Sunday, December 26, 2010

அஞ்சலி....உறங்கிக் கொண்டிருந்த
நீ விழித்ததேன்...?
உறக்கத்திலிருந்த
எம்மைக் கவிழ்ந்திருந்த
இமைகளோடு கவிழ்த்து
நீ கொண்டு போனதும் ஏன்?

வாழ்க்கையை உன்னில்
கொடுத்து உன் காலடியில்
கிடந்த பொழுதினில்
எம்மீது காதல் கொண்டாயோ
ஆழிப் பேரலையே...
எம் உயிர் அழித்த ஆழப்பேரலையே....

எல்லாப் பொழுதுகளையும்...
விடிய வைத்தது இயற்கை
விடியலைக் கொன்றழித்து...
யுகங்களாய்ப் பசிக்கவைத்திருந்த
உன் வயிற்றின் பசியடக்கினாய்...
எம்மின் உயிர் நசுக்கினாய்...!

சாந்தமாய் நின்ற உன்
கட்டவிழ்ந்த நொடியில்..
ஏன் அலையே எம்மிடம் சொல்லவில்லை
ஏன் கடலே சைகைகள் செய்யவில்லை...
உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று
எம்மவரின் கண்ணீரைக் கடன்
கேட்டது எப்படி நியாயம் ஆகும்?

வாழ்க்கையை வாரி வாரி.....
வழங்கிவிட்டு வஞ்சகமின்றி..
மொத்தமாய் உயிர் குடித்தது
யுத்தமரபில்லையே இயற்கையே
எம் உயிர் அழித்த செயற்கையே...!

கருப்பு தினத்தை எமக்கு...
வழங்கிய கரிப்பு அரசனே...
வாழ்வையும் சாவையும் பங்கிட்டுக்
கொடுத்த வள்ளலே...
இயற்கையின் இளவலே....
நீ யுத்தங்கள் செய்வதில்..
எமக்கு முரண்கள் இல்லை...
ஒரு பகுத்தறிவோடு நீ ...
பகலிலாவது வந்திருக்கலாமே...?


கண்ணீரில் இருந்து கரிக்கும் உப்பின் சுவையோடு ஒரு போரிட்டு வீழ்த்த எண்ணும் ஒரு வித மடமை கோபமும் ஆத்திரமும் கலந்து எம்மில் கொப்பளிப்பது வழமையாகிப்போனது. ஓராயிரம் முறை அதை இயற்கையின் சீற்றமென்று அறிவியலும் ஆன்மீகமும் கட்டியம் கூறினாலும் எமது மூளைகள் அதைச் சடுதி நேரம் கூட செவி கொடுத்துக் கேட்கப் போவதில்லை...


ஆண்களையும் பெண்களையும் ஈவு இரக்கமின்றி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் மொத்தமாய்த் தின்று தீர்த்தது கடல்....விடியலில் ஊதப்பட்டது ஒரு மரண சங்கு.... விடிந்த பொழுதில் பறவைகள் எல்லாம் மனிதர்களின் கதறலைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தன.....


சூரியனின் வெட்கத்தில் அந்தப் பகல் பொழுது முழுதும் குளிரால் நிரம்பியே வழிந்தது....கரையில் கனவுகளோடு கண்ணயர்ந்திருந்த மனிதர்களின் உயிர் குடித்த திருப்தியில் வரலாற்றின் சோகத்தை வெற்றிக்கரமாய் எழுதிவிட்டு மெளனமாய்த் தன்னுள் திரும்பிப் போய்விட்டது வங்காள விரிகுடா....


கூக்குரல்களின் பின்னால் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவரும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும்.. இன்ன பிற உறவுகளும் கதறிய படி உடல்களைத் கரையெங்கும் தேடித் தேடி அலைந்த காட்சிகளில் வங்காள விரிகுடாவே வெட்கித் தற்கொலை செய்திருக்க வேண்டும்...

வாழ்க்கையின் ஓட்டத்தை எது தீர்மானிக்கிறது? விடிந்தால் இது செய்யலாம் அது செய்யலாம் என்று கணக்குகள் போட்ட மனிதர்களின் மூளைகள் எல்லாம் ஒரு இரவின் உறக்கத்தோடு ஜல சமாதியாக்கப்பட்டது என்ன நியாயம்...?


மனிதர்களாய் நின்று பார்த்தால் கடவுள் என்ற ஒன்று இல்லையோ? கடல் அரக்கன் இப்படி அடாவடி செய்து விட்டானே, இவனை என்ன செய்யலாம் என்ற ரீதியில் கோபமும், இழந்து விட்ட உறவுகளுக்காகவும் கொத்துக் கொத்தாய்ப் போன முத்துப் பிள்ளைகளின் உயிருக்காகவும்.......அழுகையும் ஆத்திரமும் வருகிறது....


இயற்கையின்படி பார்த்தால் இது ஒரு நிகழ்வு...எல்லாம் தன்னைத்தானே சமப்படுத்த இயற்கையின் ஒரு அணுகுமுறை இது....! கொள்ளைக் கொள்ளையாக மீன்களையும் நான் தான் கொடுத்தேன்..உமது வீட்டின் விளக்குகளில் ஜென்மங்களாய் நான் தான் எண்ணெயாயிருந்தேன்...


என்னை அப்போது சீராட்டி இப்போது திட்டும் உங்களின் எண்ணங்கள் தான் இயற்கைச் சீற்றங்களின் காரணி என்று சொல்லாமல் சொல்லி மெளனமாய் சொல்லி மீண்டும் வேலையைச் செய்வதில் எந்தப் பாராபட்சமும் காட்டாமல் செயல் செய்து கொண்டிருக்கும் கடலுக்கு இது ஒரு நிகழ்வு..........


சப்தங்களின்றி.....விவாதங்கள் தொலைத்து.......ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்........மேலும் எதிர் வரும் காலங்களில் இயற்கைச் சீற்றம் மட்டுமின்றி எந்த விதமான தீங்குகளும் இன்றி வாழ....நேர்மறையான எண்ணங்கள் கொள்வோம்...!

என் பூமி செழிக்கட்டும்......! எம் மக்கள் வாழட்டும்...!


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)
 
 

9 comments:

சே.குமார் said...

சப்தங்களின்றி.....விவாதங்கள் தொலைத்து.......ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்........மேலும் எதிர் வரும் காலங்களில் இயற்கைச் சீற்றம் மட்டுமின்றி எந்த விதமான தீங்குகளும் இன்றி வாழ....நேர்மறையான எண்ணங்கள் கொள்வோம்...!


என் பூமி செழிக்கட்டும்......! எம் மக்கள் வாழட்டும்...!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அத்துணை உறவுகளுக்கும் என் அஞ்சலிகள்

எஸ்.கே said...

அனைவருக்கும் அஞ்சலிகள்!

எல் கே said...

அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்

வெறும்பய said...

அனைவருக்கும் அஞ்சலிகள்!

Kousalya said...

//உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று
எம்மவரின் கண்ணீரைக் கடன்
கேட்டது எப்படி நியாயம் ஆகும்?//

மன குமுறல்கள் இங்கே கேள்விகளாய் !!

கடல் மாதாவை கூட யோசிக்க வைக்கும் இந்த வலிகளுடன் கூடிய கவிதை !!

தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து வரிகளும் படிப்பவர்களை கண் கலங்க வைப்பது நிச்சயம்.

அஞ்சலி செலுத்துகிறேன் என்று சொல்லி மனதை சமாதான படுத்தி கொள்ள இயலவில்லை...இனி இந்த மாதிரி கோர நிகழ்வு நிகழக்கூடாது என்று பிராத்திப்போம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எமது அஞ்சலிகளும் ............................ஆழமான பிரார்த்தனைகளும்!

வினோ said...

எனது பிராத்தனைகள்.. இது போல இன்னொரு முறை நடவாமல் இருக்க வேண்டும்... :(

சுபத்ரா said...

அஞ்சலி!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes