கழுகென்னும் பறவையை நாம் நமது இலச்சையாய் கொண்டிருப்பதின் பின்புலத்தில் வெறுமனே கழுகு என்றொரு பதம் கொள்வோம் என்ற விடயம் எம்மிடமில்லை, ஆனால் உயரப்பறக்கையில் எல்லைகள் என்னும் மாயா வெளிகள் உடைந்து போய் ஒற்றைப் பூமிதான் நமது கண்களுக்குத் தெரியும் என்ற உண்மையின் படி
பூமி தாண்டிய அகண்ட வெளியில் சிறகுகள் விரிப்பது போல நாமும் மனம் விரித்துப் பார்க்கையில் மானுட மனங்களுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதும், இயற்கையில், இந்த பூமி சுழலும் சுழற்சியில் எதுவும் குற்றங்கள் இல்லாதிருப்பதையும் நாம் தெளிவாக உணர முடியும். உயரப் பறக்கையில் கிடக்கும் அற்புத உணர்வை ஜீவராசிகளில் கழுகு என்னும் பறவைக்கு அந்த இயற்கை அளித்திருக்கிறது.
மானுடராகிய நமக்கு சிறகென்ற ஒன்று தனித்தில்லாவிட்டாலும் மனமென்ற ஒரு அற்புத சூட்சும வஸ்தினை அதே இயற்கை நமக்கு கையளித்திருக்கிறது. சிறகு விரித்து பறப்பது போல உயர்ந்த எண்ணங்கள் கொண்டிருந்தால் உயரப் பறக்கும் மாயம் நிகழ்ந்தேறியே விடும்.
அப்படியான சீற்றமிகு உயரப் பறத்தலில், சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் அறுபட்டுப் போக இயல்பில் மிளிரும் மானுடராய் நாம் மிளிர முடியும். கழுகு ஏன் படைக்கப்பட்டது? எங்கே நகர்கிறது? இதற்கு ஒரு குழுமம் என்று ஒரு கூட்டம் அவசியமா? யாரெல்லாம் கழுகு என்ற புத்தியில் இருக்கும் கேள்விகளை ஒவ்வொன்றாய் நாமே எமது மூளைகளுக்குள் போலியாய் எழுப்பி அதற்கான பதிலை இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறோம்.
காலமெல்லாம் மானுட சிந்தனைகள் எல்லாம் ஏதோ ஒரு கொட்டடியில் அடைபட்டு குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை, மதத்தை, சாதியை, கோட்பாடுகளை இறுகப் பிடித்துக் கொண்டு அதை வலியுறுத்தியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நகர்தல் தவறென்று நாம் கூறவில்லை, ஆனால் இப்படியாய் ஒரு சித்தாந்தத்தை வலுவாய் நம்பி நகர்கையில் வேறொரு கொட்டடியில் இருக்கும் நல்ல கருத்தினை நாம் உற்று நோக்கா வண்ணம் நாம் சேர்ந்திருக்கும் அல்லது சார்ந்திருக்கும் கொள்கைகள் நம்மைக் கிடுக்குப் பிடி போட்டு தடுத்து விடுகிறது.
ஏனேனில் உலகம் பரந்தது, விரிந்தது உண்மை இதுதானென்றும், அதற்கான வழி ஒன்றுதானென்றும் முடிவெடுத்து நகர்தல் முற்றிலும் சரியான விடயமல்ல. கோடையில் பருத்தித் துணிகளை அணியவும், குளிர்காலத்தில் கம்பளித் துணி அணிவதும் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள். நல்ல கருத்துக்கள் எங்கே இருக்கிறதோ அவற்றை எல்லாம் தேடி எடுத்து வந்து நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் அறியச் செய்வதுதான் சத்தியமான அறிவு.
காந்தியடிகளின் சத்திய சோதனையை வாசிக்கும் ஒரு மனிதன், வெறுமனே கோட்சே குற்றவாளி என்று கூறுவது ஒரு கோட்பாட்டில் சிக்கி ஒரு மனிதரால் ஈர்க்கப்பட்டு அதனால் எடுக்கும் ஒரு கருத்து நிலை, ஆனால் அதே மனிதன் கோட்சேவையும் படித்து உணர்ந்து, நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? என்று அவன் கூறும் நிலைப்பாட்டை வாசித்து, சீர் தூக்கிப் பார்த்து, இல்லை இல்லை கோட்சே கூறுவதில் தவறு இருக்கிறது இதை ஏற்க இயலாது அல்லது கோட்சே சொல்வது சரிதான் என்று மகாத்மாவையோ அல்லது கோட்சேவையோ சாராமல் எடுக்கும் முடிவுதான் சரியானது.
இதைத்தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம்.
ஒரு செயலைச் செய்கிறோம்... சரி, ஏன் செய்கிறோம்? இது சரியா? என்ற தொடர் கேள்வியை மனதுக்குள் ஒவ்வொருவருக்கும் எழச் செய்து தத்தம் பார்வைகளை தெளிவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறோம். விழிப்பு நிலையில் ஒரு மனிதன் இருப்பானே ஆனால் அவனுக்கு வழிகாட்ட யாரும் தேவையில்லை. 100 குழந்தைகளை ஒரு பேருந்தில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டும் ஒரு ஓட்டுனரின் பொறுப்புணர்ச்சியோடு ஒவ்வொரு மனிதனும் தன்னை உற்று நோக்க, உற்று நோக்க, உண்மை என்ன என்று கேள்வி கேட்க கேள்வி கேட்க... அங்கே வழிகாட்ட யாரும் தேவையில்லை.
கழுகு இப்போதும் சரி, எப்போதும் சரி பொருள் உதவி கேட்டு யாரிடமும் வரப்போவதில்லை. அதே நேரத்தில் உதவுதல் என்பதை ஒரு தன்னிச்சை நிகழ்வாக நிகழ்த்திக் காட்டவிருக்கிறோம் என்பதையும் அறிக. காலில் கொசு கடிக்கும் போது எப்படி ஒரு மின்னல் வேக கட்டளையை மூளை நிறைவேற்றி நமது கரம் சென்று அந்த கொசுவை எப்படி அடிக்கிறதோ அதுபோல இயங்குகிறோம் என்ற எந்தவித கர்வமும், வெளிப்பாடும், விளம்பரமும் இல்லாமல் ஒவ்வொரு மனிதரையும் துன்பப்படும் எல்லா மனிதருக்கும் இயன்ற வரையில் உதவச் செய்ய செம்மையான பார்வை கொண்டவராக செய்யப்போகிறோம்.
அதற்கு...
ஒவ்வொரு மனிதரும் தத்தம் இருப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள், மறுக்கப்படும்ந் நீதிக்காக ஒன்று சேருங்கள் வெகுண்டெழுங்கள், அப்படியாக நாம் வெகுண்டெழுந்து போராடி தேடும் நீதியைக் கொண்டு வாழ்வின் தரத்தை மேம்படுத்துங்கள்...
கண்டிப்பாய், உங்களை உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை நேசியுங்கள், அவர்களுக்காக கடுமையாய், நேர்மையாய் உழையுங்கள். சர்வ நிச்சயமாய் பொருளதார பலம் பெருங்கள். பொருள் ஈட்ட, அறிவு வேண்டும், அறிவு என்பது விசாலமான பார்வை, விசாலமான பார்வைக்கு புரிதல் வேண்டும் புரிதல் என்பது விழிப்புணர்வு என்று கொள்க என்கிறோம்.
அய்யா பெரியாரால் துவங்கப்பட்ட திராவிடர் கழகம் ஒரு விழிப்புணர்வு இயக்கம்தான். அது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றுதான் அய்யா விரும்பினார். ஆன்மீக, பொருளாதார, சமூக விழிப்புணர்வை அய்யா கொணர நினைத்தார், கொணர்ந்தார். அறிஞர் அண்ணா அதிலிருந்து பிரிந்து ஜனநாயகம் கொடுத்திருக்கும் அரசியல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று அரசியல் களம் கண்டார் வெற்றி வாகை சூடினார்.
இருவரின் செயலும் முழு விழிப்பு நிலையில்தான் நிகழ்ந்தேறியது. இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய இருக்கும் ஒரு களம் என்பதை எல்லோரும் மறந்திருக்கின்றனர். முழுமையான விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தில் மக்கள் பணி செய்ய வருகிறவர்கள் மக்களைக் கண்டு நடு நடுங்கிப் போவார்கள் என்பதினால் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியோடு சேர்ந்து அன்றாட வாழ்க்கையில் சுமூகமான இயங்கு நிலையில் எல்லோரும் செழித்து வாழும் ஒரு சுய ஒழுக்க விழிப்புணர்வினையும் பற்றி கழுகு இடைவிடாது பேசுகிறது.
நீங்களும் நானும் சமூகத்தினை பார்த்து விமர்சிக்கும் முன்னால், நம்மை தாண்டி மூன்றாம் மனிதனை பார்த்து கை நீட்டி ஏதேனும் சொல்வதற்கு முன்னால் நம்மை உற்று நோக்கி சரி செய்து கொள்வோம். பொருளாதார தன்னிறைவினை நானும் நீங்களும் பெறாமல் நம்மைச் சுற்றி கடன்களை வைத்துக் கொண்டு யாரோ ஒரு ஏழைக்கு எப்படி உதவி செய்வது? முதலில் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்...!
நம்முடைய பிரச்சினைகளின் மூலம் என்ன? கல்வியா? செல்வமா?சமூக அநீதியா? சமூக கட்டமைப்பா? அல்லது நமது சோம்பேறித்தனமா? இதை முதலில் அறிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? எப்படி சரிப்படுத்திக்கொள்வது? என்று கேள்வி கேட்கையில் தனிமனிதன் சரியானால் சமூகம் சரியாகும் என்ற பதிலையும் உணர்வாய் பெற முடிகிறது.
கழுகு...சமூக பிரஞை கொள்ளச் சொல்கிறது. ஒவ்வொரு நமது செயலுக்கும் நம்மை பொறுப்பேற்கச் செய்கிறது, அதற்காய் உங்களின் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறது.அநீதிகளை கண்டு வீறு கண்டு எழச் சொல்கிறது.
வலைப்பூ என்னும் நவீன அறிவியலின் அற்புதமான களம் யாரோ ஒரு இருவர் இன்று அல்லது நாளை மட்டும் கண்டு செல்லப் போகும் இடமல்ல..., காலங்கள் கடந்தும் கூகிளில் வந்து தலைப்பிட்டுத் தேடும் போது நாம் எழுதியதெல்லாம் வரிசையில் வந்து விழப்போகிறது. அதனை நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாசிக்கப் போகிறார்கள். உலகமெல்லாம் இருக்கும் தமிழ் மக்கள் எப்போதும் வாசித்துக் கொண்டேதானிருக்கப் போகிறார்கள்...
இங்கே நாம் பதிந்து வைத்து விட்டுப் போகும் செய்தி என்ன? என்பதிலும் கழுகு விழிப்புணர்வோடு இருக்கச் சொல்கிறது. இருக்கிறது.
நீவீர் கட்டுரை செய்து சமுதாயம் மாறிவிடுமா? என்று கேள்வி கேட்பவர்களை எல்லாம் தத்தம் மனசாட்சிகளை உற்று நோக்கி காலெமெல்லாம் கருத்துக்களே ஆட்சி செய்து வருகின்றன என்ற உண்மையைப் பகின்று வலுவான கருத்துக்களின் களத்தில் உங்களின் பங்களிப்பினை அளிக்க...
கழுகு விவாதக் குழு உங்களை வருக வருக என்றும் வரவேற்கிறது...!
நாம் கொள்ளா விடில் பின் யார் கொள்வார் சமூக பிரஞை? என்ற உணர்வோடு ஒப்பற்ற இந்த ஊடகத்தினை சரியாய் பயன் படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் கருத்துக்களின் களஞ்சியமாக்க வேண்டாமா என்ற ஆதரக் கேள்வியை உங்கள் முன் வைத்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
கழுகு விவாதக் குழுவின் விதிமுறைகளை அறிய இங்கே அழுத்தவும்...
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
3 comments:
அருமையான, விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை..
வாழ்த்துக்கள்.
ஒரு கொள்கை விளக்கம்போல அற்புதமான கருத்துப்பகிர்வு. மானிட மேன்மை நோக்கிய உங்கள் பயணமும் தேடுதல்களும் தொடர வாழ்த்துக்கள்.
விழிப்புணர்வு கட்டுரை.
பயணம் தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment