Wednesday, May 04, 2011

அட்சய திருதியையும்....வியாபார யுத்திகளும் ஒரு விழிப்புணர்வு பார்வை!



ஆன்மீகம் என்ற பெயராலும் மதங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகள் மூலமாகவும் எம் மக்களை சீரடையச் செய்யும் போக்கி காலம் காலமாகவே இருந்து வருகிறது. கழுகின் விழிப்புணர்வு போரில் தலையாய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. 

எப்படியெல்லாம் மூடநம்பிக்கைள், கடவுள் என்ற அரிதாரம் பூசிக் கொண்டு எம்மளை சீரழிக்கிறது என்பதற்கான சமீபத்திய சில நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.
நம் மக்களுக்கு அளவு கடந்த ஆசையில் வரும் மோகத்திற்கு என்றுமே பஞ்சம் இருந்ததே இல்லை! இதற்க்கு நம் கண் முன்னே பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன! கொஞ்சம் சமீபமாக பார்த்தோமானால் இந்த அட்சய திருதியை! இதை வைத்து ஒரு கூட்டம் மேலும் மேலும் பொருள் சேர்க்க... இன்னொரு பக்கம் கடனாளி ஆகும் நடுத்தர வர்க்கம்! ஆரம்பகாலம் தொட்டே நம் இன பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம் வளர்ந்துகொண்டேதான் வருகிறது! இதை சரியாக பயன்படுத்திகொண்ட வியாபார உலகம் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே வரும் என்று கொளுத்திப்போட.. அது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகிறது!
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இப்போது ஒரு ஜோதிடர் சொல்லுகிறார்.. அட்சய திருதியை அன்று பிளாட்டினம் வாங்கினால் நல்லது என்று! இது தங்கத்தை விட விலை அதிகம்! அவர் சொல்லுவது அன்றைய தினம் வெண்மை நிறம் கொண்ட பொருள் வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது..இதுதான் அன்றைய நாளின் சிறப்பு! அது ஏன் பாலாக... உப்பாக.. தயிராக இப்படி விலை குறைந்த பொருளாக இருக்கக்கூடாது?.. இதையெல்லாம் விளம்பரப்படுத்தினால் வியாபாரிகளின் நிலைமை என்னாவது? அதனால்தான் முதலாளிகளும் ஊடகங்களும் இதுபோன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து தங்கம் பிளாட்டினத்திர்க்கு மட்டும் வெளிச்சம் போடுகின்றன! பணம் இருப்பவர்கள் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்.. இல்லாதவர்களுக்கு இதைப்பற்றி கவலையும் இல்லை! ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் இதனால் படும் திண்ட்டாட்டம் இருக்கிறதே.. அது சொல்லிமாளாது.. ஜோதிடமும் விளம்பரமும் எதைசொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்காமல் கொஞ்சம் யோசித்தோமானால் இதில் உள்ள முட்டாள்தனம் நமக்கு புரிபடும்!
இன்னொன்று ஆன்மீக மோகம்.. இதுவும் ஆதிகாலம் தொட்டே நம் மக்களோடு கலந்துவிட்ட ஒன்று! ஆன்மிகம் என்றால் கடவுள் இருக்கிறாரா இல்லையா போன்ற தேடல்களை நான் சொல்லவில்லை.. கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டத்திடம் ஏமாறும் மக்களைப்பற்றி மட்டும்தான் சொல்லுகிறேன்! சாமியார்களில் எத்தனை வகை? லிங்கம் எடுக்கும் சாமியார். சாராயம் குடித்து குறி சொல்லும் பெண் சாமியார்( இப்ப ஜெயிலில்) காறித்துப்பும் சாமியார்(?!!) சுருட்டு சாமியார்..இப்படி.. இவைகளை பார்க்கும்போது எங்கேயோ கேட்ட இந்த வரி ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.." கடவுள் இருக்கிறார் என்பவனையும் இல்லையென்று சொல்பவனையும் நம்பலாம்.. ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்பவனை நம்பவே கூடாது!" எவ்வளவு சத்தியமான வரிகள்! எந்த ஒரு கடவுளும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை! பசித்தவனுக்கு ஒரு வேளை உணவளித்தால் நீங்கள்கூட கடவுள்தான்! வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைத்தால் அவர்களுக்கு நீங்கள்தான் கடவுள்! இப்படி நீங்களே கடவுளாகும் வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு ஏன் தான் கடவுள் என்று விளம்பரபடுதிக்கொள்ளும் மலிவான மனிதனுக்கு சேவகம் செய்கிறீர்கள்?
இந்த வேளையில் ஒரு உண்மை சம்பவம் ஞாபகம் வருகிறது( இது நடந்து தோராயமாக எட்டு வருடங்கள் இருக்கும்!)  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பக்கம் கருவியப்பட்டி என்று கிராமம்.. அந்த கிராமத்து வழியாக பேருந்தே காலை  ஒருமுறை மாலை ஒருமுறை இரண்டுவேளைதான்! அங்கு அப்பொழுது புதிதாக மாரியம்மன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஒரு ஆறு மாதங்கள் ஆகியிருந்தது! அந்த வேளையில் அந்த ஊரில் புதிதாக ஒரு சிறுமி ஊரின்  தெருக்களில் திரிவதும் எங்கோ வெறித்தபடி வார்த்தைகளை அளந்து பேசுவதும்.. இப்படி இருந்தவள் மாரியம்மன் கோவிலை கண்டதும் அங்கு நுழைந்து கருவறை வாசலில் உட்கார்ந்து.. சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தாள்.. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணை எதுவுமே விசாரிக்காமல் மாரியம்மனின் அவதாரமாகவே பார்க்க ஆரம்பித்தனர்! அன்னா ஹசாரேயை தெரிய ஐந்து நாள் ஆன நம் மக்களுக்கு இந்த அம்மன் விசயம் மட்டும் ஐந்து மணிநேரத்தில் சுற்றுவட்டாரம் எங்கும் பரவியது!
அவ்வளவுதான்.. அங்கு உள்ள பூசாரி அம்மனின் மனசாட்சியாகி போனார்.. அம்மன் இளநீர் மட்டுமே சாப்பிடுவார் என்று அவர் சொல்லிவைக்க திடீர் இளநீர் கடைகள் முளைத்தன.. சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.. அம்மன்(?!!) தரிசனத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காக்க தொடங்கினர்..( அன்றைய தேதியில் திருப்பதியைவிட அதிகம்!) இவர்களாகவே பிரச்சனைகளை சொல்லி தீர்வையும் இவர்களே சொல்லிக்கொண்டனர்.. இந்த நாடகங்கள் அனைத்தும் இரண்டு நாள்தான்! அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவளை தேடிவரும்வரை! அந்த பெண் மனநிலை சரியில்லாதவராம்! எங்கோ கூட்டி செல்லும்போது அந்த பெண் மட்டும் வழிதவறி அந்த ஊர் வந்துவிட்டாராம்! நல்லவேளை அவர்கள் வரும்போது காவலர்களும் கூடவந்தது! இல்லையென்றால் நம் மக்கள் அம்மனுக்கு சொந்தம் கொண்டாடி இருப்பார்கள்! இப்படி ஒரு ஆட்டு மந்தைக்குணம் நம் மக்களுக்கு எப்படி வந்தது? எதையுமே ஆராயாமல்.. அதுசரி.. சுனாமியைகூட வேடிக்கைபார்க்க கடற்கரை சென்றவர்களல்லவா நம் மக்கள்?... நடிகன் வந்தால் கூட்டம்... ஒரு நடிகை ஆடினால் கூட்டம்... இலவசமென்றால் கூட்டம்... வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வாங்க சென்று உயிரிழப்பதும் நம் மக்கள்தான்!
நம் உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா செல்வங்களையும் அது கொண்டுவரும்! உங்கள் வாழ்க்கைக்கு கடவுளை துணையாக இருக்க சொல்லுங்கள்.. கடவுளையே தூணாக இருக்க சொல்லாதீர்கள்! உங்கள் வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் நீங்கள்தான் தாங்க வேண்டும்! பிறப்பும் இறப்பும் வேண்டுமானால் கடவுள் கைகளில் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்!

கழுகிற்காக
வைகை  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

14 comments:

arasan said...

மிக சரியான பதிவு ...
செம சாட்டை அடி ...

மாணவன் said...

விழிப்புணர்வு தகவல்களை சரியான நேரத்திற்கு பதிவிட்டு பகிர்ந்துகொண்ட கழுகிற்கும், அண்ணன் வைகை அவர்களுக்கும் நன்றி :)

மங்குனி அமைச்சர் said...

திருத்த முடியாது

ஷர்புதீன் said...

திருத்த முடியாது

செல்வா said...

அந்த உண்மைச் சம்பவத்தை இப்பொழுதான் கேள்விப்படுகிறேன் அண்ணா :-) இப்படிஎல்லாமா நடக்குது . கொடுமை :-(

ஆனா அட்சய திரிதியை கொடுமை இதை விட அதிகம் , எதிர்காலத்துல அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கலைனா பாவம் வந்து சேரும்னு சொல்லப்போறாங்க பாருங்க !

Asiya Omar said...

good post..

ஜெயந்தி said...

மூட நம்பிக்கைகளை சாடியிருக்கிறீர்கள். என்ன சொன்னாலும் நம் மக்கள் எங்கே புரிந்துகொள்கிறார்கள். அந்த திடீர் அம்மன் அவதாரம் இன்ரஸ்டிங்.

சேலம் தேவா said...

கட்டுரையின் கடைசி பாகம் அனைத்தும் வைரவரிகள்.அருமையான விழிப்புணர்வு பதிவு.வாழ்த்துகள் வைகை..!! :)

ADAM said...

SUPER

malar said...

////நம் உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா செல்வங்களையும் அது கொண்டுவரும்! உங்கள் வாழ்க்கைக்கு கடவுளை துணையாக இருக்க சொல்லுங்கள்.. கடவுளையே தூணாக இருக்க சொல்லாதீர்கள்! உங்கள் வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் நீங்கள்தான் தாங்க வேண்டும்! பிறப்பும் இறப்பும் வேண்டுமானால் கடவுள் கைகளில் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்!//////


அருமையான வரிகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//உங்கள் வாழ்க்கைக்கு கடவுளை துணையாக இருக்க சொல்லுங்கள்.. கடவுளையே தூணாக இருக்க சொல்லாதீர்கள்!//

...விழிப்புணர்வை தூண்டும் பதிவு.

கடைசியில் குறிப்பிட்ட வரிகள்.. ரொம்ப ரொம்ப சரியானது. பகிர்வுக்கு நன்றி :)

Irulaandi said...

very good

Jafarullah Ismail said...

நம் உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா செல்வங்களையும் அது கொண்டுவரும்! உங்கள் வாழ்க்கைக்கு கடவுளை துணையாக இருக்க சொல்லுங்கள்.. கடவுளையே தூணாக இருக்க சொல்லாதீர்கள்! உங்கள் வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் நீங்கள்தான் தாங்க வேண்டும்! பிறப்பும் இறப்பும் வேண்டுமானால் கடவுள் கைகளில் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்!

சிந்திக்க வைக்கும் சிற்ப்பான வார்த்தைகள்!

Gayathri said...

ippo irukura velai vaasila itha saakkaa vachu nagai vaangina ithu aandi thrithyaya maridum vibhareedham ekkachakkam

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes