Thursday, April 26, 2012

சினிமா என்னும் கலை...!



எத்தனையோ கலைகள் இருந்த போதிலும் சினிமாவிற்கு மட்டும் ஏன்இவ்வளவு மவுசு. சினிமா மட்டும் எதனால் பெரும்பாலும் சகலமானவருக்கும் பிடிக்கிறது.சினிமாவின் தாக்கம், வீரியம் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரும் வணிகம் சார்ந்த கலையாக சினிமா மட்டும் எப்படி உருவானது. இது முற்றுப்பெறாத முடிவில்லா கேள்வியாக இன்றுவரை இருந்து வருகிறது. மனித மூளைகளைத் தாண்டி மனிதமனங்களோடு பேசுகின்ற ஒரே சாதனம் கலை வடிவம் தான். கதை,கவிதை, இசை, நடனம்,ஓவியம், நாடகம்,பேச்சு, நிகழ்த்துக்கலை என்று நீளும் பல்வேறு கலைவடிவங்களில், ஏதாவது ஒன்றையாவது பிடிக்காத ரசிக்காத ஒரு மனிதன் கூட உலகில் இல்லை. அத்தனை கலை வடிவங்களும் ஒன்றிணைந்து தொழில் நுட்பத்தோடு திரையேறுகையில் அது மொத்த மனித சமூகத்தையுமே கவ்விப்பிடிக்கிறது.மொத்த மனிதர்களின் கலைதாகத்தை தீர்க்கின்ற போது அது மிகப்பெரும் சந்தையாகவும் உருவெடுக்கிறது.
 
 அதன் விளைவு இலக்கியவாதிகள், கலைஞர்கள் உலாவ வேண்டிய திரைத்துறை, வணிகர்களும், பெருமுதலாளிகளும் உலாவுகின்ற சந்தையாகமட்டும் மாறிப்போகிறது.இது தான் நம்மில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சுருக்கமான பதில்.
 
1940களில் வாசன் பி ச் ச ர் ஸ் தயாரித்து வெளியிட்ட சந்திரலேகாதிரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவானது. அதனை முதலில் திரையிடும் போது இந்தியாவின் மூத்த சினிமா கலைஞர் "அஸ்வகோஷ்''சை அழைத்திருந்தனர்.பிரம்மாண்டமான செட்டுகள் போட்டு, வேறு யாரும் தயாரிக்கமுடியாத பெரும் படமாக சந்திரலேகா இருந்தது. மொத்த இந்தியாவும் பிரம்மிப்பில் வாய் பிளந்து நின்றபோது.அஷ்வகோஷ் தமிழ் சினிமாவின் தரம்
உயர்ந்துவிட்டது என்று கூறுவார் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதோ, ”தமிழ் சினிமாவை இனி யாராலும் காப்பாற்ற முடியாதுஎன்று. இதே வாசகம் கடந்த ஆண்டு பல
தேசிய விருதுகளைப் பெற்ற இன்றைய எந்திரன் வரை பல படங்களுக்கும் பொருந்தும்.
 
அவர் சொன்னதன் பொருள் பெரும் பொருட்செலவும் பிரம்மாண்டமும் மட்டும் திரைப்படத்தின் தரத்தினை தீர்மானிக்காது.உயிர்ப்புள்ள கதையும்,அதை மனித மனங்களில் அசைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் நகர்த்தும் விதமும்தான் நல்ல திரைப்படம். அப்போது பொருளே தேவையில்லையா என்றால், தேவைதான்,ஆனால் அது படத்தின் உயிர்ப்பை தின்றுவிடக்கூடாது.
 
சரி நல்ல சினிமா எப்போது அதிகமாக வரும் என்றால் நல்ல சினிமாக்களை பார்ப்பவர்களும், நல்ல சினிமாவை எடுப்பவர்களும் அதிகமாகும் போது நல்ல சினிமா இயல்பிலேயே அதிகமாகவரும். உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் என்று சொல்லப்படும் எந்த சினிமாவும் படம் எடுக்கப்பட்ட மொழியினை, மண்ணைத்தாண்டி எந்த வெளிநாட்டிலும் படம் பிடிக்கப்படவில்லை.ஆனால் நம்மூரில் கரிசல் காட்டில் வாழும் பெண்ணாக இருந்தாலும் கூட பெரும்பாலும் அவர்களின் கனவுக்காட்சிகள் வெளிநாட்டில் தான் படம் பிடிக்கப்படுகிறது. அவர்களின் உடைகள் முதல் உரையாடல் வரை மொத்தமும் அந்த கதைக்கான மண்ணில் ஒட்டாமலேயே அந்தரத்தில் நிற்கிறது.
 
இது சந்தையை மையப்படுத்தியதன் விளைவே. இதை எப்படி சரி செய்து ஒரு எழுத்தாளன் ஒரு பேனா, பேப்பரை வைத்து தன்னுடைய படைப்பினை மிக எளிமையாக எழுதி முடிக்கிறான். அதேபோல் ஒரு இயக்குனர் ஒரு கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு தன்னுடைய சிந்தனையை படமாக்கிவிட முடியாது. அவருக்கு ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,இசையமைப்பாளர், தயாரிப்பாளர், என்று
தொடங்கி லைட் பாய் வரை அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது. இது ஒரு மிகப்பெரும் ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பணியாகிறது. இதற்கிடையில் ஒரு நல்ல சினிமாவை படைப்பது என்பது ஒரு பெரும் போராட்டமே. எதை மக்கள் ரசிக்கிறார்களோ அதற்குத்தான் தயாரிப்பாளர் என்கின்ற  முதலாளி தன் பணத்தை முதலீடு செய்ய முடியும் என்கிறார். அப்போது மக்களின் ரசனை என்பது இங்கு மிக முக்கியமானதாக
இருக்கிறது.
 
சரி மக்களின் ரசனையை உயர்த்துவது எப்படி. நல்ல திரைப்படங்களை,உலகத்தரம் வாய்ந்த சிறந்த திரைப்படங்களை
தொடர்ச்சியாக மக்களுக்கு திரையிட்டுக்காட்டும் பொழுதும், அதன் மீதான ரசனையை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர முடியும்.இப்போது எடுக்கப்படும் படங்களின் குறைகளை எளிதில் புரிய வைக்க முடியும்.இதன் மூலம் குப்பைகளை, மசாலா படங்களை தானாகவே மக்களை தவிர்க்க வைக்க முடியும். இதுபோன்ற சூழல் வரும் போது பணம் போடும் தயாரிப்பாளர்கள்
நல்லபடம் நோக்கி தன் முதலீடுகளை எளிதில் திருப்புவார்கள்.
 
இதனால் நமக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கக்கூடும். நல்ல சினிமாக்கள் வரும் போது அது நல்ல சிந்தனைகளை
பேசும், நல்ல சிந்தனைகள் சமூக மனங்களில் பல கேள்விகளை எழுப்பும்,சரி தவறு குறித்து விவாதிக்க உதவும், நல்ல சிந்தனைகளை விவாதிக்கும் சமூகம், நல்ல சமூகமாக மாறி தன் ஒப்புதலைத்தரும். நல்ல சமூகமாக நம் சமூகம் உருவாக வேண்டும் என்கிற நம் எண்ணங்களுக்கு சினிமா மிகப்பெரும் உதவும் சக்தியாக இருக்கும்.
 
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கும் குறையாமல் படம் ( டி.வி ) பார்க்கிற சமூகமாக உலகமேமாறிப்போயுள்ளது. அப்படி இருக்கையில் நம் வீடுகளில் நல்ல சினிமாக்களை, நல்ல குறும்படங்களை/திரைப்படங்கள்/ஆவணப்படங்களை அந்த நேரங்களில் பார்த்து ஏன் விவாதிக்கக் கூடாது.நல்ல திரைப்படங்களை மக்கள் கூடும் இடமெல்லாம் நாம் ஏன் திரையிட்டுக்காட்டக்கூடாது. நம் குடியிருப்புப் பகுதிகளின் நாம் ஏன் திரைப்பட மையங்களை உருவாக்கக்கூடாது. நல்ல சினிமாவிற்கான இயக்கங்களை நாமே ஏன் கட்டக்கூடாது. வங்கத்திலும், மலையாளத்திலும் இது போன்ற இயக்கங்கள் தான் அங்கு நல்ல சினிமாக்களை உருவாக்க உதவிபுரிந்திருக்கின்றன.
 
 அதோடு அரசும் பள்ளிப்பாடங்களில் இலக்கியப்பகுதிகளில் நல்ல சினிமாவையும் தனிப்பகுதியாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அறிஞர் அண்ணா ""ஒரு படத்தையாவது எனக்கு தணிக்கை இல்லாமல் அனுமதித்துப் பாருங்கள்”, என்றதற்கும் மக்கள் பட்டினியிலும்,வேலையின்மையிலும் உலாவும் போது, கடந்த தமிழக அரசுஇலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கியதையும், இதோடு பொருத்திப்பார்த்தால்தான் நல்ல சினிமாவும் சமூகத்தேவையே என்பது புரியவரும். நல்ல சினிமாக்கள் உருவாகும்போது அதனை மட்டுப்டுத்த மசாலா படங்களை பெரும் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உள்ளே திணிக்க முயலும் அதற்கு எதிராக இயக்கம் நடத்துவதும்,அதற்கு எதிராக நாம் உருவாக்கியுள்ள திரையிடல் மையங்களில் நல்ல படங்களை திரையிடுவதும் சமூகத்திற்காக பணியாற்றுபவர்களின் பணியே!.
 
நன்றி : களப்பிரன்
 
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

1 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல சினிமாக்கள் வரவேண்டும்.நல்லவற்றை மட்டும் ரசிக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுதற்குரியது. நல்ல பதிவு.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes