Thursday, February 17, 2011

தேர்தல் 2011 - அக்னி அம்புகள் தொடர்ச்சி...!


 அக்னியாய் அஸ்திரங்கள் எல்லாம் மக்களின் மனதிலே விழுந்து ஒரு ஜனநாயக புரட்சியை ஏற்படுத்தி விடாதா? எம் தேசத்தின் தலைவிதி மாறி...மக்களுக்கு உழைக்கும் ஒரு அரசாங்கம் அமைந்து விடாதா? கழுகின் ஏங்கங்களும் கனவுகளும் இன்றைக்கோ நாளைக்கோ எல்லாவிடினும் வரும் காலத்தில் நடந்தேறியே தீரும்....! சமகாலத்தில் பத்தோடு ஒன்று பதினொன்றாவது வலைப்பூவாய் கழுகினை பார்ப்பதற்கு பழக்கப்பட்டு இருக்கும் விழிகள் எல்லாம்......

காற்றடிக்கும் தருணம் நிற்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்...அப்போதுதான் காற்றில் பறக்கும் குப்பைகள் எல்லாம் தாழ விழுந்து கழுகின் உற்சாக சிறகடித்தல் பிடிபடும்.....

இதோ எமது குழுமத் தோழர் வைகையின் சரவெடி தொடர்கிறது.....
கழுகின் உயரத்தை ரசித்து அதன் உயரத்தை இன்னும் அதிகரிக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்....தேர்தல் ஒரு பார்வை சென்ற பதிவில்  தி.மு.க- வின்  சாதனைகளும் அதில் உள்ள சில கேள்விகளையும் பார்த்தோம்.....கடந்த ஐந்து வருடத்தில் ஆளும்கட்சியின் செயல்பாட்டை ஓரளவுக்கேனும் நாம் தெரிந்துகொள்ள அது உதவியிருக்கும் என்று நம்புகிறேன்! என்னதான் மக்கள் அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தாலும் அவர்களின் ஆட்சியின் திட்டங்களையும் நிர்வாகத்திறனையும் கண்காணிக்கும் பொறுப்பை மக்கள் எதிர்க்கட்சிகளிடம்தான்   வழங்குகின்றனர்....ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே நாங்கள் சேவை செய்வோம் இல்லையென்றால் அடுத்த தேர்தல் வரும்போது சொல்லுங்கள் விழித்துக்கொள்கிறோம் என்று இருந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதோ அதை  வைத்து தெரிந்துகொள்ளலாம்! இந்த ஆட்சிக்காலத்தில் ஆளும்கட்சி எந்த அளவு குற்றவாளியோ அதற்கும் சற்றும் குறைவில்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றவாளிகளே! குற்றம் செய்பவனை விட குற்றத்தை அனுமதிப்பவன் கொடூரமானவன்! இந்த நிலையில்தான் இன்றைய எதிர்க்கட்சிகளும் இருக்கின்றன!


முதலில் அ.தி.மு.க- வின் ஐந்து வருடங்களை பார்ப்போம்......இவர்களைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் நான்கு வருடம் ஓய்வு.....ஒரு வருடம் நடிப்பு..இதுதான் இவர்கள் கொள்கை போலும்! தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத ஒரு அரசையும் அசுர பலத்துடன் கொண்ட ஒரு எதிர்க்கட்சியையும் தேர்ந்தெடுத்தனர் புத்திசாலி(?!) தமிழ் மக்கள்! ஆனால் அதை இவர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்றால் வருத்தம்தான் மிஞ்சும். மக்கள் செல்வாக்குமிக்க ஒரு எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றம் சென்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தால்தான் அது ஆட்சியாளர்களுக்கும் உறைக்கும் மக்களையும் அதிக அளவில் சென்றடையும்! ஆனால் பாவம் அவருக்கு நேரமில்லை....


ஐந்து வருடத்தில் மூன்றுமுறை சென்ற அவர் எழுதிசென்ற உரையை பேருக்கு படித்துவிட்டு அதற்க்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளக்கூட நேரமில்லாமல் வந்துவிடுவார்! நான்கு வருடம் சும்மா இருந்துவிட்டு கடைசி ஒரு வருடத்தில் மட்டும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள்! ஆனாலும் அதில் அவர் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பத்துநாள் விளக்க அறிக்கை விட்டார்..இதுதான் எதிர்க்கட்சியின் பலம்! ஆனால் ஏனோ இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை! மக்களை பாதித்த எந்த முடிவுகளிலும் எதிர்க்கட்சியாக தனது நிலையை இவர்கள் தெளிவுபடுத்தவே இல்லை என்பதே கசப்பான உண்மை! காங்கிரசுடன் கூட்டணியை எதிர்பார்த்து மத்திய அரசையும் திடமாக எதிர்க்கவில்லை! மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிபோடும் மணல்கொள்ளை, ரியல் எஸ்டேட், அரிசிகடத்தல் இதில் எதையுமே முழுமூச்சாக எதிர்க்கவில்லை பேருக்கு அறிக்கை விடுவதோடு சரி....காரணம் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி ஆட்களும் கூட்டுக்கொள்ளை....ஊழலை காரணம் காட்டி ஆளும்கட்சியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் இவர்களும் அதை அனுமதித்த காரணத்திற்க்காக அதே கூண்டில் நிறுத்தப்படவேண்டியவர்கள்!


இவர்களுக்கு அடுத்த இடத்தில் எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள் காங்கிரஸ்....பாருங்க இந்த வார்த்தைய  படிச்சதுமே  லேசா சிரிக்கிறீங்க...இவர்களுடைய செயல்பாடும் இப்படித்தான்! கதர்தான் இவர்களின் அடையாளம் என்பது மாறிப்போய்..பக்கவாத்தியமே இவர்களின் அடையாளமாக மாறிப்போனது! மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைப்பற்றி இவர்களுக்கு எந்த திட்டமிடலும் இல்லை..ஆனால் எந்த கோஷ்டியில் இருக்கவேண்டும்....முதல்வரை என்ன சொல்லி பாராட்டினால் கல்லூரி கட்ட அனுமதி கிடைக்கும்...சட்டமன்றத்தில் முதல்வரே கூசும் அளவிற்கு பாராட்டியவர்கள் இவர்கள்! எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்கும் கண்டனம்...அட வேண்டாம்..கருத்துக்கூட சொல்லியதில்லை! மீறிக்கேட்டாலும் டெல்லி மேலிடம் சொல்லும்..இதுதான் பதில்...இவர்களுக்கு  வோட்டு போட்டது தமிழக மக்கள் என்பதை மறந்து விட்டார்கள்! சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்க்கனவே அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி  இருக்கின்றது! அதுவும் போதாது என்று இலவச வீட்டு மனைக்கு விண்ணப்பித்தார் ஒரு காங்கிரஸ் புண்ணியவான்! அனைவருமே கேட்க்கட்டும் என்று முதல்வர் சொல்லிமுடிப்பதற்குள் ஒரு விண்ணப்பக்கடிதம் தயார் செய்து அதில் அனைத்து உறுப்பினர்களின் கையப்பம் வாங்கி முதல்வரிடம்  கொடுத்தார்  இந்த ஞானம் உள்ளவர்! இந்த வேகத்தை எந்த மக்கள் பிரச்சனைக்காகவாது காட்டியிருப்பார்களா நமது பிரதிநிதிகள்! வாழ்க காங்கிரஸ் வளர்க அதன் மக்கள் தொண்டு!


அடுத்து பா.ம.க. இவர்கள் எதற்கு கூட்டணி சேருகிறார்கள் எதற்கு விலகுகிறார்கள் என்று கடவுளுக்குகூட தெரியாது! கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இருந்தார்கள்....இவர்கள் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் நல்ல திட்டங்களைக்கூட எதிர்த்து முட்டுக்கட்டை போடுவார்கள்...கூட்டணி சேரவேண்டும் என்றால் நாடே கொள்ளை போனாலும் வாய் திறக்க மாட்டார்கள்! இவர்கள் திமுகவை விட்டு வெளியே வர முடிவு செய்ததும் நல்ல திட்டங்களான துணை நகரம், புதிய விமான நிலையம் போன்ற அவசியமான திட்டங்களைகூட எதிர்த்தார்கள்! அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது சரி...ஆனால் சில திருத்தங்களையும் ஆலோசனைகளும் சொல்லி அவற்றை அனுமதித்திருக்கலாம்! ஆனால் அவ்வாறு செய்யாமல் கூட்டணி மாறினார்கள்...


நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் அதிமுகவில் இருந்து வெளியேறி முதல் எதிரி திமுக என்றார்கள்...பிறகு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக முதல்வர்   கருணாநிதி  வீட்டு வாசலில் கால்கடுக்க நின்றார்கள்! இன்றும் நிற்கிறார்கள்! இன்றுவரை ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பற்றி வாய் திறக்கவில்லை, மீனவர் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை! இதுவரை வரை வெளியான காமன் வெல்த் ஊழல் மருந்து கலப்படம் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அமைதியே இவர்களின் கொள்கை! காரணம் ஒன்றேதான் கூட்டணி! யாருடன் வேணாலும் சேரவேண்டியிருக்கும்! ஆனால் இருப்பதை காட்டிக்கொள்ள மதுவிலக்கு, சினிமா மோசம் என்று எதிர்ப்பு இல்லாத பாதையில் வண்டி ஓட்டுவார்கள்! தமிழகத்தை முன்னேற்ற துடிக்கும் இவர்கள் காவிரியை வைகையுடன் இணைத்தால் ரத்த ஆறு ஓடும் என்பார்கள்! வைகை என்ன வங்காளத்திலா இருக்கிறது?! இவர்களை மக்கள்தான் அடையாளம் காணவேண்டும்!


இவர்களையும் தாண்டி ஒரு கல்யாணக்கூட்டம் இருக்கிறது! மதிமுக இவர்கள் வேறு வழியில்லாமல் கூட்டணி மாறாமல் இருக்கின்றார்கள்! இதுவரை இலங்கை பிரச்னை மட்டுந்தான் அரசியல் என்று நினைத்து இருந்தவர்கள் ஒருகட்டத்தில் அதை தொடர முடியாமல் இன்று அனைத்து பிரச்சனைகளுக்கும் அறிக்கை விடுவதோடு இவர்கள் அரசியல் முடிந்து விடுகிறது! அடுத்து கம்முனிஸ்ட் இடது வலது.... ரெண்டு சீட் கூட கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள்! விடுதலைச்சிறுத்தைகள்... இலங்கை பிரச்சனையில் காங்கிரசை முழுமூச்சாக எதிர்த்தவர் ஒரு MP சீட்டுக்காக தன்மானத்தை அவர்களிடம் அடமானம் வைத்தவர்.... இவரை நம்பி பின்னால் சென்றவர்கள் மீது கரி இல்லை தாரையே பூசியவர்! என்னதான் இவர் விளக்கங்கள் கொடுத்தாலும் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தால் கூட இவரை முதல் ஆளாகப்பாராட்டலாம்!


பதவிக்கு முன்னாள் மக்களும் கொள்கையும் முக்கியமல்ல என்று நிரூபித்த மற்றுமொரு தலைவர் இவர் அவ்வளவே! அடுத்து தேமுதிக.....கடந்த தேர்தலில் இவர்கள் ஜெயித்தது ஒரு தொகுதி மட்டுமே! அதை வைத்து ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாதுதான்..ஆனால் தமிழக சாக்கடைகளின் ஓட்டத்தில் இவர்களும் சங்கமிக்கும் காலம் வந்து விட்டதுபோல! ஊழலை ஒழிப்பேன் ஏழைகளை ஒழிப்பேன் என்று சவால் விடும் இதன் தலைவர் தேர்தலில் சீட் கொடுப்பது என்னவோ பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்! இவருக்கு வோட்டு போடச்சொல்லும் இவர் வோட்டு போட்டால் என்ன மக்களுக்கு செய்வார் என்பதை தெளிவாக இதுவரை கூறவில்லை! இன்னும் சாதி..மதம் என்று சொல்லி துண்டு துக்கடா கட்சிகள் ஏராளமாக உள்ளது...பார்ப்போம் இவர்களுக்கு தொகுதியில் இடம் கிடைக்குதா இல்லை இதயத்தில் இடம் கிடைக்குதா என்று! அதன்பிறகு இவர்களைப்பற்றி பேசலாம்!


என்ன மக்களே? குழப்பமாக உள்ளதா? யாரை தேர்ந்தெடுப்பது யாருக்கு வோட்டு போடுவது என்று...எமது வேலை ஊதுகிற சங்கை ஊதுவது... முடிவெடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது! கட்சிகளுக்கு அப்பார்ப்பட்டு நல்லது செய்யும் வேட்ப்பாளர்களும் உள்ளனர்..அவர்களை அடையாளம் காணுங்கள்...அல்லது யாருக்கும் வோட்டுபோட விருப்பம் இல்லையா? அதற்காக வீட்டில் இருந்து விடுமுறையை ரசிக்காதீர்கள், உங்களது வாக்கை 49-O விதி வாயிலாக அரசுக்கு தெரிவிக்கலாம்! அது என்ன என்று கேட்பவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்! அதைப்பற்றி இன்னும் விரிவாக உங்கள் முன் வைக்கப்படும்! அது வரை உங்கள் தொகுதி MLA இதுவரை என்ன செய்தார் என்பதை நினைவூட்டி பாருங்கள்! என்னது.....MLA - வே யாருன்னு தெரியலையா? காத்திருக்கவும் வோட்டு கேட்க வருவார்!
  


கழுகுகுழுமத்தில் இணைய....





கழுகிற்காக
வைகை  




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

11 comments:

செல்வா said...

49-o பத்தி தெளிவான கட்டுரையை எதிர்பார்க்கிறேன் அண்ணா. இந்தக் கட்டுரையும் மிக தெளிவா எழுதிருக்கீங்க. எதிர்க்கட்சிகளின் செயல்களை சொன்னது அருமை. கூடவே அவுங்க எதாச்சும் நல்லது பண்ணிருந்த அதையும் சொல்லிருக்கலாம். ஆனா அப்படி ஒண்ணும் நடக்காததால ஹி ஹி .. சொல்லல ..

Pranavam Ravikumar said...

பொருத்திருந்து காணுவோம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நமக்கு அரசியல் கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும், உங்க கட்டுரை ரொம்ப புரிய வச்சுடுச்சு! நன்றி பாஸ்!! அப்படியே நம்ம தெருவுக்கும் வாங்க - டைம் கெடைச்சா!

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் கட்டுரை அருமை....
எதிர்கட்சிகளின் கைய்யாலாகாததை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...

எஸ்.கே said...

காத்திருப்போம்! என்ன நடக்குதுனு பார்ப்போம்!

சேலம் தேவா said...

//அது வரை உங்கள் தொகுதி MLA இதுவரை என்ன செய்தார் என்பதை நினைவூட்டி பாருங்கள்! என்னது.....MLA - வே யாருன்னு தெரியலையா? காத்திருக்கவும் வோட்டு கேட்க வருவார்!//

நல்லா சொன்னீங்க.. போங்க... நிறைய இடத்துல இதுதான் நடக்குது. :)

மாணவன் said...

விரிவான அலசலுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்க அண்ணே..

வாழ்த்துக்கள் :)

இம்சைஅரசன் பாபு.. said...

விரிவாக நல்ல சொல்லி இருக்கீங்க ..பொருத்து இருந்து பாப்போம் .3 அணி அமைவதற்கான வாய்ப்புகள் ஜாஸ்த்தி ..என்ன இருந்தாலும் எதோ ஒன்றுன்னு இவர்களுக்கு தான் ஒட்டு போடா வேண்டியது உள்ளது

அகலிக‌ன் said...

"திட்டங்களையும் நிர்வாகத்திறனையும் கண்காணிக்கும் பொறுப்பை மக்கள் எதிர்க்கட்சிகளிடம்தான் வழங்குகின்றனர்...."

உண்மையிலேயே இது நல்ல கருத்து இதைத்தான் நம் மக்களுக்கும் எதிர் கட்சியினருக்கும்
உறைக்கும்படி மண்டையில் ஏற்றவேண்டும்.வரும் ஆண்டுகளிலாவது இதுபற்றிய விழிப்புண்ர்வு சாத்தியப்பட்டால் மகிழ்ச்சியே.

Unknown said...

எஸ் பேண்ட் ஊழலில் சம்பந்தப்பட்ட தேவா மல்டி மீடியா என்பது உங்கள் நண்பர் தேவா-வின் கம்பெனியா?

இராஜராஜேஸ்வரி said...

காற்றடிக்கும் தருணம் நிற்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்...அப்போதுதான் காற்றில் பறக்கும் குப்பைகள் எல்லாம் தாழ விழுந்து கழுகின் உற்சாக சிறகடித்தல் பிடிபடும்.....//
we wait for that moments.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes