Wednesday, June 22, 2011

முரசுகள் ஒலிக்கட்டும்....! விழிப்புணர்வு போருக்கான ஒரு அழைப்பு!


இம்மையில் யாம் எதைக் கொண்டு தெளிவது எம் பரம் பொருளே....! சுற்றி சுற்றியிருக்கும் சுற்றலில் விரிந்து பரந்திருக்கும் மாயையின் ஆட்சியில் வெருண்டு மருண்டு ஒடுங்கி ஒழிவதைத் தவிர வழியற்றுப் போயிருக்கும் எமது யாக்கைகளுக்கு ஏதாவது ஒரு ஊன்று கோல் கொடு.....

விடுபட்டு விடுபட்டு....விலகி விலகி வாழும் வாழ்வில் பெறும் நிம்மதிகள் சர்வ நிச்சயமாய் நிம்மதியின் சாயலில் இருப்பதாகவே படுகிறது. இங்கே இன்னொரு குருசேத்ர போர் தேவை.....

எங்கே....அர்சுனன்...எங்கே.....பரமாத்மா..???? பாரதத்தோடு பணி முடிந்து விட்டது என்று போய்விட்டீர்களா? எங்கே எங்கள் ரசூல்(ஸல்).....எமக்கான போர்களுக்கு நீங்கள் மீண்டும் தேவை என்பதை மறந்து விட்டீர்களா? எங்கே ஜீசஸ்...... சிலுவையை சுமந்து மனித பாவங்களை ஒழிக்க நீங்கள் வாழ்ந்து காட்டியதால் வலிஅறியாது.... நிகழ்கிறது இங்கே....ஓராயிரம் அட்டூழியங்கள்........!!!!

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

பரமாத்மா நீங்கள் வந்து தேரோட்டினாலும் சரி...இல்லை..ரசுலே (ஸல்), நீங்கள் முன்னின்று வழி நடத்தினாலும் சரி அல்லது எங்கள் தேவனே......நீர் வந்து வழி நடத்தினாலும் சரி...இங்கே....மாய்க்கப்பட வேண்டிய விடயங்கள் குவிந்து கிடக்கின்றன....மூலைக்கு மூலை....

வேலையில்லாமல் வீதிக்கு வீதி அலையும் எம் இளைஞர் கூட்டம் ஒரு பக்கம்,விலை வாசி ஏற்றத்தால் குரல்வளைகள் பிடிக்கப்பட்டு விழி பிதுங்கும் எம் மக்கள் ஒரு பக்கம்....., விவாசாயத்தை நம்பி நம்பி...வானமும் பொய்க்க....வாக்களித்த படி வரத்து நீரும் வராமல் பொய்க்க.... வாடிப்போய் காலியாகும் எம் கிராமங்கள் ஒரு பக்கம்.....எமது வறுமையை சாதகமாக்கி , எமது சூழ் நிலைகளை சூத்திரங்களாக்கி....வழிகெடுக்க மூட நம்பிக்கை ஆன்மீகங்கள் ஒரு பக்கம்.......

வயிற்றுப் பசியில் போராடும் எம்மக்களுக்கு வாக்களிக்க வாய்க்கரிசி போடும் அரசியல் வாதிகள் ஒரு பக்கம்...கற்றாலும் விசால பார்வையற்று சுயநலமாய பொதுநலம் பேசும்....இருண்ட மூளைகள் ஒரு பக்கம்....என்று சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறது எமது வாழ்க்கை.........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வாழ வழி சொல்லா......நிமிர்ந்து நிற்க கைகொடுக்கா வாய்கள்...இன்று கதைக்கும் கதைகளின் பின்ணனியில் தம்மின் அறிவுகளை கடை பரப்பு முயற்சிகள்தானே இருக்கிறது...? எமது தேசம் எமது மாண்பு எமது பிரச்சினைகள்......எமது வலிகள்....மருந்து கொடுக்க கரங்களைத்தானே கேட்கிறோம் நாங்கள்? எமக்கு அறிவுரைகள் வேண்டாம்....அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ...வலிக்க வலிக்க பேச வாய்களும்.....கருத்துக்களையும், புத்தக உதாரணங்களையும் கூற எம்மிடம் மூளைகளும் நிறையவே இருக்கின்றன.....நாங்கள் கேட்பது வாழ்க்கை கல்வி........ஏதேனும் வழி உண்டா அதற்கு....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

மழையில் ஒழுகும் எமது கூரைகளை எப்போது மாற்றுவோம்.....? வயதுக்கு வந்த எம் பெண்ணின் திருமணத்தின் செலவுகளுக்கு என்ன செய்வோம்.....? வளர்ந்த பையனின் கல்விக்கு என்ன செய்வோம் என்று கணக்குப் போடுமா எங்கள் மூளைகள் இல்லை...உங்களின் வெற்று  வியாக்கியானங்களையும் .....கர்வ அறிவுகளின் கூவல்களையும் வேடிக்கைப் பார்க்குமா.....? எங்களது இப்போதைய கவலை எல்லாம்..தக்காளி விலை குறையுமா....வெங்காயத்தின் விலை ஏன் ஏறிக் கொண்டே போகிறது ஏன்?.. பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்பதுதான்..........

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

காலங்கள் தோறும் செருப்பு இன்றி சகதியில் உழவு வேலை செய்கிறாரே...அந்த முத்துசாமி......அவரின் வாழ்க்கை மாற ஒரு உபாயம் சொல்லுங்கள்....? படித்து முடித்து வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டிய குடும்பச் சூழலால் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில்...

பொருளாதரம் வேண்டும்  முடங்கிக் கிடக்கிறதே இந்திய இளைஞர் கூட்டம்...அதுவும் திருமணம் செய்து விட்டு......குடும்பச் சூழல் காரணமாக மனைவியைப் பிரிந்து அவன் வெளிநாடுகளில் வாழ்கிறானே ஒரு இரத்த வாழ்க்கை அது பற்றி உங்களுக்கு ஏதேனும் ஒரு கற்பனையாவது இருக்கிறதா?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

வியாக்கியானம் பேசும் மூளைகள் கொஞ்சம் என்னுடன் சென்னையின் சேரிப் பகுதிக்ளை சுற்றிப் பார்க்க வருமா? செருப்பில்லாமல் கூவக்கரையோரம் குவிந்து கிடக்கும் வாழ்க்கையை வாசிக்க முடியுமா? மூக்குகளை பொத்திக் கொள்ளாமல்....அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை பங்கு போட முடியுமா? காலம் காலமாய் கலைந்து போயிருக்கும் எம் மக்களின் வாழ்க்கைக்கு தீர்வு இல்லை.....ஆனால் காமத்தை எப்படி அடுக்கி வைப்பது....? வாழ்க்கையில் எப்படி திமிர்கள் கொள்வது என்று வழிமுறை சொல்கிறீர்கள்.....

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

இடுப்பெலும்பில் சக்தியற்று நிற்கிற மக்களிடம் வந்து போர்ப்பயிற்சிகள் கொடுக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனும், அரசியல்வாதியும், கவிஞனும் பத்திரிக்கையாளனும் நான்கு சுவர்களுக்குள் மண்டியிட்டு போதை மாத்திரைகளை விழுங்கிவிட்டு எழுதுவது போல கற்பனையில் எழுதிக் கொண்டே இருந்தால் எதார்த்தப் பக்கங்களில் துருத்திக் கொண்டு இருக்கும் எலும்புகளை எப்படி பார்ப்பது.....?

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

தெளிந்த மானுடனாய் வாழவும்....சிந்தனைகளை கூட்டிக் கழித்து தீர்மானங்கள்
எடுக்கவும், வறுமையை துரத்தவும், கிராமப்புற பட்டதாரி இளைஞர்களை....சம காலத்து நிகழ்வுகளோடு கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தை எதிர் கொள்ளும் பயிற்சி அளித்தலும், விவசாய தொழில் நுட்பத்தில் புரட்சி செய்தலும், கிராமங்கள் என்ற நமது உயிர்துடிப்புக்ளை பாதுகாப்பதும்....மூத்த குடிமக்களை மரியாதையாகவும் அவரவர் குடும்பத்துடன் வாழும் வகையில் குடும்பங்களுக்கு தெளிவு கொடுப்பதும்........

முதியோர் இல்லங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இல்லாமல் போக ஒரு பெரும் புரட்சி செய்வதும், வாக்களிக்கும் போது நேர்மையாக  வாக்களிப்பதோடு தெருவோரங்களில் வீடுகளின்றி முடங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரும்பான்மை மக்களுக்கு வாக்களிக்க அதிகாரம் பெற்றுக் கொடுப்பதும்....என்று ஓராயிரம் வேலைகள் இருக்கிறது..... நமக்கு.......

எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!!

முதலில் எம் உயிர் உடலில் தங்கட்டும்.....! எம் சந்ததி தழைக்கட்டும்...குறைந்த பட்சம் வாழ வழி பிறக்கட்டும்.....ஆமாம் உயிரோடு முதலில் இருந்தால்தானே...மனிதனுக்கு கலாச்சாரமும் ,திருமணமும் இன்ன பிற....விவரிப்புகளும்

வாழவே வழியற்று போராடிக் கொண்டிருக்கும் அன்றாட சராசரி மக்களுக்கு தீர்வு சொல்ல நாவுகள் இருக்கின்றனவா...? .மூளைகள் இருக்கின்றனவா..........?

வாருங்கள் நமக்குத் தேவையான உளவியல் போரைத் தொடங்குவோம்.. ...! இந்த வலைப்பூ என்ற ஒப்பற்ற ஊடகம் மூலம்.............

கழுகு விவாதக் குழுவில் இணைய ...இங்கே சொடுக்கவும்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்..)

1 comments:

cheena (சீனா) said...

அன்பின் கழுகு - சிந்தனை நன்று - உடனடியாக ஒரு உளவியல் போர் தேவைதான். மறுப்பதற்கில்லை. செயல் படுவதில் தான் இடர்ப்பாடுகள் வரும். அவைகளை நீக்கி - செயல்கள் செய்ய அதிக காலம் தேவைப்படும். கழுகின் பார்வையினை ஏட்டில் பதித்ததோடு நில்லாமல் ஆக்க பூர்வமாகச் செய்ய இயலுமா எனபதனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். செயல் பட வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes