இப்போது நீங்கள் எழுதுகிறவர். பால்/இன/சாதி/மதம்/வர்க்கம் உங்களுக்கு வழங்கியுள்ள இடத்தை உணர்ந்தவர். தனிமனிதராகிய உங்களையும், நீங்கள் சார்ந்த பால்/ இன/ சாதி/மதம்/ வர்க்கத்தையும் ‘தான்’ என்கிற உங்களுக்குள் ஏற்றுக்கொண்டவர். உங்களையும் மற்றமைகளையும் அவரவர்க்குரிய இருப்பில் வைத்து வெளிப்படுத்தத் தயங்காதவர். சரி, இப்போது சொல்லுங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று?
எப்படியேயாயினும், சுயம்புலிங்கம் எழுதியதைப்போல வயிறில்லாத மனிதரென்று ஒருவருமே இன்னும் பிறந்திடவில்லை. எண்சாண் உடம்புக்கு வயிறுதான் பிரதானமா என்றால், ஆமாம் வயிறுதான் பிரதானம் என்பதே பூசி மழுப்பாத நேர்மையான பதிலாக இருக்கமுடியும். அந்த வயிற்றின் காந்தலை தணித்துக்கொள்ள வேண்டித்தான் மனிதகுலம் பிறந்தநாள் முதல் அலைந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் பசியும் பட்டினியும் இன்னும் தீராநோயாய் நம்மில் ஒருபகுதியினரை தின்று கொண்டிருக்கிறது.
ஒருகவளச் சோற்றுக்கு தெருநாயிடம் மல்லுக்கட்டிச் சாகிறவர்களும் பெற்றக் குழந்தைகளை விற்றுப் பிழைக்கிறவர்களும் பல்கி வரும் காலமாயிருக்கிறது இது. கடனுக்கு ஈடாக தமது உடலுறுப்புகளை அறுத்துக்கொடுத்துவிட்டு செத்தும்சாகாமல் சீவனங் கழிப்பவர்களை நீங்கள் அறிவீர்கள்தானே? விலையில்லா அரிசி கொடுத்தாலும் பொங்கித்திங்க சட்டியில்லாதவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கிறபட்சத்தில் உங்களது வறுமையை உலகறியச்செய்ய, கருணைவான்களால் நிரம்பியது இவ்வுலகம் என்கிற மாயையை அம்பலப்படுத்த நீங்கள் எழுதித்தானாக வேண்டியுள்ளது.
பரந்த இவ்வவுலகம் என்பது அடிப்படையில் பூமியை/ மண்ணைத்தான் குறிக்கிறது. இந்த மண்ணை அபகரிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்குமான போர்களும் சூதுகளும் நின்றபாடில்லை. அண்டைவீடு, அடுத்தவன் வரப்பு, ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போய் மண்ணை அபகரிக்கும் வல்லாதிக்கம் உங்களது விளைநிலத்திற்கும் குடிமனைக்கும் குறிவைக்கிறதென்றால் அதை எதிர்ப்பதற்கும் உங்களையொத்தவர்களை ஒருமுகப்படுத்தி திரட்டுவதற்கும் எழுத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது?
ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் ஒருவர் என்கிற வீதத்தில் இந்தநாட்டின் விவசாயிகள் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். இவர்களில் நமது குடும்பத்தவரோ உற்றார் உறவினரோ இருக்கமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லாதபோது அந்த அவலத்தை உங்களையன்றி வேறு யார் எழுத முடியும்?
மாதத்திற்கு ஆறுலட்சம் யூனிட் மின்சாரம் எரியுமளவுக்கான பிரம்மாண்ட வீடும், ஓரிரவின் விருந்துக்கு பல கோடிகளை செலவழிக்கும் ஊதாரிகள் உள்ள ஒரு நாட்டில் வெறும் 32ரூபாயில் தினசரி வாழ்வை ஓட்டும் உங்களை வறுமைக்கோட்டைத் தாண்டியவர் என்று ஒரு அரசாங்கம் சொல்கிற அபத்தத்தை பகடி செய்யவும் பழித்துரைக்கவும் இலக்கியம் ஒன்றுதான் உங்களுக்கு துணைநிற்கிறது என்பதை மறவாதீர்கள்.
மனிதரை மனிதர் சமமாகப் பாவிப்பதற்குத் தடையாகி மறிக்கிற சாதியத்தை அதன் வேர்வரை சென்று தாக்குவதற்கு எழுத்தும் ஒரு ஆயுதமாக இருக்கிறது என்பதை அம்பேத்கர் நிறுவிப்போயிருக்கிறார். ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஒதுக்கப்பட்டிருப்பதையும், ஒவ்வொரு பதினெட்டு நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் இலக்கியத்திற்கு எந்தப் பங்கும் இல்லையென்று கருதினால் நீங்கள் எழுதாமல் இருந்துவிட்டுப் போங்கள். ஆண்டுதோறும் செப்டிக் டேங்கிற்குள் இறங்கிச் செத்துப்போகிற 22ஆயிரம் பேரை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பார்ப்பதற்கு உங்களால் முடியுமானாலும்கூட நீங்கள் எழுதாமலே இருந்துவிடலாம்.
யாரோ ஒரு ஆணுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட அடிமையாகவும் அவனது இச்சைகளை பூர்த்திசெய்துவிடுகிற சதையாகவும் இருந்துவிட்டுப்போவதில் சம்மதமற்ற பெண்ணொருத்தி தனது தனித்துவத்தையும் விழைவுகளையும் தேர்வுகளையும் பாலின மற்றும் பாலியல் சமத்துவதற்கான முன்வைப்புகளையும் நுட்பமாக வெளிப்படுத்த எழுத்தையே பயன்படுத்துகிறார்கள்.
பாவத்திற்கான சாபம்போல பழித்துரைக்கப்பட்ட பாலின மாற்றத்தை, உடலியல் மாறுபாடென நிறுவிடவும் இந்தச்சமூகத்தில் தங்களது இருப்பிற்கான நியாயத்தை நிலைநிறுத்தவும் தங்களைப் புறக்கணிக்கறவர்களின் மனசாட்சியை உலுக்கும் விதமாக திருநங்கைகள் எழுதத் தொடங்கிய பிறகே அவர்கள் மீதாக உலகின் கவனம் திரும்பியது.
உலகின் வளங்களும் உற்பத்திகளும் உழைப்பின் பயனும் ஒரு நீதியான முறையில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்கிற மார்க்சின் எழுத்துதான் புதிய உலகுக்கான கனவுகளை பரப்பியது செயலுக்குத் துண்டியது என்பதை இங்கே சொல்வது முத்தாய்ப்புக்காக அல்ல, தொடக்கத்திற்காக.
இது ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துகள் ஆயினும் ஒரே வேட்கை கொண்டவர்களின் எண்ணப் பிரதிபலிப்பே...எழுதுங்கள். அல்லது கழுகுவில் எழுத வாருங்கள் என அழைக்கிறோம்.
நன்றி: ஆதவன் தீட்சண்யா
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
2 comments:
எழுத்தின் வலிமையை அழுத்தமான, கருத்துச் செறிவான நடையில், சுவை குன்றாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
படித்துச் சுவைத்தேன்; மகிழ்ந்தேன்.
பாராட்டுகள்.
அதான், எங்கேயோ படித்த மாதிரியே இருந்தது. ஆதவன் தீட்சண்யாவின் அற்புதமான கட்டுரைகளின் ஒன்று.
Post a Comment