Saturday, February 19, 2011

மேய்ப்பனில்லா ஆடுகள்.....மாணவ சமுதாயம் பற்றிய ஒரு கழுகு பார்வை!எல்லா நிகழ்வுகளின் அவலங்கள் தாண்டி அதற்கு ஏதேனும் தீர்வுகள் இருக்குமா? என்று யோசித்தே பழக்கப்பட்ட கழுகின் மூளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் வெளிவரும் ஊடகங்களின் செய்திகள் எல்லாம் ஆச்சர்யத்தையும் வெறுப்பையுமே தூண்டுகின்றன. மனிதர்கள் தவறுகள் செய்யும் இடங்களில் எல்லாம் அவர்களின் மூளைகள் தப்பிப் போகின்றன. ஒன்று  அந்த தவறின் வீரியத்தினை விவரித்துப் பார்க்கும் விசாலம் கொண்ட மூளை மடிப்புகள் அற்றவர்கள் அல்லது வேண்டுமெனே செய்பவர்கள்.

இந்த இரண்டினையும் சீர்துக்கிப் பார்த்து மனிதர்களின் செயல்களின் நோக்கங்களில் தவறு இருக்கிறதா என்பது ஆராயப்படவேண்டும். நோக்கங்களில் தவறுகள் இருப்பின் அவை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது ஒரு குழுவின் செயல்கள் எந்த விதத்திலும் சமுதாயத்தையோ, அல்லது சுமூகமான வாழ்க்கை ஓட்டத்தையோ சிதைக்கும் வகையில் இருக்கக் கூடாது.
 
மனித மனம் கட்டுகளின்றி செயல்படும் வல்லமை கொண்டது. இங்கே மிகைப்பட்ட மனிதர்கள் உணர்வு நிலையில்  இருந்து செயலாற்றுவது இல்லை. அதனாலேயே தங்களின் சுய விருப்பு அல்லது வெறுப்பின் படி செயல்கள் செய்யும் அவலம் நிகழ்ந்து அவை எல்லாம் சமூகத்துக்கு எதிராக திரும்பிவிடுகின்றன.

இப்பபடிப்பட்ட நிகழ்வுகளின் சப்தங்களை மட்டுப்படுத்தவும், அநீதிகளை முடுக்கிவிடும் கைகளை உடைத்துப் போடவும் ஒவ்வொரு நாட்டின் சட்டமும் அதை பேணிக்காக்க அரசு இயந்திரமும் வடிவமைக்கப்படுகின்றன. இந்திய ஜனநாயக தேசத்தின் ஆளும் அதிகாரம் மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசின் கைகளில் பரிபூரணமாய் இருக்கும் பட்சத்தில் தேசத்தில் சட்ட ரீதியாக அத்து மீறப்படும் எல்லா நிகழ்வுகளினையும் கட்டுப்படுத்தும் தார்மீக பொறுப்பு அரசின் கைகளில்  இருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.

எங்கே இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரை? என்று யோசிக்கும் முன்....சமீபத்திய பேருந்து தின கொண்டாட்டங்களில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் அத்து மீறல் பற்றிய ஊடகங்களின் செய்திகளை கழுகு நினைவுபடுத்த விரும்பிகிறது. ஊடகப்பாய்ச்சல்கள் மாணவர்களின் மீது கடுமையான சீற்றமாகவும், அவர்களை சமூக விரோதிகளைப் போன்று சித்தரிக்கும் நிகழ்வுகளாகவும் எல்லோருடைய பார்வையும் இந்நேரம் எட்டிப் பிடித்திருக்கும்.

ஊடக தர்மம் என்றால் என்ன என்று கற்றறியா அல்லது கேட்டறியா ஊடங்கள் தமது மூளைகளின் சிந்திப்புகளில் இருந்து எதேச்சதிகாரமான வன் சொற்களை பொதுவில் இறைத்து தமது பங்குக்கு ஒரு வன்முறையை வேறு ஒரு கோணத்தில் சாதாரணர்களின் மனதிலே விதைத்த அதே நேரத்தில் கழுகின் பார்வை சராசரிகளில் இருந்து விலகி......

பேருந்து தினம் என்ற கேளிக்கையை அத்துமீறலாக்கிய மாணவர்களின் மீது உச்ச பட்ச கோபம் கொள்ளும் அதே நேரத்தில் இதை தடுக்கவும், சீர்படுத்தவும் விதிமுறைகள் ஏதும் இல்லையா? அல்லது இருந்தும் பின்பற்றப்படவில்லையா? கல்லூரி நிர்வாகம் இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும்?  சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் காவல் துறையின் கைகள் யாரால் கட்டப்பட்டு இருந்தன? இம்மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளை வளர்ப்பினை செவ்வனே செய்தவர்கள் ஆவார்களா? இதற்கெல்லாம் தீர்வு என்ன?  என்ற கோணத்தில் தமது மூளையை உலுக்கிவிட்டு சிந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில்......

கல்லூரி பருவத்தில் மாணவர்களின் மனோநிலை என்ன? அவர்களின் உலகம் பற்றிய தெளிவு என்ன? பார்வை என்ன? வழிகாட்டுதல் என்பது மாணவ சமுதாயத்துக்கு தேவையா இல்லையா? அப்படி தேவையில்லையெனில் அது சரியா? தேவையெனில் யார் வழி காட்டுவார்? மாணவர்கள் மீதான சமூகத்தின் அக்கறை என்ன? கல்லூரி, மற்றும் பள்ளிகளின் பங்கு என்ன? பெற்றோர்களின் கடமை என்ன? என்று ஓராயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பிரச்சினையின் மூலத்தை கண்டறியும் ஒரு பயணத்தில் இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறுமனே மாணவர்களைச் சாடி செய்திகள் வெளியிட்டு இருப்பதை கடும் கண்டனத்துக்குள்ளாக்குவதில் கழுகின் நிலைப்பாடு இருக்கிறது.

பிரச்சினைகளை சொல்லும் ஊடகங்கள் எல்லாம் தீர்வுகளைச் சொல்லாமல் போகும் போது...அங்கே அவர்களுக்கு பிரச்சினை பற்றிய கவலையை விட தம்மை முன்னிலைப்படுத்தும் வேகம்தானே அதிகாமாயிருக்க முடியும்?. இப்படிப்பட்ட ஊடகங்களுக்கு தீர்வு சொல்வதும், பிரச்சினைகள் நடைபெறாமலும் இருப்பதிலலும் அதீத விருப்பமில்லை.

கலவரங்கள் நிகழவேண்டும், கற்பழிப்புகள் நடந்தேற வேண்டும், கொலை கொள்ளை என்று எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையிருந்தால்தானே அவர்களால் பரபரப்பு செய்திகள் கொடுக்க முடியும் என்ற ஒரு புரையோடிப் போன மனோநிலைகள் இது போன்ற பிரச்சினைகள் பற்றிய தெளிவான பார்வைகளை மக்களுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துகின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா?

பொதுமக்கள் செல்லும் பேருந்தினை வழிமறித்து ஓட்டுநர் நடத்துனரை மிரட்டி பேருந்தினை தங்கள் விருப்பபடி இயக்கச்சொல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருப்பதற்கு முழுமுதற்காரணமாய் அவனை மட்டும் குற்றவாளியாய் பார்ப்பதில் கழுகிற்கு உடன்பாடில்லை.

அத்துமீறும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும் என்று எண்ணும் கழுகு அத்தகைய தண்டனைகள் அடுத்த மாணவனுக்கு வழிக்காட்டும் வகையிலும் தண்டிக்கப்படும் மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்படா வண்ணமும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறது.
 
மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து ஆடவைக்கும் அரசியல் சக்திகள்தான் காவல்துறையின் கைகளையும் கட்டிப்போட்டு இது போன்ற நிகழ்வுகளுக்கு மூலகாரணமாய் இருக்கும் அதே நேரத்தில், எந்த துறை சார் மாணவனாய் இருந்தாலும் அரசியல் கட்டாய பாடமாக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சரியான ஒரு அரசியல் பார்வை அவனுக்கு அல்லது அவளுக்கு கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். கல்லூரிகளுக்குள் நுழையும் அரசியல் கட்சிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

பயிலும் காலங்களில் மாணவர்களை குறிவைத்துப் பாயும் அரசியல் கட்சிகள் தெளிவாகவே இவர்களை வழிகேடு செய்கின்ற உண்மையை அனைவரும் அறிந்தானிருக்கிறோம். சென்னை போன்ற இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்தேறுவதற்கு பின் புலத்தில் மிக ஆழமான அரசியல் தொடர்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

சட்டமும், அரசும் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சினைகள் நிகழாது என்று  வலியுறுத்தும் அதே நேரத்தில், பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் செழுமையான பிள்ளைகளை உருவாக்குவதற்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நேர் நோக்கே கழுகின் பார்வையாயிருக்கிறது.விமர்சனம் செய்து வெறுமனே மாணவர்களை குற்றவாளிகளாக்கும் மூளைகள் எல்லாம் நேற்றைய தமது 18களை நினைவு கூறுதலோடு அப்போதைய தத்தம் தெளிவுகளையும் சீர்தூக்கிப்பார்த்து கட்டுரைகள் செய்யுமெனில் தெளிவான சமூகத்தை நம்மால் சமைக்க இயலாதா என்ன.......?

 
(கழுகு இன்னும் உயர பறக்கும்)

12 comments:

Madhavan Srinivasagopalan said...

பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது...
வருங்கால தூண்கள் பாதை மாறி தங்களையே அழித்துக் கொள்ள முனைகிறார்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

தெளிவான ஒரு அலசல்......

virutcham said...

பாடப் புத்தகங்கள் தாண்டி சமூகம் குறித்த எந்தத் தொடர்பும் கல்வித் திட்டத்தின் வழி வருவதில்லை.
ஒழுக்கம் தவறுதல் குறித்த கண்டிப்பும் தண்டனையும் தாண்டி புரிந்து கொள்ளுதல் வழி காட்டுதல் என்பதும் இல்லை.

இது மாதிரி நிகழ்வுகளை கண்டிப்பது விடுத்து (கண்டனத்துக்கு உரியது தான் என்றாலும் ) மாணவர்களைக் கொண்டே விவாதிக்க அனுமதிக்க வேண்டும். எல்லா கல்லூரிகளையும் இத மாணவர்களைக் கொண்டு விவாதிக்கத் தயாராகும் போது விழிப்புணர்வு தானே வரும்.

கல்லூரிகளின் மாணவர்கள் அமைப்புகள் பொறுப்பெடுத்து ஒழுங்குபடுதுதலில் ஈடுபடலாம்

கோமாளி செல்வா said...

மாணவர்கள் என்பவர்களும் சமுதாயத்தின் அங்கத்தினர்களே. அவர்களை தனியாகப் பார்க்கவேண்டிய avasiyam இல்லை. எந்தக் குற்றத்திற்கும் காரணம் நாம்மளுக்கு இதுல சலுகை இருக்கு , அதனால பிரச்சினை இல்லை அப்படின்னு நினைப்பதுதான். பொதுவா எல்லோருக்கும் பொதுவான சட்டம் இருப்பின் பிரச்சினைகள் தீரும். ஆனா kondattankalum maanavap பருவத்தில் எல்லோரும் ஈடுபடுவதே. அதனை போது மக்களுக்கு idayooru yerp padaavannam kondaada vendiyathu maanavarkalin கடமை !!

சேலம் தேவா said...

ஊடகங்கள் அவசியம் உணர வேண்டிய கருத்து இது. பரபரப்பை பணம் செய்ய பார்க்காமல் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை மனதில் வைத்து செய்தி வெளியிட வேண்டி இருப்பதை கழுகு சரியானநேரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
கழுகு மென்மேலும் பறக்கும்.

சுபத்ரா said...

பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான்னு ஒரு பழமொழி உண்டு. ஆனால், இன்றோ, பிரம்பைக் கையிலெடுத்தவனை மகனே பகைக்கிறான் என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனைப் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அடித்து வளர்க்கின்றோம்? ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு வளர்க்கிறோம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும் வரை ஒன்றுமில்லை. பிரச்சனை என்று ஒன்று வரும்போது தான், அவர்களைத் தண்டிக்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல், அல்லது திடீரென்று அவ்வாறு செய்ய அம்முறைகளை அறியாமல் தவிக்கிறோம்..

அந்நாளில் பெற்றோர்களின் மீதும் ஆசிரியர்களின் மீதும் ஒரு பயம் கலந்த மரியாதை வைத்திருந்தோம். அவர்களை எதிர்த்துப் பேசவும் துணிச்சலின்றி இருந்தோம். ஆனால், இந்தக் காலக் குழந்தைகளோ, அம்மாவாவது ஆட்டுக்குட்டியாவது என பெற்றோர், ஆசிரியர், உற்றார் உறவினர் என்று யாரையும் விட்டுவைக்காமல் கிண்டல் செய்வதும், ’அவ, இவ, அவன், இவன்’ எனப் பேசுவதும், எதிர்த்துப் பேசுவதும், சொல்லும் அத்தனையையும் வாதித்துத் தர்க்கம் செய்வதும்..............இது ஆரோக்கியமான சூழலா அவலமான சூழலா என்று உற்று நோக்கினால் அவர்களது வாழ்க்கைக்கே ‘ஆப்பு கன்ஃபார்ம்’ என்பது மட்டும் தான் புரிகிறது.
ஆனால் கொடுமை என்னவென்றால், பெற்றோர்களே இவ்வாறு எதிர்த்துப் பேசும் தன் பிள்ளைகளைச் சமர்த்து என எண்ணிப் பெருமை கொள்வது தான்...!

This credit mainly goes to MEDIA in general and CINEMA in particular. But rather than blaming others/things, it is our duty to grow our children with discipline, responsibility and concern for their family, society and country. For that, first parents should be a role model to their children for leading them this way. So everything starts from the First Person only......!!! :-)

Thought provoking article by Kazhuhu..!
Fly High...

ஜீவன்பென்னி said...

இந்த விசயத்தினை பொறுத்த வரையில் ச்முதாயத்தின் அங்கமான பெற்றோர்களுக்கும், பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கும் பொறுப்புகள் அதிகம். ஒழுக்கம் என்பது வளரும் பருவத்தில்யே விதைக்கப்பட வேண்டும். இன்றைய நிலைமையில் குழந்தைகள் தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாகவே அநேகமான விசயங்களை உணர்ந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றது. ஆனால் இன்றைய ஊடக நிலைமை அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றாக இல்லை என்பதே நிதர்சனம். முன்பை விட பெற்றோர்களும்,ஆசிரியர்களும் பிள்ளைகளின் மீது அதிகபடியான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு சிந்தனையைத்தூண்டும் பதிவு

அன்புடன் அருணா said...

அவசியமான பதிவு.

சே.குமார் said...

தெளிவான அலசல்.

+யோகி+ said...

மாணவன் மானவனா இருக்கனும் அவ்ளோதான்

அரசியல பாடத்துல சேர்ப்பது எவ்வளவு சாத்தியமென்பது தெரியல...

இராஜராஜேஸ்வரி said...

ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது ஒரு குழுவின் செயல்கள் எந்த விதத்திலும் சமுதாயத்தையோ, அல்லது சுமூகமான வாழ்க்கை ஓட்டத்தையோ சிதைக்கும் வகையில் இருக்கக் கூடாது.//
well said. True.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes