Friday, June 15, 2012

ஆதிக்க மனப்பான்மை என்னும் நோய்......!


நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர். 

ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவர் நீங்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்னும் தன்னை பற்றிய இயல்புக்கு மீறிய கூடுதல் மதிப்பீடு - ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருதரப்பினருக்கும் இந்தக் குணம் இருக்க வாய்ப்புண்டு.

ஊடுருவிப் பார்க்கும்போது இது ஆதிக்க மனப்பான்மையின் மறைமுக வெளிப்பாடே! இந்த ஆதிக்க மனப்பான்மைக்கு மறைமுகமான தாழ்வு மனப்பான்மை காரணமாகிறது. அடுத்தவர்கள் தன்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தால், தான் முந்திக்கொள்வது. அடுத்தவர்கள் தன்னை தாழ்த்திவிடுவார்களோ என்று நினைத்து, அடுத்தவர்களை எப்போதும் தாழ்த்திப் பேசுவது. தன்மேல் சொல்லப்படும் குற்றங்களையும், சுட்டிக்காட்டப்படும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், தான் செய்வதும் எப்போதும் சரியே என்ற பிடிவாதத்தை வளர்த்துக்கொள்வதே ஆதிக்க மனப்பான்மையை உருவாக்குகிறது.

தன் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தனக்கென போலியாக ஒரு உருவத்தை செதுக்கிக்கொள்ள, சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ் எனும் குணத்தை இவர்கள் கையாளுகின்றனர். எப்போதும் அடுத்தவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தான் சொல்வது மட்டுமே சரி என்று மனிதர்கள் இயங்க ஆரம்பிக்கும் போது தன்னிச்சியாகவே இவர்களுக்கு இருக்கும் மதிப்பு சமூகத்தில் கெட்டுப் போய்விடுகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. தான் நேசிப்பவர்களிடம் எப்போதும் அன்பால் ஆதிக்கம் செய்யாமல், கோபங்களாலும், வாக்குவாதங்களாலும், குறை சொல்லும் தன்மையாலும் தான் செய்வதுதான் சரி என்று நிறுவ இவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் பல விளைவுகளை உண்டாக்குகின்றன.

ஏதேனும் வாக்குவாதங்கள் ஏற்படின், மற்றவருடைய கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாமல், தன்னுடைய கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பது... பின் “நீ என்னைக் குறை சொல்லாதே, உன் செயலும் கூடத்தான் எனக்குப் பிடிக்கவில்லை எனவே முதலில் உன்னைத் திருத்திக்கொள்” என்று பிறர் மேல் சாடுவது... தனக்குப் பிடித்தவைதான் தன்னை நேசிப்பவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது... தங்களுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிப்பது... இவை போன்ற பல செயல்களினால் நேசிப்பவர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லோரிடத்திலும் இவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட வட்டத்தைப் வரைந்து கொள்கின்றனர்.

இவர்களின் இந்த மனப்பான்மையினால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை எப்போதும் இவர்கள் சிந்திப்பதே இல்லை. இவர்களுடைய பேச்சுக்களும் செயல்களும் ஒருவரை எந்த அளவிற்குக் காயப்படுத்தும் என்பதை உணருவதே இல்லை. வெளி உலகில் இவர்களது இந்த குணம் அடங்கியிருந்தாலும், நேசிப்பவர்களிடம் குறிப்பாக தங்கள் வாழ்க்கைத் துணையிடம் கட்டாயம் மேலோங்கி இருக்கும். இதில் இருக்கும் பாதிப்பு என்னவெனில், தான் செய்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்று நினைத்துக்கொள்வதால், இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதே இல்லை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவது, தன்னைத் தவிர அனைவரையும் முட்டாள்கள் போல் நினைத்துக்கொள்வது என அதிமேதாவித்தனங்கள் இவர்களது செயல்களில் மேலோங்கி இருக்கும். இதுபோன்றவர்களின் தவறினைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாமல், பதிலுக்கு வாதம் செய்வார்கள். தாங்கள் எப்போதுமே நூறு சதவிகிதம் சரியானவர்கள் என்பதுபோல காட்டிக்கொள்வார்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்பது அதிகபட்ச அன்பினால் உண்டாகிறது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பொசசிவ் குணத்திற்கும் ஆதிக்க மனநிலைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. தனக்குச் சொந்தமான ஒன்றோ ஒருவரோ, பிறரை விட தங்களிடத்தில் அதிக நெருக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்றும், தன்னை விட்டு யாரும் தனியே பிரித்து விடக் கூடாது என்ற மனோபாவமும் தனக்குரிய முக்கியத்துவத்தை அதிகம் எதிர்பார்க்கும் குணமும் அக்கறையும் பொசசிவ் எனலாம். இதற்கும் சந்தேக குணத்திற்கும் நூலிழையே வித்தியாசம். 

அதைப் புரிந்துகொண்டால் நலம். ஆனால் ஆதிக்க மனப்பான்மை என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. “தான்“ என்ற அகந்தை இதில் மேலோங்கி இருக்கும். அடுத்தவர்பற்றி, அவர்களுடைய விருப்பம், வலி பற்றி சிந்திக்கத் தோணாது.. இதில் அன்பு காதல் என்பதை விட அடக்குமுறைகள் தான் அதிகம் இருக்கும். பெரும்பாலான நட்பு வட்டத்தை இந்த மனநிலை சுருங்கச் செய்துவிடும்.

அதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளில், குறிப்பாக கணவன்-மனைவி உறவில் பெரிதளவில் விரிசல் உண்டாக்கிவிடும். விட்டுக்கொடுப்பதென்பது இருபக்கமும் இருத்தல் வேண்டும். எப்போதும் ஒருவரே விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பின் ஒருவித சலிப்பு ஏற்பட்டு வாழ்க்கை கசந்துவிடும். தங்களுக்குள் உள்ள ஈகோ குணத்தை விட்டுவிட்டு, ஆதிக்கமோ தாழ்வோ.. எந்தவித மனநிலையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மனம் திறந்து பாராட்டப் பழக வேண்டும். தவறு செய்திருப்பின், மனதார மன்னிப்புக் கேட்க முன்வரவேண்டும். கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு எந்தவொரு சூழலிலும் குத்திக்காட்டாமல் சகிஜநிலைக்குத் திரும்ப வேண்டும்.

உறவுகளுக்கிடையே சரியான புரிதல்கள் இருந்தாலே வாழ்க்கை மிகைப்படுத்தாத யதார்த்தமாகிவிடும்.

புரிதல்களுடனான வாழ்வைப் பெற வாழ்த்துக்கள்.
  
கழுகிற்காக 
இந்திராவின் கிறுக்கல்கள்


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

4 comments:

இந்திரா said...

மீண்டுமொரு முறை என்னுடைய பதிவினை இங்கு பகிர்ந்தமைக்கு கழுகு வலைதளத்திற்கு என் நன்றிகள்.
இன்னும் உயரப் பறக்க என் வாழ்த்துக்கள்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சகோ. நன்றி. இதுபோன்ற விஷயங்களை அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பது, மூளைக்கு சலவைதான். இந்திராவிற்கு வாழ்த்துகள்

kk said...

இது எல்லாம் எனக்கு இருக்கிறமாதிரியே இருக்கு...திருந்த முயற்சிக்கிறன்...தகவலுக்கு நன்றி..

Unknown said...

The term,superioty complex, possessiveness,ego, etc are inter-related.You have given the differences between them with some soft corner.I met some people during their tenor period but after retirement of services they are left aloof and alone .In other words ,nobody has taken care of.
VAAZHUKKUAL .by DK

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes