Friday, August 24, 2012

என்ன செய்து கிழிக்கப் போகிறோம் நாங்கள்...? ஒரு கழுகு பார்வை...!

 
 
 
இந்த சமூகத்தினூடே வாழ்வதற்கான தகுதியாய் மீண்டும் மீண்டும் உரக்க சப்தமிட்டு தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமை பலருக்கு இருக்கிறது. கூட்டம் சேர்ந்து கொண்டு, தன்னை கடந்து செல்லும் மனிதர்களை எல்லாம் கிண்டல் செய்து சிரிக்கும் புரையோடிப்போன மனோநிலையை ராஜ குணமாக எண்ணிக் கொண்டு தத்தமது புஜபலம் காட்ட முஷ்டியை எப்போதும் முறுக்கி நிற்கிறார்கள்.

நான் யார் தெரியுமா..? என்று கோபத்தோடு மீசை முறுக்க நிறைய பணமும், நிறைய ஆட்களும், நிறைய அதிகாரமும் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. மேலே சொன்ன எதுவுமே இல்லாமல் அவர்கள் இருக்கும் போது நீங்கள் யாரென்ற கேள்வியை யாரும் கேட்டு விட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாதே, அவமானம் பிடுங்கித் தின்று விடுமே என்ற காரணத்தால் தகுதி என்ற பெயரில் தெருக்குப்பைகளை எல்லாம் எடுத்து தத்தமது தலைகளில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர்கள் என்று யாரையும் நாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் அப்படியான கேள்வியை கிழித்துக் கொண்டு நாங்கள் என்ன செய்து கிழித்தோம் என்ற மாபெரும் அரக்க கேள்வி எங்களின் சுயத்தை சுட்டெரிக்கச் செய்கிறது. கோடி பேர் எம்மை சுற்றி எமக்கானவர்கள் என்று குரல் கொடுத்த போதிலும் நாம் யாரென்ற அருகதையை நாம் தப்பாமல் எப்போதும் நினைவுக் குறிப்பில் ஏற்றிதான் வைத்திருக்கிறோம்.

கழுகு சமூகப் பிரச்சினைகளுக்காக போராடி களம் சென்றதா..? இல்லையா...? என்று இன்று ஆராய்ச்சி செய்து விமர்சிக்க காத்துக்கிடக்கும் கூட்டத்திற்கும் கழுகிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தெரியாத விடயங்களை புதிதாக சொல்லும் போது மூளை அதை ஏற்றுக் கொள்வதில்லை. மனம் புதிய விசயங்களை பார்த்து எப்போதும் பயம் கொள்கிறது. கெட்டது என்றாலும் பழக்கப்பட்ட விசயங்களையே மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறது. இதனாலேயே நாம் பேசும் பொருளின் மையம் வரை செல்ல பலருக்கு மிரட்சியாய் இருக்கிறது.

எப்போதும் நாம் சார்ந்திருக்கும் இடம் சரியாய் இருக்கிறதா என்று உற்று நோக்கி தம்மையும் தம் சுற்றுப்புறத்தையும் சரியாய் வைத்துக்கொள்ள எல்லாவிதமான சூழல்களையும் உருவாக்கிக் கொடுப்பதும், அப்படியாய் உருவான சூழல்களை சரியா என்று ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்வதும்தான் பகுத்தறிவின் உச்சம். எனக்குப் பிடிக்கிறது என்று கண்மூடித்தனமாய் என் மூளையை எங்கெங்கோ மேயவிட்டுக் கொண்டு யாருக்கோ எதற்கோ கொடி பிடிக்கிறேன் அதில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நலம் பயக்கட்டும் என்று பார்க்கும் குறுகிய பார்வைகள் தீயிட்டுக் கொளுத்தப்படவேண்டியவை.

இணையத்தில் கட்டுரைகளை எழுதினால் இணையம் வரை வர இயன்றவர்கள் வாசிக்க முடியும் எனும் பொழுது, இணையத்தின் பயன்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கலாம், எந்த மாதிரியான கருத்துக்களை நாம் பதிவதின் மூலம் நாளைய சமூகம் பயன்பெற முடியும் என்பதையே  முழுமையான கொள்கையாக கழுகின் பாலகாண்டம் கொண்டிருக்கிறது.

தமிழ் என்று எம் பிள்ளைகள் நாளை இணையத்தின் தேடு பொறியினை அழுத்தும் போது அங்கே ஆபாசங்களும், தலைக்கனங்கள் கொண்டவர்களின் மோதல்களும், தவறான அரசியல் வழிகாட்டுதல்களும், சுய தம்பட்டங்களும், வன்முறைகளும், இன்ன பிற கேடு கெட்ட விசயங்களும் இருந்து விடக் கூடாது என்ற எங்களின் பொறுப்புணர்ச்சிக்குப் பெயர்தான் கழுகு என்று கொள்க;

இணைய உலகிற்குள் நாம் அடியெடுத்து வைத்த காலத்தினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று நிறைய வலைப்பதிவர்கள் அல்லாத நிறைய பேர்கள் இணையத்தின் வலைப்பக்கங்களை வாசிப்பதையும் கருத்துரைகளை இடுவதையும் பரவலாக நாம் காணமுடிகிறது. எந்த பதிவின் முதல் பின்னூட்டமாக வடையையோ அல்லது சுடு சோற்றையோ  யாரும் இடுவதில்லை. கூட்டமாக நின்று சரியில்லாததை முன்னெடுப்பவர்கள் எல்லாம் இன்று மதம் என்ற ஒரு அடைப்பிற்குள்ளும், அரசியல் என்ற அடைப்பிற்குள்ளும், சாதி என்ற அடைப்பிற்குள்ளும் நின்று கொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பினை தூக்கி நிறுத்தவும் முயன்று கொண்டிருக்கிறனர்.  சரிகளைச் சந்தைப்படுத்தும் இவர்களின் நோக்கம் சரி என்றாலும் தவறுகளை தாம் சார்ந்திருக்கும் அமைப்பிடம் கூறி சரிப்படுத்த முயலாமல் தவறுகளுக்கும் சரி என்னும் சாயத்தைக் கொடுக்க பகீரத பிரயத்தனம் செய்யும் இவர்களின் அறியாமையைத் தான் நாம் மழுங்கிப்போன விழிப்புணர்வு என்கிறோம்.

தமிழர் மண்ணிலிருக்கும் ஒரு முதுபெரும் அரசியல்வாதி பேஸ்புக் கணக்கைத் துவக்கி இருக்கிறார் என்றால் அவரிடம் கருத்து ரீதியாக முரண்பாடுகள் கொண்ட இணைய வேங்கைகள் தெளிவான எதிர்கருத்துக்களை அவரின் பக்கத்தில் கேள்வியாய்க் கேட்டு சரியான பதிலை பெற முயன்றிருக்கலாம், மழுப்பனான பதில்களுக்காக மீண்டும் கேள்விகளை எழுப்பி இருக்கலாம். சரியான பதில்களைச் சுட்டிக்காட்டி பாராட்டியும், தவறான பதில்களை சாடியும் பரப்புரைகள் செய்திருக்கலாம்....

இவையெல்லாம் விடுத்து ஏகவசனத்தில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களின் சீற்றத்தை கொட்டிய என் தமிழ்சமூகத்தின் முறையற்ற கோபமும், பண்பாடற்ற அறிவும் தான் எப்போதும் நம்மை சிறுமைப்படுத்தி நமது இலக்கை அடையவிடாமல் செய்திருக்கிறது என்பதை அறிக; பொதுவெளியில், அதுவும் இணையத்தில் இருக்கும் உரிமையினையும் சுதந்திரத்தையும் சரியான வகையில் பிரயோகம் செய்ய இன்னமும் யாரும் அறியவில்லை.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியில் இன்று இது போன்ற அயோக்கியத்தனங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.

தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு ஆச்சர்யத்திலிருந்து நம் சமூகம் இன்னும் வெளியே வரவே இல்லை. இப்படியான மாயாஜால படம் பார்க்கும் உணர்வினை விட்டு வெளியே வந்தால்தான் இதன் முழுமையான பயன்பாடுகள் புரியும்.

இணையப் பெரு அரக்கன் பல வழிகளில் இன்று விசுவரூபம் எடுத்து நிற்கிறான். இங்கே ஒரு கட்டுக்குள் நின்று சிந்திக்கும் சுயநல போக்குகள் இன்றி சுதந்திர மனப்பான்மையுடன் கருத்து பகிரும் ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல கைகோர்க்க துவங்கியின்றனர். பாரம்பரியமாய் பதிவுலகத்திற்கு என்று இருந்த கோட்பாடுகளும் வெற்றுச் சண்டைகளும் முகஸ்துதி பாடுதல்களும் இன்று உடைந்து சரிய ஆரம்பித்திருக்கின்றன.

எழுத்து என்னென்ன மாற்றங்களைச் இந்த சமூகத்தின் மீது திணித்திருக்கிறது என்பது வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் தெளிவாய் பொறிக்கப்பட்டிருக்கிறது. சரியான பயன்பாட்டோடு நாம் பயணிக்கையில்.... இன்றைய நமது நிகழ்வுகளும் வரலாறாகிப் போகும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை...!
 
  (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

3 comments:

இந்திரா said...

பதிவு, கழுகில் ஆரம்பித்து பொதுவான வலைச் சமூகத்தில் முடிந்துள்ளது..
கூறப்பட்ட பல கருத்துக்கள் மனதைச் சுட்டாலும் அது உண்மையே. சமூக வலைதளங்களில் இன்றைக்கு நடக்கும் வேடிக்கைகள் வருத்தப்பட வேண்டியவை.

//தமிழ் என்று எம் பிள்ளைகள் நாளை இணையத்தின் தேடு பொறியினை அழுத்தும் போது அங்கே ஆபாசங்களும், தலைக்கனங்கள் கொண்டவர்களின் மோதல்களும், தவறான அரசியல் வழிகாட்டுதல்களும், சுய தம்பட்டங்களும், வன்முறைகளும், இன்ன பிற கேடு கெட்ட விசயங்களும் இருந்து விடக் கூடாது//

நியாயமான ஆதங்கம்.
சமூக வலைதளங்கள் என்பவை வெறும் பொழுதுபோக்கிற்காகவும், ஆபாசங்கள் நிறைந்த தளங்களாகவும், தனது உள்மன இச்சைகளை கொட்டித் தீர்க்கும் ஊடகமாகவுமே பெரும்பாலும் பார்க்கப்படுவது மாற வேண்டும்.
அதற்கு கழுகின் பங்களிப்பு உள்ளிருக்கும்பட்சத்தில் தங்களது பணிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

krish said...

அருமை.

Unknown said...

Unmai truth., we should give our ideas NOT in third degree words but wise ,.by DK

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes