Saturday, December 11, 2010

திருமதி. மனோ சாமிநாதன் சிறப்பு பேட்டி...!

விளக்கங்கள் தெளிவுகள் எல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் அனுபவங்களிலும் இருந்து பெறப்படவேண்டியவையே என்பது நிதர்சனமான ஒன்று. நான் சொல்வதுதான் இறுதி உண்மை என்று நம்பும் மூளைகள் சர்வ நிச்சயமாய் ஆராயப்படவேண்டியவை.
ஏதேதோ கருத்துக்கள் கொள்கிறோம்.. என்ன என்னவோ செய்கிறோம்...ஆனால் அனுபவசாலிகளின் வார்த்தைகளில் இருக்கும் உண்மைகளை எப்போதும் ஆராய்வதில்லை. தெளிவைத் தேடி நாமும் நமது சிறகினை விரித்தோம்.... பரந்த வானில் ....வந்திறங்கிய இடம் அமீரகத்தில் சார்ஜா....
திருமதி. மனோ சாமிநாதன் மூத்த பதிவர், முன்னாள் பத்திரிக்கையாளர், ஓவியர், 30 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவை நேசிக்கும் ஒரு அற்புதமான இல்லத்தரசி.
சமகாலத்தில் பதிவுலகில் விவாதித்துக் கொண்டிருக்கும் கலாச்சரம் மற்றும் லிவ்விங் டு கெதர் பற்றியெல்லாம் அம்மாவிடம் கேட்டோம்...தாய்ப்பாசத்தோடு அவர்களின் பல அலுவல்களுக்கும் இடையில் நமது கேள்விகளுக்கு புன்முறுவலோடு பதிலளித்தார்....வாழ்வின் பல அர்த்தங்கள் பிடிபட்டன.. எமக்கு..


இதோ உங்களுக்காக அவரின் அற்புதமான பேட்டி.....


பதிவுலகில் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்...?


என் ஒரே மகன் கல்லூரியில் மேற்படிப்பை முடித்து, பின்னர் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல நேர்ந்த போது, பிரிவு ஏற்படப்போவதை எண்ணி சிறிது கலக்கமாகவே இருந்த நேரம்! அப்படிப்பட்ட கலக்கம் எதுவுமில்லாமல் என் மனதை திசை திருப்ப என் மகன் இண்டர்னெட் பற்றி விளக்கி ஒரு பிரபல வலைத்தளத்தில் சமையல் பிரிவில் எனக்கென ஒரு பிரிவு 2004-ல் ஏற்படுத்திச் சென்றார். இதுதான் தொடக்கம்.
அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது 11 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது!

Blogs எல்லாம் பரவலாக இல்லாத நேரம் அது. வருடங்கள் செல்லச் செல்ல எனக்கென தனியாக ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமும் துடிப்பும் இருந்து கொண்டேயிருந்தன. இருந்தாலும் குடும்ப வேலைகள், தொடர் பிரயாணங்கள் எல்லாம் அந்த ஆர்வத்தை தடுத்துக்கொண்டே இருந்தன. திடீரென்று சென்ற மார்ச் மாதம் தான் அப்படியே எல்லா வேலைகளையும் போட்டு விட்டு திடீரென்று எனக்கென
www.muthusidharal.blogspot.com
www.manoskitchen.blogspot.com


என்ற இரு வலைத்தளங்கள் தொடங்கினேன்.

உங்கள் பார்வையில் பதிவுலகம்?


அருமையாக, ஆரோக்கியமாக இருக்கிறது! எண்ணற்ற மனிதர்களுக்கு, அவர்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட திறமைகள் எல்லாம் வெளிக்கொணர்வதற்கு ஒரு சிறந்த வடிகாலாக இருக்கிறது! ஒவ்வொரு அறிவுப்பேழையிலிருந்தும் எத்தனை எத்தனை முத்துக்கள் சிதறுகின்றன! அவற்றின் பிரகாசம் பிரமிக்க வைக்கிறது! வெளியுலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்களை விட எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள்!!


உங்களின் வாசிப்பு பற்றி ஒரு கேள்வி - தாங்கள் விரும்பி படிக்கும் எழுத்தாளர் யார்?


இதில் ஒருத்தரை மட்டும் குறிப்பிட முடியாது. சிறு வயதில் படிப்புடன் கூடவே மனதில் லட்சியங்கள், சத்தியம், நேர்மை எல்லாவற்றையும் அகிலனும் நா.பார்த்தசாரதியும் விதைத்தார்கள். கல்கியும் கிருஷ்ணாவும் எழுதும் ஆர்வத்தை என்னுள் விதைத்தார்கள்.
நல்ல எழுத்து என்பது காலத்தால் அழிவதில்லை. எப்போது எடுத்தாலும் அப்போதுதான் புதிதாகப் படிப்பதுபோல மனதில் ஆர்வம் பிறக்க வேண்டும். அந்த வகையில் என்றுமே என் ஆதர்ச எழுத்தாளர் திரு. கல்கி அவர்கள்தான்.


உங்களை கவர்ந்த சில வலைப்பூக்கள் சில?


இவைதான் என்னைக் கவர்ந்தவை என்று என்னால் இனம் பிரிக்க முடியவில்லை. மனித நேயம், அறிவு, கலைகள் இவற்றைப் பிரதானமாகக் கொண்ட வலைப்பூக்களை நான் மிகவும் ரசிக்கிறேன்
வெளிநாட்டில் 30 வருடத்திற்கு மேல் இருக்கும் நீங்கள் தாய் நாட்டையும் தாய் வீட்டையும் எந்த அளவு மிஸ் பண்ணியிருக்கீங்க....?
நிறைய! நம் ஊரில் விடியற்காலை நேரத்தில் பயணம் செய்யும்போது வழி நெடுகத் தென்படும் பசுமை கொஞ்சும் வயல்களும் பனித்துளிகள் மறையாத இலைகளும் மரங்களும், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரும், இல்லங்களுக்கு வெளியே கண்ணைக்கவரும் பளிச்சென்ற கோலங்களும்- இந்த அழகெல்லாம் வேறெங்கு கிடைக்கும்?


பொருளாதாரத் தேடல்களுக்காகவும் குடும்பக் கடமைகளுக்காகவும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தாய் நாட்டின்மீது பாசமிருக்கும் ஒவ்வொருத்தருக்கும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது!
இங்கு வந்த பின் தொடர்ந்து வரும் கடமைகள், காரணங்கள் இந்த புதைகுழியிலிருந்து அத்தனை சீக்கிரம் விடுபட்டு தாய் நாட்டை நோக்கி பறந்துவிட முடியாமல் தடுக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!
‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா’ என்ற ஒற்றை வரிதான் உங்கள் கேள்விக்கான சரியான பதில்!
அமீரகத்தில் வசிக்கும் உங்களுக்கு...நம்நாட்டு கலாச்சரத்தை பேணுவதில் இங்கே சிக்கல்கள் உள்ளனவா?


நம் நாட்டுக் கலாச்சாரத்தைப் பேணுவதில் இங்கு எந்த சிக்கல்களுமில்லை.வெகு நாள் வெளிநாட்டில் இருந்திருக்கிறீர்கள்..உங்களின் இந்த வாழ்க்கை நமது கலாச்சாரத்தை மறக்கடித்திருக்கிறதா?

தாய் நாட்டுப்பற்று இருக்கும் யாருக்குமே நம் நாட்டின் வேர்களான கலாச்சாரத்தை மறப்பதென்பது இயலாத காரியம். வெளி நாட்டில் அதிகம் படித்திருக்கும் என் மகன்கூட தமிழ்நாட்டில் இறங்கி விட்டால் கட்டாயமாக தமிழில்தான் பேசுவார் யார் அவருடன் ஆங்கிலத்தில் பேசினாலும்!


லிவ்விங் டூ கெதர் பற்றி நிறைய பதிவுகள் வந்து விட்ட இந்த வேளையில் ....அனுபவம் மிகுந்த உங்களின் பார்வை மற்றும் வழிகாட்டல் என்ன அம்மா?


சென்ற கேள்விக்கும் இந்தக் கேள்விக்கும் எத்தனை பொருத்தம் பாருங்கள். நம் நாட்டில்தான் நமது கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. மேலை நாட்டுக்கலாச்சார்த்தில் நாம் கற்றுக் கொள்ள, சுத்தம் பேணுதல், time management, குறித்த நேரத்தில் தன் வேலையைத் தானே செய்தல்-இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து இந்த மாதிரி தேவையில்லாத நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விஷயங்களைத்தான் நாம் கற்றுக்கொள்கிறோம்! அவர்கள் எப்பொழுதோ நமக்கு ‘நமஸ்காரம்’ சொல்லப் பழகி விட்டார்கள். நாமோ அவர்களைப் பார்த்தால் கை குலுக்குகிறோம். இப்படித்தான் கலாச்சாரம் மாறுகிறது..


திருமணம் என்ற பந்தமின்றி, எந்தக் கை விலங்குகளுமின்றி சேர்ந்து வாழ்வது, விரும்பும்போது அல்லது மனங்கள் ஒத்து வராதபோது அந்த வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது இப்போது பரவலாக நடந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமே இன்றைய தலைமுறையில் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுத்து வரும் அளவுக்கு மீறிய சுதந்திரமும் செல்லமும்தான். வாழ்க்கையின் அருமையான விஷயங்களான அன்பு, நெறி, மனிதப் பண்புகள், தர்ம நியாயங்கள்- இவற்றையெல்லாம் சொல்லி அவர்கள் வளர்க்கப்படுவதில்லை.


கண்கூடாக நிறைய இல்லங்களில் இதை நான் பார்க்கிறேன். இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தனி மனித சுதந்திரம், தனி மனிதக் கொள்கைகள் என்று பேசி இவர்கள் பாதையை இவர்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இதில் திருமண வாழ்க்கையைப் பற்றியும் அதன் சிறப்புகளைப்பற்றியும் அவர்களுக்கு எப்படிப் புரியும்?


உங்கள்கால குழந்தை வளர்ப்பிற்கும் தற்போதைய குழந்தை வளர்ப்பிற்கும் இடையே என்ன மாற்றங்கள் இருக்கின்றன?


முன்பெல்லாம் குடும்ப வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் விட குழந்தைக்குத்தான் முதலிடம் இருந்தது. இப்போதோ, வாழ்க்கை முன்னேற்றம், சொகுசான வாழ்க்கை இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு இரண்டாம் பட்சமாகி விட்டது.


எங்கள் காலத்தில் குழந்தைகள் இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்தார்கள். ஆரோக்கியமான உணவு, குதூகலமான விளையாட்டுக்கள், பெரியவர்களின் அன்பான கண்டிப்பும் அறிவுரைகளும் அமைந்த சூழ்நிலை, பாசம், அன்பு கலந்த குடும்ப அமைப்பு-இவைகளில் 90 சதவிகிதம் இன்றில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு கூட பின்னுக்குத் தள்ளப்பட்டு empty food எனப்படும் பர்கரிலும் பிஸ்ஸாவிலும் இன்றைய குழந்தைகள் காலத்தை கழிக்கின்றார்.


இன்றைக்கு குழந்தைகளுக்கு விளையாட நேரமே கிடைப்பதில்லை. அந்தளவுக்கு படிப்புச் சுமை. அதோடு, பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் மற்ற விஷயங்களிலும் சிறக்க வேண்டுமென்று சின்னஞ்சிறு வயதிலேயே குழந்தைகள் மீது பாட்டு, டான்ஸ், மற்ற பயிற்சிகள் என்று திணிப்பதால் அவர்களுக்கு மரம், பறவை என்று வெளியுலகைப் பார்த்து ரசிக்கவும் குதூகலித்து தன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடவும் சந்தர்ப்பங்களே கிடைப்பதில்லை.


பெரும்பாலான இல்லங்கள் பெரியவர்கள் இல்லாமல் தனித்திருப்பதால் அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய பாசம், அறிவுரைகள், அனுசரணை எல்லாவற்றையும் இன்றைய குழந்தைகள் இழந்து வருகிறார்கள். இதனால் அவர்களுடைய மன வளர்ச்சியும் உடல் வலிமையும் நிறையவே குறைந்து வருகிறது!


குழந்தைகள் அவர்களின் விருப்பத்தில் தன்னிச்சையாகவே விடுதல் சரியா? இல்லை பெற்றோர் குடும்பம் என்ற போக்கில் வளரது சரியா ?


சென்ற கேள்விக்கான பதிலிலேயே இதற்கான கருத்தும் இருக்கிறது. பொதுவாய் ஒரு குழந்தை ஐந்து வயது வரை செல்லமாக வளர்க்கப்பட வேண்டும். [ இந்தக் காலக் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம். அதனால் மூன்று வயதிலிருந்தே சற்று கண்டிப்பாக வளர்க்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது] ஐந்திலிருந்து 15 வயது வரை நிச்சயம் குழந்தைகள் அன்பான கண்டிப்புடனும் அறிவுரைகளுடனும் வழி நடத்தப்பட வேண்டும். 15 வயதிலிருந்து அவர்களைத் தோழியாக/தோழனாக மதித்து நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


இல்லத்தரசியாகஇருக்கும் நீங்கள்... - உங்கள் அனுபவத்திலிருந்து...நீங்கள் இல்லத்தரசிகளுக்கு பொதுவாக சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?


ஆண்களுக்கு வீடு உலகத்தில் ஒரு பகுதிதான். பெண்களுக்கு வீடே உலகம்’ என்று ஒரு புகழ் பெற்ற பழமொழி இருக்கிறது. அந்த வீடு ஒரு கோவிலாக, ஆரோக்கியமானதாக, ஆனந்த மயமானதாக, மற்றவர்கள் மதிக்கத்தகுந்ததாய், புகழக்கூடியதாக அமைய வேண்டும். இது முக்கியமாக இல்லத்தரசிகள் கையில்தான் இருக்கிறது.


கனவனின் பசி அறிந்து உணவளிக்கும் மனைவி அவன் இதயத்துக்கு நெருங்கியவளாகிறாள் என்பது முதுமொழி. இது இன்றைய பெண்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
மொத்தத்தில் ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு துன்பம் வரும்போது ஆறுதல் தருபவளாய், இடுக்கண் நேரும்போது நல்லதொரு மந்திரியாய், பாசத்தில் அன்னையாய் அமைவதிலே தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. இல்லத்தரசி அப்படி அமைந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நிச்சயம் வெகு சிறப்பான வாழ்க்கை அமையும்.
பெண் அடிமைத்தனம் இன்னும் இருக்கிறதா..?


இல்லங்களளவில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில்கூட இன்னும் பெண் அடிமைத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆணும் உலகமும் பெண்ணை அடிமையாக நடத்துவது ஒரு புறம் இருக்கட்டும், பெண்ணே இன்னும் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் நினைத்துக்கொள்கிறாள். சில சமயம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்பாமலும் இருக்கிறாள்.


தற்போது மாமியாராக இருக்கும் உங்கள் அனுபவம் என்ன? மருமகளாக நீங்கள் இருந்த போது உங்கள் அனுபவம் என்ன?


நல்ல மருமகளாக இருக்க முடிந்ததென்றால் நல்ல மாமியாராக இருப்பது சிரமமில்லை என்று நினைக்கிறேன். பெரிய கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகப் புகுவதில் ஏகப்பட்ட அக்னிப்பரீட்சைகள், பாசப்போராட்டங்கள் இருக்கும். அத்தனையும் அனுபவங்கள். எதெல்லாம் சின்ன வயதில் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மருமகளுக்குக் கிடைக்க வேண்டும், அன்பு, சினேகம் எல்லாம் தந்து அவளை என் மகளாக நடத்துவதை விடவும் என் சினேகிதியாக நடத்த வேண்டும் என்று மாமியாராகும் முன்பேயே முடிவு


செய்திருந்ததால் அதைக் கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்ததில்லை. மற்ற உறவுகளிடையே பாலன்ஸ் செய்து, மாமியார், மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதை விட, நெருங்கிய உறவுகளிடையே [ மகன், மருமகள்] பாலன்ஸ் செய்து உறவுகளை கட்டிக்காப்பதுதான் அதிக சிரமமான விஷயம். அதை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருப்பதாகத்தான் கருதுகிறேன்..


அற்புதமாய் ஓவியம் வரையும் திறமை கொண்டுள்ளீர்கள்..எப்படி வந்தது இந்த ஆர்வம்?


விபரம் தெரியாத வயதிலிருந்தே வரையும் ஆர்வம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் ஓவியர் வினுவும் கோபுலுவும் மானசீக குருக்களாக அமைந்தார்கள். பின் மாதவனும் நடராஜனும் ஆதர்ச ஓவியர்களாய் மனதில் பதிந்தார்கள். நானாகப் பார்த்து வரையக்கற்றுக் கொண்டதுதான் எல்லாமே! பின்னாளில் பத்திரிக்கைகளில் வரைந்ததும் நிறைய கற்றுக்கொண்டதும்- எல்லாவற்றுக்குமே பின்பலம் என் கணவர்தான்!


அமீரக வாழ்க்கை எப்படி இருக்கிறது ?


அமீரக வாழ்க்கை கிட்டத்தட்ட புகுந்த வீட்டு வாழ்க்கை மாதிரி. உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் மற்றும் நலிந்தவர்களுக்கும் இங்கு வந்த பிறகுதான் கை நிறைய பொருள் தந்து உதவ முடிந்திருக்கிறது. வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. பணமென்ற ஒன்றினால் சந்தோஷங்களுடன் நிறைய பாடங்களும் அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன.
மற்றபடி இங்கு இருப்பது கிட்டத்தட்ட நம் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி.
தலைமுறையினருக்கு தாங்கள் சொல்லவிரும்புவதது என்ன?


அன்பு, நேர்மை, உண்மை, கருணை-இந்த தாரக மந்திரங்களினால் எந்த சிகரத்தையும் தொடமுடியும். சிகரங்களைத் தொடுவது மட்டும் வாழ்க்கையில்லை. நம்மைப் பெற்றவர்களின் மனங்குளிர என்றென்றும் அவர்களை கவனித்துக் கொள்வதில்தான் வாழ்வின் மன நிறைவு இருக்கிறது!

(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

31 comments:

asiya omar said...

மனோ அக்கா உங்களை நேரில் சந்தித்து உங்கள் கரங்களை பற்றி உரையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது மிகப்பெருமிதமாக இருக்கிறது.அருமையான பேட்டி,பதில்கள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய முத்துக்கள்.

எஸ்.கே said...

அருமையான பேட்டி! சிறப்பான பதில்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

அனுபவ பதில்கள் நன்றாக உள்ளது

Kousalya said...

ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக தெளிவாக படிப்பவர் மனதை தொடும் அளவில் இருக்கு மனோ அக்கா. உங்களின் கருத்துக்கள் ஏற்று கொள்ள பட வேண்டியவை.

//தனி மனித சுதந்திரம், தனி மனிதக் கொள்கைகள் என்று பேசி இவர்கள் பாதையை இவர்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.//

மிக சரியாக சொன்னீர்கள்...இதை பற்றி நீங்கள் ஒரு தனி பதிவே எழுதலாம் அக்கா. என் போன்ற பலருக்கும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

//நெருங்கிய உறவுகளிடையே [ மகன், மருமகள்] பாலன்ஸ் செய்து உறவுகளை கட்டிக்காப்பதுதான் அதிக சிரமமான விஷயம்.//

உங்கள் அனுபவம் மிளிர்கிறது இந்த இடத்தில். நானும் இதை மனதில் வைத்து கொள்ள வேண்டியது இருக்கிறது. (எனக்கு இரண்டு மகன்கள்...!)

//அன்பு, நேர்மை, உண்மை, கருணை-இந்த தாரக மந்திரங்களினால் எந்த சிகரத்தையும் தொடமுடியும்.//

இதை விடவும் சிறந்தது நம் பெற்றவர்களை பேண வேண்டியது முக்கியம் என்ற இடத்தில் தாய்மை சுடர்விடுகிறது அக்கா. ஏற்கனவே உங்கள் மகனை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். இங்கே படித்தும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த பேட்டிக்கு நான் பின்னூட்டம் எழுதினால் ஒரு பதிவாகி விடும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். :)

மனோ அக்காவிற்கும், பேட்டியை வெளியிட்ட கழுகுக்கும் என் நன்றிகள் பல.

கோமாளி செல்வா said...

சிறப்பானதொரு பேட்டி.!
பதில்களும் அருமை ..!!
குழந்தை வளர்ப்பு பற்றி கூறியிருப்பதும் கலாசாரம் பற்றி கூறியிருப்பதும்
முற்றிலும் வரவேற்க்கத்தகவை ..!!

வினோ said...

பல விசயங்களை கற்றுக்கொடுக்கும் பதில்கள். நன்றி மனோ அக்கா..

நன்றி கழுகு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிதானமான, அனுபவப்பூர்வமான கருத்துக்கள்!

dheva said...

மேலும் கீழும்.. எந்தன் உலககே...
இடமும் வலமும் எந்ததன் திசையே...
சத்தியம் சொல்லும் போர்களின் மூலம்
சரித்திரம் படைப்போம் என்பது திண்ணம்....!

கூச்சல்கள் இடுவதன்றல்ல எமது வழமை..
சுடுசொல் பேசுவதன்று எமது முறைமை..
உற்றுப் போர்த்து.. உருவங்கள் அழிப்போம்...
அநீதி என்றால் வேருடன் களைவோம்...!

சப்தமின்றி பாசங்குகள் செய்யோம்..
யாமே புத்திமானென்று பறையறை செய்யோம்....
பாயும் புலியின் சீறறம் கொண்டோம்...
உரக்க சொல்வோம் ஓராயிரம் முறைகள்...
கத்திக் கத்தி கிழியட்டும் எம் குரல்வளைகள்...

சத்தியம் கேட்டு விழிக்கட்டும் எம் உறவு....! சத்தியம் கேட்டு விழிக்கட்டும் எம் உறவு...!

கலாச்சாரம் பற்றியும் இணைந்து வாழ்த்தல் பற்றியும் முழு விழிப்புணர்வை கொண்டு வருவோம்...சர்வ நிச்சயமாய்...!

மனோ அம்மாவின் பதிகளுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

பிரவின்குமார் said...

கட்டுரை தொகுப்பு..! அருமை தல..!

சுபத்ரா said...

//இதற்கு அடிப்படைக் காரணமே இன்றைய தலைமுறையில் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுத்து வரும் அளவுக்கு மீறிய சுதந்திரமும் செல்லமும்தான். வாழ்க்கையின் அருமையான விஷயங்களான அன்பு, நெறி, மனிதப் பண்புகள், தர்ம நியாயங்கள்- இவற்றையெல்லாம் சொல்லி அவர்கள் வளர்க்கப்படுவதில்லை.//

உண்மை!!!!

nis said...

வாழ்த்துகள்

சுபத்ரா said...

//இல்லத்தரசி அப்படி அமைந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நிச்சயம் வெகு சிறப்பான வாழ்க்கை அமையும்//

என் அப்பா கூட இந்தக் கருத்தைச் சிறுவயதில் இருந்தே எனக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்து வருகிறார்.

//பெண்ணே இன்னும் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் நினைத்துக்கொள்கிறாள். சில சமயம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்பாமலும் இருக்கிறாள்//

இதுல பாசிட்டிவ் பாயிண்ட்ஸ் ஏதாவது இருக்கா என்று விளக்கவும், ப்ளீஸ்!

//அன்பு, நேர்மை, உண்மை, கருணை-இந்த தாரக மந்திரங்களினால் எந்த சிகரத்தையும் தொடமுடியும். சிகரங்களைத் தொடுவது மட்டும் வாழ்க்கையில்லை. நம்மைப் பெற்றவர்களின் மனங்குளிர என்றென்றும் அவர்களை கவனித்துக் கொள்வதில்தான் வாழ்வின் மன நிறைவு இருக்கிறது!//

தெரிந்துகொண்டேன் அம்மா(with ur permission). நன்றி!!

TERROR-PANDIYAN(VAS) said...

நல்ல பேட்டி.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனுபவத்தின் சிறப்பு பதில்களில் தெரிகிறது . சிறப்பானதொரு பேட்டி . பகிர்வுக்கு நன்றி

தமிழ் அமுதன் said...

கேள்விகளும்,பதில்களும் மிக நேர்த்தியாக உயர் தரத்துடன் உள்ளது..!

ஜெய்லானி said...

நல்ல கருத்துக்கள் ..நல்ல சிந்தனை ..நல்ல பேட்டி...!! :-)

ஜோதிஜி said...

சில (பல) சமயம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்பாமலும் இருக்கிறாள்

அன்பரசன் said...

அருமையான மற்றும் ஆழமான பதில்கள்.

Chitra said...

very nice interview!

எம் அப்துல் காதர் said...

கேள்விகளும், மனம்திறந்த பதில்களும்... அருமை!!

Ananthi said...

மனோ அம்மாவின், கேள்வியும் பதில்களும்... நேரில் இருந்து கேட்டது போல் இருந்தது..

வெளிநாட்டில் இருக்கும், எனக்கும் அவருடைய பதில்களின் உண்மை தொடுகிறது..

குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனமும்.....
குடும்பம் நடத்துவதில் அன்பு, நேர்மை, உண்மை, கருணையுடனும்...

இருத்தல் பல சிகரங்கள் தொட வழி வகுக்கும்.. என்ற கருத்து.. உண்மையில் அருமை..
அவர்களின் அனுபவப் பகிர்வை வெளியிட்ட, கழுகிற்கு நன்றிகள் :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

vanathy said...

Very nice questions & suitable answers. Well done, Mano akka.

சே.குமார் said...

மனோ அம்மாவின் பேட்டியில் அவரது பதில்கள் அனைத்தும் அருமை.

மனோ சாமிநாதன் said...

சிற‌ந்த, சிந்திக்கத்தூண்டிய‌ கேள்விகள் கொடுத்து, என் மனதிலிருந்த உண‌ர்வுகள் சிலவ‌ற்றை வெளிக்கொணர, அருமையானதொரு சந்தர்ப்பத்தை வழங்கிய தேவா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி!‌

மனோ சாமிநாதன் said...

என் கருத்துக்களைப் பாராட்டி எழுதிய அனைத்து அன்பான தோழமைகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சுபத்ரா!

உங்கள் தந்தை நல்ல நெறிகளை சொல்லிச் சொல்லி வளர்த்திருப்பதறிந்து மகிழ்வாக இருக்கிறது!

//பெண்ணே இன்னும் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் நினைத்துக்கொள்கிறாள். சில சமயம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்பாமலும் இருக்கிறாள்.//

" இதுல பாசிட்டிவ் பாயிண்ட்ஸ் ஏதாவது இருக்கா என்று விளக்கவும், ப்ளீஸ்!"

இதில் எதையும் பாஸிடிவ் பாயிண்ட்ஸ் என்று நான் குறிப்பிட்டு எழுதவில்லை. ஒரு பெண் துன்பங்களிலேயே உழன்று கொண்டிருந்தாலும் சமூக பயங்கள் காரணமாகவும் தைரியமின்மை காரண‌மாகவும் எப்படி அதை விட்டு வெளியே வர விரும்பாமலிருக்கிறாள் என்பைதையே நான் குறிப்பிட்டு எழுதினேன். கணவன் எவ்வளவு துன்புறுத்தினாலும் கீழ்மையுடன் நடந்து கொன்டாலும்கூட நிறைய விஷயங்களுக்கு பயந்து கொன்டு அவள் வெளியே வருவதில்லை. சில சமயம் தற்கொலையைக் கூட தீர்வாக எடுக்கிறாளே தவிர போராடுவதற்கு தைரியமிருப்பதில்லை. இதைத்தான் நான் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.

சுபத்ரா said...

விளக்கத்துக்கு மிக்க நன்றி!!

Karthick Chidambaram said...

அருமையான பேட்டி

VAI. GOPALAKRISHNAN said...

பேட்டி எடுத்தவரின் கேள்விகளும், அதற்கு தெளிவாக,பொறுமையாக, அறிவுபூர்வமாக, அனுபவபூர்வமாக பேட்டி கொடுத்தவரின் பதில்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.

//வெளியுலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்களை விட எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள்!!//

உண்மையான ஒத்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளே!

ஜெரி ஈசானந்தன். said...

கழுகு உயரமாகவே பறக்கிறது...இன்னும் சிறகடித்து பறக்க வாழ்த்துகள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes