இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.
மேலே நாம் கூறியிருக்கும் வரிகள் சட்டென்று கடந்த நொடியில் எமது புத்தியில் உதயமாகி இந்த நொடியில் எழுதப்பட்டது அல்ல. கடந்த மூன்றாண்டுகளாக சமூக வலைத்தளங்களினூடே தொடர்ந்து பயணித்து, கவனித்து அந்த கவனிப்பை கிரகித்து ஆராய்ந்து, அந்த தெளிவிலிருந்து வந்து விழுந்தவை. மொக்கையாய் எழுதும் பெண்களின் வலைத்தளத்திற்கு பின்பற்றுபவராய் சேருவதில் இருந்து, எவ்வளவு கேவலமாய் எழுதி இருந்தாலும் அதை ஆகா ஓகோ என்று கருத்துரை வழங்குவது, வழிய, வழிய சென்று பாரட்டுவது, அம்மா என்று கவிதை எழுதி விட்டால் அழுது புரண்டு கண்ணீர் விடுவது,
தெருவில் கிடந்த முள் குத்திவிட்டது என்று ஒரு பெண்மணி எழுதி விட்டால் அதை வாசித்து விட்டு சமூகத்தின் மீது வஞ்சம் கொண்டு வசை பாடி தீர்ப்பது என்று.....எதிர் பாலின ஈர்ப்பு, குறையில்லாமல் இன்றைய இணைய உலகில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பசித்திருப்பவனுக்கு உணவு கொடுக்கவும், தவித்திருப்பவனுக்கு தாகம் தீர்க்கவும் எவரது கைகளும் நீள்வது என்பது இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு போய்விட்டது, கூடவே கூட்டணி அரசியலும் ஒன்று கூடி நின்று நியாயங்களுக்கு அநீதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் பொறுப்புடன் இருக்கிறார்கள் என்று நாம் மதிக்கும் பெரிய மனிதர்கள் கூட வலைப்பூக்களிலும், பேஸ் புக்கிலும் ஏன் எப்போதும் பெண்களின் வாசல்களில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
வலைப்பூக்கள் எல்லாம் பழங்கால நாடக மேடைகள் என்றால் பேஸ்புக்கில் அல்ட்ரா மாடர்ன் சினிமாவையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு அஜால் குஜால் விசயங்களுக்கு குறைவே இல்லாமல்தான் இருக்கிறது. ஒரு பெண் பேஸ் புக் புரபைலில் ஏதேனும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுவிட்டால் அங்கே நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு கருத்திடுபவர்களில் பெரும்பாலானவர்கள் கருத்தை விட அதை வெளியிட்ட பெண்ணை கவரவே முயலும் கேவலம் தினந்தோறும் நிகழ்ந்தேறிக் கொண்டுதானிருக்கிறது.
ஆண்கள் என்றால் எப்போதும் பெண்கள் எதை எழுதினாலும், எந்த புரபைல் பிக்சர் மாத்தினாலும் நம்மிடம் வளைய வளைய வருவார்கள் என்று நினைக்கும் சில பெண்கள் தங்களின் க்ளோசப் சாட்களை பேஸ்புக்கிலேற்றி விட்டு....எத்தனை பேர் தன்னை வர்ணிக்கிறார்கள் என்று கவனித்து உள்வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டுமிருக்கிறார்கள். நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்....என்பது தொடங்கி இன்னும் ஐ...லவ் யூ வரைக்கும் கருத்துரைகள் நீண்டு கொண்டே செல்ல 351 வது கருத்தில் அப்புகைப்படத்தை ஏற்றிய அம்மணி வந்து லவ் யூ ஆல் என்று ஒற்றை வரியில் போட்டு விட்டு....ஒரு ஸ்மைலியை தட்டிச் செல்வார்.....
அதற்கு பின் தான் 350 கருத்துக்கள் இட்ட எம் மறத்தமிழர் கூட்டம் ஜென்ம சாபல்யங்கள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடும்.
போதாக் குறைக்கு ஏதேனும் ஒரு குழுமப் பக்கத்தை பேஸ்புக்கில் உருவாக்கி விட்டு அதில் நம்மை கேட்காமலேயே இணைத்து விடுவதும், கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்களை ஏற்றி விட்டு ஒரு 4000 பேரை டேக் செய்து விட்டு நடுவில் நம்மை நிற்கவைத்து ஒவ்வொரு பிடிக்காத விசயத்தால் விலாசவும் செய்கிறர்கள். இவர்களுக்குப் பயந்து கொண்டு நாம் செக்கியூரிட்டி செட்டிங்கில் போய் அதை இதை செய்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முன் அனுமதி என்னும் வார்த்தைக்கு இணயத்தில் அர்த்தமே கிடையாது என்பதோடு மட்டுமில்லாமல் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்திடும் இயந்திர மனிதர்களும் இயங்கும் இடமாய் பேஸ் புக் ஆகி விட்டது. ஒரு குழந்தை இறந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்து வெளியிடப்பட்ட முதல்நிலை செய்திக்கு....மிகவும் அருமை....வாழ்த்துகள் என்ற ரீதியில் கருத்திடுபவர்களை எந்தக் கணக்கில் நாம் சேர்ப்பது...?
இது ஒரு பக்கம் என்றால் இணயத்தின் அசுர வளர்ச்சியை கணக்கிட்ட அரசியல் கட்சிகளின் அதிவேக ஊடுருவலால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனிப்பட்ட அரசியல் பக்கங்கள் தொடங்கப்பட்டு, செவிகள் கிழிந்து போகும் அளவிற்கு பிரச்சார வியூகங்கள் வரிசைகட்டி நிற்பது ஒருபக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எந்த கட்சியையும் சாராமல், அந்த அந்த சூழலை மனதிலாக்கிக் கொண்டு தேவை மற்றும் அவசியத்தின் பொருட்டு முடிவு எடுப்பவர்களை எல்லாம் பச்சோந்திகள், நடுநிலை நாய்கள் என்றெல்லாம் விமர்சித்து பொது வெளி என்ற நாகரீகத்துக்கு எல்லாம் பாடை கட்டும் ஒரு கூட்டமும் மனிதர்கள் என்ற பெயரில் உலாவிக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதன் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்சிக்காரர்களின் நியாயம். அப்படி சாரமல் இருந்தால்........அ என்னும் கட்சியை நீங்கள் விமர்சித்தால் நீங்கள் ஆ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....., ஆ என்னும் கட்சியை விமர்சித்தால் நீங்கள் இ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....முத்திரை குத்தப்படுவீர்கள். எது எப்போது எனக்கும் இந்த சமூகத்துக்கும் தேவையோ அப்போது நான் அதன்படி முடிவெடுத்துக் கொள்வேன் என்று சத்தியம் பேசினீர்களேயானால்....நீங்கள்.. .நடுநிலை சொம்பு என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்....
இதில் என்ன கொடுமை என்றால்.....தமிழர்களுக்காக போராடும் எந்த ஒரு கட்சியும், சாதி அரசியலையும், மத அரசியலையும் விட்டு இன்னமும் வெளியே வராததுதான்...., சீமான் போன்ற தமிழ்ச் சிங்கங்கள் ஏன் நித்தியானந்தா போன்ற சமூக விரோதிகளைப் பற்றி பேசி கடும் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை....? சமூக அநீதிகளைக் கூட தங்களின் வசதிக்கு ஏற்றார்போல பார்ப்பவர்களைத்தான் இன்று நம்மைச் சுற்றி நாம் வைத்திருக்கிறோம்.
பெரியாரோடு எல்லாம் முடிந்து போய் விட்டது போலும்.....? கழகங்களுக்கு கூட திராவிடம் என்னும் வார்த்தை அரசியல் என்னும் காத்தாடி பறக்க தடவப்படும் வெறும் மாஞ்சாதான் போல....
மொழியைக் காக்க, இனத்தை காக்க, வேறு நாட்டுக்காரனையும், வேறு மாநிலத்துக்காரனையும் இழுத்துப் போட்டு உதைப்பேன் என்பதும், அறிக்கைகள் விடுவதும், மேடையில் நரம்பு புடைக்க பேசுவதுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த அவலங்கள்.....இப்போது இணையவெளியிலும்...!
நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.
சிந்திக்கவே இடம் கொடுக்காமல் கருத்து திணிப்புச் செய்யும்....இப்படியான அரசியல் கூட்டங்களும், எப்போதும் பெண்கள் பின்னால் திரியும் மறவர் கூட்டம் ஒரு பக்கமும், காதல் வரிகளை எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ எழுதி இளைஞர்களை தடுமாறச் செய்தும் அல்லது எப்போதும் ஆண்களை திட்டி ஆணாதிக்கம் என்று விமர்சிக்கவும் செய்யும் பெண்களுமாய்.....
பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இணைய உலகம்....நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....?
குறையாய் இருக்க வேண்டியவை எல்லாம் மிகையாய் இருப்பதால், மிகையாய் இருக்க வேண்டிய நல்லவைகள் குறையாய் இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......அதை கவனிக்க வேண்டியதும், கவனிக்கச் சொல்லி பரப்புரைகள் செய்வதும் ஒவ்வொரு மனிதரின் சமூகக் கடமை என்ற கருத்தினை வலுவாக பதிந்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
23 comments:
//சிந்திக்கவே இடம் கொடுக்காமல் கருத்து திணிப்புச் செய்யும்....//
//நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....?//
விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக சுட்டிக்காட்டியமைக்கு வாழ்த்துக்கள்.
//போதாக் குறைக்கு ஏதேனும் ஒரு குழுமப் பக்கத்தை பேஸ்புக்கில் உருவாக்கி விட்டு அதில் நம்மை கேட்காமலேயே இணைத்து விடுவதும், கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்களை ஏற்றி விட்டு ஒரு 4000 பேரை டேக் செய்து விட்டு நடுவில் நம்மை நிற்கவைத்து ஒவ்வொரு பிடிக்காத விசயத்தால் விலாசவும் செய்கிறர்கள். இவர்களுக்குப் பயந்து கொண்டு நாம் செக்கியூரிட்டி செட்டிங்கில் போய் அதை இதை செய்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முன் அனுமதி என்னும் வார்த்தைக்கு இணயத்தில் அர்த்தமே கிடையாது என்பதோடு மட்டுமில்லாமல் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்திடும் இயந்திர மனிதர்களும் இயங்கும் இடமாய் பேஸ் புக் ஆகி விட்டது. ஒரு குழந்தை இறந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்து வெளியிடப்பட்ட முதல்நிலை செய்திக்கு....மிகவும் அருமை....வாழ்த்துகள் என்ற ரீதியில் கருத்திடுபவர்களை எந்தக் கணக்கில் நாம் சேர்ப்பது...?//
நன்றாக ஒலித்தது எச்சரிக்கை மணி...நல்ல நேரத்திலும் கூட. கழுகின் பார்வை தொடரட்டும்.
நல்ல கட்டுரை.....
தேவையான விழிப்புணர்வு.....
///பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இணைய உலகம்....நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....? ////
intha kala kattaththirkku mikavum thevai..
kazhuku innum uyara parakattum..
முகப்புத்தகங்களில் நடக்கும் கூத்துக்களை நானும் பார்க்கிறேன் பெண்களின் ஆக்கங்களுக்கு ஆணுக்கு சமமான கருத்துகளுக்கு வக்கிரமான மறுமொழியும் இடுகிறார்கள்....அரசியல்வாதிகள் கேவலமான வார்த்தைகளை எழுத்தில் இடுகிறார்கள் நாகரிகமான மேடை என்கிற பெயரை முகப்புத்தகம் இழந்துகொண்டிருக்கிறது.
பெண்கள் போடும் ஸ்டேட்டஸ்க்கு அதிக லைக் விழுகிறது, இனக்கவர்ச்சி என்றாலும் ஒரு வரம்புக்குள் இருப்பது நல்லது அதுதான் பெண்களுக்கு நல்லது ஒன்று இரண்டு கமெண்ட்டில் தெரிந்து விடும் யார் எப்படிப்பட்டவர் என...அவர்களின் நட்பை விலக்குவது நல்லது.
ஆனாலும் பெண்களில் நல்ல படைப்பாளிகளை நாம் உற்சாகப்படுத்துவது நல்லது, தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவதும் சரி, ஓவராக புகழ்ச்சி ஒரு படைப்பாளியை மழுங்கடித்து விடும் என்பது உண்மை நல்ல கட்டுரை சம்மதப்பட்டவர்கள் திருந்துவார்களா?
நல்ல பதிவு எனது நண்பருக்கும்facebook இல் ஒரு சம்பவம் நடந்தது அண்ணளவாக ௫ மாதங்கள் தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு கடலை போட்டிருக்கார் ...லவ் பண்ணியிருக்கார் ..ஆனா பிறகுதான் தெரிந்ததது அது பெண் அல்ல என்று அந்த அக்கௌன்ட் ஐ வைத்திருந்தது யார் தெரியுமா ?அவனோடு தினமும் ஊர் சுற்றும் இன்னொரு நண்பன் பாவம் அவன் கண்கலங்கி விட்டான்....இதனால் நான் நேரே எனக்குத் தெரிந்த பெண்களைத்தவிர மற்ற முகப்புத்தாக நண்பிகளை நம்புவதே கடினமாகி விட்டது ...
நல்லதொரு அலசல் பேஸ்புக்கில் மட்டும்மல்ல நண்பரே.. சமூக ஊடகங்கள் அத்தனையிலும் இத்தகைய கபட நாடகங்கள் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. என்றுமே நல்லதை விட கெட்டது வேகமாக பரவும் சக்தி கொண்டது. தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவை மேலும் பலரும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இனியாவது ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா எனப் பார்ப்போம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தாங்கள் பகிர்ந்துகொண்ட அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே...!
ஸலாம் சகோ.கழுகு,
உயரே பறந்தாலும் துல்லியமாக உற்றுநோக்கி எழுதியுள்ளீர்கள். //குறையாய் இருக்க வேண்டியவை எல்லாம் மிகையாய் இருப்பதால், மிகையாய் இருக்க வேண்டிய நல்லவைகள் குறையாய் இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......//---சமூக நற்சிந்தனையோடு வடிக்கப்பட்ட சிறந்த பதிவு. நன்றி சகோ.
ஒரு பக்கமாகவே பேசவேண்டாமே?
கொஞ்சம் அழகா ஒரு டி பி இருந்தா பாத்துட்டு வந்து வழியுற கல்யாணமான பொண்ணுங்கள ஆதாரத்தோட காட்டவா?
சொல்லுவதெல்லாம் உன்மை என்றாலும் பெண்கள் எல்லாம் சொக்கத்தங்கம் ஒன்றும் கிடையாது.
நல்ல கருத்து! தமிழர்களிடம் எந்த ஒரு விசயத்தையும் ஆழ்ந்து விளங்கி கொள்ளும் பழக்கமோ அல்லது தேடலோ மிகவும் குறைவு என்பதை கடந்த 6 மாதங்களாக இணையங்களை கவனித்த போது தெரிகிறது வருத்தப்பட வேண்டிய விஷயம் !
ஸலாம் சகோ
//குறையாய் இருக்க வேண்டியவை எல்லாம் மிகையாய் இருப்பதால், மிகையாய் இருக்க வேண்டிய நல்லவைகள் குறையாய் இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......//
உண்மையிலும் உண்மை ... நிஜ வரிகள்
நெத்தி அடி!
mmmmmmmmmm ananivarum ariya vendiya vidayamthan good
மிக அருமையான் விழிப்புணர்வு பதிவு
பேஸ்புக்கில் நடக்கும் தரந்தாழ்ந்த செயல்களை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள். விளங்க வேண்டியவர்களுக்கு விளங்குமா?
//இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......அதை கவனிக்க வேண்டியதும், கவனிக்கச் சொல்லி பரப்புரைகள் செய்வதும் ஒவ்வொரு மனிதரின் சமூகக் கடமை //
மிகவும் அவசியமான காலத்துக்கேற்ற விழிப்புணர்வு பதிவு .
கவனமுடன் இருக்கணும்
இப்ப என்னாச்சு...? யார் பொண்டாட்டியை யார் கையைப் பிடித்து இழுத்தார்கள்?
பேஸ்புக்...இணையம் என்று இல்லாதிருந்த காலத்திலும் இப்படித்தான் இருந்தது.
ஆமா...இந்த பேஸ்புக்கும் இணையமும் தமிழருக்காகவே உள்ள ஒன்றா? பரந்து விரிந்த உலகம்.
////நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா///
இது இருக்கட்டும்...நாளை நம் பிள்ளைகள் வாழப்போகும் நாட்டில் சீரழிக்கும் அரசியல் வியாதிகளைப் பட்டியலிடலாம்.
கழுகு என்பது வினவு கும்பலின் அடிப்பொடிகளா?
இங்கே யாரும் யாரையும் நேராக்கவேண்டாம். அது தானாக நடக்கும்.
இதுபோன்று கேவலமாக எழுதுவதே பெரிய அத்துமீறல்.
\\கேவலமாக எழுதுவது அத்துமீறல் \\...புரியல., எங்கள் அனுபவத்தை எழுதி இருக்கிறோம். அதே சமயம் கட்டுரை சார்ந்த மாற்றுக்கருத்தோடு உடன்படாவிட்டாலும், மதிக்கிறோம்.
உங்கள் அனுபவம், பார்வையின் படி பேஸ்புக் நன்றாக இருக்கிறதா., நல்லது. சரி படிக்கும் தோழமைகள் முடிவு செய்துகொள்ளட்டும்.
இந்த மறுமொழியினை நீண்ட நாளாக இணையத்தில் இருக்கும் தங்களிடமிருந்து இவ்வளவு சுருக்கென எதிர்பார்க்கவில்லை. பண்போடு பேச உங்களைப்போன்றவர்களே எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாறாக யாரும் எதையும் நேராக்க வேண்டாம் என்றால் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கிவிட வேண்டியதுதான்.
வினவுக்கு அடிப்பொடியா என்றால் உங்களுக்கு வினவுக்கும் ஆகாது என்பது மட்டும் தெரிகிறது :))
குறை நிறைகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பாராட்டும்படி எழுதியிருக்கிறீர்கள்.
கட்டுப்படுத்தப்பட வேண்டிய அசிங்கங்கள்...களையப்பட வேண்டிய குறைகள் நிறையவே உள்ளன.
பெண்களின் பெயரில் உலாவும் போலிகள் கணிசமாக இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் சீர்செய்தால், வலைத்தளங்களால் நாம் பெறும் பயன் எல்லை கடந்து நீளும்.
நன்றி.
நாகரிகம் கருதி வெளிப்படையாக எழுதாவிட்டாலும், தாங்கள் எழுத நினைப்பவற்றை நாசூக்காக எழுதுங்கள்.
கண் முன்னே கிடக்கும் கத்தியாக உள்ளது வலைதளங்கள்.பழம் வெட்டலாம்,பலியும் கொடுக்கலாம்.நாம் பயன்படுத்துவதை பொறுத்தே எல்லாம்.மிக சிறந்த விழிப்புணர்வு பதிவு.சமீபத்தில் நிர்வாணமான பலன்குடு இன பெண்களின் புகைப்படம் முக நூலில் பரப்பப்பட்டதும் அதற்க்கு மெத்த படித்த சமுதாய மக்கள் விரும்பியும்,NICE என்று எழுதியது கண்டும் அதிர்ந்தேன்.குறிப்பாக பெரும்பான்மை கல்லூரி மாணவர்களிடம் குற்ற உணர்ச்சி குறைந்து அனைத்து விசயங்களையும் எளிதாக எடுத்து கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.வழி நடத்த வேண்டிய கட்டாயத்தில் மூத்த மக்கள் இருக்கிறார்கள்.
நண்பருக்கு .........
சமூக அவலங்களை சுட்டி காட்டுவது ஒரு எழுத்தாளனின் கடமை தான் என்றாலும் உங்களின் நீண்ட கட்டுரையில் பெண்களின் மீதான ஒரு ஆவேசத்தை மட்டுமே உணரமுடிகிறது ...........இதை நான் பெண் என்ற வகையில் கண்டிக்கவோ மறுக்கவோ எழுதவில்லை நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் சக மனிதர்கள் அனைவருக்கும் ஆழ மனதில் வளர்ந்ந்து நிற்கும் விஷயம் சிலர் அதை வெளிபடுத்தும் முறைகள் வேறாக இருக்கிறது அவளாவே ஆனால் ஒட்டுமொத்த பெண் வர்க்கத்தை சாடுவதாக எழுவதை விட்டு நாம் என்ன செய்யலாம் என்பதை யோசியுங்கள் உங்களின் தளம் அதற்க்கு ஒரு முன் உதாரணமாக இருக்குமானால் நிச்சயம் பின் தொடர்வார்கள் ஒரு மாற்று வலையை உருவாக்குவதில் முனைப்பாய் இருங்கள் ..........
ஆண் பெண் வேறுபாடு என்ற மரபு (வெறியை ) வேரை களைந்து பாருங்கள் அப்போது உணரமுடியும் ஒரு உயிரின் செயல்பாட்டை ...............
நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நன்றி.
உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8668.html
Post a Comment