பிரச்சாரங்கள் முடிவடைந்து இதோ....வாக்களிக்கும் தினத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தினை ஆளப்போகும் கட்சியினை தேர்ந்தெடுக்கும் பெரும் வலிமை கொண்டது நமது ஒவ்வொரு வாக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காலங்கள் தோறும் தேர்தல் என்பதற்கும் அடுத்த ஐந்தாண்டுகள் நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கும் எதுவும் பந்தமில்லாதது போல ஒரு மனோபாவத்தில் இருந்துவிட்டோம்.
ஏப்ரல் 13 அந்த தினத்தில் நாமளிக்கப் போகும் வாக்குதான் அடுத்த ஐந்தாண்டுக்கான நமது எதிர்காலம், நமது பிள்ளைகளின் அறிவு, நாம் வாங்கப்போகும் பொருட்களின் விலைவாசி, தொழில்களை சுமுகமாக அமைதியுடன் செய்ய உதவப்போகும் காரணி, சாந்தமான ஒரு அமைதியான வாழ்க்கைக்கு ஓரளவேனும் ஒத்தாசை செய்யப்போவதோடு தமது திட்டங்களின் மூலம் நமது எதிர்காலத்தை சரியாக்கப்போகும் ஒரு சக்தி....இது நமது வீட்டு நிகழ்வு, நமக்கு நாமே நம்மை நிர்வாகம் செய்ய ஒரு அரசியல் கட்சியினை தேர்ந்தெடுக்கும் இடம்....
இப்போது மனதில் கை வைத்து சொல்லுங்கள்..இந்த வாக்கினை செலுத்த நாம் பணம் பெறுவது சரிதானா?
நாம் பெற்ற பிள்ளையை காசு வாங்கிக் கொண்டு யாருக்கேனும் ஒரு ஐந்து வருடம் விற்று விட மனசு வருமா? பச்சிளம் குழந்தையை எப்படி போற்றி பாதுகாப்போமோ அதைவிட மேலாக மதிக்கப்பட்டு போற்றப்பட வேண்டியது இந்த ஜனநாயகம்..!
வாக்களிக்க செல்வது நமது சுவாசித்தலை போன்ற இயல்பாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. யாரேனும் நம்மிடம் வந்து வாக்குகளுக்கு காசு கொடுக்கிறோம் என்று சொன்னால்...பாரதி சொன்னது போல முகத்தில் காறி உமிழ்வதுதான் சாலச் சரியான விடயமெனினும், அப்படி செய்யாமல் ஒரு சிறு புன்முறுவலோடு மறுத்து விடுங்கள்....
எமது வயிற்றுக்கான
சோற்றினை சோறாக போடு....
அதை வாய்க்கரிசியாக
மாற்றாதே மானுடா "
பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் முகத்தில் அறையும் கேள்விகள் கூட கேட்க வேண்டாம்.....இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்தி அனுப்பி விடுங்கள். தீர்க்கமாய் உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் " எமது உயிரினை விலைபேசும் உத்திரவாதத்தை உமக்கு கொடுத்தது யாரடா? " என்று...
காலங்கள் தோறும் சீட்டுக் கட்டுகளாய் நமது மனதை கலைத்துப் போட்டு அரசியல் கட்சிகள் ஆடிய விளையாட்டுக்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்! வலிமையான நாம் நம்மை நிர்வாகம் செய்ய நிர்ணயிக்கப் போகும் ஒரு மரியாதைக்குரிய ஊழியன் எவ்வளவு வலுவாய் மாறிப்போய்விட்டான் நமது அறியாமையால். சரியாக நமது பிரச்சினைகளை அலசிப்பார்த்து தீர்வு செய்து கொடுத்து விட்டு நமது திருப்தியை எதிர்பார்த்து திரிய வேண்டியவர்கள் எல்லாம் ஏதோ பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுவது அல்லவா கொடுக்கிறார்கள் நமக்கெல்லாம் இலவசம்.
" இலவசம் " என்ற வார்த்தையை அகராதியில் இருந்து பெயர்த்தெடுத்து அவர்களின் முகங்களிலேயே வீசுங்கள். எம் வாழ்வு சிறக்க வழி சொல்லடா மூடா? எம்மை ஏழையாகவே வைத்திருந்து எமது வயிற்றுக்கு நீ என்னடா சோறுபோடுவது? எமக்கு வழிகள் காட்டு எமது வாழ்க்கையை யாமே பார்த்துக் கொள்கிறோம் என்ற தீர்மானத்தை மனதளவிலாவது எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாய் யாரும் கொடுக்க இயலாது. ஒவ்வொரு இலவசத்துக்குப் பின்னாலும் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதை கருத்தில் கொள்ளுங்கள். இது தேர்தலுக்காக மட்டுமில்லை எப்போதும் வாழ்வில் கொள்ளவேண்டிய ஒரு தீர்மானம். இங்கே இலவசங்களைக் கொடுத்து நம்மை அடிமைகளாக்கி பின்னொரு நாளில் அன்று உனக்கு இலவசமாக கொடுத்தேனே நீ எனக்கு வாக்களிக்க மாட்டாயா? என்று ஆக்ரோசமாய் கேட்கப்போகிறார்கள்....! நன்றி கெட்டவனே என்று கொக்கரிப்போகிறார்கள் அதுமட்டுமல்ல தோழமைகளே.... சிறிய அளவில் நமக்கு இலவசங்களை இறைத்து விட்டு அதனால் ஆதாயம் தேடப்பார்க்கிறவர்களின் சொத்து மதிப்புகள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
" நமக்காய் உழைக்கப் போகிறேன் பேர்வழி என்று அரசியல் களத்தில் நுழைந்த போது இருந்ததை விட பன்மடங்கு என்பதை ஏன் நாம் இன்னும் உணரவில்லை. "
இந்த அரசியல்வாதிகளிடம் நீங்கள் பரிந்துரைக்கு போனால் செய்து கொடுப்பார்கள், இன்ன பிற சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்ய தமது அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்வார்கள்...இப்படி செய்து ...செய்து..நம்மை இந்த செய்கையில் எல்லாம் ஒரு புழுவைப் போல உடன்படுத்தி சிறு சிறு ஆதாயங்களை கொடுத்து, வேலை வாங்கி தந்து, வெளிவேசம் போட்டு கேள்விகள் கேட்பதற்கே நமக்கு தகுதிகள் இல்லாத ஒரு முதுகெலும்பு இல்லாத ஜடமாக்கிவிடுவார்கள்.
இப்படி நம்மை ஆக்கிவைத்திருப்பது உண்மையா இல்லையா?
அரசியல் கட்சிகளின் மீதான உங்களின் விசுவாசங்கள் எல்லாம் ஏதோ ஒரு சமயத்தில் நமக்கு நன்மைகள் விளைந்ததானால் தானே ஏற்பட்டிருக்கும்? அப்படிப்பட்ட நன்மைகள் எல்லாம் நியாயமாய் நமக்கு கிடைக்கவேண்டியதுதானா? இல்லை நமது கட்சி விசுவாசத்தால் திருட்டுத்தனமாய் நிரப்பப்பட்டதா ...கேள்விகளை நமக்குள் கேட்டுக் கொள்வோம்....! தவறாய் இருந்தால் இன்றே நம்மை சரி செய்துகொள்வோம்.
வாக்களிக்க பணம் பெறுவது நாம் பெற்ற பிள்ளைகளை விற்பதற்கு சமம். நாம் உடைகளற்று தெருவில் திரிவதற்கு சமம்...பெற்ற தாயை அவமானம் செய்வதற்கு சமம்.....!
அதோ தெரிகிறது வாக்குச் சாவடி எனதருமை தோழமைகளே...! நிமிர்ந்த நெஞ்சுடன் உள்ளே செல்லுங்கள்....வாக்களிக்கும் எந்திரத்தை தொட்டு...உங்களின் மனசாட்சியை ஒரு நிமிடம் உற்று பார்த்து எந்த உறுத்துதலும் இல்லாமல் நேர்மையாய் வாக்களித்து விட்டு வாருங்கள்....
வெளியே வந்து நீங்கள் சுவாசிக்கப்போவது .......நிஜமான உங்களின் கம்பீரத்தோடு கூடிய ஒரு நேர்மையான காற்றினை என்பதை மறந்து விடாதீர்கள்......!!!!!
நேர்மையாக வாக்களிப்போம்...! வாழ்க ஜனநாயகம்! வாழ்க நடுநிலைமை!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
8 comments:
படிச்சவனே இலவச டிவி கேட்குறான். இங்கு உள்ள எத்தனை பேர் வீட்டில் கலைஞர் டிவி இல்லை. நேர்மையாக சொல்லுங்கள் பார்ப்போம்..
வாக்களிக்க பணம் பெறுவது நாம் பெற்ற பிள்ளைகளை விற்பதற்கு சமம். நாம் உடைகளற்று தெருவில் திரிவதற்கு சமம்...பெற்ற தாயை அவமானம் செய்வதற்கு சமம்.....!///
இது எத்தனை பேருக்கு புரிகிறது?
உங்களுடைய எண்ணங்கள் கம்பீரமாக உள்ளது. பாராட்டுக்கள்.
நேரமிருந்தால், தேர்தல் தொடர்பான என்னுடைய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்களேன்.
விவசாயம் செய்வோம், வாருங்கள்...!
நன்றி.
சரியான நேரத்தில் சரியான கட்டுரை
நல்ல பகிர்வு.
நல்ல சிந்தனை.பாமர மக்கள் இதையெல்லாம் யோசிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
.உங்களின் மனசாட்சியை ஒரு நிமிடம் உற்று பார்த்து எந்த உறுத்துதலும் இல்லாமல் நேர்மையாய் வாக்களித்து விட்டு வாருங்கள்....
...I totally agree!
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html
Post a Comment