Tuesday, December 20, 2011

விழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....!


வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன.

மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்?

இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய வேண்டியிருக்கிறது. திட்டமிடல் அவசியப்பட்டு போகிறது. கூர்மை தேவைப்பட புத்தியை உலுக்கி விட்டு எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகிறது. உழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால்..

" முடியாது " என்று ஒரு வார்த்தையை கூறிய பின்னால் அங்கே எந்த செயலும் நிகழ்வதில்லை. இப்போது கூட ஒரு விடயத்தை கயிற்றின் மீது நடப்பது போல விளங்க வேண்டுகிறேன். இயலாத காரியங்களை இயலாது என்று சொல்வதற்கு பார்வையின் தெளிவுகளை நம் சுயநலத்திற்கு அப்பாற்பட்டு செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

எந்த ஒரு செயலையும் செய்யும் போது நான், நான் நான் மட்டுமே இதனால் பயன் பெறவேண்டும் என்ற ஒரு எண்ணமிருப்பின் அந்த செயலைச் செய்வதை விட நம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே நம் கவனம் அதிகமாக இருக்கும். நாம் முன்னிலைப் படவில்லை எனில் ஒட்டு மொத்த செயலையுமே நாம் விட்டு வெறுத்து ஒதுங்கி, "முடியாது" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுவோம்.

வாழ்க்கை மிக அற்புதமானது அதை ஒரு அழகியல் தன்மையோடு நாம் தொடரவேண்டும். எப்போதும் இயங்கும் சராசரி நிகழ்வுகளை விடுத்து அவ்வப்போது குழந்தைகளாக நாம் மாறவேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகள் போல அல்ல....குழந்தைகளாகவே என்ற வார்த்தை படிமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவு இறுகிப் போனதற்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடுகள், நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சம்பிரதாய வலைகள், மனோவசியக் கட்டுக்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை எல்லாம் காலம் காலமாக நம்மாலும் நமக்கு வழிகாட்டுகிறேன் என்று கூறி வழி கெடுத்தவர்களாலும் பின்னப்பட்டது என்பதை அறிக. இவற்றை எல்லாம் அறுத்தெரிந்து வெளியே வரும் போது தான் உண்மையான சத்திய வாழ்க்கை கிடைக்கும். இதை ஆன்மீகம் விடுதலை,முக்தி என்று கூறுகிறது.

எனது ஆச்சர்யம் என்ன தெரியுமா? உங்களை ஒரு சக்கர வாழ்க்கைக்குள் அடைத்துக் கொண்டு, நான் இப்படிப்பட்டவன், இப்படி வாழ்பவன், இந்தக் கட்சியை சேர்ந்தவன், இந்த சித்தாந்தம் கொண்டவன் இந்த ஊர்க்காரன், என்று ஓராயிரம் மனோவசியக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் சுதந்திரமானவர் என்று எந்த தார்மீக நியாயத்தில் கூவி கூவி அறிவிக்கிறீர்கள்?

ஒரு வித மாயக்கட்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திர புருசர்கள் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. வெறுமையாய் இருக்கும் மனிதன் தன் சூழலுக்கு ஏற்ப நியாயங்களைத் தேடுகிறான். அது " அ " வாய் இருந்தாலும் சரி " ஆ "வாய் இருந்தாலும் சரி அல்லது " இ " ஆய் இருந்தாலும் சரி....அதில் இருக்கும் நியாத்தை தேடி எடுத்துக் கொண்டு பேசும் சக்தி நமக்கு இருக்கிறதா? இப்படி ஒரு சுதந்திரமான மனிதனாய் வாழும் போது நீங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டவர்கள் ஆவீர்கள் தானே?

சித்தாந்தங்களும் தத்துவங்களும் தோன்றியது மனித வாழ்க்கையை சீரமைக்கத்தான் அவைகளே இறுதி உண்மைகள் அல்ல. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பற்றி ஒரு மனிதன் முதலில் உணர்ந்து, அது பற்றி சிந்தித்து ஏன் இந்த சூழல் எனக்கும் எம் மக்களுக்கும் என்று முதலில் நினைத்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க அவனின் விழிப்புணர்வு சரியாக இருக்கும் பட்சத்தில்தான் நடந்திருக்க வேண்டும். சித்தாந்தங்களும் தத்துவங்களும் பிறக்க ஒரு மனிதன் தன்னின் இருப்பை, சூழலை, சக மனிதரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவனாயிருக்க வேண்டும்.

தெளிவான சிந்தனைகளின் பிறப்பிடம் முழுமையான விழிப்புணர்வு என்று அறிக;

கட்டுக்கள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழும் போது நீங்களும் நானும் நாமாகவே இருக்கிறோம். தயவு செய்து எவரின் கருத்துக்களும் அத்து மீறி உங்களின் விழிப்புணர்வு நிலையை உடைத்துப் போட்டு உங்களுக்குள் ஊடுருவி உங்களின் மூளைகளை கட்டுப்படுத்த விடவே விடாதீர்கள்.

இயற்கையில் வாழ்க்கையும் வாழ்வின் ஓட்டமும் மிகத்தெளிவாய் சிக்கல் இல்லாததாய் இருக்கிறது, அதை மட்டுப்பட்டு நின்று மடங்கிப் போய் விடாமல், அகண்டு பரந்து விரிந்த வானில் நமது வெற்றிச் சிறகுகளை விரிப்போம்....! எல்லைகள் கடந்த முழுமையின் ஏகாந்தத்தில் எப்போதும் சந்தோஷித்து இருப்போம்.

உண்மைகளை வாங்கும் நமது பாத்திரத்தில் சத்தியங்களை நிரப்ப நமக்கு கோட்பாடுகள் எதற்கு? கொள்கை என்ற குறுகிய வட்டமெதற்கு...! ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்வும் நமது கோட்பாடு....! ஒட்டு மொத்த மானுட நலமும் எமது கொள்கை என்ற உயரிய நோக்கோடு என்றென்றும் வெற்றி வானில் சிறகடித்துப் பறப்போம்...!

கழுகிற்காக
தேவா. S



(கழுகு இன்னும் உயரப்பறக்கும் )


5 comments:

நாய் நக்ஸ் said...

பகுத்தறிவு என்றும் கொள்ளலாமா ....

நாய் நக்ஸ் said...

தந்தை பெரியார்....
தந்தை பெரியார்....
தந்தை பெரியார்....

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

தனி காட்டு ராஜா said...

:)

துரைடேனியல் said...

Arumaiyana sinthanaigal.
TM 9.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes