Sunday, July 14, 2013

கழுகு பேஸ்புக் பக்கம்....!


வாழ்க்கையின் போக்கில் நிகழும் மாற்றங்கள் யாரின் விருப்பு வெறுப்பினையும் பொறுத்து அமைவதில்லை. கழுகு இணையத்தில் அடி எடுத்து வைத்து வார்த்தைகளை தட்டச்சு செய்ய ஆரம்பித்த காலத்தில் இணையத்தை அரசியல், ஆதிக்க சாதீய சக்திகள் மிகையாய் சூழ்ந்திருக்கவில்லை.

நவீன ஊடக வளர்ச்சி சாமானிய மக்களுக்கு வசப்பட்டே போனது என்று நாம் கருதியிருந்த காலத்தில் எழுதுவதற்கான கோட்பாடுகளாய் அறிவு ஜீவிகளின் உலகம் சமைத்து வைத்திருந்த அத்தனை வரைமுறைகளையும் எம் இளையர்கள் உடைத்து எறிந்து விட்டு தங்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த கவனிக்கத்தகுந்த, சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஏராளமான நிகழ்வுகளைப் பதிவு செய்தும் வந்தார்கள்.

வலைப்பூக்கள் எனப்படும் பிளாக் உலகத்தின் வசீகரமே அது சாமானியர்களால்  கருத்து சொல்ல முடிந்த இடம் என்பதுதான்.

வலைப்பூக்களைத் தொடர்ந்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைவுத் தளங்களின் பயன்பாடுகள் முழு வீச்சில் எம் மக்களால் பயனீடு செய்யப்பட்ட போது எமது குரல்வளைகளில் ஆதிக்க சக்திகள் தமது கோரக் கை கொண்டு நெறிக்க ஆரம்பித்தன. எப்போதும் ஒரு அரசியல் தலைவனையும், சினிமா நடிகனையும், எழுத்து வியாபாரியையும் போற்றிப் புகழ்ந்து அவர்களின் கால்களில் வீழ்ந்து கிடந்த எமது சமூகம் இவர்களின் அதிரடியான ஆளுமைகள் சமூக இணைவுத் தளங்களில் நுழைந்ததைக் கண்டு மிரட்சியாகி....

தன்னை வியாபாரம் செய்து கொள்ள முனைந்து தங்களின் சார்புத்தன்மையை சாமானிய மக்களிடம் புகுத்த விரும்பிய அதிகாரவர்க்கத்தின் வாசலில் பேச்சற்று நின்று போனது. எழுதக்கூடிய திறனை எம் சமூகம் ஆதிக்க சக்திகளின் தொடர்ச்சியான கருத்து திணிப்புகளால் இழந்து போய்...யாரோ ஒருவனை நாம் ஆதரித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தும் விட்டது. நடுத்தரவர்க்கம் மிகையாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைய உலகம் மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டு தங்களின் பணிகளுக்கு இடையே தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த போதுதான்...

இந்த ஆதிக்க சக்திகளின் தனிமனித தாக்குதல்களும், தங்களின் அரசில், மத, சாதிய அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்க அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தர வார்த்தை பிரயோகங்களும் எம் மக்களை நிலை குலைய வைத்தன. அதன் விளைவாக இதோ இன்று இணையப்பக்கங்கள் அனைத்திலும் சாதாரணர்கள் யாரும் கருத்து சொல்ல முடியாத அளவிற்கு மனோதத்துவ ரீதியாக் ஒடுக்கப்பட்டு கருத்துக் குருடர்களாய் நின்று கொண்டிருக்கிறார்கள்.

2010 வாக்கில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளில் எமது சகோதரர்கள் இணைத்த பதிவுகள் பல ஆயிரங்களைத் தொட்டது. இன்றைக்கு எமது அறிவுகள் சார்புக்கருத்து திணிப்புகளால் முடக்கப்பட்டு என்ன எழுதுவதென்றே தெரியாமல் நமது வாழ்க்கை சரியாய் இருந்தால் போதும் நமக்கு எதற்கு சமூக சிந்தனை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டன. இப்படியான ஒரு மனோநிலைக்கு சாமானிய மக்களைத் தள்ளுவதைத்தான் இது வரையில் நமது ஊடகங்களும், அரசியல், வல்லாதிக்க சக்திகளும் இணையத்தைக் கடந்து வெளியில் செய்து கொண்டிருந்தன.

சமூக விழிப்புணர்வு என்பதையும், நமது அரசியல் தேவைகள் என்ன என்பதையும், யார் யார் எழுதலாம் என்பதையும் நம்மால் இதுவரையில் தீர்மானிக்க முடியவில்லை. எப்போதும் யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டே இருந்த நம்து சமூகம் திடீரென்று இணையத்தில் எழுதலாம் என்ற ஒரு சுதந்திரத்தை உணர்ந்து புலிப்பாய்ச்சலில் நிறைய கருத்துக்களைச் சொன்னது பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் தொடர்ச்சியான தங்களின் பரப்புரைகளாலும், அதிகார துஷ்பிரயோக மிரட்டல்களாலும் இன்று நம்மை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது.

எந்த சார்புத்தன்மையும் கொள்ளாத சூழலுக்கு எது உகந்தது என்று தீர்மானித்து நகர முயலும் பகுத்தறிவு மூளைகளை முடக்கிப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்பதை கழுகு தெளிவாக உணர்ந்திருப்பதால்தான்...சாதாரணர்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்த்து விழிப்புணர்வு கொண்ட கழுகுகளாக ஆக்க முனைகிறது.

கழுகு ஒரு அரசியல் கட்சி அல்ல, கழுகு ஒரு தனிமனிதனுக்குச் சொந்தமான இயக்கம் அல்ல, கழுகு ஒரு சமூக சேவை செய்யும் அமைப்பும் அல்ல...

கழுகு விழிப்புணர்வோடு வாழும் மனிதர்களை ஒன்று சேர்த்து  விழிப்புணர்வோடு நம் சமூகத்தை வாழச் சொல்லும்  மனிதர்கள் கூட்டம். கழுகின் நெடும் பயணத்தில் நாம் நிறைய பேசிய காலங்களும் இருக்கின்றன...எதுவுமே பேசாமல் மெளனித்துக் கிடந்த காலங்களும் இருக்கின்றன. இப்படியாய் சாதாரண மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகிய கழுகு...

பேஸ்புக்கில் தனது தனிப்பக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களின் கருத்துக்களோடு உடன்பட்டு நிற்கும் தோழமைகளை கழுகு தனது சிறகு விரித்து வரவேற்கிறது.

https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/478934842183563


எந்த சமூகத்திலும் தனி மனிதர்கள் வென்றதாக வரலாறு இல்லை....நாம் அதிகாரத்தை கையிலெடுக்கிறோமோ இல்லையோ ஒத்த கருத்துள்ள மனிதர்களின் சப்தம் குறைந்த பட்சம் அநீதிகளின் செவிப்பறைகளையாவது கிழிக்கட்டுமே....!!!!


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)



2 comments:

நிகழ்காலத்தில்... said...

சிறிது ஓய்விற்குப்பின் கழுகு உற்சாகமாய் பறக்கத்துவங்கி உள்ளது.. வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

முகநூலில் இணைந்தாயிற்று... நன்றி...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes