. படிக்கும் மாணவனுக்கும் இதே கதைதான் ஒருவனுக்கு வரலாறு பிடிக்கும் மற்றையவனுக்கு அறிவியல் பிடிக்கும் இன்னொருவனுக்கு  மேலாண்மை நிர்வாகம் பிடிக்கும்....இப்படியாய் விருப்பங்கள் என்பது தனி மனித ஆழ்மனதில் இருக்கும் தனித்திறனில் இருந்தே பிறக்கிறது.

அதிக மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை அவர்களின் மனப்பாட திறனுக்காக நாம் பாராட்டும் அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களை குறை சொல்லி தாழ்மைப்படுத்தும் போக்கினை வன்மையாக கண்டிக்கவும் செய்கிறோம்

இதைச் சரிவர புரிந்து கொண்டு நமது சமூகம் கட்டியமைக்கப்படாததால்தான்....ஒரு ஆகச் சிறந்த அரசியல்வாதி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராகவும், ஒரு வழக்கறிஞன் டீக்கடை முதலாளியாகவும், ஒரு அறிவியல் விஞ்ஞானி இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு முனை மழுங்கிப் போன ஒரு பங்கெடுப்பினை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவனை பாரட்டவோ, இகழவோ செய்யாமல் சரியான துறையை தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்க பலமாய் நின்று வழிகாட்ட வேண்டும்.

மேலும் ஆகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை அடையாளம் கண்டு இதே ஊடகங்கள்..அவர்களிடம் பேட்டிகள் எடுத்து அவர்களின் பெரு விருப்பங்களைக் கேட்டறிந்து அதற்கு உதவிகள் செய்வதோடு அவர்களின் நோக்கங்களுக்காய் பாரட்டப்படவும் வேண்டும்.

மற்றபடி தேர்வு என்பது வெற்றி, தோல்விகளுக்கான ஒரு இடமல்ல அது தேவைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களம் என்பதை உணர்ந்து சரியான சமூகத்தை கட்டியமைப்போம்....இந்த தேசத்தின் ஒப்பற்ற குடிமக்களாவோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

Monday, May 14, 2012

கழுகின் பயணமும் காலத்தினாலான ஒரு சிறு உதவியும்....!

செய்யும் செயல்கள்கள் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் அதன் விளைவுகளும் செம்மையாய் இருக்கும் என்ற மூல உண்மையை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. பலன்கள் அதன் நீட்சியில் விளையும் நன்மைகள் என்று எதையும் எமது தலைகளில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த அடுத்த செயல்களை நோக்கியே நாம் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.



கடந்த பத்து வருடங்களில் இணையப் பயன்பாடும், பயனீட்டாளர்களும் எவ்வளவு அதிகரித்து இருக்கின்றனர் என்பதை நாம் கணக்கில் கொண்டு அடுத்த இருபது வருடத்தில் பயனீட்டாளர்கள் விகிதம் எப்படி இருக்கும் என்ற யோசித்துப் பார்த்தோமானால், சுமார் 15 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளையர்கள் மிகுந்த ஒரு சக்தி மிகுந்த தகவல் தொடர்பு சாதனமாக இணையதளங்கள் அசுரத்தனமாய் வளர்ந்து சமூகத்தின் மிகையான செயல்பாடுகளை தீர்மானிக்கும் ஒரு நவீன களமாயிருக்கும் என்பதில் யாதொரு ஆச்சர்யமும் இல்லை.

விழிப்புணர்வுக்காய் கழுகு என்னும் ஒரு தளத்தை நாம் நிறுவி அதனை தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டிருக்கும் கடந்த மூன்று வருடங்களில் இணையப் பயனீட்டாளர்களில் 0.05% தான் கழுகின் ஆழமான சமூக விழிப்புணர்வு என்னும் கொள்கையை புரிந்து கொண்டு எமக்கு ஆதரவும், பேருதவியுமாய் இருக்கிறார்கள். கழுகின் நிலைப்பாட்டினை விளங்க முடியாதவர்கள் பெரும்பாலும் நம்மை ஏளனப்படுத்தியும், உதாசீனப்படுத்தியும் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டுமிருந்தாலும், நமது பொறுப்பு என்பது நம்மை கேலிக்குரியவராய் பார்ப்பவருக்கும் புரிதலை உண்டு பண்ணி அரவணைத்து செல்ல வேண்டுமென்பதாகவே இருக்கிறது.

இப்படியான கழுகின் பெரும் பயணத்தில்....

பொறியியல் கல்லூரியில் பயிலும் அமுதா என்னும் மாணவி தனது கல்வியைத் தொடர பண உதவியின்றி இருக்கிறார் என்ற செய்தியை கழுகு தோழமை திருமதி. கெளசல்யா கழுகு குழுமத்தில் பகிர்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாய் இது பற்றிய ஒரு கட்டுரையை நாம் கழுகிலும் வெளியிட்டு சகோதரி அமுதாவிற்கு உதவி செய்ய விரும்புபவர்களை கழுகு குழுமத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற வேண்டுகோளையும் வைத்தோம்.

இதோ.. இன்று நமது உதவியை சிறு பணமாய் திரட்டி அதை சகோதரி அமுதாவின் கல்விக்காக அவரது கல்லூரியில் செலுத்தியும் விட்டோம்.

உதவி என்று அறிந்த உடன் உடனடியாய் தனது பெரும் பங்களிப்பு இதில் இருக்க வேண்டும் என்றெண்ணி முதல் தொகையை கொடுத்ததில் இருந்து, எல்லோரிடமுமிருந்து வந்த தொகைகளை தனது வங்கிக் கணக்கில் இருத்தி தேவையான பணம் சேர்ந்தவுடன் அதை டி.டியாக எடுத்துக் கொண்டு போய் திருநெல்வேலியிலிருக்கும் சகோதரி அமுதாவை நேரடியாக சந்தித்து அவரது கல்லூரியில் அதை செலுத்தியது வரை எங்கள் கழுகு குழும குடும்பத்தின் தலைவர் அன்புக்குரிய அப்பா திரு. சீனா ஐயா அவர்களின் பணி அளப்பரியது.

வெற்றுத் துப்பாக்கிகளை வைத்து வெடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மாயா உலகான இணையவெளி சீனா ஐயா போன்ற சமூக நற்சிந்தனையாளர்களை கொண்டிருக்கிறது என்பதை எண்ணி நாம் நிச்சயமாக பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். 

" சொல்வது யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

என்ற குறளுக்கு இணங்க கழுகு குழுமத்தால் இந்த உதவியைச் செய்து முடிக்க முடிந்தது என்பதற்கு பின்னால் சீனா ஐயாவின் முயற்சியும் உழைப்பும் இருந்ததை மறுக்கவே முடியாது.

குழுமம் கடந்து இந்த செய்தியை கழுகு இணையத்தளத்தில் வாசித்து விட்டு உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு எப்படி? எங்கே? நான் உதவி செய்யவேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டு அதே போல உதவி செய்த அண்ணன் திரு. ஓ.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும் கழுகு குழுமத்தின் சார்பிலும், சகோதரி அமுதாவின் சார்பிலும் எங்களது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணன் ஓ.ஆர்.பி.ராஜா போன்ற முகம் தெரியாமல், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவிகளைச் செய்பவர்களால்தான் இன்னமும் நமது சமூகத்தில் மனிதநேயமும், மானுடப் பிரியமும் இருக்கிறது என்பது அடிக்கடி உறுதி செய்யப்படுகிறது என்ற கருத்தினையும் ஆழமாக பதிவு செய்கிறோம்.

அதே போல பிரச்சினையை நம்மிடம் அடையாளம் காட்டி அதன் பிறகு நேரடியாக இந்த உதவி சகோதரி அமுதாவிற்கு சென்று சேர வேண்டும் என்று பிராயசைப்பட்டு நமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்த தோழமை கெளசல்யா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த செயல் நிறைவேற முழுமையான பங்களிப்பை அளித்து உறுதுணையாய் இருந்த, எங்கள் குழுமத் தோழமைகளின் புரிந்துணர்வாலும் ஒத்துழைப்பாலுமே இந்த சிறிய உதவியை எங்களால் செய்ய முடிந்தது என்பதையும் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கழுகு தனது விழிப்புணர்வு பயணத்தில் தொடர்ந்து  சிறகடிக்கும்  அதே நேரத்தில் சமுகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் தொடர்ந்து தனது வாசகர்களுக்கும், பொது நல விரும்பிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் அடையாளம் காட்டவும் செய்யும் என்ற உறுதியோடும் முழுமையான மன நிறைவோடும் இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 

Monday, January 30, 2012

அடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பார்வை!

அன்பர்களே ....

கழுகில் இன்றைய தலைப்புஅடிப்படை கல்வி--இன்றைய நிலை... இது பற்றி ஒரு சின்ன அலசல்...

நம் இந்திய திரு நாட்டின் பண்டைய கல்வி முறை  குருகுலத்தை சார்ந்து இருந்தது... மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி படித்துவந்தார்கள்...

பின்னர் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது இருக்கும் மெக்காலே  முறைக்கு---முற்றிலுமாக நம்மை மாற்றி அதற்கு நம்மையும் அடிமை ஆக்கிவிட்டார்கள்.....

இப்போது எல்லாம் மதிப்பெண்,,மதிப்பெண்,...மதிப்பெண்.....

செயல் வழி கற்றல் என்று ஆரம்பித்தார்கள்....அது எந்த அளவுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது ..????

அன்பர்களே..பொதுவா நம் எல்லாருடைய எண்ணமும்... நமது குழந்தைகள்...மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும்.. வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்...இது மட்டும் தான்.

நம்மில் எத்தனைபேர்...விடைத்தாளில்...வாந்தி எடுப்பதை.. ஒத்துக்கொள்கிறீர்கள்???
இது எல்லாம் சுத்த வேஸ்ட் ... பாட பகுதியை மனனம் செய்து அதை அப்படியே விடைத்தாளில்  கக்குவதற்கு எதற்கு...பள்ளி...??? பள்ளி கட்டணம்..??? படிப்பவை கடைசி வரை நினைவில் நிற்குமா ??? இதை நாம் வீட்டிலேயே செய்ய சொல்லலாம்...

இன்றைய..பாடத்திட்டம் அந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த நிலை மாறினாலும் நாம் மதிப்பெண் எங்கே...என்றுதான் கேட்போமே தவிர நம் குழந்தைகளின் தனிப்பட்ட திறமையை எங்காவது ஊக்குவித்துலள்ளோமா??? உலகிலேயே எல்லா கல்வியாளர்களாளும் பெரிதும் பாராட்டப்படும்  NCRT-கல்வி முறைக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறோம் ???   

அடிப்படை கல்வி முழுமை அடைந்தால் அந்த மாணவன் எதிர்காலத்தில் மிக அருமையாக மிளிர்வான்... அதை எந்த கல்வி நிறுவனம் முழுமையாக...சுயநலம் இல்லமால் செய்கிறது??எல்லாம் பணம்..பணம்..பணம்... இன்றைய கால கட்டத்தில் இத்தனை "கல்வி தந்தைகள்"  உருவாக நாம் எல்லாருமே காரணம்...

நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிதரும்போது கூட--இந்த கேள்வியை படி.. இதற்க்கு பதில் சொல்லு...இப்படிதான் படிக்க வைக்கிறோம். நம்மில் எத்துனை பேர்.நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வியை போதிக்கிறோம் ...???

அனுபவரீதியான பாடங்கள் மற்றும் சுய படைப்பாற்றல் ( SELF CREATIVITY ) எத்தனை குழந்தைகளுக்கு கிடைக்கிறது??? நன்மை கேட்டால்--வகுப்பு பாடம் என்பது நம் குழந்தைகளை அறிவு மழுங்க செய்துவிடும் என்பது திண்ணம்.. வகுப்புடன் கூடிய,,அனுபவரீதியான பாடம் ,,குரூப் டிஸ்கஷன்,, சுய படைப்பாற்றல்,,விளையாட்டு,,விளையாட்டின் முலம் பாடம்,, இப்படி முயற்சி செய்தால் எதிர் கால சந்ததியினர்..எல்லா துறையிலும்.. மற்றும் உலகத்தினறோடு போட்டி போட முடியும்...

எனவே நண்பர்களே..நாம் தான்--நம் குழந்தையின் எதிர்காலம் பற்றி  கவலை படுபவர்கள்...அவர்களின் நாள் வாழ்வுக்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்...

அவர்களின் பாடதிட்டத்தில்...நம்மை ஈடுபடுத்திக்கொண்டு ...அவர்களுக்கு அனுபவம் சார்ந்த,,ஊக்குவிப்பு சார்ந்த,,,மனனம் இல்லாத.. படித்தலை ஒரு சுவையான அனுபவமாக கொண்டு செல்லுங்கள்...

இந்த முறையில் உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளை பயிற்றுவித்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகள்...எதிர்காலத்தில் பேர் சொல்லும் அளவுக்கு வளருவார்கள்...

அடுத்து
போட்டி தேர்வுக்கான டிப்ஸ் :-

அன்பர்களே பொதுவாக நாம் போட்டி தேர்வுக்கு,,மற்றும் பள்ளி தேர்வுக்கு  படிக்கும்போது கேள்வி--அதற்கு நான்கு பதில்கள்...அதில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பது ...இது தான் நடை முறை...இதை ஒரு உதாரணம் முலம்  பார்ப்போம்...

காகசஸ் மலை---

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு பகுதி.
3. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது.

இந்த கேவிக்கு விடை என்று பார்த்தால் 3.

அவ்வளவு தானா???
இந்த ஒரு கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது...
நாம் அடுத்த கேவிக்கு செல்வோம் என்று போய்விடுவீர்கள்....

இந்த கட்டுரையின் நீளம் கருதி சுருங்க பார்ப்போம்....

பொதுவா...கேவிக்கு என்ன பதில் என்று பார்ப்பதைவிட 
பதிலுக்கு கேள்வி தேடுங்கள்...
மேலே உள்ள கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்...

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.

இதற்கு கேள்வி தேடுங்கள்...
திபெத்துக்கு வடக்கில் என்ன உள்ளது...??
மற்ற முன்று திசையிலும் என்ன உள்ளது ???
அது தொடர்பான தகவல்கள் என்ன என்ன ???

இப்ப பாருங்க..ஒரு பதில்...அதற்க்கு உண்டான 
கேள்விகள் பல...
இவற்றை தேடும்போது மறக்குமா???

அதே போல் மற்ற பதில்களுக்கும் கேள்வி தேடுங்கள்...
எவ்வளவு விஷயங்கள் நீங்கள் கற்று கொள்வீர்கள்....

இதை மேலும் இந்த படம் முலம் விளக்குகிறோம்..
இங்கு பொதுவாக நாம் படித்து கொண்டு போவது கீழிருந்து மேலாக... அப்படி போகும்போது
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிப்பதும் நினைவில் நிற்காது...அதற்கு மேல் படிக்கவும்
ஆர்வம இருக்காது... 

அதாவது...மரம்,,முக்கிய கிளைகள்--கேள்வி என்று வைத்துக்கொண்டால்,, இலைகள் பதில்கள்... இந்த முறையில் நாம் போட்டி தேர்வுக்கு தயார் ஆகும்போது நாம் பாதிக்கு மேற்பட்ட பாடங்களை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது...முழுமையாக படித்து முடித்து...நினைவில் வைத்துக்கொள்வது மிகுந்த சிரமம்...

அதே இந்த முறையில் முயற்சி செய்யுங்கள்...
அதாவது...
இலைகள் முலமாக (விடைகள்)--கேள்விக்கு வாருங்கள்...
நீங்கள் அனைத்து பாடத்தையும் COVER செய்து விடுவீர்கள்....
படம் பார்க்கவும்...

என்ன அன்பர்களே...இந்த டிப்ஸ் பிடித்துள்ளதா...ஆம் எனில் இந்த முறையை நீங்களும் பின்பற்றுங்கள்...அனைவருக்கும்...சொல்லி தாருங்கள்... 


( படம் உதவி--வீடு--சுரேஷ் குமார் )

கழுகிற்காக
 
J.நக்கீரன்









(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Friday, November 25, 2011

இணையத்தில் கல்வி கற்கலாம் வாருங்கள்...


கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.

அரசு மாணாக்கருக்கு இலவச கணனியை வழங்கப் போவதால் இத்திட்டம் தமிழக மாணாக்கருக்குப் மிகுந்த அளவில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா வகுப்பு மாணவருக்கும் இத்திட்டம் பயனளிக்கக் கூடியதா என இதைப் பற்றி விரிவான தகவல்களை சொல்லும்படி கேட்டோம். இந்த கல்வி சேவை பற்றி அவரது வார்த்தைகள் இதோ:-

திரு. நாகராஜன் ரவி.( CEO ., GLOBAL INSIGHT GROUP):-
ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்சி ஆங்கில மற்றும் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றும் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ணத் தேவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜெக்டர்" மூலம் இணைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லாரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகப்படுத்தபடுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஷல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ்., வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படிப் படியாக செயல்படுத்துவேன்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.

தயவு செய்து என் நெடுநாள் கனவான இந்த இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டலை கொண்டு செல்ல உதவுங்கள்.

www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in

நன்றியுடன் - நாகாராஜன் ரவி - nag@insightgroupglobal.com


நன்றி : தேனம்மை லெக்ஷ்மணன்

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes