Monday, May 14, 2012

கழுகின் பயணமும் காலத்தினாலான ஒரு சிறு உதவியும்....!

செய்யும் செயல்கள்கள் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் அதன் விளைவுகளும் செம்மையாய் இருக்கும் என்ற மூல உண்மையை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. பலன்கள் அதன் நீட்சியில் விளையும் நன்மைகள் என்று எதையும் எமது தலைகளில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த அடுத்த செயல்களை நோக்கியே நாம் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.



கடந்த பத்து வருடங்களில் இணையப் பயன்பாடும், பயனீட்டாளர்களும் எவ்வளவு அதிகரித்து இருக்கின்றனர் என்பதை நாம் கணக்கில் கொண்டு அடுத்த இருபது வருடத்தில் பயனீட்டாளர்கள் விகிதம் எப்படி இருக்கும் என்ற யோசித்துப் பார்த்தோமானால், சுமார் 15 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளையர்கள் மிகுந்த ஒரு சக்தி மிகுந்த தகவல் தொடர்பு சாதனமாக இணையதளங்கள் அசுரத்தனமாய் வளர்ந்து சமூகத்தின் மிகையான செயல்பாடுகளை தீர்மானிக்கும் ஒரு நவீன களமாயிருக்கும் என்பதில் யாதொரு ஆச்சர்யமும் இல்லை.

விழிப்புணர்வுக்காய் கழுகு என்னும் ஒரு தளத்தை நாம் நிறுவி அதனை தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டிருக்கும் கடந்த மூன்று வருடங்களில் இணையப் பயனீட்டாளர்களில் 0.05% தான் கழுகின் ஆழமான சமூக விழிப்புணர்வு என்னும் கொள்கையை புரிந்து கொண்டு எமக்கு ஆதரவும், பேருதவியுமாய் இருக்கிறார்கள். கழுகின் நிலைப்பாட்டினை விளங்க முடியாதவர்கள் பெரும்பாலும் நம்மை ஏளனப்படுத்தியும், உதாசீனப்படுத்தியும் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டுமிருந்தாலும், நமது பொறுப்பு என்பது நம்மை கேலிக்குரியவராய் பார்ப்பவருக்கும் புரிதலை உண்டு பண்ணி அரவணைத்து செல்ல வேண்டுமென்பதாகவே இருக்கிறது.

இப்படியான கழுகின் பெரும் பயணத்தில்....

பொறியியல் கல்லூரியில் பயிலும் அமுதா என்னும் மாணவி தனது கல்வியைத் தொடர பண உதவியின்றி இருக்கிறார் என்ற செய்தியை கழுகு தோழமை திருமதி. கெளசல்யா கழுகு குழுமத்தில் பகிர்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாய் இது பற்றிய ஒரு கட்டுரையை நாம் கழுகிலும் வெளியிட்டு சகோதரி அமுதாவிற்கு உதவி செய்ய விரும்புபவர்களை கழுகு குழுமத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற வேண்டுகோளையும் வைத்தோம்.

இதோ.. இன்று நமது உதவியை சிறு பணமாய் திரட்டி அதை சகோதரி அமுதாவின் கல்விக்காக அவரது கல்லூரியில் செலுத்தியும் விட்டோம்.

உதவி என்று அறிந்த உடன் உடனடியாய் தனது பெரும் பங்களிப்பு இதில் இருக்க வேண்டும் என்றெண்ணி முதல் தொகையை கொடுத்ததில் இருந்து, எல்லோரிடமுமிருந்து வந்த தொகைகளை தனது வங்கிக் கணக்கில் இருத்தி தேவையான பணம் சேர்ந்தவுடன் அதை டி.டியாக எடுத்துக் கொண்டு போய் திருநெல்வேலியிலிருக்கும் சகோதரி அமுதாவை நேரடியாக சந்தித்து அவரது கல்லூரியில் அதை செலுத்தியது வரை எங்கள் கழுகு குழும குடும்பத்தின் தலைவர் அன்புக்குரிய அப்பா திரு. சீனா ஐயா அவர்களின் பணி அளப்பரியது.

வெற்றுத் துப்பாக்கிகளை வைத்து வெடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மாயா உலகான இணையவெளி சீனா ஐயா போன்ற சமூக நற்சிந்தனையாளர்களை கொண்டிருக்கிறது என்பதை எண்ணி நாம் நிச்சயமாக பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். 

" சொல்வது யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

என்ற குறளுக்கு இணங்க கழுகு குழுமத்தால் இந்த உதவியைச் செய்து முடிக்க முடிந்தது என்பதற்கு பின்னால் சீனா ஐயாவின் முயற்சியும் உழைப்பும் இருந்ததை மறுக்கவே முடியாது.

குழுமம் கடந்து இந்த செய்தியை கழுகு இணையத்தளத்தில் வாசித்து விட்டு உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு எப்படி? எங்கே? நான் உதவி செய்யவேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டு அதே போல உதவி செய்த அண்ணன் திரு. ஓ.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும் கழுகு குழுமத்தின் சார்பிலும், சகோதரி அமுதாவின் சார்பிலும் எங்களது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணன் ஓ.ஆர்.பி.ராஜா போன்ற முகம் தெரியாமல், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவிகளைச் செய்பவர்களால்தான் இன்னமும் நமது சமூகத்தில் மனிதநேயமும், மானுடப் பிரியமும் இருக்கிறது என்பது அடிக்கடி உறுதி செய்யப்படுகிறது என்ற கருத்தினையும் ஆழமாக பதிவு செய்கிறோம்.

அதே போல பிரச்சினையை நம்மிடம் அடையாளம் காட்டி அதன் பிறகு நேரடியாக இந்த உதவி சகோதரி அமுதாவிற்கு சென்று சேர வேண்டும் என்று பிராயசைப்பட்டு நமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்த தோழமை கெளசல்யா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த செயல் நிறைவேற முழுமையான பங்களிப்பை அளித்து உறுதுணையாய் இருந்த, எங்கள் குழுமத் தோழமைகளின் புரிந்துணர்வாலும் ஒத்துழைப்பாலுமே இந்த சிறிய உதவியை எங்களால் செய்ய முடிந்தது என்பதையும் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கழுகு தனது விழிப்புணர்வு பயணத்தில் தொடர்ந்து  சிறகடிக்கும்  அதே நேரத்தில் சமுகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் தொடர்ந்து தனது வாசகர்களுக்கும், பொது நல விரும்பிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் அடையாளம் காட்டவும் செய்யும் என்ற உறுதியோடும் முழுமையான மன நிறைவோடும் இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 

20 comments:

அருண் பிரசாத் said...

Good Job

Keep it up :)

TERROR-PANDIYAN(VAS) said...

குட் ஜாப். வாழ்த்துகள்.

TERROR-PANDIYAN(VAS) said...

//அதோ போல பிரச்சினையை நம்மிடம் அடையாளம் காட்டி அதன் பிறகு நேரடியாக இந்த உதவி சகோதரி அமுதாவிற்கு சென்று சேர வேண்டும் என்று பிராயசைப்பட்டு நமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்த தோழமை கெளசல்யா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.//

மற்றவர்கள் பெயரை போல்ட் செய்துவிட்டு சகோதரி கௌசல்யாவின் பெயரை மட்டும் போல்ட் செய்யாமல் விட்டது சற்றே வாட்டமளிக்கிரது. அவர் புகழ்ச்சியை விரும்ப மாட்டார் என்றாலும். கழுகுக்கு அடையாளம் காட்டி கடைசிவரை உதவினார் என்ற வகையில் செய்யலாம் தானே? இது என் கருத்து மட்டும்.

சௌந்தர் said...

நிச்சயம் அவர் விரும்ப மாட்டார் நண்பர் டெரர் பாண்டியன் அவர்களே அவர் பெயரும் போல்ட் செய்யப்பட்டு இருந்தது சகோதரியின் கோரிக்கைப்படி எடுக்கப் பட்டது... உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுகள்.... நன்றி... :)))))

Unknown said...

ஸலாம்

" சிறு துரும்பும் பல் குத்த உதவும் " என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது

தமிழ்மணம் +1

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//சகோதரியின் கோரிக்கைப்படி எடுக்கப் பட்டது...//

தங்கள் கனிவான விளக்கத்திற்க்கு நன்றி!

//சகோதரி அமுதாவை நேரடியாக சந்தித்து அவரது கல்லூரியில் அதை செலுத்தியது வரை எங்கள் கழுகு குழும குடும்பத்தின் தலைவர் அன்புக்குரிய அப்பா திரு. சீனா ஐயா அவர்களின் பணி அளப்பரியது.
//

@கழுகு

ஐயா! அவர்களை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம். அவர் தலைமையில் கழுகு இன்னும் உயர பறக்க வாழ்த்துகள்.

திரு.ஓ.ஆர்.பி.ராஜா மற்றும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி!

சௌந்தர் said...

@டெரர் ரொம்ப நன்றி அண்ணா...

Unknown said...

உயரிய நோக்கத்திற்க்காய் செய்யும் எந்த ஒரு செயலும் காலம் தாழ்த்தியாவது உரியவர்க்கு நன்மையாய் வந்து சேரும் என்பதற்கு கழுகின் இந்த வளர்ச்சியே சான்றாயிருக்கும்.... எழுத்தின் மூலம் உதவி என்பது படிப்பதற்க்கு எளிது ஆனால் நடைமுறைக்கு?... இந்த நிகழ்வுக்கு பின்னால் முதுகெலும்பாய் மனிதநேயம் கொண்டு பாடுபட்ட கழுகு குழுமத்தாரின் பணி போற்றத்தக்கது, விழிப்புணர்வு தளமாய் அல்லாது சமூக அவலங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண களம் இறக்கியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... முகம் தெரியாமல் உதவியாற்றிய அந்த சகோதரருக்கும், உதவிக்கு உறுதுணையாய் இருந்த கழுகின் உற்றாருக்கும் நன்றி சொல்லி நீங்கள் போகிற பாதையில் உங்களை பின் தொடரும் வாசகியாய் பயணமாகிறேன்.... வாழ்த்துகளோடு இன்னும் வீரியமிக்க தளமாய் கழுகு வளரவேண்டுமென்ற வாஞ்சையும் உருவாகிறது.... குழுமத்தாருக்கு இந்த சகோதரியின் மனம் நிறைந்த வாழ்த்துகள் :)

Prabu Krishna said...

கழுகின் உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

// நமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்த தோழமை கெளசல்யா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.//
என்னடா சகோ .கௌசல்யா பேரு இருக்கிறதா மட்டும் கோட்ஸ் பண்ணி கமெண்ட்ஸ் போடுறாருன்னு நினைச்சிராதீங்க ...
எப்பொழுதுமே எதை செய்தாலும் சீர்தூக்கி பார்த்து ... உதவி செய்வதில் சகோ ,,கெட்டிகாரங்க ..அதுவ்மில்லாமல் நான் நேரில் பார்த்து பேசி நன்றாக பழகின நபரும் கூட ...வாழ்த்துகள் சகோ ..

Madhavan Srinivasagopalan said...

பாராட்டுக்கள்.. தங்கள் சேவை தொடரட்டும்..

வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்லாது, பயனுள்ள பணிகளை செய்துவரும் கழுகு குழுமத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

Rathnavel Natarajan said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

எஸ்.கே said...

மென்மேலும் நற்பணிகளை செய்து சிறக்க வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் said...

கழுகின் இந்த மைல் கல்-லிற்க்கு....
மனமார்ந்த பாராட்டுக்கள்......

கழுகின் உறுப்பினராக நானும் பெருமை
கொள்கிறேன்.....

வைகை said...

நல்ல முயற்சி வெற்றி அடைந்ததற்கு எனது வாழ்த்துக்களும் :-)

Ashokar said...

நல்ல முயற்சி வெற்றி அடைந்ததற்கு எனது வாழ்த்துக்களும் :-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோஸ்.கழுகு குழுமத்தார்,
தங்கள் அனைவர் முயற்சிக்கும் சிறந்த செயலுக்கும் உளங்கனிந்த பாராட்டுகள் உரித்தாகுக..!

Unknown said...

கல்விக்கு உதவி செய்வது உண்மையில் ஆயிரம் கும்பாபிஷேகத்திக்குச் சமம்! கழுகு உயர அனைவர்மனதிலும் பறக்கிறது சீனா ஐயா அவர்களுக்கும் கழுகு குழுமத்தாருக்கும் நன்றிகள்!

Unknown said...

உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளும்...வாழ்த்துக்களும்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கல்விக்கு உதவிய அனைவரும் போற்றத்தக்கவர்கள்.....

வாழ்த்துக்கள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes