Wednesday, August 29, 2012

ஏன் கொண்டு வரமுடியாது சமூக மாற்றத்தை...? இணைய உலகம் பற்றிய ஒரு பார்வை!

விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை. 

கேளிக்கைகள் எல்லாம் கடும் அயற்சியான வேலைகளுக்கு நடுவேயான நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வுகள். அவை புத்துயிர் அளித்து மேலும் உற்சாகமளிக்கும் என்றாலும் முழுமையான ஓய்வுகள் நம்மை சோம்பேறியாக்கி விடும் என்பதும் உண்மை. இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வரும் அத்தனை பேரும் சமூக மாற்றத்தை விரும்பிதான் வருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...! நம் சமூகத்திற்கு இன்னமும் என்ன வேண்டும்...? எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது என்று கருதும் ஒரு சாராரும், இங்கே பேசி சமூகத்தை சரி செய்ய முடியுமா என்று  கேள்வி கேட்கும் மற்றொரு சாராரும்.....

ஏதோ ஒரு தாக்கத்தில் இங்கே பரிபூரண சுதந்திரத்தோடு வரும் நமது வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் கை கோர்த்து தெளிவுகளைச் செய்தியாய் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குப் புரியவைத்து தானும் விளங்கி ஒரு தெளிவான சமூகத்தை கட்டமைப்பதில் ஒரு சிறு துரும்பாய் இருக்கலாமே என்று எண்ணும் எங்களை போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தனிமனிதர்கள் எப்போதும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை உடையவர்கள். இது தவறல்ல இயற்கையே...! தங்களைப் பிரபலபடுத்திக் கொள்ள செய்யும் ஒவ்வொரு காரியத்தினூடேயேயும் ஒரு சமூக பிரஞை இருந்து விட்டால், கேளிக்கைகளைத் தாண்டி ஏதேனும் ஒன்றை நாம் செய்தவர்களாகி விடுகிறோம். மனித சக்தி என்பது அளப்பரியது. சரிகளை நேரே பார்க்க பரந்த மனமும், சரியான புதியவைகளை ஏற்றுக் கொள்ளும் தெளிவும் உள்ள மனிதர்கள் ஒன்று சேரும் போது அங்கே பிரமிக்கத் தகுந்த அளவில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

மகாத்மா காந்தி தன்னிடம் சமூகம் பற்றிய ஒரு பார்வையைக் கொண்டிருந்தார். அதை கருத்தாய் வெளிப்படுத்திய போது அதில் கவரப்பட்ட மனிதர்கள் தங்களை அவரின் கருத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் கருத்துக்கள் செயலாய் மாறி ஒட்டு மொத்த இந்தியாவிலும் புரட்சித் தீ பரவியது. அந்த புரட்சியால் என்ன, என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்றெல்லாம் நாம் இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை.....இன்றைய நமது பேச்சு, எழுத்து , கருத்து சுதந்திரத்திற்கெல்லாம் அதுவே ஆணி வேராய் இருக்கிறது.

இன்று நாம் பேசிக் கொண்டிருகும் மையப்பொருளான இணைய உலகத்தில், கீழ் தட்டு மற்றும் சாதரண நடுத்தர வர்க்கத்து மக்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றி அலச யாரும் முன் வருவதில்லை. இங்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் அநியாயங்களை பற்றியும், சொகுசுப் பேருந்தில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யும் போது  ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றியும், ஷாப்பிங் மால்களில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றியும்தானே..? இதை எல்லாம் விடுத்தால் உலக அரசியலையும், உள்ளூர் சொகுசு அரசியலையும் நமது வசதிக்கு ஏற்றார் போல சார்ந்து நின்று கொண்டு அதன் சரி, தவறுகளைப் பேசுவோம்....

அண்ணா நகர் வளைவினைக் கடந்து நேரே செல்கையில் இரண்டு மீட்டர் நீளத்துக்கு கணுக்கால் அளவு மழைத்தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளமாயிருக்கிறதே..? சராசரி மனிதர்கள் அந்த சாலையில் கால் நனைத்து நடந்து போகிறார்களே...? பேருந்துகளும் ஆட்டோக்களும் பரத நாட்டியம் ஆடியபடி அந்த பள்ளத்தைக் கடந்து போகிறதே....? இதை யார் சரி செய்வக்டு...?திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராஜாகடை ஸ்டாப்பிங்கில் இருந்து அஜாக்ஸ் பஸ் ஸாண்ட் வரை சாலையின் இரு புறமும் இடித்து போட்டு குவித்துக் கிடக்கும் கட்டிடங்களின் கழிவுகளை யார் அப்புறப்படுத்துவது என்று என்றேனும் ஒரு கூட்டம் போட்டு யோசித்து பார்க்கவோ, விவாதிக்கவோ செய்திருப்போமா? தெரு முனைகளில் மூத்திரம் கழிக்கும் மனிதர்களுக்கு அது எப்படி சரி என்று தோன்றுகிறது ....? இது தவறு என்று யார் அவர்களுக்குச் சொல்வது...?

தண்ணீர் இல்லாமல், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் செத்துப் போய்கிடக்கிறதே? ஏன் இப்படி ஆனது..? விவாசயம் இல்லாவிட்டால் அந்த விவசாயி வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வான்... என்றெல்லாம் இணையத்தில் உள்ளவர்கள் சிந்தித்துப் பார்த்தாவது இருக்கிறோமா?

சாமனியனின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன. மேல் தட்டு வர்க்கத்தின் பிரச்சினைகள் தான் இன்று சமூகப்பிரச்சினைகளாய் பார்க்கப்பட்டு இணையத்தில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஒரு சாமனியனின் சங்கடங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சீமான்களின் கூடாரமாய் இது போய்க் கொண்டிருப்பது நம சமூகத்தினைப் பிடித்திருக்கும் பெரும் பிணி. திணிக்கப்பட்ட சாபக்கேடு....!

தமிழகம் முழுதும் இணையத்தில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்..., சிரிக்கிறார்கள், அரசியல் பேசுகிறார்கள், சமூக கருத்துக்களைச் செம்மையாய் சொல்லவும் செய்கிறார்கள்....பேஸ் புக்கிலும், ட்விட்டரிலும், பொங்கி எழவும்  செய்கின்றனர்...., கூடிப் பேசி மகிழ்ந்து மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.... கூடுகின்றனர் பின் பிரிகின்றனர்.....அவ்வளவுதான்....

மனித சக்தி என்பது வெறுமனே கூடிப் பிரிய மட்டுமல்ல, ஒன்று கூடி தவறுகளை நேர் செய்ய, கருத்துகளாய் பற்றி பரவ, புதிய கருத்துக்ளை பதிய.....விவாதிக்க, மேற்கொண்டு அறிவின் துணை கொண்டு பயணம் செய்ய... 

உறவுகள் ஆத்மார்த்தமனவை...இதில் எள் அளவும் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது, ஆனால் அதே உறவுகள் அறிவுப்பூர்வமானவையாய் மாறும் போது நாம் விரும்பும் மாற்றங்களை  சர்வ நிச்சயமாய் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  கழுகு ஆத்மார்த்தமான உறவுகளைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வெறுமனே அந்த உறவுகளை ஏதோ ஒன்றின் சந்தைப்படுத்துதலுக்காய் பயன்படுத்திக் கொள்ளாமல், அறிவார்ந்த நிகழ்வுகளை கட்டியமைக்கும் மிகப்பெரிய சக்தியாய் பார்க்கவும் செய்கிறது.

இனியும் நாம் வெறுமனே கூடி பிரிந்து அந்த நினைவுகளை அசைபோடுவதோடு நின்று போகக் கூடாது....அதனையும் கடந்து இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேராசையை பெருங்கனவை.... கிடைத்திருக்கும் வாய்ப்பான இந்த சமூகத் தொடர்பு சாதனம் மூலம் உங்களிடம் சேர்ப்பிக்கிறோம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ்.. 

நாம் கருத்துக்களாய் இன்று பகிர்ந்து கொண்டிருக்கும் நெருப்புக்கள் பற்றும் இடத்தில் சரியாய் பற்றிக் கொள்ளத்தான் செய்யும், மீண்டும் மீண்டும் நம்மை புறக்கணிக்கும் மனிதர்களின் மனங்கள் ஒரு கட்டத்தில் கூர்மையாய் நம்மைப் பற்றி சிந்திக்கத்தான் செய்யும்.....

அந்த நாளில் ஓராயிரம் கழுகுகள் சுதந்திரவானில் கட்டுகளின்றி தங்களின் பார்வையின் கோணத்தை சரியாய் மாற்றி....சத்தியம் எதுவென்று அறிந்து கொள்ளவும் செய்யும்....!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

10 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

நான் கூட படத்தை பார்த்து பயந்துட்டேன் நம்மளை பற்றி ஏதோ சொல்லி இருக்காங்களானு... :)

வவ்வால் said...

கழுகு,

எழுதினது யாருன்னு பேர போட்டிருங்க, இல்லைனா வவ்வால் தான் கழுகுன்னு எழுதுறான்னு புரளியை கிளப்பிடப்போறாங்க :-))


ஹி...ஹி இதே கருத்தினை பல இடங்களிலும் பின்னூட்டமாக சொன்னதுக்கு கிடைத்த பெயர் "முட்டாள்" இல்லைனா எதிர்மறையாக பேசுபவன்னு சொல்றாங்க.

ஒரு நாளைக்கு ரூ 32.50 காசு தனிநபர் வருமானம் போதும்னு சொல்லுற திட்டக்கமிஷன் இருக்கும் நாட்டில் சாண்ட்விட்ச் 150 ரூக்கு சாப்பிட்டு விட்டு சமூகம் பற்றி கவலைப்படுவது தான் மக்களுக்கு பிடிக்கிறது, நீங்களும் ஒரு சாண்ட்விச் சாப்பிட்டுப்பாருங்க அப்புறம் இப்படிலாம் பேச மாட்டிங்க :-))

கோவை நேரம் said...

மாற்றத்தை கொண்டு வரனும்...ஆனா யார் செய்வது..?

Shankar M said...

ஏன் கொண்டு வர முடியாது என்பதாய் தொடங்கி, இணைய தளத்தை பற்றிய ஒரு தெளிந்த பார்வை...சிந்திக்க வைத்துவிட்டாய். சிந்தனையின் பிரதிபலிப்பு, வெளிவர சமயம் எடுக்கலாம். விதை ஊன்றியாகிவிட்டது. தண்ணீர் விடுபவர்கள் செய்வார்கள். ப்ட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை....

சென்னை பித்தன் said...

செய்யலாம்;செய்ய வேண்டும்.சிறப்பான பகிர்வு.

Anonymous said...

சரியான நேரத்தில் சரியான பதிவு ! பதிவுலகம் தடம் மாறுவதை சரி செய்யும் பதிவு என நினைக்கின்றேன் .... !!!

நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மாற்றத்தைத் தான். மாற்றம் இயல்புக் குணம் என்றாலும் மனித சமூகம் அதனைத் தடுத்து வைப்பதிலேயே குறியாக இருக்கின்றது. குறிப்பாக அதனால் பயனடைவோர். அதிகாரமும், செல்வமும் சேரும் இடத்தில் இருப்போர் மாற்றங்களை விரும்புவதில்லை... அதிகாரமற்ற, செல்வமற்ற சாமான்யர்கள் மாற்றங்களை விரும்பினாலும் கிடைப்பதைக் கூட இழந்துவிடுவோமோ என்ற பிரம்மையில் மாற்றம் நோக்கி கூவ பயப்படுகின்றார்கள் ..

பதிவுலக விவாதங்கள் மேன்மட்ட வாழ்வியலை வட்டமடித்து வருவது வருத்தமான ஒன்றே.. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை சிக்கல்களை நோக்கி நகர்வோம் !!!

முதிர்ச்சியடைந்த எழுத்துக்களை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி !!! ஒருமுறை நாம் என்ன எழுதுகின்றோம் என பதிவர்களாகிய நாம் மறுபரிசீலணை செய்ய வைக்கத் தூண்டிவிட்டீர்கள் ..

நன்றிகள் !

Thozhirkalam Channel said...

இணையத்தால் மாற்றுவோம்,,
இனைவதால் மாற்றுவோம்,,

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... நன்றி...

தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும்... வளர வேண்டும்...

சிவானந்தம் said...

>>விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை.<<

சில வார்த்தைகள் படித்தவுடன் ஒரு பிரமிப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி அதை மீண்டும் படிக்கத் தூண்டும்.

மேலே நீங்கள் எழுதிய வார்த்தைகள் அந்தவிதம். சிலவரிகளில் யதார்தத்தை புரிய வைக்கும் வார்த்தைகள். கழுகு என்ற புனைப்பெயரில் இதை எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

krish said...

அருமை,நன்றி.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes