Friday, February 11, 2011

அறிவை அழிக்கும் ஊடகம்...


சமீபகாலத்திய ஊடகங்களின் போக்கு கேள்விக்குரியானதாக இருப்பது எல்லோரும் அறிந்ததே? ஊடக தர்மங்கள் மீறப்படுவததோடு மட்டுமல்லாமல், மிகுதியான சுயநலப்போக்கோடு உணர்வைக் கொடுக்கும் செய்திகளை கொடுக்காமல் உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளைப் பரப்பி மக்களை பெரும்பாலும் ஆட்டு மந்தையாக்கும் செயல்களையே செய்கின்றன


வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த கழுகுக் கண்களில் பட்ட இந்த கட்டுரை செய்விக்கப்பட்டது வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்களால், கழுகில் வெளியிடவேண்டுமென சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் இசைந்து கொடுத்த தோழருக்கு நன்றிகள்கூறி....கட்டுரையை உங்களின் பார்வைக்கு வைப்பதில் கழுகு பெருமகிழ்ச்சியடைகிறது.



மக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம்  சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன? என்பது சராசரி இந்தியனுக்கு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் நான்காவது தூண் என்று கூறப்படும் ஊடகத்துறை எவ்வாறு இயங்குகிறது? என்பது சாமானியர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.


மக்களின் நம்பிக்கைகளையும், கருத்துகளையும் உளவியல் ரீதியாக உருவாக்கும் சக்தி ஊடகங்களுக்கு உள்ளது. உலகில் நடைபெற்ற எந்த அரசியல் மாற்றத்திலும் ஊடகங்களின் பங்கும் உரிய அளவில் இருக்கும்


இந்திய சுதந்திரப்போரின்போது இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின.

அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து,

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே

...என்று பாடினார்.

*****


பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண் தற்போதைய சூழலில், மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் அறிவை வளர்க்கிறாளா? அல்லது அந்த அறிவையும் அழிக்கிறாளா? என்ற கேள்வி கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்நிலைக்கு ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள், செய்தியாளர் அமைப்புகள், வாசகர்கள் ஆகிய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்


ஊடக நிறுவனங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்களாயின. வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் அவை செயல்படத் தொடங்கின. எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற அறம் சார்ந்த கோட்பாடுகள் மறைந்து மக்களை எப்படியாவது கவர்ந்து விற்பனையை பெருக்கி லாபம் ஈட்ட வேண்டும் என்ற போக்கு ஏற்பட்டது. அப்போதும் சில பத்திரிகை அதிபர்கள் லாபத்தோடு, தங்கள் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்கும் இந்த பத்திரிகைகளை பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் மண் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில் இந்தப்போக்கு சற்று குறைவு என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகளே ஊடகங்களையும் ஆக்கிரமித்து மக்களுக்கு நடுநிலை செய்திகளே கிடைப்பதில்லை என்ற சூழல் நிலவுகிறது. நடுநிலை செய்திகளுக்கே பஞ்சம் என்றால் நாட்டு நடப்பு குறித்த நடுநிலையான விமர்சனங்களுக்கு இன்றைய ஊடகங்களில் இடமே இல்லை என்றும் சொல்லலாம். அனைத்து ஊடகங்களும் கண்களுக்கு தெரியாத சிலந்தி வலைகளில் மாட்டிக் கொண்டுள்ளன. அவை அரசியல் வலையாகவோ, வணிக வலையாகவோ, அல்லது வேறு வலையாகவோ இருக்கலாம். எனவே இந்த ஊடகங்களில் பணியாற்றும் மனசாட்சியும், செயல்திறனும் வாய்ந்த செய்தியாளர்கள்கூட ஒரு அம்சத்தை அலசும்போது, தாங்கள் சார்ந்த ஊடக நிறுவனத்தை அந்த விமர்சனம் எவ்வாறு பாதிக்கும் என்பதை கணித்துவிட்டே எழுத வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான வணிக ஊடகங்கள் சுயமாக சிந்திக்கும் திறன்பெற்ற செய்தியாளர்களை பணிக்கு அமர்த்த விரும்புவதில்லை. தாம் சொல்லும் வேலையை செவ்வனே செய்யக்கூடிய திறன் பெற்றவர்களை மட்டுமே ஊடக நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட ஒன்றும் தெரியாதவர்கள்போல நடிக்கும் சூழல் நிலவுகிறது. காலப்போக்கில் அவர்கள் சிந்தனைத்திறனும் மறைவது இயல்பானதே!

செய்தியாளர்கள்

செய்தியாளர்களை இருவகைகளாக பிரிக்கலாம். ஊடகத்துறையின் மகத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று வருவது ஒரு வகை. ஊடகவியல் சார்ந்த படிப்புகளை படித்துவிட்டோ, அல்லது வேறு வகையிலோ ஊடகத்தை பிழைப்புக்கான ஒருவழி என நினைத்து இந்தத் துறையில் நுழைவது மற்றொருவகை.

முதல் வகையினருக்கு வாழ்க்கை சிறிது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் உருவாக்கும் செய்தியின் மறுபக்கம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். ஆனால் அதற்கு மாற்று வழியற்ற சூழலில், காலப்போக்கில் அந்த குற்ற உணர்வு அவர்களுக்கு மரத்துவிடும்.

இரண்டாம் வகையினருக்கோ இதுபோன்ற சிரமங்கள் இருக்காது. மேலும் ஊடகத்துறைக்கு மக்களிடம் இருக்கும் ஒரு போலித்தனமான, அர்த்தமற்ற மரியாதை இவர்களுக்கு போதையைத் தரும். இந்த போதையில் இவர்கள் சமூகத்தை கற்க தவறுவதும் இயல்பாக நடைபெறுகிறது. தொழில் நிமித்தமான அறிமுகங்கள் அதிகரிக்கும் நிலையில், அந்த அறிமுகத்தின் மூலம் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளும் கலையை இவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். இந்த நிலையை எய்திய ஒரு செய்தியாளரிடம் எந்தவிதமான சமூக பொறுப்பையும் எதிர்பார்க்கமுடியாது.

ஆனால் இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு இந்த செய்தியாளர்கள் மட்டுமே காரணம் என்றும் சொல்லமுடியாது. மிகக்குறைந்த ஊதியத்தை வழங்கும் ஊடக நிர்வாகம், இதை கண்டும் காணாமல் இருக்கும் அரசு ஆகியவையும் இதுபோன்ற செய்தியாளர்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

செய்தியாளர் அமைப்புகள்

செய்தியாளர்களுக்கு பாதுகாப்பும், பயிற்சியும் கொடுப்பது, அவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வி அளிப்பது, ஊடகத்தை செம்மையாக பயன்படுத்தி சமூக மேம்பாட்டுக்கு உதவி செய்வது போன்றவற்றில் செய்தியாளர் அமைப்புகள் ஈடுபடவேண்டும்.

ஆனால் செய்தியாளர் அமைப்புகளின் செயல்பாடுகளோ மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருக்கின்றன. பத்திரிகையாளர் சங்கத்தை பிழைப்பதற்கான வழியாக நடத்துவது: சரியான கொள்கைகளோ, பார்வைகளோ இல்லாமல் தனிநபர் கருத்து சார்ந்து அமைப்புகளை நடத்துவது: தனிநபர் ஈகோ மோதல்களால் அமைப்புகளை முடக்குவது, பிளப்பது போன்ற நடவடிக்கைகளே அதிக அளவில் நடைபெறுகின்றன.

இதையெல்லாம் மீறி யாராவது முறையான அமைப்புகளை நடத்தினால் அதை ஊடக நிர்வாகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது சுவாரசியமான கற்பனையாக அமையும்.

வாசகர்கள்

ஊடக வாசகர்களின் மனநிலை என்பது சராசரி வாக்காளரின் மனநிலையே! நாட்டில் நடப்பவை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற முன்முடிவோடு ஒருவிதமான மோனநிலையில் ஆழ்ந்துவிடுவது.

ஊடகங்களில் நல்ல அம்சங்கள் வரும்போது பாராட்டுவதும் கிடையாது. தீய அம்சங்கள் வரும்போது கண்டிப்பதும் கிடையாது. (விதிவிலக்குகள் தவிர!)

*****

மரபு சார்ந்த இந்த ஊடகத்திற்கு வெளியே மரபு சாராத புதிய ஊடகங்களாக இணையங்கள் செயல்படுகின்றன. மரபு சார்ந்த அச்சு ஊடகத்திற்கோ, காட்சி ஊடகத்திற்கோ தேவையான முதலீடுகள் தேவையில்லாததால் நவீன ஊடகங்களில் மாற்று முயற்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த நவீன இணைய ஊடகத்திற்கான வாசகப்பரப்பு மிகவும் குறைவு. மேலும் இந்த வாசகர்களும் மரபு சார்ந்த ஊடகங்கள் உருவாக்கிய வாசகத்தன்மையை கொண்டவர்கள். எனவே மாற்று அம்சங்கள் மற்றும் பார்வைகள் இங்கே கவனம் பெறுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இந்த இணையப் பெருவெளியில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைத்து அதை பலரும் கவனிக்கச் செய்வதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அந்த முயற்சியில் ஆள்பலம், பணபலம் ஆகிய அனைத்தும் இடம் பெறுகின்றன.

*****


இந்நிலையை மாற்றுவதில் மனசாட்சி உள்ள பத்திரிகையாளர்களும், சமூகப் பொறுப்பு உள்ள வாசகர்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி காணமுடியும்.

ஊடகத்தில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் பின்னால் இருக்கும் சொல்லப்படாத செய்திகளை மக்கள்முன் வைப்பதற்கு நவீன ஊடக வடிவங்களை மனசாட்சி உள்ள செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் சமூகப்பொறுப்புமிக்க வாசகர்கள் ஈடுபட வேண்டும்.

மேலும் குடிமக்கள் இதழியல் என்ற கருத்து பரவலாகி வரும் நேரம் இது! இதனை குடிமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

வணிகப்பத்திரிகைகளில் நல்ல அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதைப் பாராட்டவும், தவறான அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதை கண்டிக்கவும் மீடியா வாட்ச் போன்ற அமைப்புகள் உருவாக வேண்டும்.

தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதைப் பேசாதே! என்பதெல்லாம ஊடகங்களுக்கு பொருந்தாது. ஊடகங்கள் தீயதை பார்க்க வேண்டும்! தீயதை கேட்க வேண்டும்! தீயவை குறித்து உரக்கப் பேச வேண்டும்!
    
      பின் மக்களோடு இணைந்து தீயவைக்கு எதிராக போராட வேண்டும்






கழுகுகுழுமத்தில் இணைய....


        கழுகிற்காக
வழக்கறிஞர் சுந்தரராஜன்




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


 

12 comments:

Chitra said...

நிறைய புதிய கருத்துக்கள்....ம்ம்ம்ம் ....

எல் கே said...

இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எத்தனை பேரால் நடுநிலைமையுடன் செயல்படமுடியும் ?? எத்தனை பெயர் அவ்வாறு செயல்படும் பத்திரிகைகளை ஆதரிக்கிறோம் ?? ஆளுங்கட்சியை எதிர்த்து எழுதினால் ,இவன் எதிர்கட்சிப் பத்திரிகை என்று முத்திரை குத்துகிறோம் . ஆளுங்கட்சி செய்யும் நல்லதை எழுதினால், அரசுக்கு ஜால்ரா என்கிறோம் . இல்லையேல் குறிப்பிட்ட ஜாதிக்காரன் அதனால் இப்படி எழுதுகிறான் என்று முத்திரை குத்துகிறோம் . தவறு நம் மேல்தான் அதிகம் .

எஸ்.கே said...

நல்ல கருத்துக்கள் பலவற்றை சொல்லியிருக்கிறார். மிக நன்றாக உள்ளது!

வைகை said...

ஊடகம் என்று வியாபார உலகமாகவும் போட்டி உலகமாகவும் மாறியதோ ....அன்றே அதன் நோக்கங்களும் சிதைந்து விட்டது என்பதே உண்மை...இனி
அதில் மாற்றம் என்பது....பார்ப்போம்......முயற்சி செய்து.......

எல் கே said...

இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எத்தனை பேரால் நடுநிலைமையுடன் செயல்படமுடியும் ?? எத்தனை பெயர் அவ்வாறு செயல்படும் பத்திரிகைகளை ஆதரிக்கிறோம் ?? ஆளுங்கட்சியை எதிர்த்து எழுதினால் ,இவன் எதிர்கட்சிப் பத்திரிகை என்று முத்திரை குத்துகிறோம் . ஆளுங்கட்சி செய்யும் நல்லதை எழுதினால், அரசுக்கு ஜால்ரா என்கிறோம் . இல்லையேல் குறிப்பிட்ட ஜாதிக்காரன் அதனால் இப்படி எழுதுகிறான் என்று முத்திரை குத்துகிறோம் . தவறு நம் மேல்தான் அதிகம்

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது ஊடகமா.......அப்பிடீன்னா......????
ஆ ராசாவின் பினாமி யாருன்னு தெரியுமா....?
நக்கீரன் வார இதழில் வேலை பார்க்கும் காமராஜ்தான்....!!!!
ஸோ பின்னே நாலாவது தூண் உருப்படுமா.....???!!!

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் சிறப்பான கட்டுரை...

பொன் மாலை பொழுது said...

பிரமாதம் எல்.கே. மற்றும் நாஞ்சில் மனோ! ஆனால் ஒன்று, இந்த தப்பிளித்தனங்களை வெளியில் கொண்டுவந்ததும் ஊடகங்கள்தானே!

Unknown said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

ஊடகங்கள் பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொள்ளும்போதே அதன் நம்பகத்தன்மை குறைந்துவிடுகிறது.எல்லா நாளிதழ்களும் விற்பனையில் நெ.1 என்பதை காட்டிக் கொள்கிறதே தவிர விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நெ.1 என்று எந்த நாளிதழையும் முழுதாக சொல்ல முடியாது.ஏதாவது ஒரு வகையில் யாரையாவது சார்ந்தே இருக்கிறார்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஊடகங்கள் தீயதை பார்க்க வேண்டும்! தீயதை கேட்க வேண்டும்! தீயவை குறித்து உரக்கப் பேச வேண்டும்!

வேண்டும்! வேண்டும்!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes