முல்லைப் பெரியாறு பற்றி முணு முணுக்காத மனிதர்களே தற்போது இருக்க முடியாது. தமிழக, மற்றும் கேரள மக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் தத்தம் கவனத்தை ஒட்டு மொத்தமாய் இன்று குவித்துப் போட்டிருக்கும் ஒரு இடம் முல்லைப் பெரியாறு. சர்வதேச எல்லைகளில் வேற்று நாட்டோடு எழும் பிரச்சினைகளை எல்லாம் நாம் சர்வ சாதாரணமாக எண்ணி கடந்து சென்று விடலாம்..
ஆனால்...
முல்லைப் பெரியாறு ஒரு இனம் இரண்டு மாநிலங்களாய் ஒரு தேசத்துக்குள் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு விடயம். நாமெல்லாம் திராவிட இனம் என்று கூறும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இன்று நீ தமிழன், மலையாளி என்று இரண்டு மாநிலங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாறு, பென்னி குயிக் என்னும் ஒரு மனிதனின் தொலை நோக்குப் பார்வை, அணையின் தொழில் நுட்பவிடயங்கள் என்று போதும் போதுமெனும் அளவிற்கு பல கட்டுரைகளும், காணொளிகளும் வந்து விட்டன. கேரளாவிற்கு சென்ற தமிழர்களை அதுவும் குறிப்பாக பெண்களை கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளை பேசி மலையாளிகள் இந்தப் பிரச்சினையை வன்முறைப் பாதைக்கு திருப்பி விட்டதன் மூலம் பிரச்சினையின் தீவிரம் இன்னமும் கூடிப்போயிருக்கிறது.
116 வருடங்களுக்கு முன்னதாக ஒரு வெள்ளைக்காரனின் மூளையில் உதித்த பச்சாதாபமும், மனிதநேயமும் இன்று சொந்த நாட்டில் அதுவும் தன் இனத்தைச் சேர்ந்த தான் சார்ந்து வாழும் தமிழக மக்கள் மீது மலையாளிகளுக்கு இல்லாமல் போனதற்கு காரணமாய் இந்திய அரசியல் சாக்கடை என்னும் சூட்சுமம் அமைந்து போய் விட்டது.
நீர்ப்பிடிப்பும், அணையும் நமது மாநிலத்தில் இருக்க இதன் பயன்பாடுகளை மிகையாய் நாம் அனுபவிக்காமல் அதை தமிழகத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்றும், நமது தேவைக்குப் போக எஞ்சியிருப்பதை நாம் கொடுக்கலாம் என்றும், மலையாளிகளின் தலையில் முரண்பாட்டு சிந்தனைகள் கொம்புகளாய் முளைத்தன.
முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பிலிருந்து மின்சார வளத்தைப் பெறுவதைத் தவிர வேறு எந்த வகையிலும் அந்த நீரால் கேரள மாநிலத்துக்கு பயன் கிடையாது என்பதை அந்த மாநில மக்கள் அறியாவண்ணம் புத்திகளை மறைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதையும் கொடுக்காததையும் நாமே தீர்மானிக்கவேண்டும், அதை எப்படி எப்போதோ இருந்தவர்கள் தீர்மானிக்கலாம் என்ற சுயநல எண்ணங்கள் தோன்றியதின் விளைவாய், காரணங்களின்றி பிறந்த பேராசையே.....அணையின் நம்பகத்தன்மை பற்றி அவர்களைப் பேசச் சொன்னது.
கேரள மக்களிடம் தீவிர பொய்ப்பரப்புரைகளை செய்து வரும் ஊடகங்களுக்கு அது ஒரு வியாபாரம், அரசியல் நரிகளுக்கு தத்தம் கட்சிகளை மலையாள மண்ணில் ஊன்றிக் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்....
ஆனால்...
தங்கள் கட்டப் போகும் புதிய அணையால் தொழில் நுட்ப ரீதியாக எந்த வகையிலும் தமிழக வானம் பார்த்த பூமிகளில் வாழும் மக்களுக்கு உதவ முடியாது என்பதைப் பற்றியோ, புதிய அணையால் தென் தமிழ்நாடு சுடுகாடாய் மாறி மீண்டும் 1800களின் இறுதியில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் தலை விரித்து ஆடும் என்பது பற்றியோ சிந்திப்பார்க்க நேரமில்லாத அளவிற்கு மனிதம் மங்கிப்போய் இருப்பதை மலையாளிகளில் பலர் அறிந்திருக்கவில்லை.
கழுகின் கட்டுரைக்காய் பல்வேறு தரப்பட்ட மலையாளிகளிடம் நாம் உரையாடிய போது அவர்கள் திரும்பத் திரும்ப கூறிய விடயம் தண்ணீர் நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம், தமிழகம் ஏன் எங்களை நம்ப மறுக்கிறது..? நாமெல்லாம் ஒரு தாய்ப் பிள்ளைகள்தானே என்பன போன்ற கேள்விகள்தான்....
புதிய அணை கட்டினால் என்ன நிகழும்? அதன் விளைவுகளால் தமிழகம் எப்படி எல்லாம் பாதிக்கப்படும்? மேலும் நாளை அணையின் நிர்வாகம் கேரள அரசிடம் போன பின்பு, கேரள மக்களே நினைத்தாலும் தண்ணீர் கொடுக்க முடியாது, தமிழகம் வறண்டு போனால் அது கேரளாவை எப்படி பொருளாதர ரீதியாக பாதிக்கும் என்றெல்லாம் சில மலையாளிகளிடம் நாம் விளக்கிய போது அடுத்ததாய் அவர்கள் நம்மிடம் கேட்ட கேள்வி....
அணை உடைந்தால் எத்தனை உயிர்கள் போகும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு சுண்ணாம்புக் கல்லில் கட்டிய அணையை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? கேரள அரசு ஐ.ஐ.டியை வைத்து ஆராய்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம், கடுமையான நீர்க்கசிவு இருக்கிறது என்கிறார்களே என்பது போன்ற கேள்விகளையும் நம்மிடம் வைத்தனர்...
ஐ.ஐ.டியின் மூலம் கேரள அரசு அணையை பரிசோதித்து உண்மை, அது தனது அறிக்கையை கொடுத்ததும் உண்மை ஆனால் எதன் அடிப்படையில் அணை பலவீனமானது என்று கூறுகிறீர்கள்? தொழில் நுட்ப மற்றும்ம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் உங்களால் விளக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு அவர்களிடமிருந்து எந்த ஒரு ஆதாரப்பூர்வமான பதிலும் இல்லை என்ற உண்மையை நாம் பகின்ற போது தெளிவாக சிந்திக்கக் கூடிய மலையாளிகள் சிலர் வாயடைத்துதான் போனார்கள்!!!!???
அணையின் பலம் மற்றும் நம்பகத்தன்மை பற்றிய விபரத்தெளிவுகள் இல்லாமல் மலையாள சகோதரர்களை கேரள அரசியல் கட்சிகளும், வெற்றுப் புரட்டு வியாபார ஊடகங்களும் மிகப்பெரிய ஒரு போலி அச்ச மனோநிலைக்குத் தள்ளி விட்டு இருக்கின்றன. முல்லைப் பெரியாறு உடைந்து உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று ஏராளாமான அந்தப் பகுதி மக்கள் இரவில் உறங்குவதே கூட இல்லையாம்...
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் எங்கள் அரசு சரி என்று ஒத்துக் கொள்கிறதே...புதிய அணை கட்டினால் என்ன? ஏன் எங்கள் உயிரோடு தமிழக அரசியல் கட்சிகளும், மக்களும் விளையாட வேண்டும் என்று அப்பாவி கேரள மக்கள் தமிழகத்தைப் பார்த்து கேட்குமளவிற்கு மிகப்பெரிய புரட்டு அரசியல் அங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதின் விளைவே....தமிழக கூலித் தொழிலாளிகளை கேரள மூர்க்கர்கள் கடுமையாகத் தாக்கியது.
இந்திய அரசையும், அதன் அரசியலையும் தாண்டி இன்று முல்லைப் பெரியாறு விவாகாரம் மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாய் வெடித்து இருக்கிறது. அணை உடைந்தால் நாங்கள் இறப்போம் என்று கேரளாவும்...நீங்கள் புதிய அணையைக் கட்டினால் போதிய தண்ணீரைக் கொடுக்காமல் எங்களை வஞ்சிப்பதின் மூலம் பஞ்சத்தால் நாங்கள் இறந்து போய் விடுவோம் என்று தமிழ் மக்களும்.. இன்று உணர்ச்சிக் கொந்தளிப்பாய் கோபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.
22 எம்.பிக்களை தன்னிடம் கொண்டிருக்கும் கேரளாவின் இந்திய ஆளுமைக்கு முன்னால் 40 எம்பிக்களையும், பல மந்திரிகளையும் வைத்திருக்கும் தமிழகம் ஒரு பிச்சைக்காரனைப் போலத்தான் இன்று நின்று கொண்டிருக்கிறது. மத்திய அரசோடு கூட்டு வைத்திருக்கும் தமிழக கட்சிகளும், மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும்....வேற்று மாநிலத்தவர்கள் போட நடந்து கொள்ளும் ஒரு நயவஞ்சகப் போக்கினை நாம் இந்தருணத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அணையின் நம்பகத்தன்மையையும், அதன் வலுவினையும் ஏற்கெனவே கணித்து அணையில் நீரினை 142 அடிகள் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த அறிவிப்பினை கேரளா வேண்டுமென்றே புறக்கணித்து விட்டு வஞ்சகமாய் அணை பாதுக்காப்புக்கென்று கேரள சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றி அதன் மக்களை ஏமாற்றி, அணை வலுவில்லாதது என்று தொடர்ந்து பரப்புரை செய்யும் போக்கு வன்மையாகக் கண்டிப்படவேண்டிய ஒன்று...
தமிழக விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் நோக்கோடு நடக்காமல், மத்திய அரசு இந்த விடயத்தில் பாரபட்சமின்றி நடந்து நியாயத்தின் பக்கம் நின்று, அணையின் வலுவினைப் பற்றி செவுட்டில் அறைந்தாற் போல கேரள அரசிடம் அறிவித்து தேவைப்பட்டால் மேலும் அணையை வலுவாக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு அணையை உடைத்தலையும், புதிய அணையைக் கட்டுதலையும் தனது இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்....
டிசம்பர் 21, மற்றும் 22 ஆம் தேதிகளில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலமையில் அணையைப் பார்வையிட செல்லும் குழு நேர்மையான ஒரு அறிக்கையை வெளியிடும் என்று நாம் நம்பும் அதே வேளையில் அதை செயற்படுத்த கேரள அரசு மீண்டும் தயக்கங்கள் காட்டி தனது அரசியல் விளையாட்டுக்களை மத்திய ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தத் தொடங்கினால்.....
தமிழகம் என்ற ஒரு மாநிலம் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து ஒரு போராட்ட பூமியாய் மாறுவதை யாராலும் தடுக முடியாது என்பது நிதர்சனமான உண்மை.!!!!
கழுகிற்காக
தேவா. S
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
4 comments:
padhivu nandru enakku oru iyyappadu
india or united countries of india
naadu pogirapokkil appadiththaan enna thodrugiradhu
surendran
surendranath1973@gmail.com
என்று தணியும் இந்த அண்டை மாநிலங்களின் பேதம்..!! பாரதி இருந்திருந்தால் இப்படி பாட வேண்டியதாயிருக்கும். :(
அரசியல் வியாதிகள் இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை ....
* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!
* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!
* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை
* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!
Post a Comment