காலச்சக்கரத்தின் சுழற்சியில் எல்லாமே மாறி விட்டது. ஒரு காலத்தில் தனியார் ஆங்கில வழிக் கல்வி கற்கும் பள்ளிகளே இல்லாமலிருந்தது. எல்லா பிள்ளைகளும் அரசு பள்ளிகளைச் சார்ந்தே படிக்க வேண்டுமென்ற ஒரு சூழல் இருந்தது. தனியார் பள்ளிகள் மிகப்பெரிய நகரங்களில் அதுவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிலும் ஒரு இடமாக இருந்தது.
இப்போது எல்லாமே மாறிப் போய் விட்டது. தடுக்கி விழுந்தால் ஆயிரம் ஆங்கிலப் பள்ளிகள். நடை, உடை, பாவனை எல்லாமே மாறிப் போன பல பிள்ளைகளைப் பார்த்து நமது பிள்ளைகளும் ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்று இன்னும் நாகரீகமாய் இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் தவறென்றும் கூற முடியாது. தனியார் பள்ளிகள் வளர்வதற்கு அரசுப் பள்ளிகளின் தரமும், சுற்றுப் புற சுகாதரமும், ஆசிரியர்கள் பிள்ளைகளை எதிர் கொள்ளும் விதமும் மிக முக்கிய காரணமாய் ஆகி இருந்தன.
ஒன்றாம் வகுப்பிலிருந்து பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறி எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்று படித்து பின் ஒன்றாம் வகுப்பிற்கு வரவேண்டும் என்ற ஒரு கட்டமைப்பினைப் பார்த்து அந்த வசீகரத்திலும் பிள்ளைகள் ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்றதும், மம்மி டாடி என்று பெற்றோர்களை அழைத்ததும், சாரி, தேங்க்ஸ் போன்ற வார்த்தைகள் சராசரியாய் சமுதாயத்திற்குள் நுழைந்து கொண்டதும் ஒரு மாதிரியான கலாச்சாரத்தின் நகர்வாய்த்தான் போனது.
இப்படியான ஒரு விரைவு ஓட்டத்தில் நாம் அனைவரும் மறந்து போன ஒரு இடம்தான் அங்கன் வாடிகள் எனப்படும் பாலர் பள்ளிகள். குழந்தைகள் சத்துணவு மையம் என்று வெளியில் ஒரு ஊதாக் நிறத்துப் பதாகையோடு ஒவ்வொரு ஊரிலும் ஒரு அரசு கட்டிடம் நம்மை வரவேற்காமல் இருந்ததில்லை. தற்காலத்தில் ப்ளே ஸ்கூல் மற்றும் பிரிகேஜி என்றெல்லாம கூறி எல்.கேஜிக்கு முன்னதாகவே பிள்ளைகளைக் கொன்டு சேர்க்கிறார்களே....அதுதான் பாலர் பள்ளி...!
பயில ஆரம்பிக்கும் முன்னரே குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகி வந்து தனித்திருந்து பயிலவும், சக குழந்தைகளோடு அமர்ந்து விளையாடி, ஆடிப் பாடி, அடித்து, அடி வாங்கி விட்டுக் கொடுத்து, கூடவே பாடங்களையும், மழலையர் பாடல்களையும் படித்து, சத்துணவு எனப்படும் உணவினை உண்டு பகிர்ந்து கொடுத்து ஒரு மாதிரியான சமூக வாழ்க்கைக்குத் தயார் செய்யும் இடங்களே இந்த அங்கன் வாடி என்னும் பாலர் பள்ளிகள்.
நவீனத்தின் நகர்வில் பண வசதி இருப்பவர்கள் இந்த அங்கன்வாடிகளை விட்டு நகர்ந்து தனியார் பிரிகேஜியிலும் க்ரீச் எனப்படும் தனிப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களிடமும் தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். காலச் சூழலில் ஆயிரம் பிரச்சினைகள் நம்மைச் சுற்றி முளைத்துக் கிடக்க நம்மில் பெரும்பாலான பேர்கள் இந்த அங்கன்வாடிகளைப் பற்றி மறந்தே போனோம்.
எவ்வளதான் சம்பள விகிதம் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கையின் தரம் இன்னும் சராசரிக்கு கீழாக இருக்கும் மனிதர்களுக்கு இன்னமும் இந்த அங்கன்வாடிகள் என்னும் பாலர் பள்ளிகள் ஒரு வரப்பிரசதம்தான். உழைத்து பெறும் பணத்தை வைத்து அடிப்படையான தேவைகளைக் கைக் கொன்டு சராசரி வாழ்க்கையை வாழ்வதே கடினம் என்ற நிலையில் இவர்கள் எப்படி தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல முடியும்...
அங்கன்வாடிகள் இன்று ஏழைக் குழந்தைகளின் இடமாக மாறியிருக்கிறது. இப்படி இருப்பதாலோ என்னவோ....இந்த மழலையர் பள்ளிக் கூடங்கள் கவனிப்பாராற்று சீரழிந்து கொன்டும் இருக்கிறது. எனது தேவைகளும், என்னைச் சுற்றி இருப்பவர்களின் பிரச்சினைகளுமே பிரச்சினை என்று நகர்ந்து கொண்டிருக்கும் சமகால மானூட சமூக இயங்கு நிலையில் வறுமைக்கோட்டிலும் அதற்கு கீழே இருப்பவர்களையும் யாரும் கண்டு கொள்வதில்லை. வறுமையில் இருப்பவனுக்கோ தன் வாழ்க்கைப் போரட்டத்தை கவனிகவே நேரமுமில்லை....
இதனாலேயே அங்கன்வாடிகள் இன்று ஒரு சுகாதரமற்ற ஒரு இடமாய், கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இங்கே பிள்ளைகளுக்கு உணவளிக்கும் முறைகளும் அவர்கள் தங்கிப் பயிலும் கட்டிடங்களும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏதேனும் சில அங்கன்வாடிகள் சிறப்பாக செயல்படலாம் என்றாலும் மிகைகளின் நிலைமை மிகவும் கேவலமாய் இருப்பது புரையோடிப் போன ஒரு சமுதாயத்தின் விழுமியங்களாய் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன.
சரியான பணியாளர்களை நியமித்து, இந்த அங்கன்வாடிகளை சுகாதாரமான முறையில் பராமரித்து, குழந்தைகளை சரியான முறையில் வழி நடத்திச்செல்ல வேண்டியது அரசின் கடமை. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை. பிள்ளைகள் பிஞ்சுகளாய் தங்களின் வாழ்க்கையில் முதற்கண் வெளி வந்து பயிலத்தொடங்கும் இடம் பூ பூக்கும் ஒரு நந்தவனமாய் இருக்க வேண்டும்....அங்கே நம்பிக்கையும், அறிவும் துளிர் விட வேண்டும் ஆனால் நடைமுறைகள் அப்படியானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
கழுகின் சார்பாக நாம் விசிட் செய்த ஒரு அங்கன் வாடியின் (சில கரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படவில்லை...) சில புகைப்படங்களையும், காணொளியையும் இங்கே இணைத்திருக்கிறோம்...! இதன் சுற்றுப் புறம் நம்மை திடுக்கிடச் செய்வதோடு....இதற்கான தீர்வுகளை அரசு செய்யுமா என்ற ஒரு கேள்வியையும் பலமாக எழுப்பாமல் இல்லை...!
கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள், தங்களின் அருகாமையிலிருக்கும் அங்கன் வாடிகளின் நிலைமையினை கண்டு புகைப்படங்களோடு அதன் தேவைகளை கழுகின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். தமிழகம் முழுதும் இப்ப பழுதான நிலையிருக்கும் அங்கன்வாடிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு அது சர்வ நிச்சயமாய் உதவியாயிருக்கும்...!
கழுகிற்காக
கருத்தாக்கம்: மகேஷ்வரி
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)
5 comments:
உண்மையை வெளிப்படையாக உணர்த்தியமைக்கு நன்றி சகோ
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
அங்கன்வாடியின் அவலம். நல்லதொரு விழிப்புணர்வு.
என் வீட்டருகே உள்ள அங்கன்வாடி புகைப்படத்தை நானும் அனுப்புகிறேன்.. ஓரிரு தினங்களில்
மிகவும் நல்ல விடயம் ஒன்றை கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆம் இது வறிய குழந்தைகளிற்கான இடமென ஆகி கவனிப்பாரற்றுப் போய்விட்டது நிஜமே. இவர்களுக்காக குரல்கொடுக்க எந்தஒரு கட்சி அரசியல்வாதியும் முன்வரமாட்டார் என்பது துரதிஸ்டம்.
Post a Comment