Saturday, June 11, 2011

ஜூன் 6 ல் மேட்டூர் அணை திறப்பு - சாதனையா? வேதனையா?

நாட்டில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழுகின்றன. நாமும் அவற்றை செய்திகளாய் வாசித்து விட்டு சென்று விடுகிறோம். நமது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓராயிரம் விசயங்களை எல்லாம் மேம்போக்காகவே மேய்ந்து விட்டு சரி அல்லது தவறு என்ற ஒரு கூற்றினை மனதில் தேக்கிக் கொண்டு அன்றாடத்தில் கரைந்து விடுகிறோம்.

சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மூலம், ஆழமும் நுணுக்கங்களும் அறியும் போது நமக்கே திகைப்பு வருகிறது. இது எப்படி எல்லாம் நம்மையும் நமது சமுதாயத்தையும் சீர்குலைக்குறது என்று எண்ணும் போது மலைப்பு வருகிறது.

அரசு உத்தரவின் பேரில் சமீபத்தில் திறந்து விடப்பட்ட மேட்டூர் அணையினால்.. என்ன விதமான விளைவுகள் இருக்கும் என்று இந்த கட்டுரையினூடே பயணிக்கும் போது விளங்கிக்கொள்ளலாம்...!




நம்ம நாட்டுல, குறிப்பா தமிழகத்துல ஏதாவது ஒரு துறை சம்பந்தமான முக்கிய முடிவு எடுக்கனும்னா, அந்தந்த துறைகளில் உள்ள சிலரிடம் கருத்து கேட்டு, அதுல அரசாங்கத்தோட பொருளாதார நிலைமை, ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு (அதாங்க..! அவங்களோட விருப்பு வெறுப்பு தான்) ஏற்ப.. இத்தத்தண்டியாவது அந்த துறை சார்ந்தவர்களுக்கு பலன் இருக்கறா மாதிரி திட்டத்தை செயல்படுத்துவாங்க.

ஆனா இந்த ஒரு சின்ன பாக்கியம் கூட விவசாயத்துறையில் சம்பந்தப்பட்ட(!) விவசாயிகளுக்கு கிடையாது. விவசாயம் சம்பந்தமா ஒரு முடிவு எடுக்கணும்னா... முதல்வர் அமைச்சர கூப்புடுவாரு.., அவர் ஐஏஎஸ் ஆபீசர கூட்டிட்டு வருவாரு. மூணுபேரும் ஏசி ரூம்ல உக்காந்து பேசி ஒரு அறிக்கையை தயார் செய்து எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் ஃபேக்ஸ் அனுப்பிடுவாங்க...!!!

மறுநாள் காலைல பேப்பர பார்த்து தான் விவசாயிகளுக்கு அந்த விஷயம் தெரியவரும். அத படிச்சதும் பல சமயங்கள்ல "லூசுப் பயலுங்க" ன்னு முணுமுணுத்துக்கிட்டே போய்டுவாங்க. சில சமயங்கள்ல "யாரக்கேட்டு இப்படி செஞ்சானுங்க?" ன்னு கொஞ்சம் கோபமா திட்டிட்டே போவாங்க. சில சமயங்கள்ல தான் "பரவால்லியே நம்ம கஷ்டமும் அவங்களுக்கு கொஞ்சம் புரியுதே" ன்னு சொல்லிட்டு போவாங்க.

தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றிருக்கும் அதிமுக அரசு, விவசாயிகள் சம்பந்தமா இதேப்போல ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். "தமிழக விவசாயிகள் வரலாற்றிலேயே முதன் முறையாக...!!!" என்கிற அளவிற்கு அதற்கு விளம்பரப்படுத்தப் பட்டு செயல்படுத்தப்பட்ட விஷயம் இது தான்:

''காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, சுதந்திர இந்தியாவில் எந்த தமிழக முதல்வரும் செய்திராத சாதனையாக இந்த வருடம் ஜூன் 6 ஆம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்படுகிறது'' - இது தான் அந்த அறிக்கையின் சாராம்சம். இதன் காரணமாக மோட்டார் பம்ப் செட் இல்லாத குறு விவசாயிகள் கூட இரண்டு போகமும் பயிர்செய்து, இந்த வருடம் அதிக மகசூலுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது, என்று அரசு செய்திக் குறிப்பில விளக்கம் வேறு தரப்பட்டுள்ளது.

சொன்னது படியே கடந்த 6 ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணியையும் திறந்து விட்டு, 9 ஆம் தேதி கல்லணையிலிருந்தும் தண்ணீரைத் திறந்து விட்டார்கள். அதே சமயம் 6 ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்ட அடுத்த 2 மணி நேரத்திலேயே அங்குள்ள 250 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி தொழிற்சாலையும் இயங்க ஆரம்பித்து விட்டது. இபோழுது கொஞ்சம் பிடிபட ஆரம்பித்திருக்கும் என நினைக்கின்றேன்.

அதனால் என்ன? அரசு சொன்னதும், செய்ததும் நியாயம் தானே? முன் கூட்டியே திறந்தால், ஒரு மாதம் முன்பாகவே தண்ணீர் கிடைத்தால், கடைமடை விவசாயிகள் அனைவருமே இரண்டு போகம் நெல் பயிரிட்டு... அவர்களுக்கும் லாபம் இரட்டிப்பாகும், விவசாய கூலிகளுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும், அதிக வரத்தின் காரணமாக அரிசி விலையும் குறையுமே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது!!

ஆனால் அரசு இதை அறிவித்து செயல்படுத்துவதற்கு முன்பாக விவசாயிகளிடம் இதைப்பற்றி கலந்தாலோசித்ததா? அவர்களது கருத்துக்களையாவது கேட்டறிந்ததா? என்றால் அது தான் இல்லை. இங்கு (டெல்டா மாவட்டங்களில்) நிலைமையே வேறு மாதிரியாக இருக்கின்றது. 

முதலில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும். அப்படிச் செய்தால் தான் தண்ணீர் வந்தவுடன், அதில் பெரும்பகுதி உபயோகத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் சேமிப்புகளுக்காகவும் பயன்படுத்த முடியும். அப்படித் தூர்வாராவிடால் தண்ணீர் விரயமாகி, சிறு வாய்க்கால்கள் எல்லாம் உடைப்பு எடுத்து விவசாயத்திற்கு பயன்படாமல், சமவெளிகளில் புகுந்து மக்களுக்கும் தொல்லையாக முடியும்.

இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று 15 நாட்கள் கழித்துத் தான் விவசாயிகள் கதறியபிறகு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதில் 100 நாள் வேலைத் திட்டம் வேறு நிறுத்தப் பட்டிருப்பதால் பெருமளவில் மக்களைக் கொண்டுவந்து இப்பணியில் ஈடுபட வைக்கவும் இயலவில்லை. கல்லணையிலிருந்தே நீர் திறந்துவிடப்பட்ட இந்த நிலையிலும், இதுவரை டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை என்பது தான் நிதர்சனம். 

அடுத்ததாக...,  முக்கியமான விஷயம், அரசாங்கம் சொல்வது போல் அனைத்து விவசாயிகளுமே இரண்டு போகம் பயிர் செய்யப்போகின்றார்களா? என்றால் அது தான் இந்த வருடத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.  

இதில் என்ன சவால் என்கின்றீர்களா? இது ஒரு வித்தியாசமான பிரச்சினை தான். சென்ற ஆட்சியில் நீர் மற்றும் நில வளங்களைப் பெருக்கும் நோக்கில் ஆற்றுப் படுகைகளில் நிறைய மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தார்கள். இதில் மாவட்ட அரசு நிர்வாகங்கள் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு டார்கெட் நிர்ணயித்து காடுகளை வளர்த்தார்கள். இது ஒரு அவசர அவசிய திட்டமாக நிறைவேற்றப்பட்டது. இப்படி வளர்க்கப்பட்ட மரங்களில் நிறைய கொடுக்காப்புலி மரங்களும் அடங்கும். வளர்க்கப்பட்ட இந்த காடுகள் அனைத்தும் வனத்துறை வசம் வந்தது. 

காடு வளர்ப்பது நல்ல விஷயம் தானே? இதில் என்ன தவறு கண்டீர்கள் என்கின்றீர்களா? நல்ல விஷயம் தான். குறை எதுவும் சொல்லவில்லை. காடுகள் உருவாகும் பொழுது அதோடு சேர்ந்து சில விலங்குகளும், பறவைகளும் உருவாவதும் இயல்பு தானே. அந்த வகையில் இந்தப் பகுதிகளில் நிறைய மயில்கள் பெருகி வளர ஆரம்பித்து விட்டன. "கிளிக்கு ரெக்க முளைச்சிடுத்து... ஆத்த விட்டு பறந்ந்து போயிடுத்து!" என்று சிவாஜி புலம்புவது போல, இந்த மயில்கள் வளர வளர அருகிலுள்ள வயல் பகுதிகளுக்கு வந்து, அங்கு வயல்களில் உள்ள பாம்புகளை பிடித்து உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இது தான் பிரச்சினையே!

யோவ்..! பாம்ப புடிச்சா நல்லது தானய்யா...? அதுல என்ன தப்பு கண்ட? நல்லா வாயில வருது... பேசாம போயிடுன்னு.. நீங்க கத்துறது காதுல விழுது. வெயிட்டீஸ்... இப்ப வரேன்...!!

அந்த பாம்பெல்லாம் குறைய ஆரம்பிச்ச உடனே, அதுங்களோட ரெகுலர் டயட்டான எலிகளுக்கு கொண்டாட்டமாயிடுத்து! இப்ப புரிய ஆரம்பிச்சிருக்குமே?! அதனால வரலாறு காணாத எலித் தொல்லையை டெல்டா விவசாயிகள் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்காங்க. 

விதைவிட்ட நெல்லையே, அளவுக்கு அதிகமாக பல்கிப் பெருகியுள்ள எலிகள் இரவோடு இரவாக காலி செய்து விடுகின்றன. வளர்ந்த நாற்றுகளையும் கடித்து வைத்துவிடுகின்றன. ஆகவே சொந்தமாக போர்செட் இல்லாத குறு விவசாயிகள் அனைவருமே, இந்த வருடம் மழை வந்த பிறகு (மழையில் எலித்தொல்லை கொஞ்சம் குறையும்) ஒரேயடியாக சம்பா மட்டும் நட்டுவிடலாம். இந்த வருடம் குறுவை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். 

இங்கு சொந்தமாக போர்செட் வைத்துள்ள பெறு விவசாயிகள் வசம் 60 சதவிகித விளை நிலங்களும் குறு விவசாயிகளிடம் 40 சதவிகித நிலங்களும் இருக்கின்றன. குறு விவசாயிகள் ஒருபோகம் தான் என்று தெள்ளத் தெளிவாக முடிவெடுத்துவிட்ட நிலையில் பெறு விவசாயிகள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் எலித்தொல்லைக்குப் பயந்து மழைக் காலத்திற்கு இன்னும் முழுதாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் பயிரை எப்படி பாதுகாப்பது? பாதிப்பு வந்தால் பெறு நஷ்டமாகிவிடுமே, குறு விவசாயிகளும் சேர்ந்து நடவு செய்தால் நஷ்டம் வரும்போது போராட்டம் நடத்தி நஷ்ட ஈடு பெறலாம், அதற்கும் வாய்ப்பில்லை என்கிற போது ரிஸ்க் எடுக்க தயங்கி விதை விட்டவர்கள் கூட நடவு செய்ய பின் வாங்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆக இங்கு காவிரி டெல்டா பகுதிகளில் சென்ற வருடங்களில் குறுவை சாகுபடி செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், இந்த வருடம் சம்பா மட்டும் ஒரு போகமாக பயிரிடும் முடிவுக்கு வந்து விட்டார்கள். இது தான் இன்றைய நிலை. 

இந்த நிலையில் வழக்கம் போல் ஜூன் 12 ஆம் தேதிக்குப் பிறகு தண்ணீர் திறந்து விட்டாலே கூட விவசாயிகளுக்கு பெரிய சந்தோஷம் இருக்கப் போவதில்லை. இது வெறும் புள்ளி விவர சாதனைகளுக்காக ஆட்சி செய்யும் அரசாக இல்லாமல், உண்மையிலேயே மாநில முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்படும் அரசாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக போர்க்கால அவசரத்தில் செய்ய வேண்டிய வேலை, டெல்டா மாவட்ட விளை நிலங்களில் பெருகியிருக்கும் எலிகளை ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி அழித்தொழிப்பது தான்.

கடந்த 20 நாட்களாக விவசாயிகள் பல வழிகளிலும் எலிகளை ஒழிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். குருணை என்றழைக்கப் படுகின்ற எலி பாஷாணத்தை எலிப் பொந்துகளில் போட்டுவிட்டால், எலி இறந்து போகும். ஆனால் ஒரு வாரத்திற்கு ஆடு, மாடுகள் வயல்வெளிப் பக்கம் சென்று விடக் கூடாது. பயிர்களுக்கும் கூட அது நல்லதில்லை என்கிறார்கள். பொறி வைத்துப் பிடிப்பது, கிட்டி வைத்துப் பிடிப்பது என்று விவசாயிகளுக்குத் தெரிந்த எந்தவொரு பழைய முறைகளுமே, இந்த வருடம் பல்கிப் பெருகியிருக்கும் எலிகளை ஒழிக்கப் பயன்படவில்லை. 

ஏனெனில் ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் இரண்டாயிரம் எலிகளை உற்பத்தி செய்கிறது.(அம்மாடியோவ்வ்!!). எட்டு எலிகள் ஒரு தனி மனிதனுக்குத் தேவையான உணவை சாப்பிடுகின்றன. அவை தான் சாப்பிடுவதை விட மூன்று மடங்கு அதிகமாக உணவுப் பொருட்களை வீணடிக்கின்றன!





 

நண்பர்களே, இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன், விவசாயிகளுக்கு முன்னே உள்ள உடனடிப் பிரச்சினை எதுவென்று?! ஆனால் அதுகூடத் தவறு தான்! ஏனெனில் இது அவர்களுடைய பிரச்சினை அன்று. ஏனெனில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளுமே ஏதாவது ஒரு மாதச் சம்பள வேலையிலோ அல்லது சிறு தொழில் ஒன்றை செய்து கொண்டோ தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு வழி தேடிக் கொண்டுவிட்டார்கள். அவர்களுடைய சாப்பாட்டிற்கான தேவைக்குரிய நெல்லும் பயிர்செய்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் ஒரு 40 சதவிகித நெல் உற்பத்தி பாதிப்பு என்பது அரிசியில் மிகப் பெரிய விலையேற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அவை அனைத்துமே நம் தலையில் தான் வந்துவிழும்!!

ஆகையால் மக்களே தயை கூர்ந்து இதை விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல், இன்னும் 6 மாதத்தில் நம்மையும் பாதிக்கப் போகின்ற பிரச்சினை என்பதை உணர்ந்து, அவரவர்க்கு ஏதுவான வழியில் இதை அரசாங்கத்தின் காதுகளுக்கு கொண்டு செல்வது நமது கடமை என்று எண்ணுங்கள். ஆவண செய்யுங்கள்.

கர்நாடகாவிலிருந்து நீர்வரத்து இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இருக்கின்ற நீரை இப்பொழுதே திறந்து விட்டால், தூர்வாருதலும் முடிவுறாத நிலையில், பெறுமளவு விவசாய வேலைகளும் ஆரம்பிக்காத நிலையில் அது வீண் விரயமாகிவிடும். இன்னும் பத்து நாட்களுக்குள் நீர் மட்டம் 70 அடிக்கு கீழே சென்றுவிடும். இந்த வருடம் ஆடி மாதத்திற்கு பிறகே பெறுமளவு விவசாயிகள் சம்பா பயிரிடுவதற்காக முற்படும் பொழுது, பெரிய அளவில் நீர்த்தேவை இருக்கும். 

அந்த நேரத்தில் அணையின் நீர் மட்டம் குறைவாக இருந்தால் இங்கு விவசாயம் பாதிக்கும். இப்பொழுது கேரளாவில் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தென்மேற்கு பருவ மழை, ஆடியில் இங்கு காற்று ஆரம்பித்து அடிக்கும் பொழுது தான் கர்நாடகா பக்கமாக வந்து, அங்குள்ள நான்கு அணைகளையும் நிரப்பி விட்டு, ஆடிமாதக் கடைசியில் தான் மேட்டூருக்கு வரும் அளவிற்கு வழிவகை செய்யும். ஆகவே ஆடி மாதத்தில் முதல் இருபது நாட்களுக்கு இப்பொழுது சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை பயன்படுத்தினால தான் விவசாயிகளுக்கு உண்மையான பலனாக அது அமையும்!

அதன் பிறகு ஆடிக் கடைசியும், ஆவணியும் கர்நாடகாவிலிருந்து கிடைக்கும் உபரி நீரை வைத்துக் கொண்டு ஓட்டிவிடலாம். அதற்குப் பிறகு இருக்கவே இருக்கின்றது நம்முடைய வடகிழக்குப் பருவமழை!. 

ஆக.. நண்பர்களே இப்பொழுது நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், முன்கூட்டிய அணை திறப்பு சாதனையா? அல்லது வேதனையா? என்று!!!




கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

8 comments:

முனியாண்டி said...

அருமையாக அலசி ஆராய்ந்த பின் எழுதப்பட்ட கட்டுரை. இன்னும் சில ஆதாரங்களை சேர்த்து எழுதி இருக்கலாம்!

முனியாண்டி said...

//////இந்த மயில்கள் வளர வளர அருகிலுள்ள வயல் பகுதிகளுக்கு வந்து, அங்கு வயல்களில் உள்ள பாம்புகளை பிடித்து உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இது தான் பிரச்சினையே!////////

உண்மைதான் நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்

Anonymous said...

கருத்துரைக்கு நன்றி முனியாண்டி அவர்களே.

Kousalya Raj said...

விவசாயி என்கிற ஒரு இனம் என்றும் யாராலும் சரியாக கவனிக்கபடாமலேயே இருக்கிறது...விவசாயம் அதற்கு தேவையான தண்ணீர் அவசியமான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும்...மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவதின் காரணமாக ஏற்படக்கூடிய சங்கடங்கள், சிக்கல்கள் பற்றிய இந்த பதிவு மிக தேவையான ஒன்று.


// 40 சதவிகித நெல் உற்பத்தி பாதிப்பு என்பது அரிசியில் மிகப் பெரிய விலையேற்றத்தை//

பொதுமக்களின் பிரச்சனையும் தான் என்பதை மிக தெளிவாக விவரமாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.

விவசாயிகளின் ஆலோசனை கேட்கபட்டதா என்பது தெரியவில்லை. கேட்பது நலமாய் இருக்கும்

மயில், எலி இவைகளின் தொந்தரவு வேற ! என்ன செய்வார்கள் விவசாயிகள்...!?

பதிவிற்கு நன்றிகள் + பாராட்டுகள்

Anonymous said...

@ கௌசல்யா,

பாராட்டுக்கு நன்றி
.

thendralsaravanan said...

எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் என்பது புரிகிறது!
நல்லா விஷயத்தை அலசியிருக்கீங்க!
நன்றி!

Aruna said...

aruna

நல்லா விஷயத்தை அலசியிருக்கீங்க!
நன்றி! நன்றி! நன்றி!

Madhavan Srinivasagopalan said...

அடடே.. இம்புட்டு மேட்டர் இருக்குதா ?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes