Saturday, July 02, 2011

சவுக்கு சங்கரின் அதிரடி பேட்டி....!!!! தொடர்ச்சி...



1) தமிழகத்தை ஆண்ட எல்லா ஆட்சிகளுமே தமிழகத்தை சீர்கேடு செய்துள்ள நிலையில் கடந்த தி.மு.க அரசினை கடுமையாக தாங்கள் எதிர்க்க காரணம்?


ஐம்பதுகளில் காங்கிரஸ் ஆட்சி தொடங்கி, அதற்குப் பிறகு ஆண்ட அனைத்துக் கட்சிகளுமே தமிழகத்தை சீரழித்து வந்துள்ளது என்பது உண்மையே.  தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனைக் காவு கொடுத்து வந்துள்ளன என்பதும் உண்மையே.  ஆனால், கடந்த திமுக ஆட்சியின் மீது மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட கடுமையாக கோபம் உண்டு.  சோனியாவைக் கூட மன்னிக்க முடியும். ஆனால் கருணாநிதியை மன்னிக்க முடியாது. சோனியாவுக்கு, புலிகளையும், தமிழர்களையும் அழிக்க வேண்டும் என்பதற்கு, இத்தாலி மாஃபியா வழியில் உள்ள மனப்போக்கில், அதைச் செயல்படுத்துவதற்கான நியாயங்கள் இல்லையென்றாலும் காரணங்கள் உண்டு.  

ஆனால் கருணாநிதியைப் பொருத்தவரை, இது போன்ற காரணங்கள் எதுவுமே கிடையாது.  கருணாநிதி, அவரே பிரலாபித்துக் கொண்டது போல, தமிழினத் தலைவர் என்றே உலகத் தமிழர்கள் நம்பினர்.   தமிழினமும் நம்பியது.   கருணாநிதி மீது பல்வேறு கோபங்கள் இருந்தாலும், இப்போது ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கக் கூடிய இந்த நபர், செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் மரணத்தை நிறுத்த ஏதாவது செய்வார் என்றே உலகத் தமிழினம் நம்பியது.   அவரைப் புறக்கணிக்க இயலாத ஒரு நிலையில் அவர் ஆட்சி அதிகாரத்தையும், காங்கிரசின் மென்னியையும் தன் கையில் வைத்திருந்தார்.    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கருணாநிதியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பி மட்டுமே இருந்தது.  அந்த காரணத்தாலேயே, கருணாநிதி ஏதாவது செய்வார் என்று தமிழினம் நம்பியது.  நாமும் நம்பினோம்.  

ஆனால், கருணாநிதி இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், இந்தப் போராட்டங்களை நசுக்காமல் இருந்திருந்தாலே போர் நிறுத்தம் நடைபெற்றிருக்கும் என்று சவுக்கு உறுதியாக நம்புகிறது.   அக்டோபர் 2008ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமே தமிழகத்தில் பின்னாளில் எழுந்த பெரும் வீச்சுக்கு அடித்தளமாக அமைந்தது.   அந்த வீச்சை முடக்கவும், திசை திருப்பவும், மனிதச் சங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா, இரண்டு மணி நேர உண்ணாவிரதம் என்று பல்வேறு போலிப் போராட்டங்களை நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த ஒற்றுமையை கருணாநிதி சிதைத்தார். 

பின்னாளில் வெளிவந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, ஈழத் தமிழர்கள் செத்து விழுந்து கொண்டிருக்கையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில், கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை முதலீடு செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வந்தது. 

மேலும், ஜெயலலிதா, என்றுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்தது கிடையாது.  (தற்போதைய மாற்றத்தை தவிர்த்து)   அவரிடம் ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் எதுவுமே எதிர்ப்பார்க்கவில்லை.   ஆனால் கருணாநிதியை நம்பினார்கள்.   இந்த நபர் நமக்கு விடிவு தருவார் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் கருணாநிதி, தன்னையும் தனது குடும்பத்தின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டு அரசியல் செய்தார்.  கருணாநிதி நினைத்திருந்தால், ஈழப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று சவுக்கு உறுதியாக நம்புகிறது.    இன்று தனது மகளுக்கு உடம்பில் வெயில் காரணமாக கொப்புளங்கள் வந்து விட்டது என்று அங்கலாய்க்கும் இதே கருணாநிதி, கையிழந்து, காலிழந்து ரத்தப் போக்கு காரணமாக ஈழத் தமிழர்கள் உயிரை விட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வந்த போது, பாராட்டு விழாக்களில் திளைத்துக் கொண்டிருந்தார்.   ஈழத் தமிழர்களை அழிக்கக் காரணமாக இருந்த சோனியாவின் மனதை எப்படி குளிர்விப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதனால், மற்ற எல்லா ஆட்சிகளையும் விட, கருணாநிதியின் 2006 முதல் 2010 வரையிலான ஆட்சி அழித்து ஒழிக்கப் பட வேண்டிய ஆட்சி என்பதில் சவுக்கு மிகத் தெளிவாக இருந்தது.



2) நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் மிகுதியாக விரும்ப காரணம்?

நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் மிகுதியாக விரும்புகிறார்கள் என்ற கருத்தே ஒரு மாயை.   நடிகர்களை மட்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்றால், வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் தலைவர்களாக உருவாகியிருக்க முடியாது.  நடிகர்களின் புகழ் அவர்களுக்கு எளிதாக அரசியலில் புக ஒரு வாய்ப்பாகவும், ஒரு நல்ல தளமாகவும் அமைகிறது என்பதே உண்மை.   நடிகர்களை தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்றால், தமிழக மக்கள் முன்னணி என்ற கட்சியை தொடங்கிய தமிழகத்தின் மிகப் பெரிய நடிகர் சிவாஜி வெற்றி பெற்றிருக்க   வேண்டுமே ?


3) தமிழ் நாட்டில் இருக்கும் மிகைப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம் மக்களின் அறியாமையா? அல்லது அரசியல் கட்சிகளின் புத்திசாலித்தனமா?

இதற்கு இரண்டுமே காரணம் என்று சொல்லலாம்.    மக்களின் அறியாமை என்பதை விட, அவர்களின் அலட்சியமே காரணம் என்று சொல்லலாம்.     ஊழல் செய்கிறார் என்று நன்கு தெரிந்த ஒரு நபரை என்ன காரணத்தாலோ மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.   சமீபத்திய தேர்தலில், துரை முருகன், மு.க..ஸ்டாலின், மற்றும் எ.வ.வேலு போன்றோரின் வெற்றியே இதற்கு சான்று.   அரசியல் கட்சிகளின் புத்திசாலித்தனத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.     2ஜி போன்ற இமாலய ஊழலைப் புரிந்து விட்டு, அதை மறைக்க அத்தனை முயற்சிகளையும் எடுத்து விட்டு, இன்று, அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல, நடந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியே அதற்கு ஒரு நல்ல உதாரணம்.


4) சமச்சீர் கல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமச்சீர் கல்வி, காலத்தின் தேவை என்றே சவுக்கு பார்க்கிறது.   ஒரு ஏழை, தலித் விவசாயியின் மகனும், சென்னையில் படிக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் மகனும், குறைந்த பட்சம் ஒரே பாடத்திட்டத்தை படிப்பது என்பது, சமத்துவத்தின் முதல் படி என்றே சவுக்கு பார்க்கிறது.    இதனால் கல்வியின் தரம் குறைந்து விடும், மாணவர்களின் நலன் பாதிக்கப் பட்டு விடும் என்ற வாதங்கள், 33 சதவிகிதம், மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுயநலக் கட்சிகளின் வாதத்தைப் போன்றதே.. !!!



5) இணையப் பயன்பாட்டில் மிகுதியான இளைஞர்களே இருப்பதால் இந்தக் கேள்வி....
இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து?

இளைஞர்கள் சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தான், தன் குடும்பம் என்பதையும் தாண்டி, சமூக சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.




6) எதிர் காலத்தில் இணைய விழிப்புணர்வு மூலம் சமுதாயம் சீர்பட சாத்தியமுள்ளதா?

இந்தியாவில், தமிழகத்தில் அத்தனை வீடுகளிலும் இணைய இணைப்பும், மக்களுக்கு இணைய அறிவும் இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே.  இல்லையென்றால், சமுதாய விழிப்புணர்வில் இணைய விழிப்புணர்வு ஒரு பகுதியாக இருக்கும். 


7) இந்தியா என்றாலே வட இந்தியர்களுக்குத்தான் முன்னுரிமை என்ற போக்கு மாறாததற்கு காரணம் தென்னிந்திய தலைவர்களின் வலுவற்ற தலைமைத்துவம் ஒரு காரணமா? 

இதற்கான ஒரு முக்கியக் காரணம், தமிழர்கள் இந்தி பயிலாதது என்றே சவுக்கு கருதுகிறது. தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், இந்தி ஒரு பாடமாக இருக்கிறது. தமிழகத்தைத் தவிர, தென்னிந்திய மாநிலங்களான, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கூட, இந்தி பேச்சு மொழியாக இருக்கிறது. திமுகவின் முட்டாள்த்தனமான இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தினால், தமிழகத்தில் இந்தி மொழி இன்னும் தீண்டத்தகாத மொழியாகவே இருக்கிறது. இந்தி மொழி தெரியாமையே, தமிழகத் தலைவர்கள், பெரிய அளவில் வட இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான முக்கிய காரணம். தமிழகத் தலைவர்களின் ஆளுமையற்ற தலைமையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 


8) எதிர்கால இந்தியா...எப்படியிருக்கும்?

நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்




9) அதிமுக அரசின் குற்றங்களையும் பகிரங்கப் படுத்துவீர்களா..??



இந்தக் கேள்வியே தவறானது.     அதிமுக அரசின் குற்றங்களை பகிரங்கப் படுத்துவீர்களா என்றால், சவுக்கு என்ன அதிமுக தளமா ?  ஆட்சிக்கு வந்த ஒரு சில வாரங்களிலேயே, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுத்த அதிமுக அரசின் முடிவை, “முதல் கோணல் ?” என்ற கட்டுரையின் மூலம் கண்டனம் செய்தது, சவுக்கு தளமே.. அதற்குப் பிறகு, அதிகாரிகளின் நியமனத்தில் உள்ள தவறுகளையும் சவுக்கு தளம் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை என்பதை மறுக்கக் கூடாது. 

இருப்பினும் ஒரு ஆட்சி பதவியேற்றதும் குறைந்தது 100 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும்.  அதற்குள்ளாக விமர்சனம் செய்வது, நியாயமற்ற ஒரு செயல். அதே நேரத்தில், மக்களை பாதிக்கும் மோசமான முடிவுகள் எடுக்கப் பட்டால், அதை சுட்டிக் காட்ட சவுக்கு தயங்காது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளது. 

சவுக்கு தளம், மக்களுக்கானது.  எந்த ஒரு கட்சிக்கானதும் அல்ல.








(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

19 comments:

சேலம் தேவா said...

பேட்டி அதிரடி சரவெடிதான்..!! உண்மைகளை வெளிக்கொண்டு வரும் சவுக்குக்கு வாழ்த்துகள்..!!

ராம்குமார் said...

இந்தி எதிர்ப்பு போராட்டம் அன்றைய காலத்தின் கட்டாயம்......அது முட்டாள்தனமானது என்று சொல்வதில் நியாயம் இல்லை ...அன்றைய போராட்டத்தை வழிநடத்தியதில் மாணவர்கள் பங்கு அதிகம் ......காமராஜர் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது அவரது தலைமை பண்பால் தவிர இந்தியால் அல்ல....

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இந்தி பயிலாமல் விட்டது பெரிய தவறு தான்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

'பரிவை' சே.குமார் said...

பேட்டி அதிரடி... அதிரடிதான்..!!

ராஜ நடராஜன் said...

ச்வுக்கும் சறுக்கும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

பின்னூட்டத்தில் ராம்குமார் அவர்கள் சொன்னது போல் இந்திப் போராட்டம் அந்தக் காலத்தின் கட்டாயம்.அதன் அடிவேர்களை ஆராய்ந்து கருத்து கூறாது வெறுமனே தி.மு.கவின் முட்டாள்தனமானது கண்டனத்துக்குரியது.தி.மு.கவின் ஊழல்களை விமர்சிப்பது வேறு,மொழிக்காக போராடியதை தவறாக நினைப்பது வேறு.

இப்போதைய காலகட்டத்தில் தேவைப்பட்டவர்கள் இந்தி கற்றுக்கொள்ளலாம்.UPSC பரிட்சை எழுதி தேர்வில் பதவிகளைப் பிடிக்க உதவும்.முக்கியமாக வரலாறு மட்டுமே படித்து விட்டு IFS தகுதியால் சிவசங்கர மேனன் போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவை எதிர்காலத்தில் தவிர்க்கப்படும். மும்மொழித் திட்டம் என்ற தமிழர்கள் கட்டாயம் இந்தி படிக்கவேண்டுமென்ற மும்மொழித் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை.

சமச்சீர் கல்விக்கு சிபாரிசு செய்யும் சவுக்கு ஒரு விவசாய அல்லது ஏழ்மையில் வாழும் மாணவனின் மும்மொழிப்புரிதல் எந்தளவுக்கு இருக்குமென்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.மொழி மட்டுமல்ல,உடல்,நிறம்,உளவியல் போன்ற பிற காரணிகளும் கூட வடமாநிலத்தை தென்மாநிலத்திலிருந்து பிரிக்கிறது.

சவுக்கின் கருத்துக்கள் மாதிரி சவுக்கு தளத்தில் பின்னூட்டங்களையும் மேன்மை படுத்தினால் ஒரு செயலின் பல பரிமாணங்கள் புரிய உதவும் என நினைக்கின்றேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

அடுத்த கடைல என்ன கிடைக்குமென்று பார்க்கலாமென்று நினைத்தால் இந்தி தெரியாததால்தான் தமிழகத் தலைவர்களின் ஆளுமையற்ற தலைமையும் ஒரு காரணம் எனபதை கடக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது:)

ஏன்!ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லையென்றும் விவாதிக்க இயலுமல்லவா?

மாநிலத்தில் முதல்வர் பதவி,மத்திய அரசில் தனது எம்.பிக்களின் தயவால் ஆட்சி இயக்கம்,நினைத்ததை முடிப்பவ்ன் பட டைட்டில் மாதிரி நினைத்த பதவியை பிடிப்பவன் என்ற சூழலில் ஆளுமையற்ற தன்மைக்கு இந்தி தெரியாதது காரணமா?

Sathiyanarayanan said...

/* இதற்கான ஒரு முக்கியக் காரணம், தமிழர்கள் இந்தி பயிலாதது என்றே சவுக்கு கருதுகிறது. */

ஏற்கமுடியாத வாதம், என்ன தாக்கத்தை வட இந்தியாவில் தமிழக தலைவர்களால் ஏற்படுத்த முடியவில்லைன்னு நினைக்கிறது சவுக்கு, 90 விழுக்காடு தமிழக தலைவர்கள் தமது சொந்த நலனுக்காகவே பதவிப் பெற்றார்கள் என்பது தான் உண்மை மக்கள் நலனுக்காக அல்ல.

சவுக்கு, நமக்கு இந்தி தேவையில்லாத மொழி, நாம் தமிழ் தேசியம் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. இந்தி மொழி பயின்றாலும் இந்தியா நம்மை ஒருபோதும் காப்பாற்றது, இது தான் உண்மை.

இந்தி மொழி தேவை என்பர்வர்கள் கற்காலம், ஒரு படமாக இந்தி தேவையில்லை என்பதுவே என் வாதம்.

இந்தி மொழி பயின்றாலும் இந்தியா நம்மை ஒருபோதும் காப்பாற்றது, இது தான் உண்மை.

நன்றி

கழுகு said...

தமிழ எல்லை தாண்டி அடுத்த மாநிலத்துக்குச் சென்றால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசி ஆக வேண்டிய சூழலில் வாழ்கிறோம்.

ஆங்கிலம் என்ற மொழியைத் தமிழர்கள்தான் கூடுதலாக பயின்றிருக்கிறார்களேயன்றி வேற்று மாநிலத்தவர்கள் எல்லாம் இந்தியைத்தான் பயின்றிருக்கிறார்கள் ஒரு பொதுவான இணைவுக்காக...

நாம் வட நாட்டிற்கு சென்று ஆளுமையுடன் நமது கருத்துக்களை எடுத்து வைக்க ஆங்கில பெரும்பாலும் உதவவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

இந்தி மொழியை கூடுதலாக அறிந்திருந்தால் நமது கருத்துக்களை வலுவாக பதிந்து அதன் மூலம் அதிகார வரம்புகளுகுள் ஊடுருவி அதன் பின் நமது மொழியை அவர்களும் கற்க ஒரு வழிவகை செய்திருக்க வாய்ப்பாவது இருந்திருக்கும்.

தற்போது பிள்ளைகள் விருப்பப் பாடமாக இந்தியைப் பயின்றாலும் அதை ஒரேடியாக கூடுதல் மொழி என்ற அளவில் கூட விட்டு வைக்காமல் மறுத்ததன் பலன்களையும் நாம் அடைந்துதானிருக்கிறோம்.

தமிழ் மொழியை வளர்க்க தமிழகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வெளிநாட்டவரும், வேற்று மாநிலத்தவரும் தமிழ் பேசித்தான் ஆகவேண்டும் என்ற ஒரு சூழலை அல்லது யுத்தியை நாம் அறிமுகம் செய்யவே இல்லை....!

தமிழை வளர்க்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டே சக தமிழர்களே ஆங்கிலம் பேசும் ஒரு கவர்ச்சிக்கரமான சூழலை உருவாக்கியவர்கள் வட நாட்டவரா? இல்லை வெளி நாட்டவரா? தமிழர்கள்தான்...

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுப் பூர்வமாய் சிந்தித்த்ப் பார்த்தல்...இந்தி எதிர்ப்பு போராட்டச் செய்த சூழல் சரிதான். ஏனென்றால் அப்போது தமிழை அழிக்கும் முயற்சியாய் இந்தி திணிக்கப்பட்டது ஆனால் அதே சூழலை இலகவமாய் பயன்படுத்த்தி கூடுதல் மொழியாய் நாம் கற்றிருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ்த் தேசியம் பற்றி பேசுவதும் விரும்புவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் இயல்பான நடைமுறை சாத்தியக் கூறுகளையே நாம் இப்போது அலசி வருகிறோம் என்று அறிக;

நன்றி ராஜ நடராஜன் மற்றும் சத்திய நாராயணா!

Sathiyanarayanan said...

/*தமிழ்த் தேசியம் பற்றி பேசுவதும் விரும்புவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் இயல்பான நடைமுறை சாத்தியக் கூறுகளையே நாம் இப்போது அலசி வருகிறோம் என்று அறிக;*/

சவுக்கு இந்த செவ்வியில் முதலில் பதிவு செய்தது எதுவும் முடியும் நம்மால் முயற்சி தேவை என்பது தான், தமிழ் தேசியம் என்பது காலத்தின் கட்டாயம். இயல்பான நடைமுறை சாத்தியக் கூறுகளையே அலசிய நீங்கள், சவுக்கின் முயற்சியை எடுத்துக்காட்டியது முரண்.

ராம்குமார் said...

@ கழுகு ஆயிரம் தான் நீங்கள் சொன்னாலும் தமிழ் தேசியம் என்பது இன்றும் சாத்தியம் உள்ள ஒரு கனவு ...ஹிந்தி கற்காததாள் தான் நாம் காவிரி தண்ணீரையும் ,முல்லை பெரியார் ,பாலாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்பது நியாயம் ஆகுமா கழுகாரே ......ஆழ்ந்து சிந்திக்கவும்....

ஷர்புதீன் said...

//தமிழ எல்லை தாண்டி அடுத்த மாநிலத்துக்குச் சென்றால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசி ஆக வேண்டிய சூழலில் வாழ்கிறோம்.//

yes i know this when i was in hyderabad!

Mark K Maity said...

savukku release panniya book pathi? antha book rajiv kolai pattri pakka sarpaana book ellava?

Yoga.s.FR said...

நல்ல பேட்டி.கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற் போல் பதில்.ஈழம் குறித்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,நம்ப வைத்துக் கழுத்தறுத்த கருணா வகையறாக்களுக்கு(ஈழத்திலும் தலைவரால் பெயரிடப்பட்ட ஒன்று உண்டு)இப்போதாவது உணர்ச்சி வருகிறதா என்றால் "இல்லை" என்ற பதில் தான் கிட்டுகிறது!என்ன செய்ய சேற்றில் புரண்டவர்களுக்கு எதுவும் புரியாது,அல்லது அப்படி நடிப்பார்கள்.////அழுத்தங்களையும் மீறி இங்கிலாந்தின் அலைவரிசை-4(CHANNEL-4) ல் ஒளிபரப்பான "இலங்கையின் கொலைக்களம்"என்ற ஆவணப்படம் செவ்வாய் மாலை டெல்லியிலிருந்து ஒளிபரப்பாக இருப்பதாக தெரிகிறது.முடிந்தவர்கள் பாருங்கள்.நன்றி///

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்த் தேசியம் இன்றில்லையென்றாலும் சில நூறு வருடங்களுக்கு பின்பேனும் சாத்தியப்படும், அதுவரை தமிழை, அதன் கலாச்சாரத்தை உயிரோடு வைத்திருப்பது நம் கடமை. அதற்கு இந்தி மொழி மிகப்பெரும் தடையாக இருக்கும் என்பது இந்தி மயமாக்கப்பட்ட அண்டை மாநிலங்களில் நிலவும் சூழல்களை வைத்து புரிந்து கொள்ளலாம்.

மாநிலங்களுக்கு இந்தி வெறும் மொழியாக மட்டும் வருவதில்லை, அது ஒரு கலாச்சார தாக்குதல். இன்று பெங்களூரில் கன்னடர்களின் நிலையையும், சென்னையில் தமிழர்களின் நிலையையும் ஒப்பிட்டு பாருங்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால்தான் இந்தளவாவது, இல்லையென்றால் பிராந்திய மொழிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்!

பள்ளிகளில் நாம் மூன்று மொழிகளையும் (தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி), அவர்கள் ஒருமொழியையும் படித்து வந்தால் யார் நிறைய மதிப்பெண்கள் பெற்று சாதிக்க முடியும்? இருவரும் சமமாக போட்டித்தேர்வுகளுக்கு செல்ல முடியுமா?

THOPPITHOPPI said...

ஒவ்வொரு கேள்விகளும் அருமை அதற்கு அண்ணன் சவுக்கின் பதில்களும் அருமை. இந்த கேள்விபதில்களுக்கு பின் அண்ணன் சங்கர் மீது இருந்த ஈர்ப்பு, மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது.

Anand said...

I agree with Ramkumar, awareness and unity are the most required. We have managed these many years and much better than UP or MP.

ராவணன் said...

ஹிந்தி மொழி வேண்டும் என்று கூறும் சவுக்கு சங்கர் ஒழிக!

2009kr said...

நாம் என்னதான் பேசினாலும் சென்னையை தாண்டினால் கட்டாயம் இந்தி தேவைப்படுகிறது. தமிழனைத் தவிர (மேல்மட்டவாசிகள் இதில் விதிவிலக்கு) மற்ற அனைவருக்கும் ஹிந்தி தெரிவதால் அவர்கள் மிக எளிதாக ஒன்று பட்டுவிடுகிறார்கள். படிப்பு, வேலை என்று செல்லும் இளைஞர்களுக்கு ஹிந்தி தெரியாதது ஒரு பெரும் குறையே. இது என் அனுபவபாடம்.

உள்ளூரிலேயே குப்பை கொட்டும் வாய்ப்பு இருக்கும் கிணற்று தவளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது. ஆனால் தொழில் அல்லது மத்திய அரசு பணி போன்றவற்றை எதிர் நோக்கும் நமது இளைஞாகளுக்கு ஹிந்தி தெரிந்திருப்பது மிக அவசியம்.

நமது அரசியல் வாதிகள் தங்களது சுய நலத்திற்காக ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நடத்திவிட்டு தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு அதனை கற்று கொடுத்து அதிகார மையத்தில் உட்காரவைத்து அழகு பார்த்துவருகின்றனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes