சினிமாவில் கதாநாயகனாய் நடித்து அதை மக்கள் ஏற்றுக் கொள்ள ஏதேதோ அளவுகோல்கள் காலங்கள் தோறும் இருந்திருக்கின்றன. பெண்களைப் போலவே முகவெட்டும் செக்கச் செவலென்ற தேகமும், முதிர்ந்த சிவப்போடு கூடிய உதடுகளும், மைதா மாவினை பிசைந்து நிரவி விட்டது போல உடல் வாகும், இருந்து விட்டால் போதும்... கூடவே தனது நீணட் கூந்தலை சிக்கலெடுத்துக் கொண்டே கதாநாயகியோடு போதுமான இடைவெளிவிட்டு தனது சொந்தக் குரலில் கர்நாடக சங்கீதத்தில் பிச்சு உதறினால்...
ஒரு காலத்தில் மனிதர்கள் விரும்பி ரசித்தார்கள். அப்படியான ஆண்களைக் கண்டு பெண்கள் காதல் கொண்டு அலைந்தார்கள். தமிழ் சமுதாயத்தின் நீண்ட நெடு தொன் மரபில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பது பெரும்பாலும்தெருக்கூத்துக்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலமாகத்தான் தீர்த்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. கரடு முரடான ஆண்களும் பெருத்த மீசையும் திண்டு திமிலான உடம்பும் கொண்டு ஆஜானுபாகுவாக துள்ளிக் குதித்து ஆடிப் பாடி வருபவனை ரசித்து வந்த அந்த மரபு மெல்ல மெல்ல மறைந்து மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து உள் நுழைந்த மனிதர்களால் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு...
அழகு என்பதற்கு வேறு படிமாணம் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த திராவிட இன மக்களின் புத்திகளை சிதறடித்து அழகிற்கு வெவ்வேறு இலக்கணங்களை உட்புகுத்தியது. திராவிடனின் பூர்வாங்க நிறம் கருமை....மெல்ல மெல்ல சிறுமை ஆக்கப்பட்டது. இந்த மனோதத்துவ மாற்றப் புகுத்தலில் தோல் சிகப்பாய் இருப்பவர்கள் எல்லாம் மேன்மக்கள் என்று நம்பவைக்க பல உளவியல் விளையாடல்கள், அரசியல் சூழ்ச்சிகள் எல்லாம் மிகப்பெரிய காய் நகர்த்தலாய் தொடர்ந்து நிகழ்ந்ததின் விளைவு.....தோல் சிகப்பாய் இருப்பவர்களைக் கண்டு கூனிக் குறுகும் ஒரு தாழ்வு மனப்பான்மையை இயல்பாய் நம் மக்களிடம் தோற்றுவித்தது.
புறத்தில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் சரி செய்து விடலாம், ஆனால் மிக நுட்பமாக மனிதர்களின் மனதில் விதைக்கும் விதை மனோதத்துவ ரீதியாக உள் படிந்து அறிவியல் ரீதியாக அவை ஜீன்களின் வழியே கடத்தப்பட்டு, தத்தம் தலைமுறைகளுக்குப் புகுத்தப்படுகிறது. இப்படியான மாற்றங்கள் மிகக் கொடுமையானவை, இவற்றினை வேரறுக்க மீண்டும் அதே ரீதியிலான மனோதத்துவ மாற்றம் மக்களிடையே நிகழ்ந்து மீண்டும் அந்த தாழ்வு மனப்பான்மை தொடர்ந்து களையப்படவேண்டும்.
சரி.. விசயத்துக்கு வருவோம்...
இப்படியான தொடர் மனோதத்துவ தாக்குதலின் நீட்சிதான் திரையில் தனது ஆதர்சன கதாநாயகனையும் கதாநாயகியையும் செக்கச் சிவந்த மேனியோடு தரிசிக்க வைத்து ரசிக்கவும் வைத்தது.தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பகுதியை சிவந்த தோல் கொண்ட கதாநாயகரும், நாயகிகளுமே ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள். திரைப்படத்தில் நடிப்பதற்கு அழகு வேண்டும் என்ற ஒரு அளவுகோலை எவன் தீர்மானித்தான் என்றும் நமக்குத் தெரியாது? அழகு என்பதற்கு ஒரு அளவு கோல் வைத்தவன் யாரென்றும் அது சரியா என்றும் நமக்குத் தெரியது..!
1970களுக்குப் பிறகு சிகப்பு ஹீரோக்களை எல்லாம் நொறுக்கி அள்ளி ஓரம் கட்டிவிட்டு ரஜினிகாந்த் என்னும் வசீகரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு மிகப்பெரிய காரணமாய் திருவாளர் பாலசந்தர் ஐயா அவர்களின் மிகப்பெரிய துணிச்சலும், புதியதைப் படைக்க வேண்டும் என்ற ஒரு படைப்பாளிக்கே உரிய வேட்கையும் சராமாரியாய் உதவ... சிவாஜிராவ் என்னும் கருப்பு நிறக் கண்டக்டர்....ரஜினிகாந்தாய் மாறி தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு என்று கட்டியமைக்கப் பட்டிருந்த பாரம்பரியங்களை எல்லாம் உடைத்துப் போட்டார்.
அந்த அதிரடி சக்தியின் வீச்சில் ரஜினியின் அழகை விட வசீகரமாய் அவர் முன்னிறுத்தி விளையாடிய ஆயுதம் அவரது ஸ்டைல். சினிமா நடிகன் என்றால் ஒரு காலத்தில் கத்தி சண்டையும், குதிரையேற்றமும் இன்ன பிற மன்னர் காலத்து இளவரசர்களைப் போல பயிற்சிகளையும் பெற்றுத்தான் வரவேண்டும் என்ற இலக்கணங்கள் எல்லாம் மெல்ல அகல....ரஜினி அழகு என்று பொது புத்திகள் கற்பித்திருந்த அளவுகோல்களை எல்லாம் கடந்து திறமை, வேகம் மற்றும் வசீகரம் என்னும் கத்திகளைக் கொண்டு பொது புத்தியில் படுத்துக் கிடந்த முரண்பாடுகளை கொன்றுதான் போட்டார்.
இதுதான்.. இதுதான் இந்தக்கட்டுரையில் நான் கூறவரும் மனோதத்துவ மாற்றம்.
வசீகரம் என்னும் ஏவுகணையால் வெள்ளைத் தோல்தான் அழகு என்ற மாயை கிழியத் தொடங்கியது. கிழியத்தான் தொடங்கி இருக்கிறதே அன்றி அது இன்னமும் முற்றிலும் மக்களின் மனதிலிருந்து நீங்கவில்லை என்பதே நிதர்சனம். காரணம்...இது நூற்றாண்டுகளாய் நம்முள் படுத்துக் கிடக்கும் கடும் விசம் கொண்ட கொடு நாகம்....பொது புத்தியாய் சமுதாயத்தில் புரண்டு கொண்டிருக்கும் மாபெரும் அரக்கன். அவ்வளவு சீக்கிரம் இது மாண்டு போய்விடாது...
இன்னும் சொல்லப்போனால் வெள்ளைக்காரனை விட வசதியான நம் தேசத்து மக்கள், வெள்ளைக்காரனை விட பன்மடங்கு பலசாலியான இந்திய தேசத்தின் புதல்வர்கள், அறிவில் சிறந்து விளங்கிய பெருமக்கள் எப்படி அடிமைப்பட்டுப் போனார்கள்.. என்று யோசித்து பார்த்திருக்கிறார்களா?
வெள்ளைக்காரனின் நேரம் நல்ல நேரமாய்ப் போய்விட்டது....காரணம் மக்கள் வெள்ளை நிறத்தை மனோதத்துவ ரீதியாக மிரண்டு போய் பார்த்து அவர்களைக் கண்டு மிரட்சியிலேயே பயப்பட்டுப் போகும் அளவிற்கு அவர்களின் உள்ளமைகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. வர்ணாசிரமக் கோட்பாடுகளும் சாதி மத பேதங்களும் திணிக்கப்பட்டு அவன் மிரட்சியின் உச்சத்தில் திரண்டு நின்ற போது வந்து விட்டான் வெள்ளைக்காரன்...
மாறாக தமிழன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்திருந்த சங்ககாலங்களில் அவன் வந்திருப்பானேயானல் அவனது சங்கறுத்து விரட்டியடித்து இருப்பார்கள் செந்தமிழர்கள். காரணம் தோலின் நிறத்தையும் போலி அழகுகளையும் கண்டு அவன் அப்போது பயப்பட்டிருக்கவில்லை, மாறாக அறிவினை முன்னிறுத்தியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.. இன்றைக்கு தண்ணீரிலே முழ்கிக் கிடக்கும் தமிழனின் ஆதி தேசமான குமரிக் கண்டம்தான் பூமியிலேயே முதன் முதலில் மனிதன் தோன்றி செழித்து வளர்ந்து முச்சங்கம் வைத்து விஸ்வரூபமெடுத்து நின்ற இடம்.
காலத்தின் ஓட்டத்தில் அந்த இறுமாப்பின் அடர்த்தி தொலைந்து போய் எதுவெல்லாம் நமது வலிமையோ, எதுவெல்லாம் நமது பெருமையோ, அதை எல்லாம் சிறுமையாய் எண்ணும் ஒரு மனோபாவம் புகுத்தப்பட்டு, வெளியிலிருந்து வந்த அன்னியர்கள் கற்றுக் கொடுத்த பொய்யான மரபுகளால் நாம் நமது மூளைகளை சலவை செய்ய அனுமதிகள் கொடுத்தோம்.
இப்படியான பல பொய்யான கற்பிதங்களின் விசுவரூப கொடூர பொது புத்திதான் கருமை நிறத்தை சிறுமையாய் நினைக்கும் போக்கு...
அழகு என்பதற்கு உடற்கூறின் ஏற்ற இரக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் அளவு கோலாய் வைத்துப் பார்க்கும் ஒரு ஈனச் செயல்....
அகத்தின் அழகைப் போற்றிய ஒரு பெருங்குடியில் பிறந்து விட்டு...புற அழகிற்கு புனைப்பெயர்கள் வைத்து அதை நம்பி... இன்று வெள்ளைத் தோல் இருந்தால்தான் அழகு, பல்வரிசை சரியாயிருந்தால்தான் அழகு, நீண்ட கூந்தல் இருந்தால்தான் அழகு, அடர்ந்த புருவம் இருந்தால்தான் அழகு, கூரிய நாசி இருந்தால்தான் அழகு, வழ கொழ ஆங்கிலத்தை தமிழில் புகுத்திப் பேசினால்தான் அழகு, தலை நிறை முடியிருந்தால்தான் அழகு, இந்த நடிகரைப் போலிருந்தால் அழகு, அந்த விளம்பரத்தில் வரும் பெண்ணைப் போல இருந்தால் அழகு என்று எண்ணி எண்ணி புத்திகள் பேதலித்துப் போய் உலக அழகிகள், உலக அழகன்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன் படுத்திக் கொண்டே அழகு என்னும் பொய்யான வரைமுறைகளின் பின்னால் ஓடும் நாய்க்குட்டிகளாய் மாறி விட்டோம்...
வெள்ளை மனமும் கூரிய அறிவும், பரந்த மனமும், மனித நேயம் கொண்ட அகமும், சுத்தமும்தான் அழகு என்பதை நாம் இன்று ஒரு அளவு கோலாய் வைத்து பார்க்க முடியாத அளவிற்கு பொருளாதய உலகத்திற்குள் போலியான மனப்பாங்குகள் அடி எடுத்து வைத்து இன்று ஆளத் தொடங்கி இருக்கின்றன....எதேச்சதிகாரமய். ..
இந்த குரூர மனப்பாங்குதான்....சாம் ஆண்டர்சன்களையும், பவர்ஸ்டார்களையும் தெருக்கு தெரு மூலைக்கு மூலை நையாண்டியையும் கேலியையும் பேசி சிரிக்கச் சொல்கிறது....
சாலமன் பாப்பையாக்கள் எல்லாம் பேசத் தெரியாமல் போயிருந்தால்.... கவனிப்பாரற்றுப் போயிருப்பார்கள்..நிறம் என்னும் ஒரு காரணத்தால்....ஆனால் நிறத்தை அங்கே அறிவு வென்று அவர் அழகானவராகி மாறியதால் அவரை எப்படி ரசித்தோமோ
ரஜினி என்னும் மனிதரின் ஸ்டைல் என்னும் வசீகரம் விஸ்வரூபமெடுத்து நின்றதால் அவரை எப்படி ரசித்தோமோ....
அப்படியாய்..
மனிதர்களை அவர்களின் அறிவினையும், திறமையினையும் வைத்து எடை போடும் மிகப்பெரிய பக்குவ இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்படியான நகர்தலும் வளர்ச்சியும் தெளிந்த கூரிய புத்தியுடைய ஒரு சமுதாயத்தினை படைக்கும் என்பதோடு மட்டுமல்லமால்....தொன்மையில் நம்மிடமிருந்த பெருமைகளையும், உண்மையான பாரம்பரியங்களையும், மனிதர்களை திறமைகளை வைத்து கணித்து அழகினை ரசிக்கும் மெய்யான உணர்வுகளையும் நாம் மீட்டெடுக உதவும் என்று அழுத்தமாக கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
12 comments:
நிறைவான பதிவு. உண்மையும் கூட. வாழ்த்துகள்
பார்புகழும் தங்கத்தலைவன், எங்கள் அண்ணன், நடிப்புலக மன்னன், நெப்டியூன் புளூட்டோ வரை தமிழன் புகழ் பரப்பிய அழகுத்தமிழன் பவர்ஸ்டார் சார்பாக எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
இணைய பவர்ஸ்டார் பாசறை
கூகிள் மாவட்டம்.
எங்கள் தங்க தலைவன் ,தானைய தலைவன் ,மனித நேயம் மிக்க நடிப்பு விடி வெள்ளி ,அழகு தமிழில் இலக்கணம் மாறாமல் உச்செரிப்பில் அசத்தும் பவர் ஸ்டார் சார்பாக எங்கள் சிரம் தாழ்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் .
இப்படிக்கு
பவர் ஸ்டார் பரிவட்டம்
செவ்வாய் கிரகம் வட்டம் ..
follow up.......
வெளித்தோற்றத்தை வைத்து மனிதனை எடைபோடும் கேடுகெட்ட சமுதாயம் இது.. என்னதான் நாம் உரக்கக் கத்தினாலும் காதில் வாங்காது.
திறமை, தகுதி எல்லாமே அழகிற்கும் நிறத்திற்கும் அடுத்தபடி தான்.
நிழற்பிம்பங்களைக் கொண்டாடும் இந்த உலகம் நிஜமான மனிதர்களை, மனங்களை ஏறெடுத்துப் பார்ப்பது கூட இல்லை..
சொன்ன விதம் பிடித்திருக்கிறது…வாழ்த்துக்கள்
பன்னிக்குட்டி ராமசாமி,
இம்சை அரசன் பாபு,
வைகை
பவர்ஸ்டார், ஆண்டர்சன் சார்பா களமிறங்கி வாழ்த்து சொன்னதுக்கு நன்றி.,
கட்டுரை எப்படி இருக்கிறது அப்படின்னு சொல்லவே இல்லை., :))
கழுகு ஒரு விவாதக்களம். கருத்தினை வலுவாக எடுத்துவைக்கும் மேடை இது.,
அதனால இனி இது போன்ற சம்பந்தமில்லாத கமெண்ட்களை தவிர்க்கலாமே....
@ சிவா
கட்டுரையில் மறுப்பு சொல்றதக்கெல்லாம் ஒன்றுமே இல்லை. நல்ல கட்டுரை. ஒருவேள இந்த கட்டுரைய எழுதியவர் என் போட்டோவ பார்த்துருக்கணும்! அதான் எனக்காக எழுதுனமாதிரி இருக்கு! பொதுவாக நானெல்லாம் கழுகு கட்டுரைக்கு கருத்து சொன்னா ஒன்னு குறை சொல்றேன்.. இல்லைனா விவாதம் பண்ண மட்டுமே இங்க வர்ற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. ஒரு மாறுதலுக்காக கொஞ்சம் சீரியஸா இல்லாம கருத்து சொல்வோம்னுதான் அதை போட்டேன்..மற்றபடி உள்நோக்கமெல்லாம் எதுவும் இல்லை. எனது கருத்தால் கட்டுரை எழுதியவருக்கு ஏதேனும் வருத்தமென்றால் அவருக்கு எனது வருத்தங்களும். புரிதலுக்கு நன்றி!
@வைகை
கட்டுரை எழுதியவருக்கு வருத்தமெல்லாம் இல்லை.:) எனக்கு கும்மி களை கட்டுதோ அப்படின்னு ஒரு சந்தேகம். உரிமையுடன் கேட்டேன். நட்பு ரீதியிலான கமெண்ட் என்று நீங்கள் சொன்னதில் மகிழ்ச்சி :))
கழுகு கருத்தை வலுவாகச் சொல்ல வேண்டும். அதே சமயம் அனைவருடனும் நட்பை பேண வேண்டும். இதற்கான முயற்சிதான் உங்களிடத்தில் இந்த உரையாடல். நன்றி வைகை:)))
அகததின் அழகே அழகு என்பதை ஆணித்தரமாய் சொன்ன கட்டுரையாளருக்கு நன்றி. புறஅழகென்பது நிலையில்லாதது. அகத்தின் அழகு அழிக்க முடியாதது.
அன்னை தெரசாவின் அகஅழகால் அகிலத்தையே வசியப்படுத்தினார். அவர் இறவாப்புகழடைந்தார்.
இப்போது காலங்கள் மாறுகிறது சகோ....மக்கள் மனங்களில் மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. திறமை, நற்செயல்கள் அனைத்தையும் மதிக்கும் மனப்பாங்கு மக்களிடம் வளர்ந்துள்ளது.
//ரஜினி அழகு என்று பொது புத்திகள் கற்பித்திருந்த அளவுகோல்களை எல்லாம் கடந்து திறமை, வேகம் மற்றும் வசீகரம் என்னும் கத்திகளைக் கொண்டு பொது புத்தியில் படுத்துக் கிடந்த முரண்பாடுகளை கொன்றுதான் போட்டா//சாலமன் பாப்பையாக்கள் எல்லாம் பேசத் தெரியாமல் போயிருந்தால்.... கவனிப்பாரற்றுப் போயிருப்பார்கள்.//அழகு என்பதற்கு உடற்கூறின் ஏற்ற இரக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் அளவு கோலாய் வைத்துப் பார்க்கும் ஒரு ஈனச் செயல்....//அகத்தின் அழகைப் போற்றிய ஒரு பெருங்குடியில் பிறந்து விட்டு...புற அழகிற்கு புனைப்பெயர்கள் வைத்து அதை நம்பி...//அழகான வரிகள்!!
Post a Comment