Thursday, March 29, 2012

மக்களின் போராட்டமும் அதை திசை திருப்பி விட்ட அரசின் எதேச்சதிகாரமும்...! கூடங்குளம் ஒரு பார்வை..!


ஜனநாயகம் என்ற பெயர் தாங்கிய ஒரு சர்வாதிகார கட்டமைப்புக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இதுவரை நாம் கருதியது இல்லை. அப்படி கருதக்கூடிய சூழல்கள் அனேகமாக வந்திருக்கவில்லை இல்லையேல் எமது புத்திகளுக்கு அது எப்போதும் மறைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்திய ஊடகங்கள் அதுவும் குறிப்பாய் தமிழ்நாட்டின் ஊடகங்களில் மிகுதியாய் நடத்தப்படும் வேசித்தனத்தை வார்த்தைகளால் மட்டும் விவரித்து விட முடியாது.

ஆமாம்....

கூடங்குளம் அணு உலை பிரச்சினையை ஏடுகளில் வாசித்து விட்டு இது சரி, தவறு என்று கூப்பாடு போடும் என் மானமுள்ள தமிழன், இதே இந்தப் பிரச்சினை யாரோ ஒரு வடநாட்டு ஹசாரேயாலேயோ அல்லது துக்கா ராமாலேயோ கையில் எடுக்கப்பட்டு, இந்திய தேசத்தின் வட மாநிலங்களில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடந்திருக்குமேயானால்... ஒவ்வொரு தமிழனும் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு தெருவில் நின்று போராடியும், மெரினாவில் வரிசை கட்டி நின்று உரக்க கூச்சலிட்டும் தங்களின் இந்திய தேசிய உணர்வை வெளிக்காட்டி இருப்பார்கள்...

ஆனால் இது இந்தியாவின் தென் கோடியில் தமிழர்கள் ஒன்று கூடி முன்னெடுத்த போரட்டம் என்பதாலேயே இது இந்தியாவின் பிரச்சினையாய் பார்க்கப்படாமல் போனது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்தானே...?

கூடங்குளம் பிரச்சினையில் அணு உலை அமையக்கூடாது அது எல்லாவகையிலும் பாதுகாப்பற்றது, இயற்கையை மிஞ்சிய சக்தி என்று எதுவுமில்லை, மேலும் இயற்கையின் முன்னால் அறிவியல் வலுவிழந்து போய்விடும் என்று தன்னின் சுயத்திலிருந்து ஏற்பட்ட உள்ளுணர்வாலும், வரலாற்றின் பக்கங்களில் அணு உலைகள் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்ற புள்ளி விபர அறிவுகள் கொடுத்த மிக பயங்கரமான பய உணர்வின் காரணமாகவும், ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய புகிஷிமா விபத்தின் தாக்கமும் ஒன்று கூடி....

ஒரு சத்திய போராட்டமாக தென் தமிழகத்தின் கோடியில் உருவெடுத்தது. அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் இந்திய பேரரசின் அறிவியலாரால் பாதுகாப்பான அணு என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா...?  என்ற எம் மக்களின் பாமரக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

ஆயிரக்கணக்கான ஊழல்களை செய்வதில் கைதேர்ந்திருக்கும் இந்திய அரசியல் தலைகளாலும், அரசியல் தலைகளின் கைப்பாவைகளான  விஞ்ஞானிகளாலேயும் உலக நாடுகளால் பாதுகாப்பற்றது என்று கருதி கைவிடப்படும் அணு உலைக்கு மாற்று என்ன...? என்று சிந்திக்க முடியாமல் போனதற்கு காரணமாய் பல சர்வதேச சதிவலைகளும், கட்டமைப்புக்களும் இருப்பதை எம்மால் தெளிவாக உணர முடிகிறது.

ஒரு போராட்டத்தை செய்தித்தாள்களிலும், ஊடகங்களிடம், அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் இருந்து தெரிந்து கொண்ட எமக்கு.....இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் அது தீவிரவாதிகளின் போராட்டமாய் தமிழக அரசால் சித்தரிக்கப்பட்டு, நக்சலைட்டுக்களின் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வடிவமைக்கப்பட்டது என்ற கதை வசனம் எழுதப்பட்டு, அது மத்திய அரசால் வழிமொழியப்பட்டு எம்மக்களின் உறுதித் தன்மையை அது அசைத்துப் பார்க்க முற்பட்ட போது....ஒரு நேர்மையான போரட்டத்துக்கு இந்திய தேசம் கொடுக்க முயலும் கேவல அரசியல் என்னவென்று மெல்ல பிடிபட ஆரம்பித்தது.

செய்திகளாய் விசயத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் தாக்கத்தை ஒரளவிற்கு புத்தியில் ஏற்றிக் கொண்ட நாம், அந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் இந்திய அரசு தன் சொந்த குடிமக்களின் மீது ஏவி விடும் அதிகார துஷ்பிரயோகத்தின் சீற்றங்களைப் பற்றி முழுதாய்  உணர்ந்திருக்கவில்லைதான்....

ஆனால்...

கழுகிற்காக அந்த மண்ணின் மைந்தர் கூடல் பாலாவை அலைபேசியில் நாம் எட்டிப்பிடித்த போது மறுமுனையில் ஒலித்த அந்த குரலில் இருந்த வேதனையும், கண்ணீரும், அரசால் இழைக்கப்பட்ட துரோகமும், சொல்ல முடியாத உணர்வுகளை எமக்குள் புகுத்தி புரட்டிப் போட்டன....!

இந்திய தேசத்தின் மக்களாகிய நாங்கள் தேசத் துரோகிகளா?

என்ற கேள்வியோடு பேசத் தொடங்கியிருந்த பாலாவின் குரலில் சீற்றம் இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சோகம் பரவிக்கிடந்ததை மறுப்பதற்கில்லை. இது தீவிரவதிகளின் போராட்டம் என்று அரசு நம்மையும் நம் மக்களையும் கொச்சைப் படுத்திதான் விட்டது.

ஒருபோரட்டக் களத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் பந்தலில் பலர் வந்து செல்லக் கூடும், அதில் அரசியல்வாதிகள் இருக்கலாம், வியாபரிகள் இருக்கலாம், பல்வேறு போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்...இதில் யாரோ ஒரிருவரை அடையாளம் காட்டி ஒட்டு மொத்த மக்களின் உணர்வையும் சாகடிக்க முயன்றிருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

கடந்த ஆறேழு  மாதங்களாக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் எம்மக்கள் இதுவரை அரங்கேற்றிய வன்முறைச் செயல்கள் எத்தனை என்று யாரேனும் பட்டியலிட்டுக் கூற முடியுமா? 


ஜனநாயக ரீதியாக நாங்கள் நடத்தி வரும் போரட்டத்திற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா என்று கூடல் பாலா நம்மிடம் கேட்டு விட்டு.. சலனமின்றி இடைவெளி விட்ட ஒரு 2 நொடி மெளனம்...கடுமையான வலியை எமக்குள் பரவவிட்டது......

இதற்கெல்லாம் எங்களுக்கு கிடைத்த பரிசு...

எங்கள் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடுமையான வழக்குகள், இந்திய தேசத்துரோகிகள் என்னும் பட்டம் மேலும்  இந்தியாவிற்கு எதிராய் போர் புரிதல் என்பன போன்ற கடுமையான வழக்குகள். இப்படி அப்பாவி மக்களின் மீது போலியான வழக்குகளைத் திணிக்கும் இந்த மத்திய, மாநில அரசுகள் உண்மையான தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் இந்த தேசம் முழுதும் உலாவவிட்டுக் கொண்டிருக்கிறதே.. இது பற்றி ஊடகங்களும் நடு நிலையாளர்களும் ஏவிலாவாரியாக பேசுவார்களா...?...? என்றார்...

நாங்கள் போராடியது அணு உலைக்கு எதிராக... அணு உலை பாதுகாப்பனது என்று கூறும் அறிவியலாரும், அரசியல்வாதிகளும் கூடங்குளம் பகுதியில் இடம் வாங்கி இங்கேயே வசிக்க முன் வருவார்களா? என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த பாலா...

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நள்ளிரவிலும் வீட்டுக் கதவை உடைத்து கைது செய்த வன்போக்குகளும், உணவருந்திக் கொண்டிருந்தவர்களை தர தரவென்று கையைக் கழுவாமலேயே இழுத்துச் சென்ற காவல்துறையின் சர்வாதிகாரமும் குறைவர நிகழ்ந்தேறியதைச் சொன்ன போது எமது தொண்டை வறண்டு போய் அனிச்சையாய் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

முதலில் இது ஒரு மதம் சார்ந்தவர்கள் செய்யும் போராட்டம் என்று சித்தரித்த அரசு, பின் அது வெளிநாட்டு பணம் கொண்டு நடத்தப்படும் போராட்டம் என்று கூறி இந்த தேசத்தின் பிரதமரே அந்த அபாண்ட குற்றச்சாட்டை நம் மீது வைத்தார்... , அதுவும் வீரியம் இழந்து போகவும்,  கடைசியில் நாங்கள் வாக்களித்து நம்பிக்கையோடு அரியணை ஏற்றிய எமது சகோதரியின் அரசு....(!!!!????) எடுத்திருக்கும் கேவலமான ஆயுதம்தான்....

போரட்டத்திற்கு தீவிரவாத வர்ணம் தீட்டும் ஆயுதம்....!

கடந்த சட்ட மன்றத் தேர்தலுக்கு வாக்குகள் கேட்டு வந்த ஜெயலலிதா, நான் உங்கள் சகோதரி, இந்தப் பகுதியில் அணு உலை வருவதை எனது அரசு தடுக்கும், என்னை அரியணையில் ஏற்றுங்கள் நான் உங்களில் ஒருத்தி என்று வாக்குகள் கேட்டு கையேந்தி வந்தார்.


ஆனால்...


கடைசி வரையில் போராட்டக்குழுவினரை சாந்தப்படுத்தவோ அல்லது சமரசம் செய்யவோ அவர் முயலாமல் போரட்டத்தை ஆதரிப்பவராகவே தமிழக மக்களின் முன் தன்னைக் காட்டிக் கொண்ட அவர்...

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வென்றவுடன்......(!!!!??????) ஒரு சத்திய போராட்டத்தின் மீது எந்த வித முன் அறிவிப்புமின்றி தனது காவல்துறையை ஏவிவிட்டு தனது நன்றியுணர்ச்சியை மிக நன்றாகவே காட்டிவிட்டார்....!

வீட்டுக்கு ஐநூறு ரூபாய் என்று நாங்கள் வசூலித்துதான் நாங்கள்  போரட்ட பந்தலையே அமைத்தோம். போரட்டத்தை முன்னெடுக்கும் மண்ணின் மைந்தர்கள் தங்களின் சொந்த பணத்தை வைத்து நடத்தும் ஒரு போரட்டத்திற்கு அதிகார மையம் கொடுத்திருக்கும் அடையாளம் வரலாற்றில் கருப்பு எழுத்துக்களில் கண்டிப்பாய் பொறிக்கப்படவேண்டியவையே....

......தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த கூடல் பாலாவுடன் பேசி விட்டு அலை பேசியை அணைத்து  வெகு நேரம் ஆகியும் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கேவல அரசியலின் துர்நாற்றம் எமது மூக்கினை துளைத்துக் கொண்டுதான் இருந்தது.

நிர்வாகம் என்றால் என்னவென்றறியாத ஜெயலலிதாவின் அரசு...
ஜனாநாயக ரீதியாய் இப்படியான ஒரு மன உளைச்சலுக்கு மக்களை ஆட்படுத்தி இருப்பது ஆச்சர்யமில்லைதான். சமரசமாய்  பேசி தீர்வுகளை நோக்கிப் பயணிக்கும் திராணி அவருக்கு இல்லை என்பது இதன் மூலம் மட்டுமின்றி கடந்தகால அவரின் ஆட்சிகளில் அவர் அரங்கேற்றியிருக்கும் பல கலாட்டக்களின் மூலமும் நாம் தெளிவாய் உணர முடியும்.

அன்பன மக்களே...

1) கூடங்குளம் அணுமின் நிலையம் அமையாமல் இருப்பதாலா நமக்கு மின் தட்டுப்பாடு வந்தது?

2) அணுமின் நிலையங்களே இல்லாத மாநிலங்களில் எல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் மின் விநியோகம் இருக்கிறதே எப்படி என்று ஒரு நாளேனும் சிந்தித்தீர்களா?

3) கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரத்தில் ஒரு சிறிய அளவிலான மெகாவாட் மின்சாரம்தான் தமிழகத்துக்கு அதிகபட்சமாய் கொடுக்கப்படும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

4) ஏற்கெனவே நெய்வேலி நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் முழுப்பயன்பாடும் தமிழகத்திற்குதான் கிடைத்துக் கொண்டிருக்கிறதா?

5)அணுக்கழிவுகள் ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் காரணமாக ஏற்படப்போகும் நோய்களை எந்த அளவுகோலையும் வைத்தும் அளக்க முடியாது மேலும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாய் நமது சந்ததியினரை குறைபாடுள்ளவர்களாகவும், நோய் உள்ளவர்களாகவும் படைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

6) உலக அரங்கில் தன்னை ஒரு சட்டாம் பிள்ளையாக நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வரும் இந்தியப் பேரரசு அதன் உள் கட்டமைப்பில் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பெறும் ஊழல்களையும், அனாவசிய செலவுகளையும் ஊதாரித்தனங்களையும், இலங்கை போன்ற அண்டை நாடுகள் கேட்காமலேயே செய்யும் கேடு கெட்ட உதவிகளையும் நிறுத்தி விட்டு....தன் சொந்த மக்களுக்கு மின்சாரத்தை வழங்க மாற்று வழிகளை ஆராயுமா?

7) தமிழர் பிரச்சினைகளின் போதெல்லாம் தேசப்பற்றைக் காட்டுகிறேன் என்ற போர்வையில் காங்கிரசை சேந்த சத்தியசீலன் போன்றவர்கள் ஊடகத்திற்கு தன் கட்சி தலைமை கேட்டுக் கொண்டபடி பேட்டிகள் கொடுத்து விட்டு வீட்டில் உணருந்தும் போது அவர்களின் மனசாட்சிகள் அவர்களை சுடுமா? சுடாதா?

8) ஐயா பெரியார், காமராசர், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளும் சரி அரசியலில் ஈடுபட்டு ஆளத்துடிக்கும் கட்சிகளும் சரி....தமிழர்களின் ஒரு பிரச்சினையையாவது அரசியல் ஆதாயம் தாண்டி உணர்வோடு இதுவரை அணுகி இருக்கிறார்கள் என்று உங்கள் மனசாட்சிகள் சொல்லுமா?

இத்தனை கேள்விகளையும்  இந்தக்கட்டுரை முன் வைத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் இயலாமையும், தமிழ் மக்கள் முழுதுமாய் ஒன்றிணைந்து அணு உலைக்குப் எதிராய் போராடவில்லையே என்ற வலியும் வேதனையும் எம் சிந்தனைகளை முடமாக்கித்தான் போடுகின்றன...

உண்ணாவிரதத்தை தற்போது போராட்டக்குழு நிறுத்தியிருக்கிறது...போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற ஒற்றை வாக்கியத்தோடு....

எது எப்படி இருந்தாலும்...


அணு உலை பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த தேசம் முழுதும் கொண்டு சேர்த்த வீரத் தமிழன் உதயகுமாரும், அவருக்கு உறுதுணையாய் நின்ற, நிற்கும் அந்த மண்ணின் மைந்தர்களும்.....என்றென்றும் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள் என்பது மட்டும்... உறுதி..!


பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள், இதன் கருத்தையோ அல்லது இந்தக் கட்டுரையையோ மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்ப்பதின் மூலம் நமது உணர்வுகளை கோடாணு கோடி தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து நமது மானசீக ஆதரவை கூடங்குள அணு உலை எதிர்பாளர்களுக்கு தெரிவித்தவர்களோவோம்...!



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


8 comments:

கூடல் பாலா said...

என்றேனும் ஒரு நாள் இறுதியில் தர்மமே வெல்லும்!

Madhavan Srinivasagopalan said...

This article lacks every kind of sense & the auther lacks proper knowledge in science.

//மேலும் இயற்கையின் முன்னால் அறிவியல் வலுவிழந்து போய்விடும் என்று தன்னின் சுயத்திலிருந்து ஏற்பட்ட உள்ளுணர்வாலும்,//

I believe the author of this article will stop using mobile phone & internet too. As these are also due to science and technology.

And by the way, why the auther or the publisher of this article used Internet / Electric current (AC Or DC-battery ) to publish this article ? He should have obstained from using any invention of Science..

//வரலாற்றின் பக்கங்களில் அணு உலைகள் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்ற புள்ளி விபர அறிவுகள் கொடுத்த மிக பயங்கரமான பய உணர்வின் காரணமாகவும், ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய புகிஷிமா விபத்தின் தாக்கமும் ஒன்று கூடி.... //
.

There are substantial historical evidences to say that vehicle causes accidents... Hence the author of this article(publisher too) will not use any mode of scientific transport including aeroplane.

I am very sorry for the auther and publisher for the article as I believe such agitations have lot of personal issues / advantages.

Please for Indian sake -- do not spread rumours like these as these are the strong reasons for making India weak in future.

Madhavan Srinivasagopalan said...

//இந்தக் கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள், இதன் கருத்தையோ அல்லது இந்தக் கட்டுரையையோ மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு //

Sorry boss, I never spread rumours at all.

Infact I am thankful to the auther that this sparks in my mind to know/learn much more on Nuclear/Atomic power plant and will spread its functions and advantages to every respectful citizens of INDIA (remember I don't like to call an Indian as 'tamilan, telugaite, malayalee etc). Unity in Integraty is the most important factor.

பலசரக்கு said...

மிக சிறந்த கட்டுரை. நன்றி கழுகு அவர்களே.

@Madhavan Srinivasagopalan
கை தொலை பேசி, விமான பயணம் மேலும் அது போன்று விபத்து எற்படகூடியவற்றை உபயோகிக்கும் முடிவு ஒரு தனி மனிதர் சார்ந்தது. வேண்டாம் எனில் கை விட்டு விடலாம்.

ஆனால் இந்த அணு உலை திணிக்கப்படுகிறது அந்த பாவப்பட்ட மக்களின் மேல் என்பதை உணர்வீர்களா?

India never care about a common man or his security in any way or in any time. We have seen many examples of our government's inability in providing such services. So, please don't think that Indian Government will come dive in and help those poor people if anything happens.

@கூடல் பாலா
உங்களின் உண்ணா விரதம் பற்றியும் அதன் தாக்கத்தால், அதன் பின்னர் நீங்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை பற்றியும் கேள்வியுற்றேன். உங்களின் தியாகம் வீண் போகாது. நம்பிக்கை இழக்காதீர்கள். எனது வணக்கங்கள்.

Madhavan Srinivasagopalan said...

//கை தொலை பேசி, விமான பயணம் மேலும் அது போன்று விபத்து எற்படகூடியவற்றை உபயோகிக்கும் முடிவு ஒரு தனி மனிதர் சார்ந்தது. //

It has been state that birds are affected by 'telecomminication waves' -- It's not sufficient that men alone requires safe & secure life, birds too need them.

I agree any scientifically invented device has some disadvantages to some or more lives (I mean all living things). But, we can't stop its advantaged citing those dis-advantages.

I still have pity on you, that you believe these agitations are of public interest.

There is a serious financial benefit to those inducing agitations. Wait & watch .. the game is not over.

Thennavan said...

//அணு உலை பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த தேசம் முழுதும் கொண்டு சேர்த்த வீரத் தமிழன் உதயகுமாரும், அவருக்கு உறுதுணையாய் நின்ற, நிற்கும் அந்த மண்ணின் மைந்தர்களும்.....என்றென்றும் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள் என்பது மட்டும்... உறுதி..!//

saidaiazeez.blogspot.in said...

நண்பர் Madhavan Srinivasagopalan,
ஆட்டை கடித்து மாட்டை கடித்து பின்னர் மனிதனை கடிப்பது இதுதான் போல!
நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?
சிட்டுக்குருவிகள் காணாமல் போனதுபோல technology developmentஆல் மனிதனும் காணாமல் போனால், போகட்டும் என்கிறீர்களா?
மனிதம் அழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன... atleast மனிதனையாவது வாழவிடுங்கள். போபால் விஷ வாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்பை இன்னும் நாம் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்கான காரணகர்த்தாக்களை முழு ஆசிர்வாதத்தோடு வெளிநாட்டுக்கு தப்ப வழி வகை செய்தோம்! 25 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1500 என்று கேலிசெய்துள்ளது!
ஜப்பானில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டு அதனால் அணு உலையில் ஏற்பட்ட கசிவை அந்த மக்கள் எப்படி எதிர்கொண்டனர்? மக்களுக்கு அனைத்துவிதமான விழிப்புணர்வும் வசதிகளும் அந்நாட்டு அரசு எப்படி செய்துகொடுத்தது?
அது போல நம் அரசுகள் செய்து கொடுக்கும் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?
நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எரிகிற வீட்டில் புடுங்குறவரை லாபம் எனும் மனப்போக்கில் தானே இருக்கின்றனர்!
நானும் அப்துல்கலாம் போன்றோர் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். நானும் அணு மின்சாரத்தை பயன்படுத்தத்தான் போகிறேன். ஆனால் அதற்கான விலை/விளைவு?
அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடிப்படை சந்தேகங்களுக்கு விடை?
அம்மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தாமல், 144 தடை உத்தரவு போட்டு, இதை நடைமுறை படுத்தவேண்டிய அவசியம்?
சற்று சிந்தியுங்கள் Madhavan Srinivasagopalan!

Ungalranga said...

அணு உலை சம்பந்தமாய் பெரிய கேள்விகள் எதையும் போராட்ட குழு கேட்கவில்லை.. நாளை ஏதேனும் விபத்து நடந்தால், எங்களுக்கும், எங்கள் சந்ததியினரும் பாதிக்கப்படுவார்களா? ஆம்/இல்லை.?

இதற்கு இந்த சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல தெம்பில்லாமல் 144 போட்டு, அணு உலைக்கு ஆதரவளித்துகொண்டிருக்கிறார்கள் அம்மையார் மற்றும் மத்திய தலைகள்..!!

மக்களே.. இந்த நாடு ஏலத்தில் எடுக்கப்பட்டுவிட்டது.. இனி இது நம்முடையது அல்ல..வால்மார்ட் மற்றும் மற்ற உலக முதலாளிகளின் சந்தை..

வாங்குவதும், உழைப்பதும் மட்டுமே நம் வேலை..

மீண்டும் இந்தியா ஒரு மறைமுக அடிமைத்தளையில் சிக்கிவிட்டது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes