மக்களைச் சென்றடையும் வலுவான ஒரு ஆயுதமொன்று எமது கையிலிருக்கிறது. கோட்டை கொத்தளங்கள் எல்லாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும் தத்தம் இருப்புகளை உறுதி செய்து கொள்ள பாய்ந்தோடி தடம் பதிக்கும் ஒரு வலுவான களமாக இருக்கும் ஊடகம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மனித மனங்களுக்குள் புகுந்து மாயாஜால வித்தைகள் செய்யும் ஜித்தனை யாமும் ஒரு வகையில் கையகப்படுத்தியிருக்கிறோமென்ற எண்ணம் வரும் போதே இதிலிருக்கும் பொறுப்புணர்ச்சி என்னவென்று தெளிவாய் உணர முடிகிறது.
காலையில் எழுந்தவுடன் காபி டம்ளரும் கையுமாக தினசரிகளுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். இது சற்றே மாறி இன்று இணையமென்னும் பெருங்கடலுக்குள் நீச்சலிடுபவர்களின் மூளைகள் எல்லாம் செய்திகளாய் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கும் ஒவ்வொரு செய்தியின் சாரமும் மூளையை சென்று தாக்க, ஒவ்வொரு நாளும் அதன் தொடர் தாக்குதலில் சிக்குண்டு மனித மனங்கள் தமது முடிவுகளை எடுக்கும் ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
செய்தி பரிமாற்றம் என்ற போர்வையில் நித்தம் கொலையையும், கொள்ளையையும், திருட்டையும், இன்ன பிற மனித முரண்களையும் அம்பலப்படுத்தும் புலனாய்வுப் பத்திரிக்கை தன்மைகளை மனிதர்கள் அதிகம் விரும்பும் வண்ணம் மாற்றிப் போட்டதும் ஊடகங்களின் தொடர் யுத்திதான். காவிரியில் தண்ணீர் வராததால் துன்பத்தில் தூக்கில் தொங்கியவனின் கதைகளை பக்கம் பக்கமாக படங்கள் போட்டு பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன ஆனால் காவிரித் தண்ணீர் சரியாக கொடுக்க நீதி மன்றம் என்ன தீர்ப்பினை வழங்கியது என்றும் அதைப் பெறுவதற்காக போராட்டக் களமும் வடிவமும் எப்படி இருக்க வேண்டும் என்று எந்தப் பத்திரிக்கையும் எழுதவில்லை.
மீடியாக்கள் என்பவை நிகழும் செய்திகளை படம் பிடித்து மக்களிடம் கொண்டு போகும் ஒரு இடை நிலை வேலையை செய்வதின் உள் நோக்கம் மக்கள் எல்லா விபரங்களையும் அறிய வேண்டும் என்று கொண்டாலும் அதன் பின்னணியில் மக்களின் விழிப்புணர்வு மேம்பாடு என்ற ஒன்றே பெரிதாயிருந்திருக்க வேண்டும். சம காலத்தில் பத்திரிக்கை தர்மம் என்பது 0.05%க்கும் குறைவாகவே கடை பிடிக்கப்படுவதோடு உணர்ச்சி மிகு கட்டுரைகளுக்கும், சினிமா செய்திகளுக்குமே முன்னணி நிலை என்ற ஒரு அவல சூழலும் அரங்கேற மீடியாக்களே காரணமாகியிருக்கின்றன.
மனித மனம் எதிர்மறைகளை விரும்பும் என்பது இயற்கையின் விதி ஆனால் திரும்ப திரும்ப ஊட்டப்படும் கருத்துக்களால் மூளைகள் சிந்திக்கும் திறன் பெற்று ஏன்? எதற்கு?எங்கே? எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கும். அறிவு சார் செய்திகளும் தீர்வுகளை இயம்பும் கருத்தாக்கங்களும் இந்த செயலைச் செவ்வனே செய்யும், ஆனால் உணர்ச்சி சார் செய்திகள் மூளையை சிந்திக்க விடாமல் அந்த செய்திகளின் பின்னால்தான் மனிதர்களை ஓடவைக்கும்.
யாதொரு அரசு சார்பற்ற நடுநிலை பார்வை கொண்டவையாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும் என்ற நியதிகள் நமது தேசத்தில் உடைக்கப்பட்டு வெகு காலங்கள் ஆயிற்று. தத்தம் பிழைப்புகளுக்காக ஏதோ ஒரு அரசியல்வாதிக்கு அடிவருடும் ஒரு கருவியாக பத்திரிக்கைகள் செயல்படுகின்றன என்பதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளே இன்று பத்திரிக்கைகளை நடத்தவும், தனியார் தொலைக்காட்சிகளை நடத்தவும், முகமூடிகள் அணிந்து கொண்டு இளைஞர்கள் அதிகம் உலாவும் இணைய உலகத்துக்குள் நுழைந்து சித்து விளையாட்டுக்குள் விளையாடவும் தொடங்கியிருக்கின்றன.
ஊடகங்கள் வலுவானவை என்றறிந்து இருப்பதால்தான் கோட்டையையே பிடித்து விட்டாலும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் மீதும் இணையப் பக்கங்கள் மீதும் அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பு வலுவாக இருக்கிறது. சம காலத்தில் வலைப்பூக்கள் என்னும் மக்கள் ஊடகம் வளர ஆரம்பித்திருக்கிறது. கழுகு போன்ற விழிப்புணர்வுத் தளங்களை குறி வைத்தும் சில அரசியல் தொடர்புகள் நேசக்கரம் நீட்ட மாய வலைகள் விரிப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
மிகைப்பட்ட இளைஞர்கள் உலாவும் இணைய உலகத்தில் குறிப்பாக வலையுலகத்திற்குள் பல்வேறு ரூபங்களில் அரசியல் சக்திகள் ஊடுருவியிருக்கின்றன என்ற ஒரு அபாயகரமான செய்தியினை இங்கே பகிர விழைகிறோம். இவர்களின் நோக்கம் ஆரோக்கியமான இளைஞர்களின் மனங்களில் நஞ்சினை விதைப்பது மேலும் சீர்கேட்டினை விதைக்கும் எல்லா செயல்களையும் செய்து இங்கே ஒரு புரட்சி கர கும்பல் உருவாக விடாமல் நசுக்குவது போன்ற செயல்களை நயமாக செய்ய எல்லா அதிகாரவர்க்கங்களும் இறங்கியாகி விட்டது.
வலைப்பூக்கள் அப்படி என்ன செய்து விடும் என்றுதானே கேட்கிறீர்கள் தோழர்களே!? ஆமாம் நமது அடிப்படை பலவீனம் நமது வலுவினை நாம் அறியாததுதான். சமுதாயத்தின் சீர்கேடுகளை நெஞ்சு நிமிர்த்தி யாதொரு சிக்கலும் இல்லாமல் நாம் எழுதிட முடியும். நாம் எழுதுவதை இணையத்தொடர்புகள் மூலம் உலகமெல்லாம் இருக்கும் தமிழர்களின் செவிகளுக்குள் சென்று சேர்க்க முடியும். இத்தகைய செயல்களின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலக அரங்கில் நமது தேசத்தின் அன்றாட வாழ்க்கை படம் பிடித்துக் காட்டப்படுகிறது.
தென் குமரியில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் நிகழ்ந்த பெறும் வன்கொடுமைகள் தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மனிதருக்கு எளிதாகப் போய் சேர்ந்து விடுகிறது. உண்மைகளை மூடி மறைத்து ஒரு போலியான வாழ்க்கை முறையை தான் கையகப்படுத்தி வைத்திருக்கும் ஊடகங்கள் மூலம் மனித மூளைகளுக்குள் செலுத்தும் உத்தி இனி பலிக்காது. நாமெல்லாம் வலைப்பூக்கள் உபோயகப்படுத்துகிறோம், இதையெல்லாம் பொழுது போக்காக எண்ணி நாமே நம்மை குறைத்து மதிப்பிட்டு இதை சரியாக பயன்படுத்தவும் மறுக்கிறோம்.
அடுத்த பத்து வருட காலத்தில் வலைப்பூக்கள் மிகப்பெரிய சக்தியாய் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே ஆட்டிப் படைக்கத்தான் போகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சமீபத்தில் சில தேசங்களில் நடந்த மிகப்பெரிய கிளர்ச்சிகளின் பின்னால் வலைப்பூக்களின் பங்கு மிகுதியானது. வலைப்பூக்கள் எழுதும் அத்தனை பேரும் சமூக சிந்தனையோடு எழுத வேண்டும் என்ற வலியுறுத்தலை இந்தக் கட்டுரை வைக்கவில்லை. ஆனால், அப்படி எழுதினால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற பத்திரிக்கைத் துறையின் நவீன வடிவமான இணையத்தின் மூலம் நாம் சாதிக்கப் போவது கற்பனைக்கும் எட்டாதது என்ற கருத்தை மட்டும் வலுவாக எல்லோர் மனதிலும் பதிய விரும்புகிறது.
சமூக சீர்திருத்தம் ஏற்பட சரியான செய்திகளை வலுவாக வலைப்பூக்கள் வாயிலாக பகிர்வோம்! சத்தியத்தின் பக்கம் எப்போதும் நின்று தீப்பொறி பறக்கும் கட்டுரைகள் மூலம் மனித மனங்களுக்குள் மாற்றங்களை கொண்டு வந்து புதியதோர் சமுதாயத்தைப் படைப்போம்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
2 comments:
வலுவான ஆயுதம் தான் சரியாக பயன்படுத்த வேண்டும் ...
ஏன் இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்
நல்லாருக்கே
Post a Comment