Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...!
அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான  ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம்,  யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு  போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.      

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.             

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !          

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும்  பாசனம் பெற்றன. 

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?! 

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து  போய் கொண்டிருக்கும் மக்கள் !!!  இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ  மன்னர்கள்  காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !! 

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

கழுகிற்காக
கெளசல்யா


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


8 comments:

சைதை அஜீஸ் said...

//காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!//

அதான் அணு உலையை ஒண்ணுக்கு ரெண்டாக தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளார்களே. பத்தாதா?
ரொம்ப பேராசைபா இந்த தமிழர்களுக்கு.

வீடு K.S.சுரேஸ்குமார் said...

நதிநீர் இணைப்பு,தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சரியாக பயன்படுத்தினாலே...தமிழகத்தின் தண்ணீர் தேவை ஓரளவு பூர்த்தியாகும் நம்ம அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்து CC கணக்கு போடுவதில் இருக்கிற அக்கறைய...கொஞ்சம் இதுலையும் காட்டினா நல்லாயிருக்கும்!

Yellow Rose said...

அமரா வதி,
அனைத்து தமிழர்க்கும்
இயற்கை தந்துள்ள
இன்னுமோர் தலை விதி..

'இணை' யாலே பிரச்சனை என்றால்
இணைக்க பெற்றோரால் பேசப்படுகிறது
அணையாலே பிரச்சனை என்றால் மட்டும்
பிரிக்க பெட்ரோல் வீசப்படுகிறது...!

நிலத்தால்
நீரால்
என் தமிழினம்
நிலையற்ற வாழ்வைப் பெற்றுள்ளது ...!!!

ஆனாலும்
என் தமிழக அரசியல்வாதிகள்
நிலையான பதவியைப் பெற்றுள்ளது...!!!

வாழும் மனிதர்களைக் கொன்று விட்டு
வாழத் தந்துள்ளதுள்ளதாம் வீடு

அட..! இது தானப்பா நம்
ஜனநாயக நாடு !!!

-- தனாகுட்டி...

இம்சைஅரசன் பாபு.. said...

// என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!! //
வகை வகையான தண்ணீர் தமிழ் நாட்டில இருக்கு ..தாகம் தீரும் வரை குடிக்கலாம் .. என்ன கொஞ்சம் தலை சுட்ட்ரும் ... அதிகமா சாப்பிட்ட வாந்தி வரும் ..தெருவுக்கு தெரு இருக்கே ....குளிர்ந்த பானம் ,சூடான பானம் இப்படி

ஆக மொத்தம் தமிழ் நாட்டுக்கு தண்ணில கண்டம் ,தண்ணில கண்டம்ன்னு சொன்னா யாரு கேக்குறா ...:))

Save Noyyal River said...

தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்

----நொய்யல் பாதுகாப்பு அமைப்பு

மௌனகுரு said...

Only pambaar is coming from kovilkadavu and there is not at all a bit space for a dam.... Then how?

மௌனகுரு said...

Marayoor is not a forest it has rice fields and sugarcane......

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes