Tuesday, July 12, 2011

எழுக எங்கள் இளைய இந்தியா!!!! ஆண் பெண் நட்பு பற்றிய ஒரு பார்வை!



மிருகத்தின் வக்கிரத்தினைப் புத்தியில் தேக்கிவைத்து அதைப் பார்வைகளுக்குள் கொண்டு வந்து வக்கிரப்பார்வைகளைப் பொதுவினில் விதைத்துக் கற்பிதங்கள் கொள்ளும் கேவலப் புருசர்களை அழிக்க இன்றே எனக்கோர் வரம் கொடு இறைவா?

முரண்பட்ட சமுதாயமே நீ செத்துப் போ!

ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் காமம் என்ற உணர்வைக் கலந்து நோக்கும் கயமையும், கயமைவாதிகளும் என் முன் வர துணிகரம் கொள்ளாதீர், சற்றே ஓடி ஒளியும் அல்லது யாரையேனும் தேடிப் பதுங்கும் இல்லையேல் இக்கணமே நீவீர் இருந்த தடம் அறியாமல் எரித்து விடும் வல்லமை எம்மிடம் உண்டு. நீவீர் ஜீவித்தீர் என்ற சுவடுகளின்றி உமது சாம்பல்கள் காற்றிலே கரைக்கப்படும்.

எங்கே ஆரம்பித்தது இந்த மனித முரண்...? பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்......? திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு? கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு? சகோதரனாய் யாரேனும் பாசத்துடன் இருந்தால் அதுவும் தவறு?

எங்கே போகிறாய் சமுதாயமே? மன்னிக்கவும் சமுதாயம் என்ற வார்த்தைக்கு வேறுபதம் கொள்கிறேன்? எங்கே போகிறாய் கேவலமே..ஏன் உனது பார்வையில் விசாலங்கள் இல்லை....

பெண்ணைப் பூட்டிப் பூட்டிவைத்த காலம் போய்விட்டது என்று சொல்லித் தயவுசெய்து வெற்று வியாக்கியானம் பேசிக்கொண்டு உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டு யாரேனும் என்னிடம் வராதீர்கள். எனது நாவில் இருந்து வரும் அக்னியில் எரிந்து விடப்போகிறீர்கள்....

காமம் மிகுதியாய் மனதில் கொண்ட விலங்குகளுக்குக் காண்பதெல்லாம் காமம். பார்ப்பதெல்லாம் மோகம்...! விதிவிலக்குகளை எல்லாம் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வரலாற்றை எழுத இந்தச் சமுதாயம் துணிந்தால்.. அதை எரித்துப் போட இக்கணமே நான் தயார்.....என்னை அதனால் இச்சமுதாயம் எரியூட்டுமென்றாலும்...... கவலையில்லை. உயிர்.. என் தலையில் இருக்கும் ஏதோ ஒன்றுக்குச் சமம்....

ஆண் பெண் உறவு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல தோழர்காள்...! அப்படி திணிக்கப்பட்டிருப்பது ஒரு மனோதத்துவ விந்தை? பெண்ணின் உணர்வுகளும் ஆணின் உணர்வுகளும் காமம் சார்ந்துதான் கட்டியெழுப்பட்டிருக்கிறது என்று மனிதபுத்திகளுக்குள் ஊடுருவியிருக்கும், உடலெல்லாம் பரவியிருக்கும் கொடும் விஷம் பிழிந்தெடுக்கப்பட்டு....இந்தப் பிரபஞ்சம் தாண்டிய ஏதோ ஒரு இடத்தில் எரியூட்டிப் புதைத்து மீண்டும் வரவொண்ணா வண்ணம்... அழிக்கப்படவேண்டும்.

என் சகோதரியோடு நான் கடைவீதிகளுக்குச் சென்று வரும் போது கூட இந்த சமுதாயத்தின் முதல் பார்வை என்னவாயிருந்திருக்கும்? யார் இந்தப் பெண்? இப்படிச் சிரித்து பேசி ஒரு ஆடவனுடன் சென்று வருகிறாளே என்றுதானே பார்த்திருக்கும்? ஆணும் பெண்ணும் பேசினால் அங்கே ஒரு குறு குறுப்பான பார்வையும்.... தவறான எண்ணங்களும் பதியப்படுவதற்குப் பின்னால்..நீண்டகால ஒரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவளின் தாயால் போதிக்கப்படுகின்றன. அப்படிப் போதித்த தாய் இந்தச் சமுதாயத்தின் பார்வைகளுக்காகத் தன்னை ஒடுக்கிக் கொண்டவள். குனிந்த தலை நிமிராமல் செல்லவேண்டும் என்று யாரோ ஒரு அயோக்கியன் சொல்லிக் கொடுத்ததைத் தப்பாமல் கடை பிடித்து....அதைப் பின்பற்றி அதுவே ஒழுக்கநெறி என்ற தவறான கற்பிதத்தை தன்னின் சந்ததியினரிடம் போதித்து அதை நிறைவேற்றியும் வைக்கிறாள்....

இப்படி புரையோடிய புரிதல்கள் எல்லாம்.. காலப்போக்கில் விரிவடைந்து பெரும்பாலும் சமகாலத்தில் பெண்ணே பெண்ணின் முதன்மை எதிரியாகிப் போயும் நிற்கிறாள். உடலால் ஏற்படும் இயற்கை மாற்றங்களையும், இயற்கையால் ஏற்பட்டிருக்கும் ஆண் பெண் ஈர்ப்பினையும் யாராலும் தடுக்கமுடியாது என்றாலும்.. ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதின் பின்னணியில் சர்வ நிச்சயமாய்க் காமம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை...

விதிமுறைகள் என்பவை எல்லா இடத்திலும் அவசியம் என்றாலும் எப்போதும் தவறாகப் பார்க்கும் கண்ணோட்டங்கள் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழித்தொழிக்கப்படவேண்டும்.

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களிடம் பழகும் வாய்ப்புகள் ஒரு ஆணுக்கு வாய்க்கும் அதே போலத்தான் பெண்களுக்கும், பணிக்காய், தொழிலுக்காய், இலக்கியத்துக்காய், ஆன்மீகத்துக்காய், அரசியலுக்காய், கலைக்காய் என்று அப்படிப்பட்ட தருணங்களில் வெறுமனே மற்ற விசயங்களை விடுத்து காமம் மட்டும் முன்னெடுத்து உறவுகள் உற்று நோக்கபடுவது கண்டணத்துகுரியது.

வயிறு ஒட்டிப் போனவனுக்கு உணவின் மேல்தான் பற்று வரும், வறுமையில் இருப்பவனுக்கு செல்வத்தின் மீதுதான் பற்று வரும், ஆணவம் கொண்டவனுக்கு அதிகாரத்தின் மீதுதான் பற்று வரும்....அது போல காமம் என்றால் என்னவென்றறிய அதில் புலமைகள் அற்ற பித்தர்களுக்குக் காமமே பிரதானமாய்த் தெரியும். இங்கே ஆண் பெண் உறவினைக் குற்றம் சொல்லும் மூளைகள் காமத்தால் நிறைவடையாதவை அல்லது காமம் என்றால் என்ன என்ற புரிதலற்றவை....

தெளிவுபடுத்தப்பட வேண்டிய மூலம் இதுதான்....!

இதன் மூலம்தான்.. பெண்ணையும் ஆணையும் தவறாகப்பார்க்கும் தெளிவற்ற பார்வைகள் வந்து விழுந்து ஏதேதோ கருத்துக்கள் கூறுகின்றன, எக்களித்து நகைக்கின்றன, கைகொட்டி சிரிக்கின்றன. மனித மனங்களில் ஒளித்து வைக்கப்படும் எல்லா நிகழ்வுகளும் சீறிக் கொண்டுதான் வெளி வரும். காமம் என்ற விசயம் காலம் காலமாக ஒளித்து வைக்கப்பட்டும் விளக்கங்கள் மறுக்கப்பட்டும்தானிருக்கிறது. அது பற்றிய தெளிவான விபரங்கள்....குறைந்த பட்சம் பதின்ம வயதினருக்குப் பயிற்றுவிக்கப் படவேண்டும்.


இன்னமும் ஆண்களும் பெண்களும் தனித்துப் பயிலும் முறை நீக்கப்பட்டு இரு பாலாரும் குழந்தைப் பருவத்திலே இருந்தே சேர்ந்து படிக்கும் முறை நெறிமுறைகளோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மறுக்கப்படும் எந்த விசயமும் திருடப்படும்.....என்பது யாவரும் அறிந்ததே....

பழைய பஞ்சாங்கங்களை எல்லாம் எடுத்துத் தூர எறிந்து கொளுத்தி விட்டு புதியதோர் சிக்கலில்லாத பூமி படைக்கப்படவேண்டும் அங்கே மனிதம் செழிக்க வேண்டும். இல்லையேல்...........ஓராயிரம் பாரதிகள் வருவார்கள்..........இந்த ஜகத்தினைக் கோடி முறைகள் கொளுத்தித்தான் போடுவார்கள்...

பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் விழிகள் பிடுங்கப்பட்டு...பேசும் நாவுகள் அறுக்கப்பட்டு..வெறுமனே வீதிகளில் அவர்களைப் பிண்டங்களாய் அலையவிடவும் செய்வார்கள்.... அப்போதாவது திருந்தட்டும் இவ்வுலகு......!

சுடர்மிகு அறிவுகள் எல்லாம் சேர்ந்து அறியாமை இருளை அழித்தொழிக்கட்டும்...!
 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

3 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் விழிகள் பிடுங்கப்பட்டு...பேசும் நாவுகள் அறுக்கப்பட்டு..வெறுமனே வீதிகளில் அவர்களைப் பிண்டங்களாய் அலையவிடவும் செய்வார்கள்.... அப்போதாவது திருந்தட்டும் இவ்வுலகு......!
//

அதே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

//காமம் என்ற விசயம் காலம் காலமாக ஒளித்து வைக்கப்பட்டும் விளக்கங்கள் மறுக்கப்பட்டும்தானிருக்கிறது. அது பற்றிய தெளிவான விபரங்கள்....குறைந்த பட்சம் பதின்ம வயதினருக்குப் பயிற்றுவிக்கப் படவேண்டும்.//

மிக சரி

நல்ல பதிவு..

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

எழுத்தாளன் என்று நட்ப்புகொண்ட சகோததரியிடம் வக்கிரத்தை காட்டிய ஈனப்பிரவியாய்எனசெயய்வது இதுபோன்ற ஈனப்பிறவிகள் இருக்கும் வரை சம்முக பார்வையும் இப்படித்தான் இருக்கும்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes