Sunday, December 04, 2011

'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பேட்டி....!


விழிப்புணர்வுக்காய் ஒரு வலைத்தளத்தை உருவாக்கிய போது என்ன ஒரு உக்கிரம் கொண்டிருந்தோமோ அந்த சீற்றத்தில் கிஞ்சித்தேனும் குறைவின்றி கழுகு தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தடைகளையும், இகழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு நேர்மறைப் பார்வைகளோடு அடுத்த தலைமுறையினரின் செழிப்பான வாழ்க்கைக்கு தேவையான அனல் பறக்கும் கருத்துக்களை இடையறாது விதைத்துக் கொண்டே அது செல்கிறது.

இளையர்கள் நாளைய நமது தேசத்தை கட்டி அமைக்கப் போகும் சிற்பிகள் என்ற கருத்தில் யாருக்கும் முரண்கள் இருக்க இயலாது. எமது நீண்ட நெடிய பயணத்தின் போது எதிர்பட்ட சகோதரர் சபரி சங்கர் ஒரு வித்தியாசமான இளைஞர் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற ஒரு சமூக நல் இயக்கத்தை நிர்வகித்து, அக்னியாய் உருவான கனவினை தன் நண்பர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சபரி கணிணித்துறையில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் ஒரு மாணவர்....

ஆச்சர்யமான அதே நேரத்தில் சம காலத்து அதுவும் இணையத்தில் வலம் வரும் அத்தனை இளையரும் அறிய வேண்டிய ஒருவர் சபரி....! அவரோடன கழுகின் பேட்டி இதோ உங்களுக்காக....!
உங்களை பற்றி கொஞ்சம் கூறுங்களேன் சபரி?

என் பெயர் சபரி ஷங்கர், நான் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இறுதி ஆண்டு MCA படித்து வருகிறேன் . நான் மதுரை அவனியாபுரத்தில் வசித்து வருகிறேன்.

கனவுக்கு செயல் கொடுப்போம்...இந்த திட்டம் எப்படி,எப்போது உருவானது?

என் (மற்ற கல்லூரி) நண்பன் கார்த்திக் உடன் ஒரு முறை அருப்புகோட்டையில் உள்ள அனாதை இல்லம் சென்றிருந்தேன் , அந்த அனாதை இல்லம் வந்ததும் குழந்தைகள் அன்புடன் கார்த்திக் அண்ணா, கார்த்திக் அண்ணா என்று ஓடி வந்தார்கள், 100 குழந்தைகள் மேல் இருப்பார்கள். அன்று புரிந்து கொண்டேன் குழந்தைகள் அன்பை . அந்த அனாதை இல்லம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த பெண்கள் அனாதை இல்லம் நடு காட்டில் உள்ளது போல் தனியே இருந்தது, சுற்றி வீடுகள் அதிகம் இல்லை, கதவுக்கு கூட தாழ்பாழ் இல்லை, க்ரிண்டேரை தள்ளி அடைக்கும் அவலம், ஒரே ஒரு வார்டன், இல்லத்தை சுற்றி பன்றிகள் கூட்டம் வேறு , வார்டனின் கணவன் குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

இந்த நிலை கண்டு அன்று வேதனை அடைந்தேன். கண் கலங்கினேன், பேருந்தில் வரும்போது கூட நண்பனிடம் இதை பற்றியே பேசிகொண்டே வந்தேன், அன்று இரவு வீட்டில் இதை பற்றி சிந்தித்தேன், அவர்களுக்கு உதவ நினைத்தேன், அந்த வாரத்திலயே ஞாயிறு கிழமை அவர்களுக்கு டியூஷன் எடுக்க சென்றேன். என் வீட்டில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் என்றாலும் அவர்களுக்கு உதவ சிரமங்களை பார்க்காமல் சென்று வகுப்பு எடுத்தேன், அவர்களின் கல்வி தேவையை நண்பர்களின் உதவியுடன் நிறைவேற்றினேன்.

கனவுக்கு செயல் கொடுப்போம் என்பது 2010 புத்தாண்டு சபதமாக பிறந்தது. ஒவ்வொரு வருடம் வருகிறது , செல்கிறது , இந்த வருடம் புதுமையாக வித்தியாசமாக செய்வோம் என்ற குறிகோளுடன் என் நண்பர்களுடன் விவாதித்து கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற அமைப்பை தொடங்கினேன்,

ஒவ்வொரு ஏழை மாணவர் - மாணவிகளின் கல்வி கனவு மெய்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் பேரை தேர்வு செய்தேன்.


ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது ?

இணையத்தில் ஒருமுறை அன்னை தெரேசா வாழ்க்கை வரலாற்றை படித்தேன், அதை படித்ததில் இருந்து எனக்குள் மாற்றம், தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.

உதவி செய்வதற்கு நன்கொடை மற்ற உதவிகள் எங்கிருந்து வருகின்றன?

நாங்கள் எந்தவித அரசின் நிதியும் , வெளிநாட்டு நிதியும் பெறாமல் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்கள் மற்றும் பணி செய்யும் நண்பர்களின் தரும் சிறு நிதியை கொண்டு இந்த சமுக பணிகளை செய்துவருகிறோம் .
முகநூல் நண்பர்கள் மூலம் நிதி கேட்டு ஏழை மாணவர்கள் -மாணவிகளுக்கு உதவுகிறோம்.

கனவுக்குச் செயல் கொடுப்போம் குழுமத்தினை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் - எவ்வகையில் ஆதரிக்கிறார்கள் - பணமாகவா - பண்டங்களாகவா - உடலுழைப்பினாலா ?

பல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் , பணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் என் பலரும் ஆதரவு தருகிறார்கள்.

மதுரையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் வரும் ஒரு முறை அனாதை இல்லம் வந்து அனாதை குழந்தைகளுக்கு டியூஷன் , கணினி வகுப்பு எடுக்கிறார்கள்.

பணிபுரிவோர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், வியாபாரம் செய்வோர் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை தருகிறார்கள், ஹச்..வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மக்களுக்கு மருந்து பொருட்களுக்கு உதவி செய்கிறார்கள்

வீட்டில் உங்களின் இந்த சேவை மனப்பான்மையை ஏற்றுக் கொண்டார்களா ?

தொடங்கிய போது ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் இருந்தது, எனது சேவை பற்றி கண்டுகொள்ளவதில்லை , அதன் பிறகு ஹிந்து நாளிதழில் பேட்டி வந்த போது என் பெற்றோருக்கு என் சேவை மீது நம்பிக்கை வந்து ,ஏற்று கொண்டர்கள் . ஆரம்பத்தில் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் கூட , எங்கள் சேவை பற்றி பத்திரிகைகளில் வந்ததும், வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நபரிடம் , என் உறவினர் பையன் தான் என்று பெருமை பட்டு கொள்வார்கள். ஆரம்பத்தில் என் தங்கை இதில் நாட்டம் இல்லாது இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல தங்கையும் அனாதை இல்லங்களுக்கு வரும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டாள். தன் தோழிகளையும் அதில் ஈடுபட வைத்தாள். என் தந்தையும் தாயும் எனக்கு நம்பிகையாக உள்ளார்கள்.

வேறு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் சேவை தொடர்கின்றதா ?

ஆம், எங்களால் கல்விக்கு உதவ முடியாவிட்டால் மற்ற அமைப்புகளுக்கு பரிந்துரை செய்கிறோம். சென்னையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் அமைப்பு, இளம்பிறை , சேவை கரங்கள் , மதுரையாய் சேர்ந்த வி கேர் தொண்டு நிறுவனம், ஷிவா டிரஸ்ட், கேர் என பல அமைப்புகளோடு சேர்ந்து உதவிகள் செய்கிறோம். தற்போது இணையத்தை பொறுத்தவகையில் கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளத்தோடு கை கோர்த்து உள்ளோம்.

செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்களா?

எப்போதும் கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களை நன்கொடை அளிக்கச் சொல்லி கட்டயபடுத்துவதில்லை , கல்வி கோரிக்கையை பார்த்து அவர்கள் விருப்பம் இருந்தால் செய்வார்கள் ,

நாங்கள் தொண்ணூறு சதவிதம் பணம் இல்லாமல் சேவை செய்கிறோம், அனாதை இல்லத்தில் டியூஷன் எடுப்பது, கணினி வகுப்பு எடுப்பது, தற்கொலை எண்ணம் கொண்டோருக்கு கவுன்செலிங் தருவது, ஹச், , வி - எய்ட்ஸ் விழிப்புணர்வு, பள்ளி படிப்பு முடிதோருக்கு உயர்கல்விக்கு வழி காட்டுவது, முதலியன கனவுக்குச் செயல் கொடுப்போம் குழும உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது தன்னார்வமாக வந்து செய்யும் சேவைகள் தான்.

எப்படி உங்களுக்கான நேரத்தை நிர்வகிக்கிறீர்கள் ?

நான் சமுக சேவைக்கு தரும் நேரம் சனி , ஞாயிறு , விடுமுறை நாட்கள் தான். சமுக பணிகளுக்காக நான் கல்லூரிக்கு விடுமுறை எடுப்பதில்லை. வார நாட்கள் எனக்கு கல்லூரி படிப்புக்கே சரியாக இருக்கும். சமுக சேவையில் உள்ள ஆர்வத்தால் என் பொழுதுபோக்கை தியாகம் செய்தேன், திரை அரங்குக்கு செல்வதில்லை, நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில்லை, டிவி பார்ப்பதில்லை , வெட்டி அரட்டை அடிப்பதில்லை, இதனால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அதை சமுக சேவைக்கு செலவிடுகிறேன்.

.....இந்தப் பேட்டியின் தொடர்ச்சி நாளையும் தொடரும்....(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


7 comments:

Rathnavel said...

முக நூல் சபரி சங்கரின் பேட்டியை படித்து பாருங்கள். உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம் திரு சபரி சங்கர். மனப்பூர்வ வாழ்த்துகள்.

NAAI-NAKKS said...

Intha pettiyai padikkum anbargal
sirithalavenum---- thangal ninaivugalai virithu parthal
athuve------ SABARIKKU------
kai koduthaal pol.........

dheva said...

சபரி சங்கர்....என் அன்பான வாழ்த்துக்கள் சகோதரம்..! நல்ல விசயத்தை இந்த தேசத்தில் கூவி கூவி அழைத்து சொல்ல வேண்டும்.......

நாமும் கூவி கூவித்தான் அழைக்கிறோம்....ஆனால் கொள்வாரில்லை.!

மிக அருமையானட் தெளிவான பதில்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

Sabari Shankar Social Worker said...
This comment has been removed by the author.
Sabari Shankar Social Worker said...

மிக்க நன்றி , சமுக எண்ணம் கொண்ட கழுகு வலைதளத்துடன் இணைந்தது பெருமையான விஷயம்

irnewshari said...

Nice to find this interview with Sabari shankar. Great to find excellent contents in this site.

Best wishes to ur team.

A.Hari
http://inspireminds.in/

Anonymous said...

என்னே ஒரு தெளிவு ஒவ்வொரு பதிலிலும்...

வாழ்த்துக்கள் சபரி சங்கர்....

Nowadays hardly to find a guy like you.. your concern on our society is amazing... keep it up & Best Wishes to Your Team!!!...


By
Maheswari

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes