Friday, October 15, 2010

வெற்றி...என்பது...



வாழ்வின் எல்லா நேரங்களும் நமக்கு சாதகமாய் இருந்து விடுவதில்லை. கொஞ்சம் வாழ்வின் பக்கம் வேறு மாதிரி இருந்து விட்டால் விரக்தியும் இயலாமையும் நம்மிடம் வந்து சேர்ந்து விடுகிறது. எதிர்மறையான சூழ்நிலைகளையும் சாதகமாக மாற்றி கொள்வது என்பது ஒரு கலை. அப்படி இருப்பதற்கு நமது மனப்பாங்கும், சூழ்நிலைகளை அணுகும் முறையிலும் திடமான ஒரு பார்வையும் தீர்க்கமான முடிவுகளும் எல்லாவற்றையும் புரட்டிப் போடும்....


ஓரயிரம் வாய்ப்புகள் நம்மிடம் இருக்கும் போது வெற்றிகொள்ளுதல் என்பது எளிது ஆனால்...தனி ஆளாக நின்று சூழ் நிலைகளை எதிர்கொள்ளுதல் என்பதில் வலியும் அந்த வலியின் பின்னால் எதிர் கொள்ளலில் மனோ வலிமையும்தானே இருக்க முடியும். வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது நண்பர் எஸ்.கே. யின் இந்த கட்டுரை கண்ணில் பட்டது.........உத்வேகத்தை கொடுக்க கூடிய இந்த கட்டுரையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது


ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான்

ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி அதிகமானது. தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்கும் அவனிடத்தில் தைரியம் இல்லை. அவன் நிலை பார்த்து அவன் பெற்றோர் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள், ஊக்க்மளித்தார்கள். நாளடைவில் அவன் மனதில் இருந்த துளி தன்னம்பிக்கை விதை மரமாக வளர்ந்தது. தன் இலட்சியங்களை அடைந்து விடுவோம் என்று விடா நம்பிக்கையோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


தன்னம்பிக்கை என்பது தன் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீதும் தன்னை சுற்றியுள்ளவர் மீது நம்பிக்கையின்றி காட்வுள் நிறைவேற்றுவார் என சிலர் நம்புவார். அதுவும் தவறில்லை. நம்பிக்கை என்பது எரிபொருள் போன்றது அது இருக்கும் வரை நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.


தன்னம்பிக்கை என்பது இரண்டு விஷயங்களை கொண்டுள்ளது.

1. சுய ஆற்றல் 2. சுய மதிப்பீடு. சுய ஆற்றல் என்பது நம்மிடமும் நம்மை போன்றவர்களிடமும் உள்ள திறமைகளை உணரும்போது, இலக்குகளை அடையும்போது பெறும் உணர்வு. இது பெறப்படும் வெற்றிகளை சார்ந்தது. ஒரு செயலில் வெற்றிகளை பெற்றால் அதை செய்ய முடியும், தோல்வியடைந்தால் செய்ய முடியாது என முடிவுக்கு வருகிறோம். சுய மதிப்பீடு என்பது உங்களை பற்றி நீங்கள் உணரும் உணர்வு. இது மற்றவர்களின் கருத்தையும் சார்ந்தது மற்றவர்களின் கருத்திலிருந்தும் நாம் நம்மை பற்றிய மதிப்பீட்டை செய்கிறோம். தன்னம்பிக்கையின்மை உங்கள் முழுமையான மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளாததால் உருவாகிறது.


தன்னம்பிக்கையை வளர்த்தல்-சில வழிகள்:

1. உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை. நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள் வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும். குளியல், முகச்சவரம், சுத்தமான உடை, நவீன நாகரீகத் தோற்றம் போன்றவை கூட காரணிகளாக இருக்கலாம். இதற்காக நீங்கள் உடையணிவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம். முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.

2. ஒருவரின் நடையை வைத்தே அவரின் மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது. எப்போது நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள். பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில் கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால் தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள் தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள் மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின் பெரும்காரணிகளாகும் இவற்றை பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.


3. ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும். உங்கள் பலங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தும், ஒரு 30-60 நிமிட பேச்சை எழுதுங்கள். பிறகு இதை தன்னம்பிக்கை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது, கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். உங்கள் தேவைகளை பற்றி அதிகமாக யோசிக்கும்போது, அவை உங்களிடம் இல்லாததற்கான காரணங்களை மனம் உருவாக்கும். இது உங்களுக்குள் பலவீனங்களை உண்டாக்கும். இதனால் கடந்தகால வெற்றிகள், உங்கள் தனிப்பட்ட திறமைகள், அன்பான உறவுகள், நேர்மறையான நல்ல தருணங்களை நினைத்து பாருங்கள். இவை உங்கள் பலவீனங்களை நீக்கி வெற்றியை நோநோக்கி செல்ல உதவும்.


4. உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களை பாராட்டும் பழக்கத்தை உண்டாக்குங்கள். மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பாராட்டு முழுமனதோடு வெளிப்பட வேண்டும். நாம் நம் சொந்த ஆசைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம். மற்றவர்களின் தேவையை பற்றி போதுமான அளவு சிந்திப்பதில்லை. நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது. இது தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப்பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்.



கழுகிற்காக

எஸ்.கே


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

10 comments:

மங்குனி அமைச்சர் said...

நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.////

இந்த ஒரு வரி போதும் , நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை , அதேபோல் தாழ்தவர் யாரும் இல்லை . இந்த கொள்கையில் உறுதியான பிடிப்போடு இருந்தால் தடைகளை மீறி சுலபமாக பயணிக்கலாம் .

அருண் பிரசாத் said...

வழக்கம் போல எஸ் கே விடம் இருந்து ஒரு நல்ல கட்டுரை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

எஸ்.கே said...

இக் கட்டுரையை வெளியிட்டதற்காக கழுகிற்கு மிக்க நன்றி!

கருடன் said...

நல்ல கருத்துகள்!!!

jothi said...

nice post

Kousalya Raj said...

//நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது.//

மிக சரியான வார்த்தைகள்...அருமையான பகிர்வு....சகோ எஸ்.கே அவர்களுக்கு நன்றி.

அன்பரசன் said...

Super SK

dheva said...

Geat SK...............!


Lovely post.....!

Chitra said...

Very nice post... Super!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes