எமது சிறகடிப்பில் பல்வேறு கோணங்களையும் வாழ்க்கைப் பாடங்களாக்கி அந்த அனுபவச் செறிவுகளை எமது வாசகர்களுக்கு எப்போதும் தெளிவான பார்வைகளாக்கியே வைக்கிறோம். விழிப்புணர்வு என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அது எமக்கு இல்லை மற்றவர்களுக்கு என்று ஒவ்வொரு மனமும் பளீச் சென்று ஒரு நாடகமிட்டுக் கொள்கிறது.
அரசியல், ஆன்மீகம், சினிமா, கலை, பொருளாதாரம், கல்வி, வணிகம் என்று எல்லா துறைகளிலுமே விழிப்புணர்வு என்ற ஒன்று நம்மைக் மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை மறந்துவிட்டு சமூக அரசியல் சார்ந்த விடயங்கள் மட்டுமே விழிப்புணர்வு என்று ஒருசாரார் கொடி பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால்.....
கழுகின் பார்வையில் வாழ்வியல் இயங்கு தன்மையின் எல்லா பாகங்களுமே விழிப்புணர்வு அடைய வேண்டியவையே. சமூக அரசியல் கடந்த வாழ்வியல்தான் சமூகத்திற்கும் அரசியலுக்கும், இன்ன பிற விடயங்களுக்கு எல்லாம் அடித்தளம் என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்தே இருக்கிறோம்.....!
வாழ்வியல் முரண்பாட்டு முடிச்சுக்களை இந்த ரங்கனின் ரிலாக்ஸ் பக்கங்கள் மென்மையாய் அவிழ்த்தெறியும் என்பது சர்வ நிச்சயம். இனி வார, வாரம் வெள்ளிக்கிழமை உங்கள் ரங்கா உங்களோடு இந்த பக்கத்தின் மூலம் தொடர்ந்து பேசுவார்...
சீரியஸ் சிகாமணிகள்
நான் தினமும் சாலைகளில் செல்லும் போதும், பொது இடங்களில் பலரை சந்திக்கும் போதும் ஒரு விஷயத்தை நன்றாக உணரமுடிகிறது. அதுதான் சீரியஸ்னெஸ். எல்லா வயதினருக்கும் இது இருப்பினும், குறிப்பாக 25 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் இது ஒற்று தொற்றுவியாதி போல...
எதோ இவர்தான் உலகையே கைக்குள் வைத்திருப்பவர் போலவும், பேசியோ சிரித்தோவிட்டால் உலகம் உடைந்து உருக்குலைந்து போய்விடும் என்பதுபோல் ஜனங்கள் முகத்தை மிகவும் இறுக்கமாக வைத்துகொண்டே சுற்றி வருகின்றனர்.
இவர்கள் இறுக்கமடைய அடைய, மருந்து கம்பெனிகளும், மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும், போலி சாமியார்களும், கடவுள் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் சிரித்து கும்மாளமிடுகிறார்கள். இவர்கள் எந்த அளவுக்கு இறுக்கமடைந்து நோய்வாய்ப்படுகிறார்களோ, அந்த அளவு அவர்களுக்கு லாபம். முதலில் ஏன் எப்போதும் இறுக்கமாகவே இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
பிரச்சினைகள் என்பவை தனக்கு மட்டும்தான் இருக்கிறது, மீதி இருக்கும் அத்தனை பேரும் மிகவும் சந்தோசமாக இருப்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். பிரச்சினை என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு பொருளினை சேர்த்து விட்டாலெல்லாப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்பதற்காக பொருள் சேர்க்க ஓடிக் கொண்டே இருக்கிறார்கள், இது ஒரு பக்கம் என்றால் பொருளைச் சேர்த்து அதிகமாய் வைத்து இருப்பவர்களுக்கு இன்னமும் பயம் கூடிப் போய் அவர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்......?
வாழ்வின் எல்லா நிலையிலும் இன்பமும் துன்பமும் ஒரு பேக்கேஜ் மாதிரி என்பதை கடைசி வரை யாரும் உணராமல் என்னமோ இந்த பூமியை இவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நகர்வது போல எப்போதும் டென்சனாகவும், சீரியசாகவும் இருக்கிறார்கள்.
ஒரு எளிய விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள். நாம், இந்த மனித இனம் மட்டுமே இந்த அகண்டப் பெருவெளிக்கு முக்கியமே இல்லை, இந்த சூரியக்குடும்பமொ, இல்லை இந்த சூரியனோ கூட இந்த பிரபஞ்சத்தில் முக்கியமானதில்லை. எல்லாம் வெறுமனே தூசுத்துகள்தான். இப்படி இவ்வளவு பெரிய சூரியனே முக்கியமில்லாத போது, நாமெல்லாம் எம்மாத்திரம்? ஏன் இந்த டென்ஷன்? ஏனிந்த கோபம்? ஏனிந்த கொலைவெறி? எதை நோக்கி இந்த வெறிகொண்ட ஓட்டம்?
நிதானியுங்கள்.. இந்த வாழ்க்கை வாழவே வழங்கப்பட்டது. வெற்றிகொள்ள இங்கே எதுவுமில்லை. வெறிகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. அறிவை திறந்து நிறைய செய்துவிட்டோம், இப்போது இதயத்திற்கு இறங்கி வருவோம்.
அறிவு மட்டுமே வாழ்க்கையானால், அடுத்த பத்தாண்டுகளில் அணுகுண்டுகள் நம்மை அழித்துவிடும். இன்னும் கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணையை, அன்பை, பாசத்தை, நட்பை, நகைச்சுவையை தூசி தட்டி எடுப்போம், அதை வளர்ப்போம், காப்போம்..!!
அன்பில் பூக்கும் புன்னகையோடு, எளியதுதான் வாழ்க்கை என்ற சிரிப்போடு, மகிழ்ச்சியோடு இக்கணம் நிம்மதியாய் வாழ்ந்துவிடுவோம்..நன்றி..!!
கழுகிற்காக
உங்கள் ரங்கா
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)
3 comments:
மனதின் அன்பை கருணையை அதன் இயல்பை இறுக்கம் என்கிற தூசு மூடிக் கிடப்பதை அறிந்து.,ஊதி எறிவோம்.
மலர்ச்சி அடைவோம். பகிர்வுக்கு நன்றிகள் ரங்கா....
வாரந்தோறும் மனிதவளம் குறித்தான உங்கள் கட்டுரைக்கு என் வாழ்த்துகள்...
நல்ல பகிர்வு ....
நன்றி.!!!!
Tharamaana pathivu. Vaalthukkal.
Tamilmanam vote 8.
Post a Comment