Monday, April 30, 2012

எது ஆன்மீகம்...? போலி பரப்புரைகளுக்கு ஒரு சவுக்கடி...!

' உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

- விவேகானந்தர் 




சித்தாந்தங்களும், தத்துவங்களும், கோட்பாடுகளும் கடந்த தனிமனித ஆன்ம விழிப்பே....சமூகத்தை சீர்திருத்துமென்ற கருத்தினை வலுவாய் பதிந்தபடி கட்டுரையைத் தொடர்கிறோம்.

அது என்ன ஆன்ம விழிப்பு...?

இது கடவுளோடு சம்பந்தப்பட்டதா? மதத்தோடு தொடர்புடையதா? சடங்குகளின் மீது சவாரி செய்வதா? சாதிப் பிரிவுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்வதா? அரசியல் சித்தாந்தங்களின் மீதேறி நின்று பயணிப்பதா? இது கொள்கையா? கோட்பாடா? தத்துவமா? பொழுது போக்கா? வாழ்க்கையோடு தொடர்புள்ளதா? தொடர்பற்றதா?

இப்படியாய் எழும் எல்லா கேள்விகளையும் வேரோடு பறித்து எறியுங்கள்...!

ஏனென்றால் ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமத்தை நாம் கையாளும் போது பலருக்கு மதவாதிகள் புகுத்தி வைத்திருக்கும் பல சடங்குகள் தங்களின் மனக்கண் முன்னால் வந்து கரகாட்டம் ஆடத்தொடங்கும். ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமாணத்தைக் கடவுள் தேடல் என்ற வார்த்தையோடு முடிச்சிட்டு வைத்திருக்கும் பொது புத்திகள், ஆன்மீகம் என்றால் ஏதோ ஒரு மதம் தொடர்புடையது அல்லது ஏதோ ஒரு மதம் சார்ந்து கடவுளைத் தேடுவது என்றெல்லாம்  தொடர்ச்சியான கற்பிதங்களை புறத்தில் செய்தியாகவும், எண்ணங்களின் மூலம் அதிர்வுகளாகவும், ஜீன்களின் மூலம் குணாதிசயங்களாகவும் தொடர்ந்து பரப்பி வந்து கொண்டே இருப்பதின் விளைவுதான்...

ஆன்மீகம் என்றாலே அது மதம் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் நமக்குள் எழுவதற்கு காரணம். மிகைப்பட்ட பேர்கள் ஆன்மீகம் என்ற சொன்ன மாத்திரத்திலேயே அது வாழ்க்கைக்கு எதிரானது என்று எண்ணி அது பற்றி பேசவே பயந்து அது என்னவோ வயதான காலத்தில் மரணத்தின் போது கற்றுக் கொள்ளும் பாடம் என்று காத தூரம் போய்விடுகிறார்கள்.

இன்னும் சிலரோ நாங்கள் கடவுளே இல்லை என்று கூறுபவர்கள். எங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இருக்கிறோம், வாழ்கிறோம் இந்த ஆன்மீகம் என்பது எல்லாம் பொய் என்று சொல்கிறார்கள்...ஏனென்றால் ஆன்மீகம் என்றால் அவர்களின் பார்வையிலும் மறைமுகமாய் கடவுள் என்னும் கற்பனை  கதாபாத்திரத்தின் அரியாசனம் என்றுதான் அவர்களும் நினைக்கிறார்கள்...!

அன்பான புரிந்துணர்வு கொண்ட உறவுகளே...

ஆன்மீகம் என்பது கடவுள் தேடல் அல்ல; ஆன்மீகம் என்பது கற்பனையில் ஏதோ எண்ணிக் கொண்டு எங்கோ நகர்வது அல்ல்; ஆன்மீகம் என்பது வானிலிருந்து தேவதூதர்கள் வந்து தன் வாழ்க்கையைச் சீராக்குவார்கள் என்று நம்பும் மூடப்போக்கல்ல;ஆன்மீகம் என்பது சாமியார்களின் காலடியில் கவிழ்ந்து கிடப்பது அல்ல; ஆன்மீகம் என்பது கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் முயற்சியல்ல; ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு சில புத்தகங்களில் ஒளிந்திருக்கும் இறுதி உண்மையல்ல.....

இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்பது வாழ்க்கையை மறுப்பது அல்ல; அது வாழ்க்கையை முழுமையாய் ஏற்பது;

எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ எது, எது  நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதோ அதை மறுக்காமல் ஏற்று அதை முழுமையாய் நிகழ்த்திக் காட்டுவதே ஆன்மீகம். அப்படியான செயல்களைச் செய்யும் போது இந்த செயலைச் செய்து நான் வெற்றி பெற என்னைச் சுற்றி ஏராளமான மனிதர்கள் எனக்கு  உதவியிருக்கிறார்கள், இயற்கை எனக்கு உதவியிருக்கிறது, பல சூழல்கள் உதவியிருக்கிறது, என்னால் மட்டும் இது விளைந்தது அல்ல; என் செயல்களின் விளைவுகள் கூட்டு முயற்சி என்ற தெளிவினை உள்வாங்கிக் கொண்டு நகரும் போது...

இதை நான் தான் செய்தேன் மேலும் என்னால் மட்டுமே செய்ய முடியும் என்பன போன்ற மாயக்கட்டுக்கள் தானே உடைந்து போகும். செய்யும் செயல், அதனை எப்படி செய்வது? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? என்றெல்லாம் உணர்ந்து தனக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் சூழலுக்கும் குந்தகம் இல்லாமல் வாழும் ஒரு வாழ்க்கைதான் விழிப்புணர்வான வாழ்க்கை. மனிதர்களை எதிர்கொள்ளும் போது எதிராளியின் மனோநிலையிலும் நின்று அவர்களின் கருத்துகளை ஆராயத் தொடங்கும் போதுதான் அவர்களின் புரிதலும் முரண்களும் நமக்குத் தெளிவாய் தெரிகின்றன.

நாம் எப்போதும் நமது நியாயங்கள், நமது தேவைகள், நமது புரிதல்கள் இவைதான்  உலகின் இறுதி உண்மைகள் என்று எண்ணி விடுகிறோம். இது ஒரு மிகப் பெரிய மாயை. நாம் ஏற்றிருக்கும் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும், புரிதல்களும் நமது சூழலினால் நமக்கு வசதியானவையாகத் தோன்றுகின்றன. அது எல்லோருக்கும் வசதியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் அறியாமையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில்...

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் யார்? என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதைப் பின்பற்றுகிறோம்? அப்படி பின்பற்றுவதின் பின்னால் ஒளிந்திருக்கும் தனது சுயநலங்கள் என்ன..? என்ன? தன் சுயநலத்தால் தன்னைச் சார்ந்திருக்கும் எத்தனை பேர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்? எது சரி? எது தவறு? 

என்றெல்லாம் பகுத்துப் பார்க்கவேண்டும். அப்படி பகுத்துப் பார்க்க தன் உள்ளமையான ஆன்மா என்னும் உயிர்ச் சக்தியினை பற்றிய புரிதல் வேண்டும்.

நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும்தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...?

என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு.

ஆன்ம விழிப்பு பெறும் போதுதான் நிஜத்தில் ஒரு மனிதன் உண்மையாகவே பிறக்கிறான். இப்படியான ஆன்ம விழிப்பு வாழ்க்கையை மறுத்தல் கிடையாது. வாழ்க்கையை ஒதுக்குதல் கிடையாது. இது வாழ்க்கையை முழுமையாய் ஏற்றுக் கொள்ளுதல்.

ஒவ்வொரு மனிதரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்களே..ஆனால் பிரச்சினை எங்கே ஏற்படுகிறது என்றால் ஒருவரைப் பார்த்து அவர் போல தானும் இருக்க வேண்டும் என்று ஒருவன் ஆசைப்படும் இடத்தில்தான். அவரைப் போல வரவேண்டும் என்ற விருப்பம் சரி... என்று கொண்டாலும் தனக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன் வழியே பயணித்து அந்த எல்லையைத் தொட யாரும் விரும்புவதில்லை. ஏற்கெனவே ஒருவர் சென்ற பாதையை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று தன் இயல்புக்கு முரணான ஒன்றை தேர்ந்தெடுத்து தன் சுய அடையாளத்தை இழந்து கடைசியில் தொலைந்தே போகிறார்கள்.

ஒரு தலை சிறந்த ஆன்மீகவாதியே மிகச்சிறந்த வெற்றியாளனாக வாழ்க்கையில் பரிணமிக்கிறான். பணம் சேர்த்தல் என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாய் பார்க்கப் படும் மனோபாவம் போலியானது. பணக்காரர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது... பணம் என்பது வாழ்க்கையின் புறத்தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு காரணி...அவ்வளவே...

பணத்தின் தேவையும், அப்படி தேடியதின் காரணமும் அதனால் நிம்மதியும் கிடைக்க வேண்டுமெனில் ஒருவன் ஆன்ம விழிப்பு பெற்றவனாய் தன்னை உணர்ந்தவனாய் இருத்தல் வேண்டும்.

பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியாய் இருக்கிறார்கள், அவர்கள் தான் உலகின் சந்தோஷப் புருசர்கள் என்று யாரேனும் கூறினால்...அவர்களிடம் கேளுங்கள்...கோமணத்தோடு மலை மீது ஏறி எதுவும் வேண்டாம் என்று அமர்ந்தவர்கள் எல்லாம் துக்கத்தின் பிள்ளைகளா என்று? கோடிகளில் சந்தோசம் அடையலாம் என்றால்...இவர்கள் எல்லாம் எதைக் கண்டு  சந்தோஷித்து நிற்கிறார்கள் என்று...

நாம் இங்கே நிறுவ விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...

அதாவது கோடிகளில்தான் சந்தோசம் என்று நீங்கள் அதை நோக்கி ஓட்டமாய் ஓடவும் வேண்டாம்..., கோமணம் கட்டிக் கொண்டு மலை மீது துறவியாய் அமர்ந்திருப்பவரைக் கண்டு துறவியாகவும் ஓட வேண்டாம்...

மாறாக நிஜத்தில் நீங்கள் யாரென்று உணருங்கள். உங்களின் தேவை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்...எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள்...மேலும் எதைச் செய்தாலும் அதை முழுமையாக தெளிவாய்ச் செய்யுங்கள்..!

பிரியமான மக்களே...

ஜனநாயக அரசியல் என்னும் சமூக கட்டமைப்புக்குள் வாழும் நீங்களும் நானும் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்வோம்; யாரை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்வோம் ஆனால் முழுமையான ஆன்ம விழிப்பு பெற்றவர்களாக அதைச் செய்வோம்...அப்படி செய்வதை நமது உள்ளுணர்வு ஏற்றுக் கொள்கிறதா என்று ஒவ்வொரு முறையும் சரி பார்ப்போம்....!

இந்த சமூகம் என்று மட்டுமில்லை உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலுக்கும் இதுவரையில் வந்த எல்லா சித்தாந்தங்களும், கோட்பாடுகளும், மதங்களும்  முழுமையான ஒரு தீர்வை இதுவரையில் கொடுத்து விட முடியவில்லை. மாறாக அவை மக்களைப் பிரித்துப் போட்டு பைத்தியக்காரர்களாய் ஆக்கித்தான் வைத்திருக்கிறது...

மாறாக....

தெளிவான ஆன்ம விழிப்பே மானுட சமுதாயத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தி என்ற எமது சிங்க நாதத்தை கழுகு வாசகர்களாகிய உங்களிடம் சேர்ப்பித்து தொடர்ச்சியான எமது நகர்வுகளை அக்னிச் சுடராய் வெளிப்படுத்திக் கொண்டே இன்னமும் உற்சாகமாய் சிறகடிப்போம் என்ற உறுதியோடு இந்த கட்டுரையை நிறைவு  செய்கிறோம்.

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

36 comments:

Jayadev Das said...

\\ஆன்மீகம் என்பது கடவுள் தேடல் அல்ல; ஆன்மீகம் என்பது கற்பனையில் ஏதோ எண்ணிக் கொண்டு எங்கோ நகர்வது அல்ல்; ஆன்மீகம் என்பது வானிலிருந்து தேவதூதர்கள் வந்து தன் வாழ்க்கையைச் சீராக்குவார்கள் என்று நம்பும் மூடப்போக்கல்ல;ஆன்மீகம் என்பது சாமியார்களின் காலடியில் கவிழ்ந்து கிடப்பது அல்ல; ஆன்மீகம் என்பது கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் முயற்சியல்ல; ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு சில புத்தகங்களில் ஒளிந்திருக்கும் இறுதி உண்மையல்ல.....\\ ஐயா, இதெல்லாம் நீங்களா கண்டுபுடிச்ச சமாசாரங்களா? சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்றீங்களே, உங்களை எதை வச்சு நம்புறது?

Jayadev Das said...

\\எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ எது, எது நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதோ அதை மறுக்காமல் ஏற்று அதை முழுமையாய் நிகழ்த்திக் காட்டுவதே ஆன்மீகம்.\\ எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதுன்னு எதை வச்சு தீர்மானிப்பது? அதை யார் கொடுத்தாங்க? எது நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு யார் நிர்ணயம் செய்தார்கள்? உங்க வாழ்க்கையில் இதெல்லாம் எப்படி செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?

Jayadev Das said...

\\என்றெல்லாம் பகுத்துப் பார்க்கவேண்டும். அப்படி பகுத்துப் பார்க்க தன் உள்ளமையான ஆன்மா என்னும் உயிர்ச் சக்தியினை பற்றிய புரிதல் வேண்டும்.\\ அன்மான்னா என்ன? அப்படி ஒன்னு இருப்பதாக நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க?

Jayadev Das said...

\\நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது?\\ கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்குது, ஒண்ணுத்துக்கும் பதிலைத்தான் காணும். :(

Jayadev Das said...

\\மாறாக நிஜத்தில் நீங்கள் யாரென்று உணருங்கள். உங்களின் தேவை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்...எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள்...மேலும் எதைச் செய்தாலும் அதை முழுமையாக தெளிவாய்ச் செய்யுங்கள்..!\\ இதென்ன கழுகானந்தாவின் கண்டுபிடிப்புகளா? தாங்க முடியலைடா சாமி.......

Jayadev Das said...

\\இந்த சமூகம் என்று மட்டுமில்லை உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலுக்கும் இதுவரையில் வந்த எல்லா சித்தாந்தங்களும், கோட்பாடுகளும், மதங்களும் முழுமையான ஒரு தீர்வை இதுவரையில் கொடுத்து விட முடியவில்லை. மாறாக அவை மக்களைப் பிரித்துப் போட்டு பைத்தியக்காரர்களாய் ஆக்கித்தான் வைத்திருக்கிறது.\\ இதுவரைக்கும் வந்தவங்க எல்லோரும் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள், நீங்க இப்ப சொல்வது மாத்திரம் மிகச் சரியாக இருக்குமா.........

Jayadev Das said...

\\தெளிவான ஆன்ம விழிப்பே மானுட சமுதாயத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கும் \\ அது எங்க கிடைக்கும்னு தான் தெரியலை.

saidaiazeez.blogspot.in said...

இந்த மாதிரி ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் திரு ஜெயதேவ் தாஸ்.

//சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்றீங்களே//
இல்லை... விழிப்போடு இருங்கள்

//உங்க வாழ்க்கையில் இதெல்லாம் எப்படி செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?//
எதையும் ஒப்பிடாதீர்கள். எனக்கு பிடித்தது உங்களுக்கு வெறுப்பைத் தரலாம்!


//அன்மான்னா என்ன?//
தேடுங்கள்.

//ஒண்ணுத்துக்கும் பதிலைத்தான் காணும்//
இது திரைப்படம் அல்ல. கடைசியில் சுபம் என்று போட! இது விழிப்புணர்வு. அதை நீங்களே பெறவேண்டும்.

//இதென்ன கழுகானந்தாவின் கண்டுபிடிப்புகளா?//
இல்லை. இவைகள் சமூகத்திற்கு தேவைப்படும் கேள்விகள்.

//நீங்க இப்ப சொல்வது மாத்திரம் மிகச் சரியாக இருக்குமா//
இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனாலும் சிந்திக்க வேண்டும் என்பதை புரிய வைத்ததில் இக்கட்டுரை வெற்றி பெற்றுள்ளது.

//அது எங்க கிடைக்கும்னு தான் தெரியலை//
ஹஹ்ஹாஹா... கிடைத்தால் ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன்.

மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே!

'பசி'பரமசிவம் said...

”நான் யார்?”...என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, தான் பற்றிய தேடுதலே உண்மையான ஆன்மிகம் என்கிறீர்கள்.
ஆன்மா என்பது கடவுள் போல அழிவில்லாதது. அல்லது கடவுளின் ஒரு கூறு என்கிறார்கள் மதவாதிகள்.
தாங்கள் தருவது முற்றிலும் மாறுபட்ட விளக்கம்.
இதை எனக்கு ஏற்கத் தோன்றுகிறது.
தன்னைப் பற்றித் தான் ஆராய்வதே வாழ்வை வளமுடையதாக்கும்.

ஜெயதேவ்தாஸ், ‘ஒன்னுக்கும் பதிலைக் காணோம்’ என்று கிண்டல் செய்கிறார்.
இவர்கள் கடவுள் இருப்பதாக நிரூபித்துவிட்டார்களா?
ஆன்மா, மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம் போன்றவற்றிற்கு சரியான விளக்கம் தந்துவிட்டார்களா?
இவர்களின் முன்னோடிகள் இட்டுக் கட்டிய பொய்களையும் புனை கதைகளையும் சொல்லிக் காலம் கழிக்கும் இவர்களுக்கு உங்களைக் கேலி செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

Jayadev Das said...

\\”நான் யார்?”...என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, தான் பற்றிய தேடுதலே உண்மையான ஆன்மிகம் என்கிறீர்கள்.\\ என்னைப் பற்றி நானே கேள்வி கேட்டு பதிலையும் அடையும் சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது என்றால், அதை இன்னொருத்தர் வந்து எடுத்துச் சொல்லித் தெரியும் நிலையில் நான் இருக்க மாட்டேனே, நானே செய்து விடுவேனே, இந்தப் பதிவிற்கே அவசியமே இல்லாமல் போயிருக்குமே. ஆனால், பக்கம் பக்கமாய் இவர் எழுதியும் இன்னமும் தீராமல் மேலும் மேலே பறக்க வேண்டிய அளவுக்கு இன்னமும் போதனைகள் பாக்கி வைக்கும் நிலை அல்லவா இருக்கிறது. அது மட்டுமின்றி ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள், எங்கு பார்த்தாலும் கூட்டம் சேர்க்கிறது, கேட்டால் \\இதை எனக்கு ஏற்கத் தோன்றுகிறது.\\ என்று சொல்கிறார்கள். நான் கேட்ட கேள்விகள் எதற்கும் இவர் பிடி கொடுத்துப் பதில் தரவில்லை. கழுவிய மீனில் நழுவிய மீனாக பதில் தந்திருக்கிறார். அதனால் விட்டு விட்டேன்.

Jayadev Das said...

\\இவர்கள் கடவுள் இருப்பதாக நிரூபித்துவிட்டார்களா?
ஆன்மா, மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம் போன்றவற்றிற்கு சரியான விளக்கம் தந்துவிட்டார்களா?
இவர்களின் முன்னோடிகள் இட்டுக் கட்டிய பொய்களையும் புனை கதைகளையும் சொல்லிக் காலம் கழிக்கும் இவர்களுக்கு உங்களைக் கேலி செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?\\ நீங்க ரொம்ப அவசரப் பட்டு ஓடக் கூடாது. "ஆன்மா, மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம்" இது குறித்து நான் பதிவு ஒன்றும் போடவில்லை. இங்கே இந்தப் பதிவில் என்ன டாபிக் பேசப் படுகிறதோ அது குறித்துதான் வாதம் இருக்க வேண்டுமே தவிர நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றி அல்ல. இங்கே எத்தனையோ விஷயங்களைச் சொல்கிறார், அது என்ன என்று கேட்டால், எதற்கும் பதில் இல்லை. நீயே கண்டு பிடி என்கிறார். ரஞ்சிதானதாவைப் பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தது போல இவரைப் பார்த்து உங்களுக்கு மெய் சிலிர்க்கிறது. ஏன் என்று அவர்களுக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது. வித்தியாசம் ஒன்றுமில்லை.

Jayadev Das said...

தொலைக்காட்சியில் சப்பாத்தி செய்வது எப்படின்னு ஒரு புரோகிராம் போடுவான். அதைப் பார்ப்பதில் பெரும்பாலானவர்கள் வீட்டில் முயன்றால் அவன் சொன்ன மாதிரியே கிட்டத் தட்ட செய்து விடுவார்கள். இந்தப் பதிவை ஒரு நூறு பேரைப் படிக்கச் சொல்லுங்கள், உனக்கு என்னையா புரிந்தது என்று தனித் தனியாக ஒரு பேப்பரில் எழுதச் சொல்லுங்க, குறைந்தப் பட்சம் பாதி பேராவது ஒரே மாதிரி எழுதிட்டன்னா சொல்லியனுப்புங்கையா, இவரு போதனைகள் சரிதான்னு ஒத்துக்கறேன்.

dheva said...

வணக்கம் ஜெயதேவ் ஜி....

வருகைக்கும்....கேள்விகளுக்கும் நன்றி...! தங்களின் கேள்விகளுக்கு இயன்றவகையில் பதிலளிக்க முயலுகிறேன். சரியான தெளிவுகளை நோக்கிய விவாதங்களை நாம் எப்போதும் விரும்புகிறோம்.

ஒவ்வொரு விடயமாக வருகிறேன்.

dheva said...

கேள்வி 1
=========

//ஐயா, இதெல்லாம் நீங்களா கண்டுபுடிச்ச சமாசாரங்களா? சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்றீங்களே, உங்களை எதை வச்சு நம்புறது?//


நாம் இதை இங்கே பகிருந்திருக்கிறோம். இதை ஏற்றுதான் ஆகவேண்டும் என்றோ இதுதான் இறுதி உண்மை என்றோ கட்டுரையின் எந்த இடத்திலும் நாம் வலியுறுத்தவே இல்லை. இதை வாசித்து விட்டு.....நீங்கள் இதை நம்புவதும் நம்பாமலும் இருக்கலாம்.

உங்கள் உள்ளுணர்வு எதைச் சரி என்று சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். உள்ளுணர்வு என்றால் என்ன என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தவறுகள் செய்யும் போது சரி எதுவென்றும், சரிகள் செய்யும் போது தவறு எதுவென்றும்....எப்போதும் உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்....

என்ன ஒன்று மனிதர்கள் அதை கவனித்தும் கவனியாது போல நடந்து கொள்கிறார்கள்...அவ்வளவே...!

இந்த பதிலுக்கு ஏதேனும் மறு கேள்விகள் இல்லையெனில் அடுத்த கேள்விக்கு செல்லலாம்..!

dheva said...

முதல் பதில் பதிலாகவே இருக்கட்டும். நான் அடுத்த கேள்விக்குச் செல்கிறேன்.

கேள்வி 2
=========

//எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதுன்னு எதை வச்சு தீர்மானிப்பது? அதை யார் கொடுத்தாங்க? எது நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு யார் நிர்ணயம் செய்தார்கள்? உங்க வாழ்க்கையில் இதெல்லாம் எப்படி செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?//

வாழ்க்கையின் தேவைகள் கணத்துக்கு கணம் நம் கண் முன்னேதானே நிற்கின்றது ஜெய் தேவ்ஜி....! நமது தேவைகளை வேறு யார் வந்து சொல்வது....நமக்கே தெரியும்தானே....

குடும்பம், தன் உடல் நலன், புறச்சூழல், அறிவு இவற்றின் அடிப்படையிலும், நாம் வாழும் சமூகம் திணித்திருக்கும் பொது புத்தியிலிருந்து உதயமாகி இருக்கும் போலியான தேவைகளும் நமக்கு தெரியாதா என்ன?

நான் என்னவாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றிய சரியான சுய மதிப்பீடு தெரியவேண்டும். என்ன ஒன்று அப்படியான நேர்மையான சுய மதிப்பீடு செய்து கொள்ளாமல் அடுத்தவரைப் பற்றியே எப்போதும் பேசுகிறோம்.

என் வாழ்க்கையில் நான் செய்ததை நீங்கள் கேட்பதே அபத்தம்? இதுதான் முரண். இதைத் தெரிந்து உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை. உங்களுக்கு எது தேவை என்றுதான் நீங்கள் யோசிக்க வேண்டும் ஜெய் தேவ்ஜி...! உங்களுக்கு எது தேவை என்று என்னாலும் சொல்ல முடியாது......அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

Jayadev Das said...

\\உங்கள் உள்ளுணர்வு எதைச் சரி என்று சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். உள்ளுணர்வு என்றால் என்ன என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தவறுகள் செய்யும் போது சரி எதுவென்றும், சரிகள் செய்யும் போது தவறு எதுவென்றும்....எப்போதும் உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்....

என்ன ஒன்று மனிதர்கள் அதை கவனித்தும் கவனியாது போல நடந்து கொள்கிறார்கள்...அவ்வளவே...! \\ அப்படியெல்லாம் பார்த்தால் புட்டபர்த்தி சாய்பாபா, ரஞ்சிதானதா பக்தர்கள் அத்தனை பெரும் தாங்கள் செய்வது மனதளவில் சரி என்று நினைத்துதான் செய்கிறார்கள். [உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்....அதை கவனித்தும் கவனியாது போல நடந்து கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம், ஆனால், எங்களுக்கு இவர்கள் செய்வது சரி என்று தான் அவர்கள் சொல்வார்கள்.] நீங்களும் அப்படி ஒரு கோஷ்டியா இல்லையா என்பதை ஒரு விஷயம் தெரியாதவன் எப்படி கண்டுபிடிப்பான்? [அவன் ஏமாளியாகவே இருந்தாலும், நல்ல ஆன்மீக வாதியிடம் சிக்கினால் நிச்சயம் தப்பித்து விடுவான்.]

dheva said...

//அன்மான்னா என்ன? அப்படி ஒன்னு இருப்பதாக நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க//

புலன்களின் அனுபவமே இல்லாத பொழுது கருவறைக்குள் இருக்கும் போது அது கைகால்கள் உதைத்து உதைத்து ஏதேதோ செய்ய முனைந்தது. உடலுக்குள் சக்தியாய் நிறைந்து கிடப்பது. இறக்கும் போது சக்தி அதிர்வுகளாய் ஸ்தூல உடல் விட்டு நகர்ந்து போவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சூட்சுமங்களை விளக்கச் சொல்லி அதைக் கேட்கும் போது அப்படி கேட்பவர் நகைத்து விளையாட நிறைய வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் இதற்கு மேல் நான் விவரிக்கப் போவதில்லை.

நான் எப்படி கண்டேன் என்று கேட்கிறீர்கள்..... தேவ் ஜீ.........ஒரு விடயம் கவனித்தீர்களா...உங்க்ள் மனம் உங்களை விட்டு விட்டு எப்போதும் மூன்றாம் மனிதர் மீதே புலிப்பாய்ச்சல் பாய்கிறது.

மேலே நீங்கள் கூறியிருக்கும் பதிலும் அவ்விதமே...! சரியான அளவீட்டில் விவாதம் செல்லட்டும்.

நீங்கள்.....நான்....இந்த விடயம்...இப்படியாய் தொடர்வோம்...!

dheva said...

//கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்குது, ஒண்ணுத்துக்கும் பதிலைத்தான் காணும். :( //

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்;

கேள்வியும் பதிலும் ஒவ்வொருவருக்கும் அவர் அவரே...!

dheva said...

//இதென்ன கழுகானந்தாவின் கண்டுபிடிப்புகளா? தாங்க முடியலைடா சாமி.......//

இதற்கு பதில் தேவையில்லை என்று நினைக்கிறேன் தேவ் ஜி...இது உங்களின் அபிப்ராயம்...! உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால் ஏற்கிறேன் என்று சொல்ல முடியாது.

dheva said...

//இதுவரைக்கும் வந்தவங்க எல்லோரும் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள், நீங்க இப்ப சொல்வது மாத்திரம் மிகச் சரியாக இருக்குமா.........//

நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சரியாக இருக்காது என்று சொன்னால்..... ஏன்....? மற்றும் எப்படி என்றும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..!

dheva said...

//அது எங்க கிடைக்கும்னு தான் தெரியலை.//

உங்ககிட்ட உங்களுக்கு.......என்கிட்ட எனக்கு....!

dheva said...

இப்போதைக்கு பதில்களை என் அறியாமையிலிருந்து கூறி இருக்கிறேன். இதுவும் நாளை உடையலாம்....

மாற்றம் தானே வாழ்க்கை தேவ்ஜி.......!

பிறகு சந்திப்போம்....

சிறிது நேரம் கழித்து.....!

நன்றிகள்!

நிகழ்காலத்தில்... said...

//சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்றீங்களே, உங்களை எதை வச்சு நம்புறது?//

சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்லலை. எல்லா சாமியார்களையும் நம்பவேண்டாம். இதுகூட சரியல்ல. உங்கள் தேவை என்ன? அதில் தெளிவு ஏற்படுத்தும் சாமியாரிடம் தாரளாமாக செல்லுங்கள். அவர் சொல்வதை ஒரு தூண்டுகோலாக பயன்படுத்தி உள்ளே தேடுங்கள். வழி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் நம்பும் சாமியார் சொல்வது முழுமையாக சரி என உங்களுக்கு ம்னதில் படும் பட்சத்தில் தாரளமாக பின்பற்றலாம்.

//எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதுன்னு எதை வச்சு தீர்மானிப்பது? அதை யார் கொடுத்தாங்க? எது நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு யார் நிர்ணயம் செய்தார்கள்? உங்க வாழ்க்கையில் இதெல்லாம் எப்படி செய்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?//

செயல்விளைவுன்னு ஒரு லாஜிக் இருக்கு. நல்லது செஞ்சும் கெட்டது ஏன் நடக்குது.கெட்டது செய்றவங்களுக்கும் ஏன் நல்லது நடக்குது. இதெல்லாம் கூர்ந்து நம்மையும் பிறரையும் கவனித்து வர வேண்டியது. எழுத்தில் வந்தால் நம்ப கடினமாகத்தான் இருக்கும்.

//அன்மான்னா என்ன? அப்படி ஒன்னு இருப்பதாக நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க?//
ஆன்மான்னா என்ன அப்படின்னு தங்களுக்கு தெரியாது எனில் இது புரியாத கேள்வி விட்டுவிடலாம்.

Jayadev Das said...

\\நமது தேவைகளை வேறு யார் வந்து சொல்வது....நமக்கே தெரியும்தானே....குடும்பம், தன் உடல் நலன், புறச்சூழல், அறிவு இவற்றின் அடிப்படையிலும், நாம் வாழும் சமூகம் திணித்திருக்கும் பொது புத்தியிலிருந்து உதயமாகி இருக்கும் போலியான தேவைகளும் நமக்கு தெரியாதா என்ன?\\ எல்லா ஜீவன்களுக்குமே, கொஞ்சம் உணவு, இருப்பிடம் இருந்தால் போதும், மனிதனுக்கு கொஞ்சம் துணி தேவைப்படும். நான் கேட்ட தேவைகள் இதுவல்ல. ஆன்மீக ரீதியாக தேவைகள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்பதைத்தான்.

Jayadev Das said...

\\நான் என்னவாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றிய சரியான சுய மதிப்பீடு தெரியவேண்டும். என்ன ஒன்று அப்படியான நேர்மையான சுய மதிப்பீடு செய்து கொள்ளாமல் அடுத்தவரைப் பற்றியே எப்போதும் பேசுகிறோம்.\\ இந்த மாதிரி MBA சமாச்சாரமெல்லாம் தெரிஞ்சிருந்தா, எல்லோரும் அம்பானி ஆயிருப்பாங்க, இந்த பாபாக்கள், ஆனந்தாக்கள் எல்லோரும் தலை தூக்கியிருக்க முடியாது. அரசியல்வியாதிகள் ஏய்த்துப் பிழைத்திருக்க முடியாது. எனவே, எல்லோராலும் இது முடியாது, இது நடைமுறைக்கு ஒவ்வாதது.

Jayadev Das said...

\\என் வாழ்க்கையில் நான் செய்ததை நீங்கள் கேட்பதே அபத்தம்? இதுதான் முரண். இதைத் தெரிந்து உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை. உங்களுக்கு எது தேவை என்றுதான் நீங்கள் யோசிக்க வேண்டும் ஜெய் தேவ்ஜி...! உங்களுக்கு எது தேவை என்று என்னாலும் சொல்ல முடியாது......அது உங்கள் கையில்தான் இருக்கிறது.\\ நீங்கள் எதைப் போதிக்கிரீர்களோ அதன்படி நீங்க வாழ்கிறீர்களா, இல்லை ஊருக்கு உபதேசம் என்ற அளவில்தான் உள்ளீர்களா என்பதே கேள்வி. ஜீவ காருண்யம் பற்றி பேசும் ஒருத்தர் கோழிப்பண்ணையும், கசாப்பு கடையும் நடத்துவது நகைப்புக்குரியது. மற்றபடி தனிப்பட்ட முறையில் உங்கள் சொந்த விஷயங்கள் தேவையில்லாத ஒன்று.

Jayadev Das said...

\\புலன்களின் அனுபவமே இல்லாத பொழுது கருவறைக்குள் இருக்கும் போது அது கைகால்கள் உதைத்து உதைத்து ஏதேதோ செய்ய முனைந்தது. உடலுக்குள் சக்தியாய் நிறைந்து கிடப்பது. இறக்கும் போது சக்தி அதிர்வுகளாய் ஸ்தூல உடல் விட்டு நகர்ந்து போவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சூட்சுமங்களை விளக்கச் சொல்லி அதைக் கேட்கும் போது அப்படி கேட்பவர் நகைத்து விளையாட நிறைய வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் இதற்கு மேல் நான் விவரிக்கப் போவதில்லை.\\ இதை நீங்களே கண்டுபிச்சீங்களா, வேறு ஒருத்தர் எழுதியதை படித்து அறிந்து கொண்டீர்களா, இல்லை விஞ்ஞானிகள் சொன்னதா?

Jayadev Das said...

\\நான் எப்படி கண்டேன் என்று கேட்கிறீர்கள்..... தேவ் ஜீ.........ஒரு விடயம் கவனித்தீர்களா...உங்க்ள் மனம் உங்களை விட்டு விட்டு எப்போதும் மூன்றாம் மனிதர் மீதே புலிப்பாய்ச்சல் பாய்கிறது.\\ ஆனானப் பட்ட ஐன்ஸ்டீன் சொன்னதே தப்புன்னு இன்னைக்கு சொல்லும் காலம் சார் இது, நீங்க சொல்வதை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதா என்ன?

Jayadev Das said...

\\கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்;

கேள்வியும் பதிலும் ஒவ்வொருவருக்கும் அவர் அவரே...!\\ இதெல்லாம் உங்கள் சொந்தக் கருத்தா? இல்லை என்றால் மூலம் என்ன?

Jayadev Das said...

\\நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சரியாக இருக்காது என்று சொன்னால்..... ஏன்....? மற்றும் எப்படி என்றும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..!\\ சரியாக இருக்காது என்று நான் சொல்லவில்லை. அவையெல்லாம் சரியாக இருக்காது என்ற assumption ஐ நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள், அதனால் தான் போலிகள் என்று புதிதாக நீங்கள் ஒரு ஆன்மீக கொள்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

Jayadev Das said...

*****//அது எங்க கிடைக்கும்னு தான் தெரியலை.//

உங்ககிட்ட உங்களுக்கு.......என்கிட்ட எனக்கு....!*********

அப்படி இருந்தா நீங்க பதிவு போடாமலேயே நானே கண்டுபிடித்திருப்பேன் சார்.

Jayadev Das said...

\\இப்போதைக்கு பதில்களை என் அறியாமையிலிருந்து கூறி இருக்கிறேன். இதுவும் நாளை உடையலாம்....\\ கியாரண்டீ இல்லாத பொருட்களை நாம் வாங்குவதில்லை.

Jayadev Das said...

\\சாமியார்களை நம்ப வேண்டாம்னு சொல்லலை. எல்லா சாமியார்களையும் நம்பவேண்டாம். இதுகூட சரியல்ல. உங்கள் தேவை என்ன? அதில் தெளிவு ஏற்படுத்தும் சாமியாரிடம் தாரளாமாக செல்லுங்கள். அவர் சொல்வதை ஒரு தூண்டுகோலாக பயன்படுத்தி உள்ளே தேடுங்கள். வழி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் நம்பும் சாமியார் சொல்வது முழுமையாக சரி என உங்களுக்கு ம்னதில் படும் பட்சத்தில் தாரளமாக பின்பற்றலாம்.\\ தேவை ஆளாளுக்கு மாறுபடும். வேலை வேண்டும், நல்ல மனைவி வேண்டும், கோடிக் கணக்கில் சொத்து வேண்டும், மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும்.......என்று போய்க் கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒருத்தன் சாமியாரிடம் போக வேண்டுமா? "சாமியார் சொல்வது என் மனதிற்கு சரி எனப் படுகிறது" என்று தானே மேஜிக் செய்யும் புட்டபர்த்திக் காரனிடமும், ரஞ்சிதானந்தாவிடமும் சென்றவர்கள் சொல்கிறார்கள். அந்த பிராடுகள் அவர்களிடம் போனவர்கள் நினைப்பு படி பார்த்தால் பின்பற்றத் தக்கவர்கள் என்று அர்த்தமா?

Jayadev Das said...

\\செயல்விளைவுன்னு ஒரு லாஜிக் இருக்கு. நல்லது செஞ்சும் கெட்டது ஏன் நடக்குது.கெட்டது செய்றவங்களுக்கும் ஏன் நல்லது நடக்குது.\\ அது ஏன்னு சொல்லுங்களேன்?

saidaiazeez.blogspot.in said...

//ஆனானப் பட்ட ஐன்ஸ்டீன் சொன்னதே தப்புன்னு இன்னைக்கு சொல்லும் காலம் சார் இது, நீங்க சொல்வதை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதா என்ன?//
//கியாரண்டீ இல்லாத பொருட்களை நாம் வாங்குவதில்லை.//
இந்த மாதிரி புரிதல் அனைவருக்கும் ஏற்பட்டாலே போதும் என்பதுதான் கட்டுரையின் நோக்கமே!
நன்றி திரு ஜெயதேவ் தாஸ்

Shankar M said...

நன்றி திரு ஜெயதேவ் தாஸ்...இந்த பதிவை படித்ததற்கு ; அலசி ஆராய வைத்ததற்கு... ஒரே ஒரு இடத்தில் மட்டும் என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்

\\தெளிவான ஆன்ம விழிப்பே மானுட சமுதாயத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கும் \\ அது எங்க கிடைக்கும்னு தான் தெரியலை. வாழ்க்கை ஒரு தேடல். அந்த தேடலில் ஒன்று விழிப்பு...பின்பு ஆன்ம விழிப்பு....அதன் பிறகு தெளிவு. எந்த அளவிற்கு இந்த தேடலில் பலன் கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு மானுட சமுதாயத்தில் மாற்றத்தைப் பார்க்கலாம். தேடல் தொடரும்....மாற்றங்கள் நிகழும். இரெண்டும் முடிவடைவதில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes